அரசியல் ஏமாற்றங்கள் குறித்து கோபத்திலும், சமூக அவலங்கள் குறித்த வெறுப்பிலும் இன்ன பிற விஷயங்களில் மனம் வெம்பிக் கொண்டிருக்கையில் “வழி நெடுக காட்டுமல்லி” என்று எங்கிருந்தோ ஒரு மல்லிப்பூ வாசம், இசை வடிவில், நம் செவிகளில் நறுமணம் சேர்க்கிறது. தாய் மடியில் தலை வைப்பது போல எல்லா கோபங்களும் மறைந்து போகிறது இந்தப் பாடல் கேட்கையில். எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மனதை இந்தப் பாட்டால் நிரப்பிக்கொண்டிருக்கிறேன்.
ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா. இந்த வழி நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில், இன்னொரு முல்லை நிலப்பாடல்.
ராஜாவின் “காட்டு வழிப் பாடல்கள்” என்று நிறைய பாடல்களை ஒரே மாலையில் தொகுக்கலாம். “காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே ” “காட்டு வழி கால் நடையா போற பொண்ணே” இப்படி நிறைய முல்லை நிலப் பாடல்கள். ஒவ்வொன்றும் ஒரு காட்டு மல்லிப் பூ. இவற்றில் முதலிடம் வகிக்கிறது இந்த “வழி நெடுக காட்டுமல்லி” பாடல்.
ராஜாவின் இசை ராஜாவின் வரிகளை சுமந்து ராஜாவின் குரலில் தவழ்ந்து வருகிறது, நம்மனதை வருட. சமீபத்தில் இப்படி ஒரு இலக்கியத்தரம் வாய்ந்த பாடல் யாரும் எழுதியதாக தெரியவில்லை.
“ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்”
என்கிறாள் காதலி.
“காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க”
இது அவன்.
நாமளும் காதல் செய்யாமல் போய் விட்டோமே என்ற ஏக்கம் மெலிதாக எட்டிப்பார்க்கிறது, இந்தப் பாடலைக் கேட்ட பின் . Too late you say…?
பாடல் முழுதும் ஒரே மாதிரியான, அமைதியான, தாளம் காட்டு மல்லிப்பூ வாசம் போல நிற்காமல் தொடர்கிறது. முல்லைநிலத்தின் அடையாளமான மாயோனின் குழல் இல்லாத குறையை வயலின்,செல்லோ போக்குகிறது முழுவதுமாக.
காதலனும் காதலியும் கானகத்தில் தனியாக பயணம் செய்யும்பொழுது என்னென்ன எண்ணம் வரும்? அனைத்தையும், விரசம் ஒரு துளியும் இல்லாமல், பாடுகிறது இந்தப் பாடல். கண்ணியம் காதலின் முதல் தகுதி.
“ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது”
என்று அவன் பாட, “யாருக்கும் தெரியாது என்றா நினைக்கிறாய்? இந்தக் காட்டுக்கும் காட்டில் திரியும் காற்றுக்கும் உயிர் இருக்கிறது”. எனவே
“சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்”
என்கிறாள் காதலி.
எண்பது வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா. அனன்யா பட் மிகவும் அழகான உச்சரிப்புடன் அருமையாக பாடி இருக்கிறார்.
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன” (ஒரு பூ எங்களுக்கிடையே வந்துவிட்டாலும் ஒரு ஆண்டு கழிந்தது போல பிரிவுத்துயர் வருகிறது) என்பது போல இந்தப்பாடலைக் கேட்காமல் இருந்தால் ஒரு ஆண்டு கழிந்தது போல இருக்கிறது.
ராஜா ரசிகர்களுக்கு மருந்தும் அவரே விருந்தும் அவரே. “மருந்து எனின் மருந்தே. வைப்பு எனின் வைப்பே”.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ? எங்கள் இளையராஜாவைப் போல இன்னொரு இசையமைப்பாளரை எங்கேனும் கண்டதுண்டா?
இப்படி இசையைக் கேட்கும்பொழுதெல்லாம் மனதில் தோன்றுவது ஒன்றே “அவரை பத்தடி தூரத்தில் பார்த்தவர்கள், மோக்ஷம் அடைவராக!”
இறுதியாக ஒரு ஆசை. “ChatGPTயிடம் இளையராஜா மாதிரி இப்படி ஒரு பாடல் கம்போஸ் பண்ணேன் பார்க்கலாம்” என்று கேலி பேசி சிரிக்க வேண்டும்.
(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)