ஐந்து மாநிலத் தேர்தல்கள்: முந்துகிறது பாஜக!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல்கள் நடந்தபடியேதான் உள்ளன. மக்களாட்சியின் மகத்துவம் முழுமையாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் நாடு இது. இந்தத் தேர்தல்களில் ஆட்சி, அதிகார மாற்றம் அல்லது ஆட்சி தொடர்வது, மிக இயல்பாக நடைபெறுவதை பிற நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன.

இந்தத் தேர்தல்முறையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் பழைய குறைகள் களையப்பட்டு புது மெருகேற்றப்படுவது இங்கு தொடர்கிறது. ஒருகாலத்தில் பரவலாக இருந்த வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கள்ள வாக்கு போன்றவை இப்போது மேற்கு வங்கம், கேரளம் போன்ற சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியால், நமது ஜனநாயகம் தன்னைத் தானே பண்படுத்திக் கொண்டுவருகிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்தாலும், மாநில சட்டசபைத் தேர்தல்களும் உள்ளாட்சித் தேர்தல்களும் அவ்வப்போது முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, நாட்டில் வீசும் அரசியல் காற்றின் திசையை வெளிப்படுத்துகின்றன.

அந்த வகையில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தற்போது நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலை நாடே உன்னிப்பாக கவனிக்கிறது. அதிலும், 403 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட உ.பி. தேர்தல் முடிவை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அங்கு வெல்லும் கட்சியே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதே அதற்குக் காரணம்.

தேர்தல் நடைமுறைகள்:

இந்த ஐந்து மாநிலங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு பிப். 10இல் நடைபெறுகிறது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7இல் நடைபெறுகிறது. மார்ச் 10இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும் என,  தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.

உ.பி: 403, உத்தரகாண்ட்: 70,  பஞ்சாப்: 117, கோவா: 4,  மணிப்பூர்: 60  தொகுதிகளில்  சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களில் மொத்தம்  18.34  கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

உ.பி.யில் ஏழு கட்டங்களாகவும் (பிப். 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7), மணிப்பூரில் இரு கட்டங்களாகவும் (பிப். 27, மார்ச் 3), பஞ்சாபில் ஒரே கட்டமாகவும் (பிப். 20),  கோவா,  உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் (பிப். 14) இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைன் முறையிலும் வேட்புமனுக்களைத்  தாக்கல் செய்யலாம்.  தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியை, முழுவதும் பெண்களே நிர்வகிக்க முதன்முறையாக  ஏற்பாடு  செய்யப்பட உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட  80 வயதுக்கு  மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.  

இவை இந்தத் தேர்தலில் நமது ஜனநாயகம் மேலும் ஒரு படி மேலே செல்வதைக் காட்டும் குறியீடுகள்.

உ.பி.யில் பாஜக வெற்றிக்கொடி நாட்டுகிறது!

நாட்டிலேயே அதிக சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில், பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்களாக  கேசவபிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர்.

பொதுவாகவே எந்த ஒரு ஆட்சி மீதும் மக்களிடையே சிறு அதிருப்தி ஏற்படுவது இயல்பு. அதிலும், பலதரப்பட்ட ஜாதிக் கணக்குகள், இஸ்லாமியர்களின் மதவாதம், அதிகாரிகளின் மெத்தனம் போன்ற பல அம்சங்களை மாநில அரசு சமாளித்தாக வேண்டும். வேளாண்மை சட்டத் திருத்த சட்டங்களுக்கு எதிராக  உ.பி, பஞ்சாப் விவசாயிகள் (குறிப்பாக ஜாட்கள்) நீண்ட நாட்கள் நடத்திய போராட்டம், லக்கிம்பூர் வன்முறை, கடைசி நேரத்தில் 10க்கு மேற்பட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள்  சமாஜ்வாதி கட்சிக்குச் சென்றது, கரோனா தொற்றின் பொருளாதார பாதிப்பு ஆகியவை பாஜகவுக்கு சில தொகுதிகளில் எதிர்மறையாக உள்ளன.

அதேசமயம், முந்தைய மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆட்சிகளில் நிலவிய கலவரச் சூழலையும், குண்டர் ராஜ்ஜியத்தையும் யோகி முற்றிலும் ஒழித்திருக்கிறார். 8,000க்கு மேற்பட்ட என்கவுன்டர்கள் மூலமாக பல நூறு ரௌடிகள் கொல்லப்பட்டதுடன், சட்டவிரோதமாக ஆதிக்கம் செலுத்திவந்த ரௌடிகள் களையெடுக்கப்பட்டார்கள். மாபெரும் மாநிலமான (மொத்த மக்கள்தொகை: 20 கோடி, வாக்காளர்கள்: 14.5 கோடி) உ.பி.யில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதை யோகி அரசின் மகத்தான சாதனை என்றே சொல்லலாம். இதனால் அம்மாநிலத்தில் பாஜக மீது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

சென்ற தேர்தலில் 312 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்ற பாஜக (சமாஜ்வாதி:47, பகுஜன் சமாஜ்: 19), இம்முறையும் அதேபோன்ற வெற்றியை அறுவடை செய்யக் காத்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிடுவது  பாஜகவுக்கு சாதகம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பாஜகவுக்குக் கடுமையான சவால்களை அளித்தாலும் கூட, பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆகியோரின் முன்பு செல்லாக்காசாகிறார். முதல்வர் வேட்பாளர்களில் யோகி ஆதித்யநாத்தின் அருகில் (52 சதவீதம்) நெருங்கவே ஆளில்லை என்கிறது டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு.

யாதவர்கள், முஸ்லிம்களின் வாக்குகளையே சமாஜ்வாதி கட்சி நம்பி இருக்கிறது. உ.பி.யில் உள்ள 20 சதவீத இஸ்லாமியர்களைத் தான் அவர் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். ஆனால், முத்தலாக் தடை சட்டம் மூலமாக இஸ்லாமியப் பெண்களின் நம்பிக்கையை பாஜக பெற்றிருக்கிறது. அதேபோல, மதக்கலவரம் இல்லாத ஆட்சியை யோகி உறுதிப்படுத்தி இருப்பது நடுநிலை இஸ்லாமியர்களை பாஜகவுக்கு ஆதரவாகத் திருப்பி இருக்கிறது. யோகிக்கு ஆதரவாக முஸ்லிம்களே வாக்கு சேகரிப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

பட்டியலின மக்களை, அதிலும் ஜாதவ் ஜாதியினரை மட்டுமே நம்பி களத்தில் இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஒருகாலத்தில் மாநிலத்தை ஆண்ட கட்சி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு – தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போல – அக்கட்சி சிறுத்துவிட்டது. பெருமளவிலான பட்டியலின மக்கள் பாஜக ஆதரவாளர்களாகி விட்டார்கள்.  உ.பி.யில் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு மேற்கொண்டதன் பலன் இது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இங்கு களத்திலேயே இல்லை. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பெயரில் பிரியங்கா காந்தி ஆங்காங்கு ஏதோ நகைச்சுவைக் காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார். சென்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இம்முறை தனித்துப் போட்டியிடுவதால் ஓரிடத்திலும் கூட வெல்லும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அயோத்தி ராமஜன்மபூமியில் ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது, காசி விஸ்வநாதர் ஆலயத்தை பிரமாண்டமாக விரிவுபடுத்தியது, புண்ணிய நதியான கங்கையைத் தூய்மைப்படுத்தியது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது, 24 மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கியது, கல்விக் கட்டமைப்பை வலுவாக்கியது, பல்லாயிரம் ரூபாய் கோடி தொழில் முதலீடுகளை வரவேற்று புதிய தொழிற்சாலைகளை அமைத்தது ஆகியவை யோகி அரசின் சாதனைகள்.    

அண்மைய கருத்துக்கணிப்புகளில், பாஜக சுமார் 45 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும், அடுத்த நிலையில் உள்ள சமாஜ்வாடி கட்சி 30 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் பாஜக அரசாக இருக்கும்போது இரட்டை எஞ்சின் சக்தியுடன் வளர்ச்சியை நோக்கிய பயணம் எளிதாகும் என்ற பிரசாரம் பாஜகவால் முன்வைக்கப்படுகிறது. மக்களும் அதனை உணர்ந்துள்ளார்கள் என்றே தெரிகிறது.

உத்தரகண்டிலும் பாஜக வெற்றிமுகம்:

உ.பி.யில் இருந்து பிரிக்கப்பட்ட, இமயத்தின் மடியில் அமந்துள்ள மாநிலமான உத்தரகண்டில் பாஜக- காங்கிரஸ் என்ற இரு கட்சிகளிடையேதான் போட்டி. இங்கு இரு கட்சிகளுமே மாறி மாறி வென்று வருகின்றன. 2017 தேர்தலில் 57 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. மொத்த இடங்கள்: 70. காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

விவசாயிகள் போராட்டம், கரோனாவால் பாதிப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஆளும் பாஜக அரசுமீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஆட்சி மீதான அதிருப்தியைப் போக்க இரண்டு முறை மாநில முதல்வர்களை பாஜக மாற்றியுள்ளது. திரிவேந்திர சிங் ராவத், தீரத்  சிங் ராவத் ஆகியோரை அடுத்து, தற்போது மூன்றாவதாக புஷ்கர் சிங் தாமி முதல்வராக இருக்கிறார்.

உத்தரகண்ட்டில், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான நிலை சில மாதங்களுக்கு முன்பு இருந்தது உண்மை. ஆனால், உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சி தற்போது சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்தையே அங்கு யாரும் மதிப்பதில்லை.  

அண்மைய கருத்துக் கணிப்புகளில் பாஜகவே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே இருக்கும். ஆம் ஆத்மி கட்சி தனியே போட்டியிடுவது பாஜகவின் வெற்றிவாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.

கோவாவிலும் பாஜக வெற்றி தொடர்கிறது:

சிறிய மாநிலமான கோவாவின் மக்கள்தொகை 15.28 லட்சம் மட்டுமே. 40 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்க முடியும். ஆகவே எந்தக் கட்சி வென்றாலும், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே இருக்கும்.

இம்மாநிலத்தைப் பொருத்த வரை பாஜக – காங்கிரஸ் என்ற இரு துருவ அரசியலே இருந்து வந்தது. அந்தக் காட்சி இம்முறை மாறுகிறது. ஆயினும், புதிதாக களம்புகும் ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றால், காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளே பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

கோவாவில் மனோகர் பாரிக்கர் இல்லாமல் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. அவர் இல்லாததன் விளைவு பாஜகவில் தெளிவாகவே தெரிகிறது. இம்மாநிலத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களிடமும் பாரிக்கர் செல்வாக்கு செலுத்திவந்தார். தவிர, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா முன்னணி போன்ற பழைய கூட்டணிக் கட்சிகளை சமாளிக்கும் திறன் இப்போதைய தலைவர்களிடம் இல்லை.

2017 தேர்தலில் 17 காங்கிரஸ் தொகுதிகளில் வென்றபோதும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அக்கட்சியை பிற கட்சிகள் ஏற்கவில்லை. தவிர, மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பியதால், 13 தொகுதிகளில் வென்ற பாஜக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் பாஜகவில் சேர்ந்தனர்.

மனோகர் பாரிக்கரின் திடீர் மறைவுக்குப் பிறகு, பிரமோத் சாவந்த் முதல்வராக இருக்கிறார். அவர் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை. எனினும், முன்னாள் முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பார்சேகர் பாஜகவிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுவது அக்கட்சிக்கு சிறு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, பாஜகவில் கிறிஸ்தவர்களின் முகமாக விளங்கிய மைக்கேல் லோபா விலகி காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார்.

எனினும், இந்தச் சூழலை சாதகமாக்கும் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை. முன்னாள் முதல்வர் பிரதாப் சிங் ராணே தேர்தல் பணியிலிருந்து ஒதுங்கிவிட்டார். கோவாவில் வேகமாக வளர்ந்துவரும் ஆம் ஆத்மி கட்சியும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ்- கோவா முன்னணி கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கின்றன. சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் தன் பங்கிற்கு சேதாரம் விளைவிக்கிறது.

கோவாவில் சுரங்கத் தொழிலுக்கு 2018இல்  தடைவிதிக்கப்பட்டது. கட்சிகள் அனைத்தும் அதைக் கையிலெடுத்து அரசியல் செய்துவருகின்றன. கட்சித்தாவல்கள் பாஜகவின் மதிப்பை சிறிது குலைத்திருக்கின்றன.

ஆயினும், இந்தக் காரணங்களால் முன்னணியில் இருந்திருக்க வேண்டிய காங்கிரஸ் பின்தங்குகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பில் வாக்குவிகித அடிப்படையில் பா.ஜ.க முதலிடம் (33 %) , ஆம் ஆத்மி கட்சி இரண்டாமிடம் (22 %), காங்கிரஸ் மூன்றாமிடம் (20 %) பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பலமுனைப் போட்டி பாஜகவுக்கு சாதகமாகிறது. பிரதமர் மோடி- முதல்வர் பிரமோத் சாவந்த் இணை பாஜகவுக்கு கூடுதல் சாதகம். சாவந்த் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே காணப்படுகிறது. அநேகமாக, இங்கு தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சியாக அமர வாய்ப்பு இருக்கிறது.

மணிப்பூரிலும் பாஜகவுக்கு மகுடம்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் (மொத்த தொகுதிகள்: 60) 2017 தேர்தலின்போது 28 இடங்களில் காங்கிரஸ் வென்றபோதும், பாஜக (21), நாகா மக்கள் முன்னணி (4),  நாகா மக்கள் கட்சி (4) லோக் ஜனசக்தி (1), சுயேச்சை (1) ஆகியோரின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியால் ஆட்சி அமைத்தது பாஜக. பிரேன் சிங் முதல்வரானார்.

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பிரேன் சிங் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை. கட்சிக்குள் உட்பூசல் காரணமாக அவரை மாற்ற பலமுறை முயற்சிகள் நடந்தபோதும் மேலிட ஆசி காரணமாக அவர் தொடர்கிறார். பிரிவினைவாத சக்திகளும், பழங்குடியினக் குழுக்களின் சச்சரவும் அதிகமாக உள்ள மாநிலம் என்பதாலும், மியான்மரை ஒட்டிய எல்லைப்புற மாநிலம் என்பதாலும், இங்கு பாஜக நிதானம் காக்கிறது.

இந்தத் தேர்தலிலும், நாகா மக்கள் முன்னணி,  நாகா மக்கள் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. அதேசமயம்,  கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் பாஜகவுக்குத் தாவிவிட்டதால், அந்தக் கட்சி பலம் பொருந்தியிருக்கிறது.  

ஆட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தி, பாஜக கூட்டணிக் கட்சிகளின் வெளியேற்றம் ஆகியவை காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தாலும், மத்திய தலைமை இம்மாநிலத்தைக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. எனவே முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தனியே போராடுகிறார்.

இங்கு இரு தேசிய கட்சிகளிடையிலான வாக்கு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. எனினும், அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவது பாஜகவுக்கு சாதகமாகி வருகிறது. நூலிழையில் பாஜக அரியணை ஏறிவிடும் சூழலே அங்கு நிலவுகிறது.

பஞ்சாபில் தொங்கு சட்டசபை:

உ.பி.க்கு அடுத்தாக தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலம் பஞ்சாப் (மொத்த தொகுதிகள்: 117). அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியிலிருக்கிறது.  வேளாண்மை சட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய மாநிலம் என்பதால், பாஜகவுக்கு கடும் சவால்  இங்கு காத்திருக்கிறது. சென்ற தேர்தலிலேயே முத்திரை பதித்த ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் களம் காண்கிறது.

இங்கு  காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்குள் பல மாதங்களாகவே குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அம்மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். சன்னி பட்டியலின சீக்கியர் என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகம். ஆனால், மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து முதல்வரை மதிப்பதே இல்லை. தன்னை முதல்வர் வேட்பாளர் ஆக்க வேண்டும் என்பதே சித்துவின் நிலைப்பாடு. சித்துவைக் கொண்டு அமரீந்தரைக் காலி செய்த ராகுல் காந்தி, இப்போது செய்வதறியாமல் திகைக்கிறார். தேர்தலுக்கு முன்னமே சித்து காங்கிரஸ் கூடாரத்தைக் கலைத்து விடுவாரோ என்ற அச்சத்துடன் தான் அக்கட்சியினர் இருக்கிறார்கள்.

பஞ்சாப் விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது காங்கிரஸுக்கு சாதகமான அம்சம்.  என்றாலும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிரோமணி அகாலிதளம் ஆகியவை வாக்குகளைப் பிரிக்கின்றன.

கேப்டன் அமரீந்தர் சிங் துவக்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்சாவின் சம்யுத சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நேர்மையற்ற அரசியலால் முதல்வர் பதவியை இழந்த அமரீந்தர் சிங் மீதான அனுதாபம் இக்கூட்டணிக்கு சாதகம்.

சென்ற தேர்தலின்போது, 77 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அதற்கு அமரீந்தர் சிங்கின் தலைமையே காரணம். ஊழல் புகார்கள் காரணமாக சிரோமணி அகாலிதளம் செல்வாக்கு இழந்து, 17 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக 3 தொகுதிகளில் வென்றது. மாறாக, புதிதாகக் களம்கண்ட ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியானது.

இம்முறை பகவத் சிங் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. தில்லியில் உள்ளது போன்ற அரசை பஞ்சாபிலும் ஏற்படுத்துவோம் என கேஜரிவால் பிரசாரம் செய்கிறார். நிறைவேற்ற இயலாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசி வருகிறார்.

அண்மைய கருத்துக்கணிப்புகள் பலவும், ஆம் ஆத்மி கட்சியே பஞ்சாப் தேர்தல் களத்தில் முந்துவதாகச் சொல்கின்றன. பாஜக இருக்கும் இடமே தெரியவில்லை என்றும் கருத்துகள் கூறப்படுகின்றன. எனினும் கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் வாக்கு சதவிகித வித்தியாசம் மிகக் குறைவாக  இருக்கிறது. ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக பாஜக கூட்டணி 30 தொகுதிகளுக்கு மேல் வெல்லவும் வாய்ப்புள்ளது.

சீக்கிய மதம் அவமதிப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட கும்பல் கொலைகள், காங்கிரஸ் உட்கட்சிப் பூசல்கள், பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி செய்த மாநில அரசு, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறை ஆகியவை, நிசப்தமாக இருக்கும் ஹிந்து விவசாயிகளிடையே அமைதிப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.  

சிரோமணி அகாலிதளம் தனது அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில்  போராடுகிறது. ஆயினும் அதன் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதனை பாஜகவும் பொருட்படுத்தவில்லை. அகாலிதளத்தின் செல்வாக்குச் சரிவே ஆம் ஆத்மி கட்சிக்கான ஆதரவாக மாறி வந்துள்ளது.

எனினும், தற்போதைய காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாஜக கூட்டணி, சிரோமணி அகாலிதளம் ஆகிய நான்குமுனைப் போட்டியால், தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு நிலவுகிறது. எல்லைப்புற மாநிலமான பஞ்சாபில் தேர்தலுக்குப் பின் நிலையற்ற தன்மை ஏற்படவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியே பஞ்சாபில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும்.

3 Replies to “ஐந்து மாநிலத் தேர்தல்கள்: முந்துகிறது பாஜக!”

 1. அது கிழக்கு பாகிஸ்தான் மேல் இந்தியா படையெடுக்குமா என பலத்த ஆரூடங்கள் வந்து கொண்டிருந்த நேரம், இந்திரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் இனி பாகிஸ்தான்மேல் பாய்வார் உள்நாட்டில் மாநில அரசுகளை விட்டுவைக்கமாட்டார் என்றெல்லாம் தியரிகள் வந்து கொண்டிருந்தன‌

  அந்த 1971ம் ஆண்டு மே 27ம் நாள் கருணாநிதி இந்தியாவினையே அதிரவைப்பதாக சொல்லி ஒரு அறிவிப்பினை செய்தார்

  நீதிபதி ராஜ்மன்னார் தலமையில் ஒரு குழுவினை நியமிப்பதாக அறிவித்தார், அதில் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி என்பவர்களும் இடம்பெற்றனர்

  ஆம் சமூகநீதி திராவிட அரசு குழுவில் இருந்தவர்கள் முதலியாரும் ரெட்டியும்.

  அந்த குழு கூட்டாட்சி தத்துவபடி மாநில அரசு மத்திய அரசுடன் கொண்டிருக்கும் உறவுகளை ஆராய்ந்து மாநில நலனை காக்கும் வகையில் பல திருத்தங்களை விளக்க பரிந்துரை சொல்லும் குழு

  அதுவும் விசாரித்து ஒரு அறிக்கையினை வழங்கியது அதில் 356ம் பிரிவு நீக்கம், மாநிலத்த்துக்கு கூடுதல் துறைகளை கோருவது, ஆளுநரை தமிழ் ஆடுகளை மட்டும் ராஜ்பவனில் மான்களோடு மேய்க்க சொல்வது போன்ற பல முடிவுகள் இருந்தன‌

  இதை மத்திய அரசு ஏற்கவேண்டும் விரைவில் ராஜமன்னார் குழு அறிக்கை இந்தியாவுக்கே வழிகாட்டும் இதில் இருந்து பின்வாங்க போவதில்லை என சூளுரைத்தார், இந்திரா அவர்போக்கில் இருந்தார்

  பின் மிசாகாலம் சர்காரியா காலம் வந்தது

  அப்பொழுது மட்டுமல்ல அதன் பின் சுமார் 3முறை முதலமைச்சராக இருந்தார் கருணாநிதி கடைசிவரை ராஜ்மன்னார் அறிக்கை பற்றி பேசவே இல்லை

  அதுவும் மத்திய அரசை சுமார் 15 காலம் அவர் ஆட்டிவைத்த காலங்களில் தான் அமைத்த ராஜ்மன்னார் குழுவே அவருக்கு மறந்துவிட்டது பெரும் சோகம்

  நினைவாற்றல் மிக்கவர் என்றெல்லாம் சொல்லபட்ட கருணாநிதிக்கு மாநிய சுயாட்சிக்க்கு வழிகோரும் தான் அமைத்த குழுவின் பரிந்துரையினை, தான் மத்திய அரசில் இருந்தபொழுது மறந்ததெல்லாம் தமிழக சோகம் அல்லது நல்ல நேரம்

  ஒருவேளை அன்றே இந்த குழுவின் அறிக்கையினை அகில இந்திய அளவில் சட்டமாக்கியிருந்தால் ஆளுநரை அடக்கியிருந்தால் அவரின் மகனும் கட்சியும் இன்று இவ்வளவு தடுமாறமாட்டார்கள்

  ஆளுநர்டோவ்… என குதிக்கும் உபிக்களுக்கு இதெல்லாம் ஏனோ மறந்துவிடுகின்றது அல்லது மிகுந்த பாடுபட்டு மறைக்கின்றார்கள் என்பதுதான் சோகம்

  அன்றே ராஜ்மன்னார் அறிக்கை என கருணாநிதி உருட்டிய கட்டையினைத்தான் இன்று டப்பாவுக்குள் போட்டு இந்நாள் முதல்வரும் குலுக்கி விளையாடிகொண்டிருக்கின்றார்

 2. ” பெலாரஸ் , போலந்து வழியாக தமிழக மாணவர்களை மீட்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளோம் ” என்று தமிழக அமைச்சர் மஸ்தான் சொல்வதையோ , ” உக்ரைனிலிருந்து நாடு திரும்பும் தமிழக மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவை தமிழக அரசு ஏற்கும் ” என்று ஸ்டாலின் சொல்வதையே நாம் கிண்டலடித்துச் சிரிக்கலாம்… இவையெல்லாம் வெறும் காமெடிகள் தான் ….

  ஆனால் இந்தப் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லி தமிழக மக்களை நம்பவைக்கும் வலுவான மீடியா பலம் அவர்களிடம் உண்டு . அறுபதுகள் முதல் இன்று வரை அவர்கள் ஜீவித்திருப்பதே இந்த கெப்பல்ஸ் ( கோயபல்ஸ் என்பது தவறு ) பிரச்சாரம் மூலம் தான் ….

  ஒரு பொய்யை திரும்பத்திரும்பச்சொல்லி தமிழர்களை நம்ப வைக்க அவர்களால் முடியும்….ரூபாய்க்கு மூனு படி அரிசியில் ஆரம்பித்து , ஐந்து பவுன் நகைக்கடன் தள்ளுபடி வரை இதே கதைதான்..

  எல்லாச் செலவையும் மத்திய அரசு தான் செய்கிறது …அதற்கான சிரமத்தையும் மத்திய அரசுதான் மேற்கொள்கிறது என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்ல நம்மிடம் எந்த மீடியாவும் இல்லை. சோசியல் மீடியா எல்லாம் பாமர மக்களிடம் சென்றடையாது…

  இதுதான் உண்மை… இந்த மீடியா பலத்தை நாம் உருவாக்கும் வரை நம்முடைய பலம் இதே அளவில் தான் இருக்கும் …சும்மா மூன்றாவது இடம் என்று சொறிந்து கொள்ளலாம்… அதற்கு மேல் எதுவும் நடக்காது ..

  கசப்பாகவே இருந்தாலும் இதுதான் உண்மை….

 3. உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்: ஸ்டாலின்

  பொதுவாக நெருக்கடி காலங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் மத்திய அரசின் மீட்பு விமானமாக இருக்கும் அதில் கட்டணம் உள்ளிட்டவை அதிகமிராது இருந்தாலும் அதனை மத்திய அரசுதான் செலுத்தும் , வேண்டுமானால் மாநில அரசு அவர்களோடு பகிந்து கொள்ளலாம்

  காரணம் அவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதால் மத்திய அரசுதான் அதற்கு கடமைபட்டது

  வெளிநாட்டு இந்திய தூதரகம் மத்திய அரசுக்கு கட்டுபட்டதே தவிர மாநில அரசு அதில் தலையிட முடியாது

  முதல்வரின் இந்த அறிவிப்பு இந்திய அரசின் விமானமன்றி வேறு வகையில் வரும் இந்திய தமிழக குடிமக்களுக்கு பொருந்தும் என நம்புகின்றோம், ஆனால் இந்திய அரசின் உதவியின்றி அவர்கள் வெளியேறுவது சிரமம்

  தமிழக அரசு தனியே விமானம் அனுப்ப முடியாது, திராவிடா ஏர்வேஸ், தமிழ் ஏர் எல்லாம் நடப்பில் இல்லை ஒருவேளை தமிழக அரசின் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யபட்டாலும் மத்திய அரசுதான் அனுமதி கொடுக்க வேண்டும்

  ஒருவேளை மத்திய அரசின் உதவியுடன் சென்னைக்கு மாணவர்கள் வந்தால் அவர்களை மாநில அரசின் இலவச பேருந்து திட்டத்தில் ஏற்றிவிடுவது மிகவும் சிரமான விஷயம் அல்ல,

  உக்ரைனில் இருந்து உயிர்தப்பி வந்தவர்கள் சென்னை வந்துவிட்டால் காய்கறி லாரியில் கூட ஊருக்கு ஓடிவிடுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *