ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
சென்ற வருடம் ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் குறித்து எழுதியதும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.
முதல் பதிப்பு சென்ற ஆண்டு 2021 ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திரம் அன்று வெளியிடப்பட்டு, ஒரே மாதத்தில் தீர்ந்து அடுத்த பதிப்பு எப்போது வரும் என்று பலர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இரண்டாம் பதிப்பை உடனே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவசரப்படாமல், முதல் பதிப்பை உபயோகித்தவர்கள் சொன்ன கருத்துக்களை நினைவில் கொண்டு, புத்தகத்தை மேலும் செம்மைப்படுத்தி இரண்டாம் பதிப்பு இந்த ஆண்டு ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திரம் அன்று (5.3.2022) வெளிவர இருக்கிறது.
புத்தகம் பற்றிய விபரம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் கீழே தந்துள்ளேன்.
முதல் பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் என்ன வித்தியாசம் ?
இந்தப் பதிப்பிற்கு அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் ஸ்ரீமுகம் சாதித்துள்ளார். மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் அவர்கள் அணிந்துரையும், ஸ்ரீ.உ.வே வேங்கடாசாரி அவர்கள் பாராட்டுரையும் அளித்துள்ளார்கள்.
வேறு என்ன வித்தியாசம் ?
முதல் பதிப்பு நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதும் ஒரே புத்தகமாக வந்தது. இரண்டாம் பதிப்பு இரண்டு பகுதிகளாக வருகிறது. கூடவே அநுபந்தம் என்று மொத்தம் மூன்று புத்தகங்களாக வருகிறது. இப்பதிப்பில் (இரண்டாம் பதிப்பில்) பிழைகள் களையப்பட்டு, மேலும் பதங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. நண்பர் ஸ்ரீ பாலாஜி ரவி அவர்கள் ஆழ்வார்கள் சந்நதிக்கு முன் அமர்ந்து ஆழ்வார்களை ‘சில்பி’ போன்று கோட்டோவியங்களாக ஓவியங்களாக தீட்டியுள்ளார். நாதமுனிகள் தொடக்கமாக எல்லா ஆழ்வார்கள் படங்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. மாதிரிக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் பதிப்பில் அடிவரவும் இதில் சேர்த்துள்ளோம்.
சரி, மொத்தம் எவ்வளவு பக்கங்கள் ?
முதல் பகுதி பல்லாண்டு தொடக்கமாக பெரிய திருமொழி முடிய மொத்தம் சுமார் 400+ பக்கங்கள்.
இரண்டாம் பகுதி இயற்பா மற்றும் திருவாய்மொழி; மொத்தம் சுமார் 300+ பக்கங்கள்.
அநுபந்தம் சுமார் 200+ பக்கங்கள்.
புத்தகத்தின் அளவு என்ன ?
சென்ற முறை போல 18.5cm x 24cm
படிக்க வசதியாக இருக்குமா ?
மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிக்க வசதியாகப் பெரிய எழுத்தில் வார்த்தைகளுக்கு இடையிலும், வரிகளுக்கு இடையிலும் ’பிசினஸ் கிளாஸ்’ டிக்கெட் போல இடம் விட்டு கொஞ்சம் தாராளமாகக் கொடுத்துள்ளோம். இதைத் தவிர கல்யாண இலை வாழைப்பழம் போல வெட்டாமல் பாசுரங்களை ஒரே பக்கத்தில் முழுதாகக் கொடுத்துள்ளோம். சந்தை வகுப்பிற்கு ஏற்ற புத்தகமாக இருக்கிறது என்று பலர் சென்ற ஆண்டு கூறினார்கள்.
என்னிடம் ஐபேட் இருக்கிறது ஈ-புக், PDFல் கொடுக்கலாமே ?
கொடுக்கலாம். ஆனால் கொள்கைப்படி அது மாதிரி தரும் எண்ணம் இல்லை. ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராமர் இருக்கிறார்; ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன். ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் 108 எம்பெருமான்களும், ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இருக்கிறார்கள். நம்மாழ்வார் திருவாய் மூலம் நாதமுனிகளுக்குக் கிடைத்து, செவி வழியாக ஆசாரியர்கள் மூலம் இன்று வரை நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஐ-பேட்டை வெப்-சீரீஸ் பார்க்க வைத்துக்கொள்ளலாமே!.
இதன் விலை என்ன ?
கீழே விலை விவரம் கொடுத்துள்ளோம்.
விலை ஏன் சற்று கூடிவிட்டது ?
புத்தகத்துக்கு உண்டான செலவை மட்டுமே உங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு காகித விலை எலுமிச்சை விலை போல திடீர் என்று ஏறிவிட்டது. சென்ற முறை அச்சடித்தது போல நல்ல காகிதத்திற்கும் தட்டுப்பாடு. இரண்டு புத்தகம் என்பதால் இரண்டு பைண்டிங், இரண்டு அட்டை என்று அதுவும் சேர்ந்துவிட்டது. புத்தகத்தை அச்சடிக்கும் செலவுடன், பேக்கிங், தபால் செலவையும் இந்த முறை சேர்த்துள்ளோம்.
என்னிடம் ஏற்கனவே முதல் பதிப்பு இருக்கிறது அநுபந்தம் மட்டும் தனியாக கிடைக்குமா ?
கிடைக்கும். விவரங்களைப் பார்க்கவும்.
எனக்கு அநுபந்தம் வேண்டாம், பிரபந்தம் மட்டும் கிடைக்குமா ?
கிடைக்கும். விவரங்களைப் பார்க்கவும்.
அநுபந்தம் புத்தகத்தில் என்ன இருக்கிறது ? விசேஷம் ?
அநுபந்தம் அறிமுகம் என்ற கட்டுரையை இங்கு படிக்கவும்.
மூன்று புத்தகங்களையும் சேர்த்து வாங்கினால் எனக்கு என்ன கிடைக்கும் ?
மூன்று புத்தகங்கள் கிடைக்கும். போக்குவரத்து செலவு குறைந்து அந்தச் சலுகை உங்களுக்குக் கிடைக்கும்.
இதைத் தவிர வேறு ஏதாவது கொசுறாக கிடைக்குமா ?
கொசுறாக கிடைக்கப் போவது பிரணவம்!
பிரணவத்தில் (ஓம்) அ, உ, ம அடங்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். இதில் ’அ’ என்ற பரமாத்மாவை, ’உ’ என்ற பிராட்டியைப் புருஷாகாரமாக ‘ம’ என்ற ஜீவாத்மா பற்ற வேண்டும் என்பது இதன் உட்பொருள்
பாகம்-1 (ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அட்டைப்படம் ) ‘அ’ என்ற பரமாத்மாவைக் குறிக்கிறது.
பாகம்-2 (ஸ்ரீரங்கம் தாயார் அட்டைப்படம் ) ’உ’ என்ற பிராட்டியைப் புருஷாகாரமாக பற்ற வேண்டும் என்று குறிக்கிறது.
அநுபந்தம் (ஸ்ரீநம்மாழ்வார் திருவடி தொழல் அட்டைப்படம்) நம்மாழ்வார் ‘புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று ‘ம’ என்ற ஜீவாத்மா பெருமாளை எப்படிப் பற்ற வேண்டும் என்று நம்மாழ்வார் நமக்கு பெருமாளிடம் நமக்கு உள்ளப் பந்தத்தைக் காட்டிக்கொடுக்கிறார் (அநுபந்தம்).
சரி என்ன இதனால் என்ன பயன் ?
என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள். திருமங்கை மன்னன் “நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்”. கண்டுகொண்டது மட்டுமல்லாமல் அந்த நாமத்தைச் சேவித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் பட்டியலிடுகிறார்.
”குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”
அந்தச் சொல்லை கண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். ஓம் நமோ நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.
புத்தகம் எப்படி அனுப்புவீர்கள் ?
கூரியர் அல்லது இந்தியத் தபால் ( ரெஜிஸ்டர் போஸ்ட் ) மூலம் அனுப்பத் திட்டம். சென்ற முறை மாதிரி ஒரு இடத்தில் பிக்கப் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.
எந்தப் பதிப்பகம் ?
‘ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட்’ மூலமாக பிரசுரிக்கிறோம்.
புத்தகத்தை எப்படிப் பெறுவது ?
சுலபம். விவரங்களைப் பார்க்கவும்.
கூகிள் பே/UPI மூலம் அனுப்ப முடியுமா ?
முடியும்.
Bank Name, A/C Number IFSC number கொடுத்து அனுப்பலாம்.
எல்லாம் சரி, பணம் அனுப்பிவிட்டேன். புத்தகம் எப்போது என் கைக்குக் கிடைக்கும் ?
புத்தகம் மே 25க்கு மேல் எல்லோருக்கும் அனுப்ப திட்டம்.
கடைசியாக வேறு ஏதாவது ?
இன்று அட்சய த்ருதீயை நன்னாளில் திருமங்கை ஆழ்வார் நமக்குக் காட்டிக்கொடுத்த தங்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன். வங்கி லாக்கரில் பூட்டி வைக்காமல், உங்கள் மனதில் இந்த நிகரில்லாத நிரந்தரத் தங்கத்தைப் பூட்டி வைத்துக்கொள்ளலாம்.
பொன் ஆனாய்! பொழில் ஏழும் காவல் பூண்ட*
புகழ் ஆனாய்! இகழ்வாய தொண்டனேன் நான்*
என் ஆனாய்? என் ஆனாய்? என்னல் அல்லால்*
என் அறிவன் ஏழையேன்?** உலகம் ஏத்தும்
தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்!*
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய்!* பின் ஆனார் வணங்கும் சோதி!*
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!
பொன் ஆனாய்! என்று ஆழ்வார் பெருமாளைப் பொன் போன்றவனே! என்கிறார். பொன்னை எல்லோரும் பெற விரும்புகிறார்கள். அது கிடைத்தவுடன் எல்லோரும் தூக்கம் இல்லாமல் அதைப் பாதுகாக்கிறார்கள். அது போல பெருமாளைக் கண்டுகொண்டு விட்டால் பக்தன் தூங்க மாட்டான்.
தன்னிடம் உள்ளப் பொன்னைத் தொலைத்துவிட்டால், கதறுவார்கள். அதே போல பெருமாள். இதற்கு உதாரணம் பரதாழ்வான் ஸ்ரீராமரை இழந்து கதறியது போல்.
பொன் கிடைத்தவன், அதை உருக்கி மார்பில் அணிந்துகொள்வான். பெருமாளும் அப்படியே. ஆழ்வார் பாசுரங்களைப் பாடினால் தானும் உருகி, உங்களையும் உருக்கி உங்களைத் தன் மார்பில் வைத்துக்கொள்வான்.
அடியேன்,
- சுஜாதா தேசிகன்
விலை விபரம் :
Option 1: திவ்யப் பிரபந்தம் ( இரண்டு பகுதிகள்) + அநுபந்தம் = மொத்தம் 3 புத்தகங்கள் – ரூ 550/=
( தபால் செலவு உட்பட )
Option 2: திவ்யப் பிரபந்தம் ( இரண்டு பகுதிகள்) = மொத்தம் 2 புத்தகங்கள் – ரூ 450/=
( தபால் செலவு உட்பட )
Option 3: அநுபந்தம் – 1 புத்தகம் – ரூ250/=
( தபால் செலவு உட்பட )
புத்தகத்தைப் பெற விரும்புகிறவர்கள்
Your Name :
Address:
Phone No :
Option (1,2,3 ) :
How many books you need in each option
Amount:
Transaction Details:
என்ற விபரங்களை rdmctrust@gmail.com மெயில் அனுப்பிவிட்டு புத்தகத்துக்கான தொகையைக் கீழே தரப்பட்டுள்ள டிரஸ்ட் அகவுண்டுக்கு அனுப்பவும். Pl also send the transaction details to rdmctrust@gmail.com so that it is easy for us to track.
Name: Ramanuja Desika Munigal Charitable Trust
STATE BANK OF INDIA,
BRIGADE METROPOLIS,
BANGALORE
Account no : 37954692708
Type: Current Account
IFSC Code:- SBIN0015034
sent money and details…expecting books around may 25 th as u say
thanks
neela