சாணக்கிய நீதி – 6

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

இரண்டாம் பகுதி -2

ந விஶ்வஸேது குமித்ரே ச மித்ரே சா(அ)பி ந விஶ்வஸேது  |

கதா3சிது குபிதம் மித்ரம் ஸர்வ குஹ்யம் ப்ரகாஶயேது  || 2.6  ||

பதவுரை:  தீய நண்பனையும் நம்பக்கூடாது; எப்பொழுதாவது நண்பனிடம் சினம் கொண்டு அனைத்து இரகசியங்களையும் வெளிச்சமிடுபவன் நண்பனாயிருந்தாலும் நம்பக்கூடாது.               …                          2.6

விளக்கம்:  எப்படிப்பட்டவரை நண்பராக எண்ணி நம்பிவிடக்கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப இச் செய்யுளில் கூறுகிறார், சாணக்கியர்.

நம்மிடம் சிலர் நட்புடன் பழகுவர்;  ஆயினும் அவர்களது செயல்களைப் பார்த்தால் தீயனவாக இருக்கும்.  உதாரணமாக, அவர் பொய்யுரைப்பவராகவோ, புறங்கூறுபவராகவோ, ஏமாற்றுபவராகவோ, தீய நடத்தை உள்ளவராகவோ இருக்கலாம். நம்மைப் பொருத்தவரை நாணயமாக நடந்துகொள்கிறாரே என்று அப்படிப்பட்டவரை நண்பர் என்று நம்பிவிடக்கூடாது.

ஏன்?

பிற்காலத்தில் நம்மை அவர் ஏமாற்றலாம்;  அதாவது, நம்மிடம் பொய்சொல்லிக் கடன்வாங்கித் திரும்பிக் கொடுக்காமல் ஏமாற்றக்கூடும்.  ‘இந்த ஸ்டாக் வாங்கினால் நிறையப் பணம் பண்ணலாம், இந்த சிட் ஃபன்டில் நிறைய வட்டிகொடுக்கிறார்கள்,’ என்று சொல்லி, நமது பணத்தை முதலீடு செய்யவைத்து, முதலுக்கு மோசமாகும் நிலைக்குத் தள்ளலாம்.

நம்மைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாததையும், பொல்லாதையும் சொல்லி நமக்குக் கெட்டபெயர் வாங்கிக் கொடுத்து, நம்மைத் துயரில் ஆழ்த்தவும், சமூகத்தில் கீழ்நிலைக்குத் தள்ளவும் வாய்ப்பிருக்கிறது. 

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.  ஆகவே, ஒருவரை நண்பராக ஏற்று, அவரிடம் நம்பிக்கை வைக்குமுன் அவர் நன்னடத்தை உள்ளவரா என்று கவனிக்கவேண்டும்,

இதைத்தான் திருவள்ளுவர்,

பக சொல்லிக் கேளிர் பிரிப்பர் நக சொல்லி

நட்பு ஆடல் தேற்றாதவர்

என்று சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக, நாம் நண்பனென்று நினைத்துப் பகிர்ந்துகொள்வதை, எதனாலோ நம்மிடம் ஏற்பட்ட கோபத்தினால், உலகம் அறியும்படி வெளிச்சம்போட்டுக் காட்டுபவரையும் நம்பக்கூடாது என எச்சரிக்கிறார், கௌடில்யர்.

‘சொல்வதெல்லாம் சரிதான்; ஒருவரை நம்பிச் சொல்லிவிட்டு, அவர் நம் இரகசியத்தை வெளிக்காட்டியபின் அவர்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது என்பது, வந்தபின் காத்துக்கொள் என்பதைப் போல் அல்லவா உள்ளது?  தீ சுடும் என்று அதில் கையை வைத்துப் பார்த்தபின்னரா அறிந்துகொள்ள முடியும்?’ என்று கேட்பது நியாயமானதே!

நம்மிடம் நட்புடன் பழகுவதற்காக மற்றவரைப் பற்றி – நாம் மதிப்பு வைத்திருப்பவரைப் பற்றிய  இரகசியங்களை நம்மிடம் சொல்லி அவரைத் தீயவராகவும், தான் மிக நல்லவர்போலப் பேசுபவரையும் கண்டால், அவருடன் நட்புவைக்ககூடாது என்பதே இதன் பொருள்.  மீண்டும் திருவள்ளுவரின் குறளையே சான்றாகக் காணலாம்.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

அதாவது, நம்மிடம் உள்ளுர நட்பே இல்லாது, வெளியில் நம்மைப் பார்த்து நகைப்பவரின் நட்பைவிட பகைவரால் வருவது பத்துக்கோடி மடங்கு நன்மையே என்பதே அறிவுரை.

மநஸா சிந்திதம் கார்யம் வாசா நைவ ப்ரகாஶயேது  |

மந்த்ரேண ரக்ஷயேத் கூ34ம்  கார்யே சா(அ)பி நியோஜயேது  || 2.7  ||

பதவுரை:  மனதில் நினைத்த செயலை சொற்களால் வெளிப்படுத்தலாகாது. இரகசியச் செயலாக இருப்பினும் திட்டமிட்டுக் காப்பாற்றிச்  செயலாற்றுக.                           …           …               2.7

விளக்கம்:  இப்பொழுது எப்படிச் செயலாற்றுவது என்பதுபற்றிச் சொல்லப்படுகிறது.  இது தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் பொருத்தமானதே.

முதலில் தனிப்பட்ட மனிதரைப் பற்றி விளக்கிவிட்டு அரசுச் செயல்களுக்குச் செல்வோம். 

உதாரணமாக நாம் ஒரு காரோ,வீடோ வாங்க விரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.  அதை நமது நண்பர், உறவினர் இவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் வைத்துக்கொள்வோம்.  என்ன ஆகும்?  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆலோசனை சொல்லுவர்.  நாம் மாருதி கார் வாங்கலாம் என்று  நினைத்தால் ஒருவர், ஃபோர்டு கார் நல்லது என்பார்; இன்னொருவர் ஹன்டேதான் சிறந்தது என்பார்;  மற்றொருவர் உலகெங்கும் தேடினாலும் பி.எம்.டபிள்யுவைப் போல கார் கிடைக்காது என்றால்…

அதை விடுங்கள்.  நீங்கள் கார் என்றால், உங்கள் வீட்டில் எஸ்.யு.வி. வாங்கச் சொல்வார்கள்.  உங்கள் பெற்றோர் வேன் வாங்கப் பரிந்துரைப்பர். 

இதையெல்லாம் கேட்டால் நமக்குத் தலை சுற்றும்.  நம்மிடம் இருக்கும் பணத்திற்கு செகன்ட் ஹான்ட், அதுதான் பழைய கார் வாங்கலாம் என்று நினைத்திருப்போம்.  ஆனால், நமக்குக் கிடைக்கும் அறிவுரைகளைக் கேட்டால், நமக்குக் கார் வாங்கும் ஆசையே போய்விடும்.

வீடு வாங்குவதை வெளியில் சொன்னாலும் இதே கதைதான்.

இப்பொழுது அரசு விவகாரத்துக்கு வருவோம்.

அரசு ஒரு எண்ணை சுத்திகரிப்பு ஆலையோ (oil refinery), அல்லது அணுமின் ஆலை (atomic power plant) நிறுவத் திட்டமிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  அதைப் பல நிபுணர்களைக் கலந்து இரகசியமாகத் திட்டு, நன்மை தீமை அறிந்து முடிவெடுக்காமல், பொத்தாம்பொதுவாக வெளியில் அறிவித்தால் என்ன ஆகும்?

சிலர் உடனே எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்துவர்.  வேறு சிலர் தமது மானிலத்தில் நிறுவ வேண்டும் என்றோ, நிறுவக்கூடாது என்றோ மறியல் செய்வர்.  சில செல்வந்த முதலாளிகள் தமக்கே கான்ட்ராக்ட் தரவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பர்.

இது ஒரு அரசியல் போராட்டமாகி அரசுக்கே தலைவலி கொடுத்து அரசே ஆட்டம் காணும் சூழ்நிலை தோன்றினாலும் வியப்பில்லை.

கஷ்டம் ச க2லு மூர்(க்)க2த்வம் கஷ்டம் ச க2லு யௌவனம்  |

கஷ்டாதூகஷ்டதரம் சைவ பரகே3ஹநிவாஸனம்  || 2.8  ||

பதவுரை:  முட்டாள்தனம் கட்டாயம் துயரம்தான், இளமை நிச்சயம் துயரம்தான். மற்றவர் வீட்டில் வசிப்பது துன்பத்திலும் மிகத் துன்பமே.             …           …           2.8

விளக்கம்:  முட்டாள்தனமாக நடப்பது துன்பத்தை விளைவிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். 

ஆனால் இளமை நிச்சயம் துயரம் என்றால் எங்கோ இடிக்கிறது என்று தோன்றுகிறதல்லவா? இளமையில்தான் நாம் உற்சாகத்துடன் செயல்படுகிறோம்.  எந்த வேலையையும் விரைவாக, எளிதாகச் செய்துவிடுகிறோம்.  தன்னம்பிக்கை அதிகமாக உள்ளது.  எதையும் கற்றுக்கொள்ளவேண்டும், புதிதாகச் செய்யவேண்டும், மனம் தளரக்கூடாது என்ற மனவேகம் இருக்கிறது.

பிற்போக்குவாதம் கூடாது, எதையும் சீர்தூக்கிச் செயல்படவேண்டும் என்ற திறந்த மனமும் இளமையில்தான் ஏற்படுகிறது. 

அப்படியிருக்க, இளமை எப்படித் துன்பமாகும்?!

வேகமாகச் செல்லும் காரையோ, மோட்டார் சைக்கிளையோ, இளைஞரிடம் கொடுத்தால் என்ன செய்வர்?

புயலைவிட வேகமாகச் செல்வதில் விருப்பம் இருக்கும்.  தன் வேகமாகச் செல்வதை மற்றவர், குறிப்பாகத் தன் நண்பர் – ஆணோ, பெண்ணோ, முக்கியமாகப் பெண் நண்பர் கண்டு அதிசயிக்க வேண்டும் என்றுதான் நினைப்பர்.

மலையுச்சியிலிருந்து கீழே எட்டிப்பார்க்கத் தோன்றும், அதுவும் ஒருவர் செய்ய முடியாது என்பதைத் தான் செய்யவேண்டும் என்ற துணிவு இருக்கும்.  அதுதான் ‘இளங்கன்று பயமறியாது,’ என்ற பழமொழியும் உள்ளது.

உலகத்திலேயே மிகவும் ஆழமான பள்ளத்தாக்கை உடைய கிரான்ட் கான்யன் அரிசோனாவில் உள்ளது.  கீழே பார்ப்பதற்கான இடங்களில் கம்பிக்கிராதி போட்டுத் தடுத்து, ‘இதைத் தாண்டிச் செல்லாதீர்,’ என்ற அறிவிப்பும் உள்ளது.

இருந்தபோதிலும், அதைத் தாண்டி எட்டிப்பார்த்து விழுந்த இளைஞர் கதைகளும் உள்ளன.  அதுபோல, ஆற்றுவெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்று அதில் அடித்துச் சென்றவர்பற்றிய செய்தியையும் நாம் அறிவோம்.

இதற்காக, இளமைப் பருவமே இருக்கக்கூடாது என்று சாணக்கியர் சொல்வதாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது.  எச்சரிக்கையுடன் செயல்பட்டுத் துன்பத்தை விலைகொடுத்து வாங்கக்கூடாது என்றே பொருள்.

‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்,’  என்று ஏன் சொல்லுகிறார்கள்?

ஓருவர் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றாலும், அவர் நமது நண்பரோ, உறவினரோ – மூன்று நாள்களுக்குமேல் தங்கினால், அவர்களுக்கு நாம் தொல்லையாகத்தான் இருப்போம். மேலும், நாம் வந்தபோது காட்டப்பட்ட உபசரிப்பும் இருக்காது;  ஏனெனில், அவர்கள் நமக்காக அவர்களது அன்றாடச் செயல்களைச் செய்யாமலோ, ஒத்திப் போடவோ வேண்டியிருக்கும்.  முதலில் அதைப் பொருட்படுத்தாமல் நமது வரவை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவர், நாள்கள் செல்லச்செல்ல, நமது இருக்கையைத் தொல்லையாக உணர்வர். மறைமுகமாக அதைக் காட்டவும் செய்வர்.  நாம்தான் அதைப் புரிந்துகொண்டு அதற்குத் தக்க நடக்க – அதாவது, புறப்படவேண்டும்.

விருந்தாளிகளுக்கே இந்நிலைமை என்றால், வேறுவழியின்றி மற்றவர் வீட்டில் தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அது எப்படிப்பட்ட துன்பத்தைத் தரும் என்று எண்ணிப் பார்த்தால், சாணக்கியர் சொல்வது தெளிவாகும்.

விருந்தாளிகள் என்னும்போது மறைமுகமாகத் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பவர், வேறுவழியின்றித் தங்குபவரிடம் நேராகவே அதைக் காட்டுவர்.  ஏச்சும், பேச்சும் மறைமுகத்தைத் தாண்டி, முகத்திற்கு நேராகவே தெரிவிக்கப்படும். 

‘தண்டச் சோறு,’ என்ற பட்டப் பெயரும் கிட்டும்.

இதைவிடத் துன்பம் ஒருவருக்கு வேண்டுமா?

ஶைலே ஶைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந க3ஜே க3ஜே  |

ஸாத4வோ ந ஹி ஸர்வத்ர சந்த3நம் ந வநே வநே  || 2.9  ||

பதவுரை:  மலையிலும் மலையிலும் மாணிக்கம் இல்லை;  யானையிலும் யானையிலும் முத்து இல்லை;  எல்லா இடங்களிலும் ஆன்றோர் நிச்சயமாக இல்லை; காடுகளிலும், காடுகளிலும் சந்தனம் இல்லை. …           …           2.9

விளக்கம்:  பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் நவரத்தினக் கற்கள் கிட்டுகின்றன.  அதனால் ஒவ்வொரு மலையிலும் அத்தகைய விலையுயர்ந்த கற்கள் கிடைப்பதில்லை.  அதை நாம் அறிவோம்.

ஆனால் ஒவ்வொரு யானையிலும் முத்து இருக்காது என்று ஏன் சாணக்கியர் கூறுகின்றார்?  அவருக்கு புத்தி பேதலித்துவிட்டதா?  சிப்பிக்குள்தான் தான் முத்து வளரும் – யானையிடமாவது?  முத்தாவது?  ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் முத்து கிடைக்காது என்பதற்குப் பதிலாக யானை என்று எழுதிவிட்டாரா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

ஓருவேளை தந்தம் என்பதற்குப் பதிலாக..

இல்லையில்லை.  எல்லா ஆண்  யானைகளுக்கும் தந்தம் உண்டே!

பின்னால்..

இலங்கை  இயற்கைப் பாதுகாப்பாளர் தலைவரான சாமந்த குணசேகர, “யானை முத்துகள் என்பது தொன்மம், கட்டுக்கதை, புராணம்.  இவை யானைத் தந்தங்களிலுந்தோ, எலும்புகளிலிருந்தோ செய்யப்பட்டவை. யானைத் தந்தங்களுக்குள் முத்து இருக்காது,” என்று கூறியுள்ளார்.[1] 

ஆனால், ஆசிய யானை ஆர்வலர் குழுவின் இலங்கைப் பிரதிநிதியும், வனவிலங்குகள் காப்பகத் துறை முன்னாள் துணை இயக்குனருமான முனைவர் நந்தன அடப்பட்டு அதை மறுத்து, “யானை முத்துக்கள் இயற்கையாக யானையின் தந்தங்களுக்குள் உருவாகின்றன.   தந்தமுள்ள யானை அறுபது அகவைகளை அடைந்த பின்னரே அப்படி உருவாவகத் தொடங்குகின்றன,” என மறுப்புத் தெரிவித்துள்ளார்.[2]

அப்படி உருவான முத்துகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

யானைத் தந்தங்களுக்குள் முத்து

ஆக, யானைக்குள் முத்து உருவாகலாம்.  அனைத்து  யானைகளுக்குள்ளும் அது உருவாக வாய்ப்பில்லாததாலும், கிட்டிய தந்தங்களுக்குள் அது இல்லாததாலும், அது கட்டுக்கதை என்று புறந்தள்ளப்படுகிறது.

சாணக்கியர் இல்லாத ஒன்றைக் கூறியிருக்கமாட்டார் என்பது முனைவர் நந்தன அடப்பட்டு அவர்களது கூற்றின் வாயிலாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஆன்றோர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் இருக்கமாட்டார் என்பதை நாம் அறிவோம்.  ஆன்றோர் போல வேடமிடுபவர் எங்கும் உளர் என்பது கண்கூடு.

அதுபோல எல்லாக் காடுகளிலுமா சந்தன மரங்கள் வளர்கின்றன?  இல்லையே.   உலகில் ஒரு சில காடுகளில்தான் அவை வளர்கின்றன.  இந்தியா, மலேசியா, வட ஆஸ்திரேலியாவில்தான் இவை காணப்படுகின்றன.

போகட்டும். இப்படிப்பட்ட விவரங்களைக் கூறிய சாணக்கியர் எந்தவிதமான அறிவுரையை நமக்கு விளக்குகிறார் என்ற ஐயம் எழுகின்றது. 

சுருங்கச்சொன்னால், மிகவும் மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.  ஆகவே, எதையும் ஒரு கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது என்றே சொல்லாமல் சொல்கிறார். 

இந்த ஊர் மோசமானது, இந்த ஊர் மக்கள் மோசமானவர், இந்த உணவு மோசம், இந்த சாமிக்கு வேண்டிக்கொண்டால் எல்லாம் நடக்கும், இந்த சாமியாரைப் பார்த்தால் அருள்கிடைக்கும், முகநூலில் நமக்கு வரும் படத்தைப் பத்து பேருக்கு அனுப்பினால் நினைத்தது நடக்கும் என்று தவறாக முடிவெடுக்கக்கூடாது என்பதையே  உணர்த்துகிறார்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பது வள்ளுவர் வாக்கு.

 புத்ராஶ்ச விவிதை4: ஶீலைர்நிர்யோஜ்யா: ஸததம் பு3தை4:  |

நீதிஞ்ஞா: ஶீலஸம்பந்நா ப4வந்தி குலபூஜிதா:  || 2.10  ||

பதவுரை:  , அறிவாளிகளால் (வளர்க்கப்படும்) வழித்தோன்றல்களும் எப்பொழுதும் பலவிதமான தாந்தோன்றித்தனமான நடத்தைகளால் தடம் மாறாது அறமறிந்தவர், நன்நடத்தையுடையவர், சமூகம் போற்றுபவர் ஆகிறார்கள்          …           …           2./10

விளக்கம்:  இதில் விளக்கம் சொல்ல அதிகமாக ஒன்றும் இல்லை.  அறிவாளிகள் தமது வழித்தோன்றல்களை, அதாவது தம் குழந்தைகளைத் தமது நினைப்புக்குத் தகுந்தபடி தடம் மாறிச் செல்லவிடாது வளர்ப்பர்;  அதனால், அவர்கள் நன்நெறியாளர்களாகவும், நன்நடத்தையுடைவர்களாகவும், சமூகத்தால் போற்றப்படுபவர்கள் ஆகிறார்கள்.

இது சாணக்கியர் அனைத்துப் பெற்றோர்களுக்கும் சொல்லும் அறிவுரைதான்.  தம் குழந்தைகள் நல்லபடியாக வளரவேண்டும் என விரும்புபவர் தமது குழந்தகள் தான்தோன்றித்தனமாகச் செல்லவிடக்கூடாது.  அவர்கள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்கள் போக்கில் செல்லவிடாது நல்வழிப்படுத்தி நடத்திட வேண்டும்.

(தொடரும்)


[1]யானைகளுக்குள் முத்தா? (Pearls in Elephants?)”, திமுத்து அட்டநாயகே, Sunday Observer, December 4, 2022, https://www.sundayobserver.lk/2018/01/07/features/pearls-elephants

[2]  மேற்படிக் கட்டுரை

Series Navigation<< சாணக்கிய நீதி – 4சாணக்கிய நீதி -10 >>சாணக்கிய நீதி – 9 >>சாணக்கிய நீதி – 3 >>

One Reply to “சாணக்கிய நீதி – 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *