மாரியம்மன் என்ற தேவியின் திருப்பெயரை தமிழ்ச்சொல்லாக எடுத்துக்கொண்டு மழையுடன் (மாரி) தொடர்புறுத்தி விளக்கம் அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறான விளக்கம். மாரியம்மனை அம்மை போன்ற பெருநோய்களைத் தீர்க்கும் தெய்வம் என்றே பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனரே அன்றி மழை, விவசாயம், பயிர் விளைச்சல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாக அல்ல. நீர்நிலைகளைக் காக்கும் தெய்வமாக கங்கையம்மன், வயல்களின் காவல்தெய்மாக வயற்காட்டு இசக்கியம்மன் போன்ற தேவி ஸ்வரூபங்களைத் தான் வழிபடுகின்றனர். மழைதரும் தேவி மாரி என்பது போன்ற குறிப்பு எனக்குத் தெரிந்து பழந்தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை.
உண்மையில் மாரியம்மனின் பெயர் மஹாமாரீ என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வருகிறது. இச்சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் கூறலாம். 1) மஹதீ மாரீ – பெரும் மரணத்தை உண்டாக்குவது. இப்பொருளில் இது அம்மை போன்ற கொள்ளை நோய்களைக் குறிக்கிறது. 2) மஹதோ (அஸுரான்) மாரயதி – பெரும் அசுரர்களை அழிப்பவள். இது தேவியின் திருநாமமாகிறது.
இச்சொல் இந்த இரண்டு விதங்களிலும் தேவி மகாத்மியத்திலும், அதனோடு இணைந்த ரஹஸ்யம் எனப்படும் சாக்த கிரந்தங்களிலும் வருகிறது (தேவி மகாத்மியம் என்பது 18 புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் பராசக்தியின் மகிமைகளைக் கூறும் 700 சுலோகங்கள் அடங்கிய பகுதி. சக்தி வழிபாட்டில் இது ஒரு மகாமந்திரம். துர்கா ஸப்தஶதீ என்றும் அழைக்கப் படுகிறது).
தேவி மகாத்மியம் 12ம் அத்தியாயம்:
உபஸர்கா³னஶேஷாம்ʼஸ்து
மஹாமாரீ-ஸமுத்³ப⁴வான் ।
ததா² த்ரிவித⁴முத்பாதம்ʼ
மாஹாத்ம்யம்ʼ ஶமயேன்மம ॥ 8॥
பெரும் மரணங்களை விளைவிக்கும் நோய்களையும், அவ்வாறே மூன்று வகையான துன்பங்களையும் எனது மாஹாத்ம்யம் போக்குவதாக இருக்கட்டும்.
வ்யாப்தம்ʼ தயைதத்ஸகலம்ʼ
ப்³ரஹ்மாண்ட³ம்ʼ மனுஜேஶ்வர ।
மஹாகால்யா மஹாகாலே
மஹாமாரீ-ஸ்வரூபயா ॥ 38॥
அரசே, பிரளய காலத்தில் மகாமாரியாகத் தோன்றும் அந்த மகாகாளியால் இந்த பிரம்மாண்டம் முழுவதும் வியாபிக்கப் படுள்ளது.
ஸைவ காலே மஹாமாரீ
ஸைவ ஸ்ருʼஷ்டிர்ப⁴வத்யஜா ।
ஸ்தி²தம்ʼ கரோதி பூ⁴தானாம்ʼ
ஸைவ காலே ஸனாதனீ ॥ 39॥
பிரளய காலத்தில் மகாமாரியாய் விளங்குபவள் அவளே. பிறப்பற்ற அவளே சிருஷ்டியாகவும் ஆகிறாள். அனாதியான அவளே ஸ்திதி காலத்தில் உயிர்களனைத்தையும் வைத்துக் காப்பாற்றுகிறாள்.
ப்ராதா⁴னிக ரஹஸ்யம்:
மஹாமாயா மஹாகாலீ
மஹாமாரீ க்ஷுதா⁴ த்ருʼஷா।
நித்³ரா த்ருʼஷ்ணா சைகவீரா
காலராத்ரிர்து³ரத்யயா॥12॥
மகாமாயை, மகாகாளி, மகாமாரி, பசி, தாகம், உறக்கம், ஆசை, நிகரற்ற வீரியம் கொண்டவள், கடக்க முடியாத காலராத்ரி.
மூர்த்தி ரஹஸ்யம்:
சித்ரப்⁴ரமரபாணி: ஸா
மஹாமாரீதி கீ³யதே।
இத்யேதா மூர்தயோ தே³வ்யா
யா: க்²யாதா வஸுதா⁴தி⁴ப॥21॥
விசித்திரமான வண்டொன்றைக் கையில் ஏந்தியவள்; அவள் மகாமாரி என்று போற்றப் படுகிறாள். அரசே இங்ஙனம் தேவியின் வடிவங்கள் கூறப்பட்டன.
உலகத்து நாயகியே
எங்கள் முத்துமாரியம்மா
எங்கள் முத்துமாரி
உன் பாதம் சரண்புகுந்தோம்
எங்கள் முத்துமாரியம்மா
எங்கள் முத்துமாரி..
தேடியுனைச் சரணடைந்தேன்
தேசமுத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய்
கேட்டவரம் தருவாய்…
(மகாகவி பாரதியார்)
ஓம் சக்தி.
நீங்கள் சொல்லும் தெய்வம் உண்டு ஆனால் தமிழக பகுதிகளில் மழை கடவுள் தான் இன்றைக்கு இருக்கும் காலகட்டம் வேறு அன்றைய நிலையில் மழை பெய்து நீர் நிலைகளை நிறைந்தால் எதுவும் இயல்பாக இருக்கும்