சாணக்கிய நீதி -10

This entry is part 3 of 8 in the series சாணக்கிய நீதி

அத்தியாயம் 3-2

குறிப்பு:  “திருக்குறளில்தான் எல்லாம் இருக்கின்றதே, நீங்களும் சாணக்கிய நீதி கட்டுரையில் ஒவ்வொரு செய்யுளுக்கும் திருக்குறளிலிருந்து மேற்கோள் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறீர்கள்.  அப்படியிருக்க, எதற்காக மெனக்கெட்டு வடமொழியிலிருக்கும் சாணக்கியநீதியைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?  அதைப் படிப்பதால் எங்கள் நேரமும்தானே வீணாகிறது.  திருக்குறளில் இல்லாத ஒன்று புதிதாகச் சாணக்கிய நீதியில் என்ன இருக்கிறது?” என்று எனக்குத் தனிப்பட்ட முறையில் கேள்விகள் எழுப்பப் பட்டன. நல்ல கேள்விதான்.  பொதுவாகவே, வடமொழியில் இருப்பது தமிழுக்கு வரத்தேவையில்லை; தமிழில் இல்லாதது ஒன்று இல்லை என்ற மனப்பான்மையில் எழுப்பட்ட கேள்விகள்தாம் இவை.  அப்படிப் பார்த்தால், சோறு, இட்லி, தோசை, அரிசி அப்பளம், இடியாப்பம் எல்லாமே அரிசியிலிருந்துதான் தயார் செய்யப்படுகின்றன; சோறோ அல்லது இடியாப்பம் மட்டுமே சாப்பிட்டால் போதாதா, ஏன் இட்லி, தோசை இவற்றைச் சாப்பிடவேண்டும் என்று கேட்பதற்குத்தான் ஒப்பாகும்.

உலகத்திலிருக்கும் நீதிநூல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்றையே விதம்விதமாகக் கூறுகின்றன.  சாணக்கியர் என்றாலே ‘ஒருவித’மாக மதிப்பிடுவது இன்றைய வழக்கமாகிவிட்டது.  நான் திருக்குறளை மேற்கோள் காட்டுவது இரண்டும் சொல்வதில் ஒற்றுமை உள்ளது என்று காட்டத்தான்.  சொல்லும் விதத்தில் வேறுபாடு இருக்கிறது.  உற்றுநோக்கின் அதையும் நாம் காணலாம்.  ஆகவே, கல்வி பலவிதத்தில் வந்தாலும், நீதி எம்மொழியில் கூறப்பட்டாலும், அதை ஆய்ந்தறிவது நன்மை பயக்கும் எனக்கூறி, மேலே தொடர்கிறேன்.

***

ரூபயௌவனஸம்பந்நா: விஶாலகுலஸம்ப4வா:  |

வித்யா4ஹீநா ந ஶோப4ந்தே நிர்க3ந்தா4 இவ கிம்ஶுகா:  || 3.8 ||

பொழிப்புரை:    —    அழகும் இளமையும் பொருந்தியிருந்தாலும் பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கல்வியற்றவர் மணமற்ற பூவரசம்பூவைப் போல புகழ்பெறார்.                              …             3.8

விளக்கம்மனிதருக்கு எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், கல்வியறிவு இல்லாவிட்டால், புகழ் கிட்டாது என்பதே சாணக்கியரின் கூற்று.  மற்றோர் புகழ வாழவேண்டும், இல்லாவிடில், பிறக்காமல் இருப்பது நலம் என்று திருவள்ளுவரும்,

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்றே கூறியுள்ளார்.

ஆக, புகழ் பெற்று மற்றவர் போற்ற வாழ்வதே நல்வாழ்க்கை.  கல்வியறிவு பெற்றால்தான் புகழ் கிட்டும் என்றால், அனைவரும் பள்ளிக்குச் சென்று நிறையக் கற்றுக்கொண்டு பண்டிதரானால்தான் புகழா என்ற கேள்வி எழுகிறது.

கல்வி என்றால் ஏட்டுப் படிப்பு மட்டும்தான் என்று நினைக்கக்கூடாது.  எந்தவொரு தொழிலையும் சரிவரச் செய்யக் கற்பதே கல்வியாகும்.  விவசாயம் செய்வதற்கு, எந்த நிலம் விளைநிலம், எது பாழ் நிலம், எப்பொழுது விதைக்கவேண்டும், எப்பொழுது களையெடுக்கவேண்டும், உரமிடவேண்டும், எவ்வளவு நீர் பாய்ச்சவேண்டும், அறுவடை எப்பொழுது, எப்படி அறுவடை செய்த பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறிவே வேளாண் அறிவு – கல்வி.  இதுபோலவே, பலவிதக் கலைகளும் கற்றால்தான் கைவரும்.

ஒருவருக்கு அழகும் இளமையும் இருந்துவிட்டால் மட்டும் சிறந்த நடிகராக முடியாது, நாட்டியத்தில் பெயரெடுக்க முடியாது.  நடிப்புக் கல்வியையும், நாட்டியத்தையும் கற்றால்தான் பெயரெடுத்துப் புகழ்பெறலாம்.

பெரிய குடும்பத்தில் பிறந்தால் மட்டும் புகழ் கிட்டுமா?  இன்னாரின் மகன்/ள் என்று வேண்டுமானால் சொல்வர்;  கல்வியறிவில்லா மூடராக இருப்பின் அவரை யார் போற்றுவர்?

மல்லிகை, நறுமணம் கவழும் ரோஜாவை அனைவரும் விரும்பிச் சூடிக்கொள்வர்.  ஆனால் மணமற்ற பூவரசம் பூவை எவர் விரும்புவர்?  அதனால்தான்,

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

 அதாவது, கல்லாதவரை உயிரோடிருக்கிறார் என்றுதான் சொல்லலாமே தவிர, அவர் ஒன்றும் விளையாத களர்நிலம்போலத்தான் என்று வள்ளுவப் பெருமானும் இயம்பியுள்ளார்.

கோகிலாநாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்  |

வித்4யா ரூபம் குரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்விநாம்  || 3.9 ||

பொழிப்புரை:    —    குயில்களுக்குக் குரல் அழகு, பெண்களுக்கு கற்பு அழகு, (புற)அழகற்றவருக்குக் கல்வி அழகு, முனிவருக்குப் பொறுமை அழகு.                 …                 3.9

விளக்கம்கல்விதான் புகழ் சேர்க்கும் என்று ஆணித்தரமாகச் சென்ற செய்யுளில் கூறிய சாணக்கியர் இச்செய்யுளில் எது அழகுசேர்க்கிறது என்று சொல்கிறார். 

அழகு என்றால், புற அழகு என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.  புற அழகு காலத்தால் அழியக்கூடியது.  அக அழகே இங்கு விவரிக்கப்படுகிறது.

நாம் பூங்காவிற்கோ, இல்லை, கிராமப்புறத்தில் இருந்தால், வீட்டின் பின் பகுதிக்கோ செல்கிறோம்.  அங்கு கருமையாகக் காக்கை போன்ற பறவை ஒன்று பறந்துவந்து மரக்கிளையில் அமர்கின்றது.  சிறிது நேரத்தில் இனிமையாக அது கூவுகிறது.  திரும்பிப் பார்த்தால் அந்தக் கருமையான, காக்கைபோன்று நமக்குத் தெரிந்த அப்பறவைதான் இனிமையாகக் கூவுகிறது என்று அறிந்து கொள்கிறோம்.  அது பலமுறை உயர்த்தியும் தாழ்த்தியும் கூவுகிறது.  அது இசையாகவே நம் செவிகளில் வீழ்கிறது.  அந்த இசையில் மயங்கிய நாம், அது காக்கையல்ல, குயில் என்று தெளிகிறோம்.  நம்மை அதன் குரல்தானே மயங்கவைத்தது!  அதன் கரிய நிறம் அல்லவே!  எனவே, குயிலுக்கு அழகு சேர்த்தது அதன் குரல்தானே!

அதுபோலத்தான் பெண்டிருக்குக் கற்பு அழகு சேர்க்கிறது.  நளாயினி, சீதை போன்ற பெண்ணிற் சிறந்தவரை நாம் போற்றுவது அவர்தம் கற்பினால்தான்.

இந்தச் நூலை இயற்றிய சாணக்கியரையே எடுத்துக்கொள்வோம்.  அழகற்ற அவரை எவரும் மதிக்கவில்லை.  அவர் மனைவியேகூட அவரை எடுத்தெரிந்து பேசியதாகவும் கூறப்படுகிறது  நந்தன் அவரைச் சாப்பிடவிடாமல் வெளியேற்றியதை வரலாறு உரைக்கிறது.  அப்படி அவமானப் படுத்தப்பட்டவர், மகதப் பேரரசையே கவிழ்த்து, அதை அந்த நந்தனிடமிருந்து சந்திரகுப்த மௌரியருக்குக் கொடுத்தது உலகறிந்ததே.  அதைச் சாதிக்க அவருக்கு உதவியதும் உலகத்தின் முதல் பொருளாதார, அரசியல் நூலை எழுதக் கைகொடுத்ததும், அவரது கல்வியே.  அதுதான் அவருக்குப் புகழ் என்ற அழகைக் கொடுத்தது. 

‘பொறுத்தார், புவியாள்வார்,’ என்ற பழமொழி, எவரும் அறிந்ததே.

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்

  பொன்றும் துணையும் புகழ்.

என்றும், தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிக்காது, பொறுமையாகச் செயலாற்றுவோரை, உலகத்தினர் தங்கத்தைப் பத்திரமாகப் பாதுகாப்பதைப் போல நெஞ்சில் காப்பாற்றிவைப்பர் என்றும், திருவள்ளுவர்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

  பொறுத்தாரை பொன் போல் பொதிந்து,

என்ற குறட்பாக்காளால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்திருக்கிறார்.

த்யஜே தேகம் குலஸ்யா(அ)ர்த்தே2க்3ராமஸ்யா(அ)ர்த்தே2 குலம் த்யஜேது  |

க்3ராமம் ஜநபத3ஸ்யா(அ)ர்த்தே2 ஆத்மா(அ)ர்த்தே2 ப்ருதி2வீம் த்யஜேது  || 3.10 ||

பொழிப்புரை:    —    குலத்திற்காக உடலைத் துறக்கவும்; கிராமத்திற்காக குலத்தைத் துறக்கவும்; நாட்டுக்காக ஊரைத் துறக்கவும்;  ஆன்மாவுக்காக உலகைத் துறக்கவும்.                   …         3.10

விளக்கம்மக்கள் எதற்காக எதைத் துறக்கவேண்டும் என்று ஒரு பட்டியலையே கொடுக்கிறார், கௌடில்யர். 

.  குழந்தைகளின் நலத்திற்காகத் தந்தையர் தமது வசதிகளைக் குறைத்துக் கொண்டு, அதாவது வசதியைத் துறப்பது வழக்கம்தான்.  குழந்தைகள் ஒருவருடைய குலத்தை வளர்க்கின்றனர்.  மேலும், தம் உடன்பிறப்பின் படிப்பு, திருமணத்திற்காக தம் சுகத்தைக் குறைத்துக்கொண்டு, சேமிக்கும் ஆண்/பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர். தம்முடைய குலப்பெருமைக்காகத் தமது உடல் கேட்கும் வசதிகளைத் துறக்கவேண்டும் என்று குறிப்பிடுவது இதைத்தான்.

அதே குலத்தை, குடும்பத்தைத் தாம் வசிக்கும் ஊருக்காக – நாட்டுக்காக ஊரை விட்டுவிட — துறக்கவேண்டும் என்பது இன்னொரு அறிவுரை.  அதை அரசர் பெரும்பாலும் செய்துவந்திருக்கின்றனர் என்பது வரலாறு.  அதுமட்டுமா?  நாட்டுக்காகப் போரில் உயிர்துறந்த வீரர் எத்தனை பேர் என்று நாமறிவோம்.

இப்படி உலகத்திலுள்ளவர் எதெதைத் துறக்கவேண்டும் என்றவின், உலகத்தையே எதற்காகத் துறக்கவேண்டும் என்று இறுதியாகச் சொல்கிறார். 

எல்லாச் சமயங்களும் ஆன்மா இருப்பதை வலியுறுத்துகின்றன.  சில சமயங்கள் ஒரே ஒரு பிறப்புதான் என்றும், ஆன்மாவை நிரந்தர நரகத்திற்கோ, சுவர்க்கத்திற்கோ அனுப்பவோ உலக முடிவின் இறுதியில் தீர்மானைக்கப்படும் என்று அவை கூறுகின்றன.

ஆனால், இந்து சமயமோ, ஆன்மா பலவிதமான உடற்கூறுகளில் பிறப்பின் வாயிலாக நுழைந்து, இறப்பின் வாயிலாக வெளியேறி வாழ்க்கைச் சம்சாரச் சக்கரத்தில் சுழன்று சுழன்று பரம்பொருளை அடைவதையே – ஒன்றுவதையே – தான்தான் பரம்பொருள் என்று உணர்வதையே மோட்சம், குறிக்கோள் என்று கூறுகிறது.

அதையே மாணிக்கவாசகரும் திருவாசகத்தின் முதலில் உள்ள சிவபுராணத்தில்,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

என்று, இறைவன் சிவபெருமானுடன் பிறப்பில்லாது ஒன்றவேண்டுமென மனமுருகிப் பாடுகிறார்.

அந்த மோட்சத்தை அடையவதற்கு — பிறப்பு-இறப்பு எனும் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து ஆன்மா விடுதலை பெறுவதற்கு இறுதியில் இந்த உலகத்தை – எத்தனையோ பிறப்புகளும், இறப்புகளும் எடுத்துவரும் இந்தப் புவியைத் துறந்தே ஆகவேண்டுமல்லவா! 

அதைத்தான் சிறிதுசிறிதாக எப்படிச் செய்யவேண்டும் – உடல், குடும்பம்/குலம், ஊர், நாடு, உலகம் என்றவற்றைத் துறக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

உத்யோகே3 நாஸ்தி தா3ரித்3ரயம் ஜபதோ நாஸ்தி பாதகம்  |

மௌநே ச கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாக3ரிதே ப4யம்  || 3.11 ||

பொழிப்புரை:    —    வேலைசெய்வதில் ஏழ்மை இல்லை, ஓதுவதில் தீமை இல்லை, அமைதியிலும் குழப்பம் இல்லை, விழிப்பில் அச்சமில்லை.                        …             3.11

விளக்கம்இருளை விட்டு ஒளிக்குச் அழைத்துச் செல்க,’ என்ற அமைதி மந்திரத்துடன் தொடங்குகிறது பிருகதாரணய உபநிடதம்.  இல்லாமை/அறியாமை இருளிலிருந்து இருப்பதற்கு/அறிவு/ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் செயலே ஒளி, வெளிச்சம், அறிவு ஆகும்.  ஒளி இருக்கும் இடத்தில் இருள் இருக்காது.  அதுபோல எது இருந்தால், எது இருக்காது என்பது இந்தச் செய்யுளில் சுட்டிக்காட்டப் படுகிறது.

பொருள் இல்லாமையைத் தரித்திரம் என்கிறோம்.  ஆனால், வேலை செய்பவருக்கு ஊதியம் கிட்டத்தானே கிட்டும்?  எனவே, அவரிடம் பொருளில்லாமை இருக்காது.  வரவுக்குத் தகுந்த செல்வு செய்தால், தரித்திரம் என்னும் இல்லாமை அவரைத் தீண்டாது.

நமக்கு ஏதாவது குறை இருந்தால், அது நீங்கக் கடவுளை வழிபடுகின்றோம்.  நமக்குத் தெரிந்த பக்திப் பாடல்களை மனமுருகி இறைவன்முன் ஓதி வேண்டுகிறோம்.  அந்த ஓதலில் இசை வேண்டாம், சரியான ஒலிப்பு வேண்டாம், இறைவனைத் துதிக்கும் ஆழ்ந்த மனப்பாங்குதான் தேவை.  அப்படி ஓதி வழிபடுபவருக்கு எக் குறையும் இருக்காது.

‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்,’ என்பர்.  ஆனால் நாம் அனைவரும் நாரதர் அல்லர்.  எதிர்காலத்தில் வருவதை ஞானக்கண் மூலம் அறியும் வல்லமையும் இல்லை.  ஆகவே, அமைதி காத்தால், அதாவது ஒருவர் சொல்வதை இன்னொருவரிடம் சொல்லிக் கோள்மூட்டாது இருந்தால், அந்த அமையால் குழப்பமோ, சண்டையோ, கலகமோ, மனத்தாங்கலோ ஏற்படாது.

‘விழித்திருந்தால் அச்சம் இல்லை,’ என்பதை எப்படி அப்படியே ஒப்புக்கொள்ள முடியும்? சிலருக்கு இரவில் தனித்திருந்தால் பயமாக இருக்கும்.  சிலருக்கு விண்ணில் விமானத்தில் பறந்து செல்லவோ, அல்லது அப்படிச் செல்லும்போது காற்றுக் கொந்தளிப்பு என்னும் டர்புலன்சில் விமானம் தூக்கிப் போடும்போது குடலே தொண்டைக்குள் எழுவது போல இருக்கும்.  அப்போது விழித்திருந்தால் எப்படிப் பயம் போகும்?  சாணக்கியர் தன் மனம்போன வாக்கில் எழுதிவிட்டாரோ என்று ஒருகணம் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் விழிப்பு என்பது, கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பது மட்டும் அல்ல என்று அறியலாம். முதலில் இருட்டுக்கு வருவோம்.  கையில் ஒரு டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு சென்றால், அங்கு சுருண்டு படுத்துக் கிடப்பது பாம்பல்ல, கயிறு என்று தெரிந்துகொள்லலாம்.  அப்பொழுது விளக்கின் ஒளி விழிப்பைக் கொடுத்து அச்சத்தை நீக்குகிறது. மரத்திலிருந்து வரும் ஒருவிதமான ஒலி வரும் திக்கில் விளக்கைத் திருப்பினால், மரக்கிளையில் அமர்ந்து ஒலியெழுப்பிய ஆந்தை ஒளிக்கு அஞ்சிப் பறந்து செல்லும்.  ஒலியெழுப்பியது பிசாசல்ல, ஆந்தை என்ற தெளிவு வந்து பயம் நீங்கும்.

சாலையில் இருக்கும் சிறிய மேடு பள்ளங்களில் நாம் பயணிக்கும் கார் விழுந்து எழுந்து செல்லும்போது ஏற்படும் குலுக்கலுக்கு நாம் அஞ்சமாட்டோம்; ஏனெனில், அது எதனால் என்று தெய்வதால். வானத்தில் இருக்கும் காற்றுக் கொந்தளிப்பும் அது போலத்தான், விமானம் அதனால்தான் குலுங்குகிறது[i] என்று நமக்கு எடுத்துச் சொன்னால், காரில் பயணிப்பதைவிட விமானப் பயணம் ஆயிரம் மடங்கு பாதுகாப்பானது[ii] என்று விளக்கினால், விமானப் பயணம்பற்றிய விழிப்புணர்ச்சி நமது அச்சத்தைப்போக்கிவிடும்.

அதிரூபேண வை ஸீதா அதிக3ர்வேண ராவண:  |

அதிதா3நாது ப3லிர்ப3த்4தோ3 அதி ஸர்வத்ர வர்ஜயேது  || 3.12 ||

பொழிப்புரை:    —    மிதமிஞ்சிய அழகால்தான் சீதை, அதிகச் செருக்கால் இராவணன், அளவற்ற ஈகையால் பலிபத்தனும் (துன்புற்றனர்);  எவ்விடத்திலும் மிகையை விட்டுவிடுக.   …                3.12

விளக்கம்‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு,’ என்ற சொலவடைதான் இந்தச் செய்யுளில் அதிக அழகு, அதிகச் செருக்கு, அதிக ஈகை(தானம்) எப்படி ஆபத்தை உண்டாக்குகிறது என்ற எடுத்துக்காட்டுடன் சொல்லப்படுகிறது.

  ஐந்து அழகிகள் என்று சொல்லப் படுபவர் அகலிகை, சீதை, பாஞ்சாலி, மண்டோதரி, தாரை ஆவர்.  இதில் சீதை மிகமிக அழகு என்றே சொல்லலாம்.  அதனால்தான் அந்தப்புரத்தில் அழகு மனைவி மண்டோதரி இருந்தும், தன் தங்கை சூர்ப்பனகை விவரித்தவுடன், இராவணன் கபட சன்யாசி வேடத்தில் வந்து, சீதையின் அளவற்ற அழகில் மயங்கி, அவளைச் சிறையெடுத்துச் சென்றான். ஆக, அதிகமான அழகால் சீதைக்கு அசோக வனத்தில் பலமாதங்கள் அவலப்பட நேர்ந்தது.

அந்த இராவணன், தனது இனிய சாமகீதத்தினால் சிவபெருமானின் மனதையே இளகச்செய்து, அவரிடமிருந்து பெறுவதற்கு அரிய வாளைப் பரிசாகப் பெற்றான். தன் தவ வலிமையால் வேண்டிய வரம் என்ன என்று கேட்ட இறைவனிடன், “மனிதர்களைத் தவிர எவரலாலும் இறப்பு வரக்கூடாது,” என்று வேண்டிப்பெற்றான்.

அடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியைப் பற்றி எடுத்துக்கொண்டால், அவனும் மிகப் பெரிய கொடையாளி.  நரசிம்மர் காப்பாற்றிய பிரகலாதனின் பேரன்.  திருமால் பக்தன்.  ஆயிரம் சிங்கங்களின் பலம் படைத்தவன்.  எவராலும் வெல்ல இயலாதவன். 

மூவுலகையும் வென்றதும், பாதாள உலகத்திலுள்ல அசுரர்களை வெளிவரச் செய்தான்; ஏனெனில் அவனும் அசுரன்.  அவர்கள் இந்திரனின் உலகத்தையும் வென்றனர்.  அவர்களின் கொட்டம் அதிகரித்தது. ஆனால், அதி மகாபலி தடைசெய்யவில்லை.

அவனுக்குத் திருமாலைக் காணவேண்டும் என்ற அவா.  அவர் தன்னிடம் எக்கொடை கேட்டால் அதைக் கொடுத்தாவது அவரைத் தரிசிக்கவேண்டும் என விரும்பினான்.

அச்சமயம், இந்திரனும் தன் தேவலோகம் கிட்டவேண்டும் என வேண்டவே, திருமால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிடலாம் என்று வாமனனாக அவதரித்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டினார்.

மிகவும் சிறிய அந்தணச் சிறுவன் ஏன் இப்படிக் கேட்கிறான் என்று சிந்திக்காது, மூவுலகையும் ஆளும் ஆணவத்தினால் அதற்குச் சம்மதித்தான்.  அரக்கர் ஆசானாகிய சுக்கிராச்சாரியார் வந்திருப்பவர் சாதாரணமானவர் அல்லர் என்று எச்சரித்தும் அதைக் கேட்கவில்லை.[iii]

இரண்டு அடிகளால் புவியையும், விண்ணையும் அளந்த வாமனனாகி வடிவெடித்து வந்த திருமால், மூன்றாம் அடியை எங்கு வைக்க என்று கேட்டதும், அகந்தை நீங்கி, வந்திருப்பது திருமால் என்று உணர்ந்து, “என் தலை மீது வைத்து, என்னை என்னைப் பாதாள உலகுக்கு அனுப்புங்கள், ஐயனே!” என வேண்டினான். 

ஆகவே, மூவுலகை ஆண்டாலும், சிந்திக்காது, அதிகமாகத் தானம் வழங்க ஒப்புக்கொண்டதால் மூவுலகையும் இழந்தான், மகாபலி.

இப்படி எடுத்துக்காட்டி, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என் விளக்குகிறார், சாணக்கியர்.

கோ ஹி பா4ர: ஸமர்த்தா2நாம் கிம் தூ3ரம் வ்யவஸாயிநாம்  |

கோ விதே3ஶ: ஸவித்3யா4நாம் க: பர: ப்ரியவாதி3நாம்  || 3.13 ||

பொழிப்புரை:    —    புத்திசாலிக்கு எது பளு? வணிகருக்கு எது தொலைவு? அறிஞருக்கு எது வெளிநாடு? அன்புசெலுத்துவோருக்கு யார் பகைவர்?                  …             3.13

விளக்கம்எவரெவருக்கு அவர்தம் திறமை உதவும் என்று இச்செய்யுள் உரைக்கிறது.  சமர்த்து என்ற சொல்லைத் தமிழில் கையாள்வதைக் கேட்கிறோம்.  அது சொல்வதை கேட்டுப் பணிந்து நடக்கும் குழ்ந்தைகளைக் குறிக்க உபயோகிக்கப்படுகிறது.

“எங்க பையன்/பெண் ரொம்பச் சமத்து.  ஒரு தடவை சொன்னால், போதும்; அப்படியே நடப்பான்/ள்.  வம்பு தும்புக்குப் போகமாட்டான்/ள்,” என்று பெருமையாகப் பெற்றோர் பகர்வதைக் கேட்டுள்ளோம்.

‘சமர்த்த’ என்றால், புத்திசாலி என்று பொருள்.  ஒரு பொருளைத் தூக்க வேண்டும் என்றால் வலிமை வேண்டும் என்பது தெரியும்.  நூறு கிலோ எடையை பயில்வானால்தான் தூக்கி நகர்த்த முடியும்.  ஆனால், ஐநூறு கிலோ எடையுள்ள பொருள்களைக் கூட ஃபோர்க் லிஃப்ட்டின் உதவியினால், அதை இயக்கும் திறமையுள்ள நோஞ்சானால்கூட நகர்த்த முடியும்.  அதுபோல, பெரிய டன் கணக்கான கட்டுமானச் சாமான்களையும், கிரேனின் உதவியுடன் பலநூறு அடிகள் தூக்கி வைக்கலாம்.  ஆக,

புத்திசாலிக்கு எதுவும் பளு அல்ல.

“திரைகடலோடியும் திரவியம் தேடு,” என்ற மூதுரையை நாம் அறிவோம்.  தமிழர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதைச் செய்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை. அது வணிகத்தைப் பெருக்கத்தானே!  அதைத்தான் வணிகருக்குத் தூரம் ஒரு பொருட்டல்ல என்று இங்கு இயம்பப் படுகின்றது.  இன்றும் உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு வணிகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது, இக்கூற்று இன்றும் உண்மை என்றே உரைக்கின்றது.

மேற்கல்வி பெற்று அதில் தேர்ச்சி பெற்றவர் பல நாடுகளுக்கும் சென்று குடியேறுவது இக்காலத்தில் மிகவும் வழக்கமாகிவிட்டது.  இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கானவர் வேறு நாடுகளுக்கு குடியேறி, அங்கு தம் வாழ்வைத் தொடங்குகின்றனர்.  படித்தவருக்கு எந்த நாடும் வெளிநாடு அல்ல.

“அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு,” என்பது வள்ளுவப் பெருமானார் வாக்கு.  அனைத்து உயிரிடமும் அன்பு செலுத்துபவர் எவரிடமும் பகைமை பாராட்ட மாட்டார்.  அவருக்கு எவரும் அன்னியர் அல்லர்.  அப்படிப்பட்ட மகான்களை இன்றும் நம்மால் காணமுடிகின்றது.

ஏகேநா(அ)பி ஸுவ்ருக்ஷேண புஷ்பிதேந ஸுக3ந்தி4நா  |

வாஸிதம் தத்3வநம் ஸர்வம் ஸுபுத்ரேண குலம் ததா2  || 3.14 ||

பொழிப்புரை:    —    ஒரேயொரு நல்ல மரத்தினால் மலர்ந்த(மலர்களின்) நறுமணத்தினால்  அந்தக் காடு முழுவதும் மணக்கும்; அதுபோலவே நல்ல பிள்ளையால் குடும்பமும் (புகழ்பெறும்).  …             3.14

விளக்கம்ஒரு குடும்பத்திற்கு எவர் பெருமை சேர்ப்பர் என்று இங்கு அறிகிறோம்.  அதற்குச் சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

சுள்ளி சேர்ப்பதற்காக ஒருவர் காட்டுக்குச் செல்கிறார்.  கல்லும் முள்ளும் நிறைந்த காடு அது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது.  சுள்ளிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் களைத்துப் போய் அங்கிருந்த கல்லில் அவர் அமர்கிறார்.  

தலைப்பாகையைக் கழட்டி எடுத்து வியர்வையைத் துடைக்கிறார்.  அப்படியும் வியர்வை தணிவதாக இல்லை.   உஷ்ணக் காற்று வீசுகிறது.

அப்பொழுது அந்தக் காற்றுடன் இனிய நறுமணமும் கலந்து வருகிறது.

தன் களைப்பையும் ஒரு கணம் மறந்து அந்த நறுமணத்தை முகர்ந்து முகமலரும் அவர், அந்த மணம் வரும் திசையை நோக்குகிறார்.  அங்கு ஒரு மரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களில் ஒன்று அவர் மீது விழுகிறது.  அந்தப் பூவிலிருந்துதான் நறுமணம் வந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார்.

சுற்றுமுற்றும் பார்த்தால் இந்த ஒரு மரத்தில்தான் இதுபோன்ற பூக்கள் உள்ளன; வேறு எந்தவொரு மரத்திலும் பூக்களே தென்படவில்லை.  கடும் கானகத்திலும், பூத்துக் குலுங்கும் இந்த மரம்தான் – அதன் பூக்கள்தான் காடு முழுவதும் நறுமணத்தைப் பரப்புகிறது என்று அறிந்துகொண்டு,  தன் களைப்பைத் தணித்து, நிழல் கொடுத்து, நறுமணம் பரப்பிப் புத்துணர்ச்சி ஊட்டிய அந்த மரத்தைத் தன் மனதார வாழ்த்திப் புறப்படுகிறார். 

நறுமணம் ஊட்டும் அந்த ஒரு மரம் காட்டுக்கே சிறப்பு நல்குவதைப் போல, ஒரு குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும், நன்கு கற்று, நற்பெயரும் குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கும் ஒரு பிள்ளையே, கானகத்தில் பூத்துக்குலுங்கி நறுமணம் சேர்த்த தனி மரத்திற்கு ஒப்பாவான்/ள் என்பதே கௌடில்யரின் கூற்று.

(தொடரும்)


1    Scared of Turbulence? Then read this, Fly Confidently, https://flyconfidently.com/scared-of-turbulence/

2      A Pilot’s Comparison of Safety in Planes Versus Cars by Eddie Wren, Oct 27, 2019, Road Safety USA, https://www.roadsafetyusa.org/2019/10/27/comparison-of-safety-in-planes-versus-cars/

3      King Bali, Vaman Avatar and the Dharma of Giving, by Nitin Kumar, July, 2014 https://www.exoticindiaart.com/article/vamana-and-bali/

Series Navigation<< சாணக்கிய நீதி – 8<< சாணக்கிய நீதி – 7<< <strong>சாணக்கிய நீதி – 6</strong><< சாணக்கிய நீதி – 5

2 Replies to “சாணக்கிய நீதி -10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *