கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்

கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகள் அருளிச் செய்த கந்த புராணம் முருக பக்தர்களின் மந்திரப்பெட்டகமாகும்.

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விருத்தப்பாக்களால் அமைந்த இந்நூலை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து வருகின்றனர். ஊர்கள் தோறும் சிற்றாலயங்கள் முதல் பேராலயங்கள் வரை அடியவர்கள் கூடியிருந்து பக்தி சிரத்தையுடன் இப்புராணத்தை படனம் செய்வர். ஆலயங்களில் மட்டுமன்றி, வீடுகளிலும் தொழிலகங்களிலும் கூட கந்தபுராண படனம் நடைபெற்று வந்துள்ளது. சுமார் இரண்டு முதல் மூன்று மாத காலம் வரை இப்படனம் நடைபெறும். ஒருவர் பாடல்களை இசையுடன் படிக்கஇன்னொருவர் உரை செய்வார். இந்த மரபில் மிக நீண்ட நேரம் நிகழும். இப்புராண படனத்தை கல்வியறிவு உள்ளோர், கல்வியறிவு குறைந்தோர்் என்று எல்லோரும் பக்தி சிரத்தையுடன் கேட்பார்கள்.

கச்சியப்ப சிவாச்சார்யார் வாழ்ந்த காலத்திலேயே இம்மரபு இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விட்டதாகச் சொல்வார்கள். தொலைக்காட்சி முதலிய நவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில் புராண படனமே மக்களின் அறிவெழுச்சிக்கும் பக்தி வளர்ச்சிக்கும் ஒழுக்கமான வாழ்வியலுக்கும். பொழுதுபோக்குக்கும் அடிப்படையானது. குறித்த புராண படனம் நடைபெறும் மாதங்களில் புலால் உண்பவர்கள் கூட அவற்றை விடுத்து பக்தி சிரத்தையுடன் புராண படனத்தில் ஈடுபடுவார்கள்.

ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. கேட்பார் இல்லாமல் படிப்போர் மட்டுமே படிக்கின்றனர். பல இடங்களில் அம்மரபும் நின்று போய் பல காலமாகி விட்டது. சில இடங்களில் கந்த சஷ்டி காலத்தில் மட்டும் சூரன் போர் படலம் படிக்கப்படுகிறது. எனவே, இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதுவும் கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகளின் எழுத்திலேயே அதனை நடைமுறைப்படுத்துவதே மகத்துவம் வாய்ந்தது. குறித்த எழுத்துக்கள் முருகப் பெருமானால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டன என்பதும் திருத்தம் செய்து கொடுக்கப்பட்டன என்பதும். அரங்கேறும் போது நேரே எழுந்தருளி அங்கீகரிக்கப்பட்டன என்பதும் நம்பிக்கையாகும். ஆயினும் பத்தாயிரம் பாடல்களை பொதுவாக படிக்கும் நிலை தற்போதைய இளம் தலைமுறையினரிடம் இல்லை என்கிற உண்மையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

எனவே என்ன செய்யலாம்? இது இவ்வாறாக, அண்மையில் புதிய ஒரு தகவல் கிடைக்கப்பெற்றேன்.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் தொடர்ச்சியாக 12 அத்தியாயங்களில் அமைந்துள்ள பகுதிகள் ஒரு தொகுப்பாக பாராயணம் செய்யப் படுகின்றன. துர்க்கா சப்தசதி என்ற 700 பாடல்களைக் கொண்ட நூலாக தேவி மகாத்மியம் என்று சம்ஸ்கிருத மொழியில் இந்த நூல் அமைந்துள்ளது. இது மிகப்பிரபலமானது. யாவரும் அறிந்தது.

இது போல தமிழ் (கச்சியப்ப சிவாச்சார்யாரின்) கந்தபுராணத்திற்கு அடிப்படையாக அமைந்த இலட்சம் சுலோகங்களை கொண்ட, வடமொழி ஸ்காந்த மகாபுராணத்திலிருந்து எழுநூறு சுலோகங்கள் தொகுக்கப்பட்டு ஸ்கந்த சப்தசதி என்றொரு பாராயணநூல் சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்காந்த மகாபுராணம் ஒரு இலட்சம் சுலோகங்களை உடையது என்பதால், குறித்த இப்புராணத்திலுள்ள இலட்சம் சுலோகங்களையும் பாராயணம் செய்வது கடினமாதலில் குமரப்பெருமானின் உத்தரவுக்கமைய தமிழகத்தில் 1900 களின் ஆரம்பத்தில் தமிழகத்தில் வாழ்ந்த ஆங்கரை ரங்கசாமி சாஸ்திரிகள் என்ற சம்ஸ்கிருத அறிஞரும் வேத வித்வானும் முருக பக்தருமான பெரியவர் அதிலிருந்து 700 சுலோகங்களை கொண்டதாக ஸ்கந்தசப்தசதி என்றொரு நூலை உருவாக்கியிருக்கிறார். இந்நூல் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க இடங்களில் பாராயணம் செய்யப்பெற்று ஒவ்வொரு சுலோகமும் மந்திரமாக கருதி ஹோமமும் செய்யப்படுவதாகவும் அறிய முடிகிறது. இந்த அரிய வடமொழி நூலினை இலங்கையில் பிரபல மூத்த ஆன்மீக எழுத்தாளரும் அறிஞருமான கோப்பாய் சிவம் பிரமஸ்ரீ ப.சிவானந்த சர்மா அவர்கள் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்நூல் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இப்பொழுது , கந்தபுராண படன எழுச்சிக்கு முருகன் ஒரு செய்தியை உள் நின்று உணர்த்தினான். இவ்வகையில், பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைக் கொண்ட கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகள் அருளிய தமிழ் கந்த புராணத்திலிருந்து பொருத்தமான 700 பாடல்களை, குறித்த புராணத்திலிருந்து கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து பாராயணம் செய்யலாம் என்ற எண்ணமே அதுவாகும். சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, ஸ்கந்த மஹாத்மியத்தை போல இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்.

இயல்பாக இவ்வாறான தேவி மகாத்மியம், ஸ்கந்த மகாத்மியம், பாகவதம் போன்ற நூல்களை ஆறு, ஏழு (சப்தாகம்), ஒன்பது (நவராத்திரி) என பாராயணம் செய்யும் மரபு உள்ளது. எனவே ஆறுநாட்கள் பாராயணம் செய்யத்தக்க வகையில் பகுப்புச் செய்திருக்கிறோம். விரும்பியவர்கள் ஒரே நாளிலும் பாராயணம் செய்யலாம்.

இது புல்லறிவாளனான என் எழுத்தன்று. கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகள் எழுதிய, குமர கோட்ட முருகன் திருத்திய எழுத்து என்பது மீண்டும் மனம் கொள்ள வேண்டியது.

இதன் மூலம் மீண்டும் எல்லா இடங்களிலும் கந்தபுராண படனம் சிறிதளவேனும் நடக்க ஒரு தூண்டல் நிகழும். அதாவது இவ்வடிவிலேனும் அது நிகழும் என நம்புகிறேன்.

உள் நின்று உணர்த்தும் நம் இறைவனாக முருகனின் திருவருளோடும் கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகளின் குருவருளோடும் செய்த முயற்சியே இது. தவறுகள் இருப்பின் பெரியோர்கள் திருத்தி சீர்ப்படுத்துவார்களாக. குற்றங்களை களைந்து குணம் கொண்டு போற்றுவார்களாக.

ஆறு நாள் கிரமம் இப்படிச் செய்யலாம்:

1ஆம்நாள் – கௌரி கல்யாணம் முதல் தாரகன் வதம் வரை
2ஆம் நாள் – வீரவாகுதேவர் தூது மற்றும் பானுகோபன் வதம்
3ஆம் நாள் – சிங்கமுகன் வதம்-சூரபதுமன் போர் முதற்பகுதி
4ஆம் நாள் – திருப்பெருவடிவம் முதல் சம்ஹாரம் சூர மற்றும் தேவர்கள் போற்றல்
5ஆம் நாள்- தெய்வானையம்மை திருமணம் முதல் கந்தவிரதச் சிறப்பு வரை
6ஆம் நாள்- தியாகராஜ மகிமை முதல் வள்ளி விவாகம் வரை நிறைவுப்பகுதி

இப்படி வகுக்கலாம்.

அச்சு நூலாக்க கூடிய நிலை இப்பொழுது இல்லையாதலில், pdf வடிவில் இந்த நூல் வெளியிடப் படுகின்றது. இந்த சுட்டியில் தரவிறக்கம் செய்து கொள்ளாம்.

அச்சு நூலாக்கம் செய்கிற போது அறிஞர்கள் எதிர்காலத்தில் திருத்தங்களோடு பொருத்தமாயின் நூலாக்கி பயன்பாட்டில் பிரபலமாக்கட்டும்.

அடியேன் செய்கை தவறாயின் பெரியோர் பொறுப்பார்களாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *