சாணக்கிய நீதி – 9

This entry is part 3 of 8 in the series சாணக்கிய நீதி

அத்தியாயம் 3-1

கஸ்ய தோ3ஷ: நாஸ்தி வ்யாதி2நா கோ ந பீடி3த:  |

வ்யஸநம் கேந ந ப்ராப்தம் கஸ்ய ஸௌக்2யம் நிரந்தரம்  || 3.1 ||

பொழிப்புரை:    —    யாரிடம் குறையில்லை,  யாரை நோய் பற்றவில்லை, யாரால் துன்பம் அடையப்படவில்லை, யாரின் வசதி நிரந்தரமானது?                      …             3.1

விளக்கம்வாழ்வின் நிலையற்ற தன்மை இச்செய்யுளில் விளக்கப்படுகிறது. அதற்குக் காரணம் எவரிடமும் குறைகாணக்கூடாது என்பதே. 

அனைவருக்கும் ஒளிதரும் விளக்கின் கீழே நிழல் உள்ளது.  உலத்தின் அனைத்து உயிரினங்களையும் வாழவைக்கும் கதிரவனின் மேற்பரப்பில் புள்ளிகள் உள.  ஆலகால நஞ்சை உண்டதால், பொன்னார் மேனியனான சிவபெருமானின் கழுத்து கருநீல நிறமாகியுள்ளது. எந்த மனிதரிடமும் குறையில்லாமல் இல்லை.

எவ்வளவுதான ஆரோக்கியமான மரபணுகளைப் பெற்றிருந்தாலும், நல்லொழுக்கத்துடன், உடல் நலத்தை நன்கு கவனித்துக்கொண்டாலும், உடற்பயிற்சி செய்தாலும், நோயின்றி வாழ்ந்தவர் எவருமில்லை. 

அதை விடுங்கள்;  எப்பொழுதும் மகிழ்வுடன் இருந்தவர் எவர்?  குழந்தைப் பருவத்திலிருந்து, இறுதிமூச்சை விடும்வரை துன்பமின்றி மிகமகிழ்வுடன் எவரால் இருக்கமுடியும்?  ஏதாவது ஒரு துயர், துன்பம், மனவருத்தம், ஏக்கம், இயலாமை இருக்கத்தான் செய்கிறது.  ஏழை பணமில்லையே என்று துன்பப்பட்டால், செல்வந்தனும் சேர்த்துவைத்த பணத்தை எப்படிக் கட்டிக்காப்பது என்ற கவலையில், துன்பத்தில் நாளைக் கழிக்கிறான்.  உலகில் மிகவும் பணக்கார, வல்லரசான அமெரிக்காவின் அதிபரும், அந்த அதிகார பலத்தில் எப்பொழுதும் மனமகிழ்வுடன் துயரின்றி இருப்பதில்லை.  எவரும் இதற்கு விதிவிலக்கல்ல.  மக்கள் அனைவருக்கும் மகிழ்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

அதுபோலத்தான் வாழ்க்கை வசதியும். 

பிரமிட் திட்டம்போட்டு மற்றவரின் பணத்தைக் கொள்ளையடித்து உயர்ந்த கோடீஸ்வரனான எர்னி மேடாஃப்பும் வாழ்க்கை-வசதி-செல்வம் அனைத்தும் இழந்து வாழ்நாள் இறுதியைச் சிறையில் கழிக்கவேண்டியிருந்தது.[1]

அதனால்தான் எவரின் வாழ்க்கை வசதியும் நிலையானதல்ல என்ற சாணக்கியர், நம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவரை இகழக்கூடாது, மேட்டிமைக் பார்க்கக்கூடாது, அறவழியில் நின்று, நம்மாலியன்ற உதவியைச் செய்யவேண்டும் எனச் சொல்லாமல் சொல்லுகிறார்.

ஆசார: குலமாக்2யாதி தே3ஶமாக்2யாதி பா4ஷணம்  |

ஸம்ப்4ரம: ஸ்நேஹமாக்2யாதி வபுராக்2யாதி போ4ஜனம்  || 3.2 ||

பொழிப்புரை:    —    நடத்தையால் குலம் விளக்கப்படுகிறது, பேச்சினால் நாடு விளக்கப்படுகிறது. வரவேற்பினால் நட்பு விளக்கப்படுகிறது, சாப்பாடு உடலால் விளக்கப்படுகிறது.    …   3.2

விளக்கம்நம்மைச் சுற்றிப் பலகோடிப்பேர் உள்ளனர்.  இவர்களில் நாம் அறிந்தவர், நமக்குத் தெரிந்தவர் மிகச் சிலரே. நாம் முதன்முதலில் சந்திப்பவரைப் பற்றி நமக்கு எவ்வித விவரமும் தெரியாது.  இவர்களைப் பற்றி எவ்வாறு அறிந்துகொள்வது?

ஓருவர் நற்குடியில் பிறந்தவரா என்பது அவரது நடத்தையிலிருந்து அறிந்துகொள்ளலாம்.  விபத்தில் ஒரு மாட்டிக்கொண்டு துடிக்கும்போது அவருக்கு உதவிசெய்பவரும் உள்ளனர்; அக்கம்பக்கம் யாருமில்லாவிட்டால், அவரது நகை நட்டுகளைப் பணத்தை அபகரிப்பவரும் உளர்.

அமெரிக்காவிலுள்ள மின்னசோட்டா மானிலத்தில் கார் விபத்துக்குள்ளானவரைக்  காப்பாற்ற அனுப்பப்பட்டவர், விபத்துக்குள்ளானவரிடமிருந்து பணத்தைத் திருடியதாகசவும்,[2] அண்மையில் துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்/மாண்டவரிடமிருந்து பொருள்களைக் கையாடியவரைக் கைதுசெய்ததாகவும்[3] செய்திகள் வந்துள்ளன.

அண்மையில் ஒரு உணவகத்தில் பணியாற்றிய கருப்பரின் ஏழ்மை நிலையை அறிந்து பரிதாபப்பட்டு மனமிறங்கிய எட்டு வயது வெள்ளைக்காரச் சிறுவன் ஒருவன், அவருக்காக அறுபத்தி நாலாயிரம் டாலருக்குமேல் (50 லட்சம் ரூபாய்) ஈகையாகச் சேகரித்து அவருக்கு அன்பளிப்பாக அளித்தாக அமெரிக்க ஊடகங்கள் பறைசாற்றின.[4],[5] அந்தச் சிறுவனின் சிறந்தபணி, அவனது நல்ல உள்ளம், அவன் நற்குடியில் பிறந்தவன் என்பதைத்தானே காட்டுகிறது!

இதைத்தான் வள்ளுவனாரும்,

வெள்ளத்தனைய மலர்நீட்டாம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு

என்று சொல்லியிருக்கிறார்.

ரயிலில் செல்லும்போது நமது பக்கத்தில் ஒருவர் அமர்கிறார்.  அவர் நம்முடன் பேச்சுக்கொடுக்கிறார்.  அவர் பேசும் விதத்திலிருந்து, அவரின் அசைபிலிருந்து (accent) அவர் எந்த மாவட்டக்காரர் என்று நம்மால் சொல்லமுடியும்.  அவர் வேற்று மொழியில் பேசினால், அந்த மொழி நமக்குத் தெரிந்தால் அவர் எந்த மானிலத்துக்காரர் என்று சொல்ல இயலும்.  அவர் பேசும் மொழி இந்திய மொழியில்லாது வேற்று நாட்டு மொழியாக இருந்தால், அந்த மொழி அறிந்தவர் அவர் எந்த நாட்டுக்காரர் என்றும் சொல்லலாம்.

அழைப்பின்பேரில் நாம் ஒருவர் வீட்டுக்குச் செல்கிறோம்.  அவர் வீட்டில் நம்மை எப்படி வரவேற்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்பாங்கைத் அறிய இயலும்.  மனமகிழ்வுடன் வரவேற்று உபசரித்தால், அவர்கள் நம்மிடம் நட்பு பாராட்டுகிறார்கள் என்றும், இல்லாவிடில் அழைக்கவேண்டும் என்பதற்காக நம்மை அழைத்திருக்கிறார்கள் எனவும் தெரிந்துகொள்ளலாம்.

தெருவில் நடந்துசெல்லும்போது. நம் எதிரில் ஒருவர் வருகிறார். அவரைப் பார்த்தே அவர் எப்படிப்பட்ட உணவு உட்கொள்கிறார், எவ்வாறு உண்கிறார் என்பதை அனுமானிக்க முடியும்.  ஒல்லியாக இருந்தால் மிதமாகச் சாப்பிடுபவர் என்று முடிவுகட்டுவோம்.  அளவுக்குமீறிப் பெருத்திருந்தால் பெருந்தீனி;  சோகை பிடித்தமாதிரி மூச்சுவாங்கி வந்தால், கண்டதைத் தின்று, வியாதியை வரவழைத்துக்கொண்டவர் என்றும் அறிவோம். 

ஆக, ஒருவரைப் பார்த்து அவர் உண்ணும் பழக்கத்தையும் அறியலாம்.

ஸுகுலே யோஜயேத்கந்யாம் புத்ரம் வித்3யாஸு யோஜயேது  |

வ்யஸநே யோஜயேச்ச2த்ரும் மித்ரம் த4ர்மே நியோஜயேது  || 3.3 ||

பொழிப்புரை:    —    நற்குலத்தில் பெண்ணைச் சேர்க்க வேண்டும், பிள்ளைகளைக் கல்வி(கலைகள்)யில் ஈடுபடுத்துக, பகைவரைத் துன்பத்தில் ஆழ்த்துக, நண்பரை அறத்தில் நடத்திச் செல்க.                          …             3.3

விளக்கம்ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பலவிதமான உறவுகள், நட்புகள், பகை அல்லது மனத்தாங்கல் ஏற்படுவது உலக நியதி.  ஆனால் அனைவரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டுமா, அல்லது அவரை எப்படிப்பட்ட வழியில் போகவைத்தால் நமது வாழ்வு சீராக இருக்கும் என்பதற்கான அறிவுரைதான் இச்செய்யுளில் வழங்கப்படுகிறது.

பெண்ணுக்கு முதலிடம் நல்கி அறிவுரை வழங்கப்படுகிறது.  அப்பெண்களிலும், கன்னியரைப் பற்றிய அறிவுரைதான் இங்கு. பொதுவாக சங்ககாலத்திலிருந்து காதல் கடிமணம் செய்யும் வழக்கம் இருப்பினும், திருமணம் செய்துகொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகவே இருந்தது — இன்னும் இருந்துவருகிறது.  பெண்களைப் பூப்போலப் போற்றிவளர்ப்பதுதான் வழிவழியாக நடக்கிறது.  ‘ராஜாத்தி, ராஜகுமாரி,’ என்று – இக்காலத்தில் ‘மை பிரின்செஸ்,’ என்றுதான் பெற்றோர் தமது பெண்களைக் கொஞ்சுகின்றனர்.

அப்படிப்பட்ட பெண்ணை நன்றாகப் படிக்கவைத்து, நற்பழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவள் விரும்பியதை வாங்கிகி கொடுத்து வளர்த்தால் மட்டும் போதாது.  அவளை நல்ல குடியில் பிறந்த ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்பதே அந்த அறிவுரை.

அரசர்களும்கூட தங்கள் குமரிகளை, நாட்டு நன்மைக்காக நல்ல இளவரசனுக்கே மணமுடித்துக் கொடுத்தனர்.

‘இதென்ன பத்தாம் பசலித்தனமாக இருக்கிறது? பெண்கள் தாங்கள் எவரை விரும்பினாலும் மணமுடித்தால் என்ன?” என்ற கேள்விக்குச் சங்ககாலத்திலும் என்ன நடந்தது என்பதை முன்னமே பதிலாக வைத்துவிட்டாகிவிட்டது.  இளமையில் ஆண்-பெண்பாலாருக்கு ஒருவர்மீது மற்றவருக்கு நாட்டம் வருவது, அதுவும் இக்காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நாள்முழுதும் பழகும்பொது, இனக்கவர்ச்சி ஏற்படுவது இயற்கையே.  ஆனால் அது வெறும் இனக் கவர்ச்சியா, அல்லது உயிருக்குயிரான காதலா, இளமையில் வந்த காதல் முதுமைவரை தொடருமா என்பதை இருவரின் பெற்றோருமே ஆய்ந்து அறியவே விரும்புவர். அது உண்மையான காதல் என்பதைத் தமது பட்டறிவால் ஊகித்தறிந்தாலே இருவரையும் வாழ்வில் இணைந்து பலகாலம் வாழ வாழ்த்துவர்.

அடுத்து, பிள்ளையைக் கல்வியில் ஈடுபடுத்தும்படி சொல்லப்படுகிறது. உடனே, “பிள்ளையை மட்டும்தானா?  பெண் என்ன குறைந்தா போய்விட்டாள்?” என்று கேட்கவேண்டாம். 

ஏனெனில், இரண்டாம் பகுதி, பதினொன்றாம் செய்யுளில் பிள்ளைகளைப் படிக்கவைக்காத பெற்றோர் எதிரியாவர் என்று சாணக்கியரால் சொல்லப்பட்டது. 

ஆகவே, இந்தச் செய்யுளில் வருவதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாதிடுவது பயனற்றது. “சோம்பேறித்தனமான கைகள் பேயின் தொழிற்கூடம்,” என்று விவிலியப் (பைபிள்) பழமொழியும் கூறுகிறது.[6]

ஆகவே, சிறுவயதில் கல்வியில், அது எக்கல்வியாக இருப்பினும்—எவ்விதக் கலையாக இருப்பினும் சரி —  அதில் பிள்ளையை (ஆண்/பெண் எவராக இருப்பினும்) ஈடுபடுத்த வேண்டும். தகுந்த ஆசான் அக்கல்வியை நல்கும்போது, மனம், கைகளைச் சோம்பேறித்தனமாக இருக்க விடாது. இக்காலத்தில் பிள்ளகளின் கைகள் எப்படிச் சுறுசுறுப்பாக இயங்கினால்தான் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற இயலும் எனப் பெற்றோர்கள் நன்கு அறிவர்.

வாழ்வில் அனைவரும் நம் நலத்தை விரும்புவதில்லை;  இது கசப்பான உண்மை.  அப்படிப்பட்டவர் நமக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பர்.  நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் அப்படிப்பட்டவரைத் தொல்லையில் – துயரில் ஆழ்த்தவேண்டும் என்ற அறிவுரையை வழ்ங்குகிறார், சாணக்கியர்.  இது வள்ளுவப் பெருந்தகையின்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்,

என்ற குறட்பாவுக்கு எதிராக அல்லவா உள்ளது என்ற ஐயம் நம்முள் எழுவது நியாயமே.  இக்காலத்துக்கு அது ஒத்துவருமா என்பது கேள்விதான்.  தீயவரைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகலாம்.  ஆனால், அவர் தொடர்ந்து நமக்குத் தொல்லையளித்தால்..?

முக்கியமாக அரசருக்கும், நாட்டை ஆள்பவருக்கும் சாணக்கியரின் இந்த அறிவுரை பொருந்தும்.  அண்டை நாடுகள் – அதுவும் நம்மை ஒழித்துக்கட்டத் துடிக்கும் அண்டைநாடுகள் நமக்குத்  தொல்லைகொடுத்தால், திருவள்ளுவர் வேறுவிதமாகத்தான் அறிவுரை கொடுக்கிறார்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

என்றும் இரு குறள்களில் ஆணித்தரமாக அறிவிக்கிறார்.  தொல்லை தரும் கயவருக்குக் கொலைத் தண்டனை கொடுப்பது, மன்னவன் குடிமக்களான பயிரைக் காப்பாற்றக் தீய கயவரான களைகளை வேரோடு பிடுங்கி எறிவதற்கு ஒப்பாகும் என்றே சொல்கிறார். 

இதனால்தான் ஏதாவது ஒரு மேற்கோளை எடுத்துக் காட்டிச் சொல்லவந்ததைத் திசை திருப்ப முயலுமுன் நாமே பதிலும் கொடுத்தல் சிறப்பாகும் என்று திருவள்ளுவரின் மூன்று குறட்பாக்களும்  இங்கே கொடுக்கப்பட்டுள்ளன..

நண்பரை அறவழியில் ஈடுபடுத்துதல் சாலச் சிறந்தது.  ஏனெனில், நண்பர்கள் நல்வழியில் சென்றால்தான், நாம் தவறும் காலத்தில் நம்மைத் தடுத்துநிறுத்துவர்.  நண்பர் தீவழியில் சென்றால், நம்மையும் அவ்வழியில் அவர் ஈடுபடுத்தக்கூடும்.

து3ர்ஜநஸ்ய ச ஸர்ப்பஸ்ய வரம் ஸர்ப்போ ந து3ர்ஜந:  |

ஸர்ப்போ த3ம்ஶதி காலேந து3ர்ஜநஸ்து பதே3 பதே3  || 3.4 ||

பொழிப்புரை:    —    தீயவருடைய (தொடர்போ), பாம்பின் (தொடர்போ எனில்), தீயவரல்ல, பாம்பு(டன் தொடர்புவைத்தல் நலம்); பாம்பு (மிதிக்கும்) சமயத்தால் கடிக்கிறது; தீயவரெனில் ஒவ்வொரு அடிவைக்கும் போதும்.                           …             3.4

விளக்கம்பகைவரை எப்படிக் கையாளவேண்டும் என்று சென்ற செய்யுளில் கண்டால், தீயவர், கொடியவர் கயவர் தொடர்பு எதற்கு ஒப்பாகும் என்று இச்செய்யுள் விளக்குகிறது.

போதுவாகத் தீயவர் பாம்புக்கு ஒப்பாவர் என்று விவிலியம் கூறுகிறது.  சொர்க்கச் சோலையில் கவலையின்றித் திரிந்த ஆதாமிடமும் ஏவாளிடமும் இதமாகப் பேசி அறிவுப் பழத்தை தின்னவைத்து, அவர்களைக் கடவுளின் கோபத்திற்கு ஆளாக்கிச் சொர்க்கச் சோலையிலிருந்து விரட்டியடிக்கக் காரணம் அங்கிருந்த பாம்பு என்பது விவிலியத்தின் கூற்று.

ஆனால், சாணக்கியரோ, தீயவர் பாம்பைவிட மோசமானவர், தீயவரின் தொடர்பா, பாம்பின் தொடர்பா – இவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், பாம்பையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.

வியப்பாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறதல்லவா?   

சில சமயம், கன்னத்தில் அறைந்தாற்போல் சொன்னால்தான் மனதில் உடனே பசுமரத்தாணியாகப் பதியும்.  அதைத்தான் கௌடில்யர் கையாளுகிறார்.

ஏன் அப்படிச் சொல்கிறார்? நாம் பாம்புடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றா சொல்கிறார்?

நாம் நடந்து செல்லும்போது, வழியில் ஒரு பாம்பைப் பார்க்கிறோம்.  அது செல்லும் வழியில் செல்லாமல், விலகிச் சென்றால், பாம்பு நம்மைத் தொடர்ந்து வந்து கடிக்க முயலாது.  அதுவும் அதன் வழியில் சென்று விடும்.  ஏனெனில், மனிதர் பாம்பின் இரையல்ல. அதுவும் மனிதரைக் கண்டு அஞ்சுகிறது.

இலை-தழைகளின் கீழ், புதரில் அது மறைந்திருப்பது தெரியாமல் மிதித்துவிட்டால், அது நம்மைக் கடிக்க வாய்ப்புண்டு.  அது அப்படிச் செய்வது தன்னைத் தற்காத்துக் கொள்ளத்தான்.

ஆனால், தீயவரோ, எக்காரணமும் இல்லாது, அவர் நாம் அவருடன் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு சமயமும் நமக்குத் தீங்கையே விளைவிப்பர், அவருடன் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்குத் தீமையே விளைவிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஏதத3ர்த்த2 குலீநாநாம் ந்ருபா: குர்வந்தி ஸம்க்3ரஹம்  |

ஆதி3மத்4யா(அ)வஸாநேஷு ந த்யஜந்தி ச தே ந்ருபம்  || 3.5 ||

பொழிப்புரை:    —    இப்படிப்பட்ட(காரணத்)தால், நற்குடிகளுடைய(பெரியோர்)ரை  அரசர்கள் சேர்த்துவைக்கிறார்கள்; தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் அவர்கள் அரசனை விட்டுவிடமாட்டார் .                 …             3.5

விளக்கம்அரசாள்பவர் எப்படிப்பட்டவரைத் தம்முடன் சேர்த்துக்கொள்கிறார்கள் (வேண்டும்) என இங்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

இங்கு நாம் ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவு கொள்ளவேண்டும்:

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்; –அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு.

குளத்தில் பிறந்து மலர்ந்த தாமரை, அல்லிக் கொடிகள், அக்குளத்தின் நீர் பெருகினாலும், அறுகினாலும் குளத்திலேயே தம்மை இணைத்துக்கொள்ளும்; எங்கும் செல்லாது.  அது போலத்தான் உறவு இருக்கவேன்டும்; அப்படி இருப்பவர்தாம் உறவினர் என்றுதான் சொல்லியிருக்கிறாள், அந்த மூதாட்டி. 

இங்கு சாணக்கியர் அதையே வேறுவிதமாகச் சொல்லுகிறார்.  அரசனுக்கு/ஆட்சியாளருக்கு நம்பகமான அறிவுரையாளர் தேவை.  அவர் தம்மைவிட்டு எப்பொழுதும் நீங்கக்கூடாது.  தொடக்கத்திலிருந்து இறுதிவரை கூடவே இருந்து விசுவாசிகளாக இருக்கவேண்டும்.

கண்ணன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அருச்சுனனுக்கு உறவாய், நண்பனாய், அறிவூட்டும் ஆசானாக இருந்தான். நாட்டு அதிபருக்காகத் தன் உடலை முன்வைத்து அவரைக் காப்பாற்றத் தயார நிலையில் தான் இருக்கத் துணியும் நல்லோரையே[8] பல நாடுகளில் இரகசியப் போலீசாராகத் தேர்ந்தெடுக்கின்றனர். 

அரசவையில் அனைவரும் தன்னைக் கைவிட்டவுடன், “ஹே, கிருஷ்ணா,” என்று பாஞ்சாலி கதறியபோது, துகிலுறிய முற்பட்ட துஷ்டன் துச்சாதனின் கை களைத்துப் போகும்வண்ணம், அவளுடைய மானத்தைக் காப்பாற்றி, மேலாடைகளைத் தொடர்ந்து வரவழைத்துக் காப்பாற்றினான். 

அந்தக் கண்ணன் திருமாலில் அவதாரமாகப் போற்றப்படுகிறான்.  அவனைவிடச் சிறந்த நற்குடிமகன் எவர்?

இப்படிப்பட்ட நிகழ்வுகளை அரசர் அறிந்திருப்பர். அதனால்தான் நற்குடிகளில் பிறந்து சிறந்த பெரியோரைத் தம் அவையில் சேர்த்துவைக்கிறார்.  தாம் தாழ்ந்தாலும், வாழ்ந்தாலும், சிறந்தாலும், சீர்குலைந்தாலும் தம்முடன் இருப்பர், கோடி கொடுத்தாலும் தம்மை மற்றவருக்குக் காட்டிக்கொடுக்க மாட்டார், இறுதிவரை தம் வாழ்வுக்குமுன் அவர் தம் வாழ்வைத் துச்சமாக மதிப்பர் என்று தெரிந்துகொள்கிறார்.

அரசனின் மெய்காப்பாளரும் அவ்வாறே!  இன்றும், நாட்டு அதிபருக்காகத் தன் உடலை முன்வைத்து அவரைக் காப்பாற்றத் தயார நிலையில் தான் இருக்கத் துணியும் நல்லோரையே[8] பல நாடுகளில் இரகசியப் போலீசாராகத் தேர்ந்தெடுக்கின்றனர். 

ப்ரலயே பி4ந்நமர்யாதா ப4வந்தி கில ஸாக3ரா:  |

உடஸாக3ரா பே4தமிச்ச2ந்தி ப்ரலயே(அ)பி ந ஸாத4வ:  || 3.6 ||

பொழிப்புரை:    —   ஊழிப் பேரழவின்போது பெருங்கடல்களும் கரை எல்லையை உடைப்பவையாக ஆகின்றன.  கட(லருகி)ல் குடிசை(யில் வாழும்) நல்லோர் ஊழிப்பேரழிவிலும்கூட நிலைபிறழ்வதை விரும்புவதில்லை.                    …             3.6

விளக்கம்பகல் முழுவதும் வெய்யில் நம்மை வறுத்தெடுக்கிறது.  அத்துடன், நீர்ப்பதமும் சேர்ந்துவிட்டதால், புழுக்கம் தாங்காது வேர்த்துக் கொட்டுகிறது. இத்துடன் மின்வெட்டும் இருப்பதால், குளிர்ப்பதப்பட்ட காற்றும் இல்லை.  மின்விசிறியும் ஓடவில்லை.  ஆகவே, ஜன்னலைத் திறந்து வைத்தாலும், வெப்பக்காற்றே வருகிறது.  துண்டால் துடைத்தாலும், கைவிசிறியால் விசிறியும் உடல் வெப்பம் தணியவில்லை.  என்னசெய்வது என்று தெரியாமல் துடிக்கிறோம்.

மாலை மணி ஐந்தாகிறது.  மெல்லக் கடற்காற்று வீசுகிறது.  நிம்மதியான பெருமூச்சு விடுகிறோம்.  கடற்கரையை நோக்கிச் செல்கிறோம்.  இயற்கை அன்னையால் அளிக்கப்பட்ட கடற்காற்று நம் உடலைத் தழுவி நம்மைக் குளிர்விக்கிறது. அதில் மெய்மறந்து திளைக்கிறோம். மெல்ல வரும் அலைகளில் நம் கால்களை நனைத்து மகிழ்கிறோம்.  கடற்கரையில் சிறு வியாபாரிகளின் வணிகம் மும்முரமாக நடக்கிறது.

அப்பொழுது திடுமென்று ‘உய்’யென்று பேய்க்காற்று வீசுகிறது.  ஒருவிதமான, இதுவரை நாம் கேட்காத ஒலி எழுகிறது.  திகைத்துப் பார்த்தால், பலரும் கரையை நோக்கி ஓடுகின்றனர்.

என்ன, ஏது என்று பதைபதைத்து வேகமாக ஓடுபவர் ஒருவரைக் கேட்டால், அவர் கடலை நோக்கிச் சுட்டிக்காட்டிவிட்டு ஓடுகிறார்.

திரும்பிப் பார்த்தால்…

பனைமர உயரத்துக்கு ஊழிப்பேரலைகள் நம்மை நோக்கி விரைந்துவருகின்றன. நாம் தட்டுத் தடுமாறிக் கரைக்கு – கடல் அலைகள் வராது தொலை தூரத்துக்கு விரைகிறோம்.  ஆனால், கால்கள் மண்ணில் புதைகின்றன.  காலை எடுத்துவைத்தால், ஒரு குழந்தை கட்டிவைத்த மணல்வீடு தடுக்கிறது.  குப்புற விழுகிறோம்.  கடலைலை நம்மை….

நினைத்தாலே பயமாக இருக்கிறதல்லவா? 

கடல் கொந்தளிப்பால் அழிந்த தனுஷ்கோடி

கடல் கொந்தளிப்பு – அதுதாங்க, சுனாமி வந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கோடி காட்டினோம்.  ‘சுனாமியில் சுவிம்மிங் போவோம்,’ என்று தளுக்காக வசனம்தான் பேசலாம்.  அது முடியவே முடியாது.  சென்னை, நாகப்பட்டினம், தனுஷ்கோடியிலெல்லாம் சுனாமி வந்திருக்கிறது.[9]  அது ஒன்றுமில்லை;  இந்தோனேஷியா, இலங்கை, ஜப்பான் சுனாமிகள் எப்படிப் பெரியபெரிய கட்டிடங்கள், மனிதர்கள், வீடுகள், படகுகள், கார்கள், பஸ்கள் இவற்றை அடித்துப் புரட்டிப் போட்டன என்று நாம் ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். [10]

ஆகவே, பொதுவாகக் கரையைக் கடக்காத கடல், பெருங்கடல்கூட ஊழிக்காலத்தில் அதன் எல்லையான கரைக் கடந்து வந்து, அழிக்கும். 

அதுகூட நிலைதவறும், ஆனால் மேன்மக்கள் எக்காலத்திலும் நிலை தவறமாட்டார்கள். கடலருகில் இலை தழைகளால் வேயப்பட்ட குடிசையில் அவர் தங்கியிருப்பர்.  இறைவனை நாடித் துதிப்பர்; நாட்டின் நன்மையையே விரும்புவர்.  எவருக்கும் தீங்கு செய்யார்.  முன்பு நான் குறிப்பிட்ட கடல் கொந்தளிப்பு (சுனாமி) வருகிறது.  அப்பொழுது அவர்முன்பு தோன்றிய கடவுளே அவரை நோக்கி, “நீங்கள் உங்கள் அறநிலையிலிருந்து பிறழ்ந்து – தர்மத்திற்குப் புறம்பாக நடந்தால் நீங்கள் உயிர்பிழைப்பீர்,” என்று சொன்னால்கூட அறத்திலிருந்து நிலை பிறழமாட்டார்.  தன் உயிருக்காக தர்மத்தை விட்டுவிட விரும்பவும் செய்யார்.

சென்ற செய்யுளில் அரசன் நற்குடிப் பிறந்தோரை ஏன் ஏத்திப் போற்றுகிறான் என்பதை இந்தச் செய்யுளில் மேலும் தெளிவாக்குகிறார், சாணக்கியர்.

மூர்க்க2ஸ்து ப்ரிஹர்தவ்ய: ப்ரத்யக்ஷோ த்3விபத3: பஶு:  |

பி4நத்தி வாக்ஶல்யேந அத்3ருஷ்ட: கண்டகோ யதா2  || 3.7 ||

பொழிப்புரை:    —    மூர்க்கர் நேரில் (பார்க்க) இருகாலுள்ள விலங்காகவே தென்படுவர். கண்ணில் படாத முள்ளைப் போல வலிக்கும் சொற்களால் துளைத்தெடுப்பர்.                  …             3.7

விளக்கம்மூர்க்கனையும், முள்ளையும் இச்செய்யுளில், சாணக்கிர் ஒப்பிடுகின்றார்.  முட்டாளுக்கும், மூர்க்கனுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்போம். 

அறியாமை இருள் சூழ்ந்தவன் முட்டாள்.  கல்வியறிவு, உலகோடு ஒட்டும் அறிவு, செயலறிவு போன்ற பலவிதமான அறிவுகள் எதுவும் கைவரப்பெறாதவன், அவன்.  சில சமயம், கூட்டல் கழித்தல் தெரியாமலிருக்கும், சில சமயம் சொன்ன வேலை எதுவும் ஒழுங்காகச் செய்யும் அறிவு இல்லாமலிருக்கும்.  பலதடவை சொல்லிக்கொடுத்தாலும் புரிந்துகொள்ளும் திறமை இல்லாமலிருக்கும். இருப்பினும், தனக்கு அத்திறமை குறைவு என்பது அவனுக்குத் தெரிந்திருக்கும்.  ஆகவே, தனது குறை எது என்று அவன் அறிவான்.  அதனால் தன்னிடம் இல்லாத திறமை எவரிடம் உள்ளதோ, அவரிடம் பணிவு, மரியாதை இருக்கும்.

ஆனால், மூர்க்கனுக்குத் தன்னிடம் இருக்கும் குறை தெரியாது.  தன்னிடம் குறை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டான்.  தான் சொல்வதுதே சரி என்று சாதிப்பான்.  முயலுக்கு மூன்று கால் என்று வாதிப்பான்.  உடனே ஒரு முயலைக் கொணர்ந்து காட்டி, “இதோ, பார்!  இதுதான் முயல்.  இதற்கு நான்கு கால்கள் உள,” என்று ஒரோர் கால்களாக எண்ணிக்காட்டினால், அந்த முயலை நம்மிடமிருந்து பிடுங்கி, அதன் ஒரு காலை உடைத்து வெட்டியெறிந்துவிட்டு, “இப்பொழுது பார், மூன்று கால்கள்தான் இருக்கு.  ஆகவே, முயலுக்கு மூன்று கால் என்று நான் சொன்னது சரிதான்!” என்று நாம் கொணர்ந்த முயலையே சான்றாக நமக்கே காட்டுவான்.

எனவே, மூர்க்கன் மனிதப் பிறவியாக இருந்தாலும், அவன் இருகால் விலங்கு என்றே கௌடில்யர் கூறுகிறார்.  மூர்க்கனை மனிதானாக நினைத்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது, கொடிய விலங்கு என்று ஒதுங்கிவிட வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

அப்படி ஒதுங்காமல், மூர்க்கனுடன் தொடர்புகொண்டால் என்ன நடக்கும்/

காலில் செருப்பு இல்லாமல் நடந்துசெல்லும்போது ஒரு முள் காலில் குத்தி, அது உடைந்து உள்ளே சென்று விட்டால், குத்தும்போது சுரீர் என்று வலிக்கும்.  என்ன என்று உள்ளங்காலை நோக்கினால், அது எங்கிருக்கிறது என்று நமக்குத் தெரியாது.  விரலால் அழுத்திப் பார்த்தால், அது கடும் வலியைக் கொடுக்கும்.  அதை எடுத்து எறியாதவரை அது கொடுக்கும் வலியைத் தாங்க இயலாது.

அதுபோலத்தான் மூர்க்கரும்!  அவரிடமிருந்து ஒதுங்கிச் செல்லாவிட்டால், அவருடன் பேசும் போது, கண்ணுக்குத் தெரியாமல் குத்தும் முள்ளைப்போல நம் உள்ளத்தைக் குத்தியெடுக்கும் சொற்களால் குத்தியெடுப்பர்.

அது நமக்குத் தேவையா?

(தொடரும்)


[1]      Bernie Madoff, American hedge-fund investor, Brittanica, https://www.britannica.com/biography/Bernie-Madoff

[2]      First responder accused of stealing from crash victim, By Crimesider Staff, August 12, CBS News, https://www.cbsnews.com/news/first-responder-accused-of-stealing-from-crash-victim/

[3]      நிலநடுக்கத்திலும்  கொள்ளை – 48பேர் கைது, பிப்ரவரி 11, 2023, புதியதலைமுறை தொலைக்காட்சிச் செய்தி, https://twitter.com/PTTVOnlineNews/status/1624612668530388995

[4]      யாஸ்மின் செய்திகள், எம்.எஸ்.என்.பி.சி செய்தி, மார்ச் 4, 2023

[5]      8-Year-Old Finds Out His Favorite Waffle House Waiter Is Hiding a Secret – Doesn’t Hesitate to Raise $64,000 for Him, By Heidi Hamm, Goalcast, https://www.goalcast.com/little-boy-raises-money-waffle-house-waiter/     

[6]      “Idle hands are the devil’s workshop; idle lips are his mouthpiece”Proverb 16.27 – Living Bible

[7]      பகவத் கீதை, கர்ணன் திரைப்படத்தில் கண்ணதாசனின் பாட்டின் வரிகள்.

[8]      take a/the bullet, The Free Dictionary by Farlex, “It’s one of the basic duties of bodyguards to take the bullet for their clients if someone tries to kill them”, https://idioms.thefreedictionary.com/Take+the+Bullet

[9]      மண்ணில் புதைந்த நகரம் தனுஷ்கோடி.., News 18, https://tamil.news18.com/news/ramanathapuram/dhanushkodi-is-an-abandoned-town-at-the-south-eastern-tip-of-pamban-island-of-the-state-of-tamil-nadu-860061.html

[10]     2011 Tohoku Earthquake and Tsunami, National Centers for Environmental Information, https://www.ncei.noaa.gov/news/day-2011-japan-earthquake-and-tsunami

Series Navigation<< சாணக்கிய நீதி – 8<< சாணக்கிய நீதி – 7<< <strong>சாணக்கிய நீதி – 6</strong><< சாணக்கிய நீதி – 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *