கள்ளக்குறிச்சியில் நடந்திருப்பது விபத்து. மோசமான விபத்து. சாதாரணமாகக் குடித்தவர்கள் நீங்கலாக இறப்பு வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றவர்கள் சிலரும் சாராயம் அருந்தியிருக்கிறார்கள். அது வீரியம் மிகுந்த சாராயம் என்பதால் அத்தனை பேரின் உயிரையும் பலிவாங்கிவிட்டிருக்கிறது.
இறப்பு வீட்டில் மற்றும் இறந்தவர் தொடர்பாக பறையடித்தபடி ஆடுபவர்கள் எல்லாம் மது அருந்துவது மிகவும் சாதாரணமான விஷயம். பழங்குடி கால வேர்கள் இதற்கு உண்டு. இறப்புச் சடங்கின் ஓர் அங்கமாகவே அது இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் அப்படியான சாராயம் வீரியம் அதிகமானதால் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது. பள்ளியில் அல்லது திருமண விழாவில் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டு வாந்தி பேதிக்கு ஆளாவது போன்ற ஒரு துரதிஷ்டமான சம்பவம்தான். சாராயம் என்பதால் உயிரையே காவு வாங்கிவிட்டது. குடிப்பவர்கள் எல்லாருமே குடிகாரர்கள் அல்ல.
இதில் இன்னொரு கொடூரமான வேடிக்கை என்னவென்றால் முதலில் இறந்தவருமே கள்ளச்சாராயம் குடித்துத்தான் இறந்திருக்கிறார். அரசு – மருத்துவ – காவல்துறை தரப்பில் அது முதலிலேயே சொல்லப்பட்டிருந்தால் துக்கவீட்டுக்குச் சென்றவர்கள் டாஸ்மாக் மது வாங்கிக் குடித்திருக்கக்கூடும். இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருக்கும்.
இதுபோன்ற விபத்துக்கு அரசு நஷ்ட ஈடு கொடுப்பதென்பது நிச்சயம் சரியில்லை. உணவு கெட்டுப்போய் இறந்தாலே நஷ்ட ஈடு கொடுப்பது சரியல்லதான். அதிலும் சாராயம் அருந்தி இறந்திருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
திராவிட மாடலில் சாராயம் ஓர் அடிப்படை உணவு. நாளை கஞ்சா குடித்து பத்து பேர் செத்தால் இந்த அரசு மேலும் பத்து லட்சம் கொடுக்கவும் செய்யும்.
பிராமண, சனாதன, இந்து தர்மம் இந்த லஹரிகளை எதிர்ப்பதால் அதை அவர்கள் ஆதரிப்பார்கள். மக்கள் உயிர் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. டாஸ்மாக் சரக்கை வாங்கிக் கொடுத்திருக்கவேண்டியதுதானே என்றுதான் தனியறையில் திருவள்ளுர் சிலைக்கு முன்னால் நின்று ஆலோசனை சொல்வார்கள்.
அனைத்திலும் மலின அராஜக அரசியலே அதன் வழிமுறை. இந்து தர்ம நூல் எதிலாவது மலம் உண்ணக்கூடாது என்று சொல்லியிருந்தால் இந்த கும்பல், அப்பாவித்தொண்டர்கள் பலரை மலம் தின்னச் சொல்லி காட்டவும் ஆரம்பித்திருக்கும்.
எதிர்க்கட்சிகள் துக்கம் விசாரிக்கச் செல்வதிலும் அதையொட்டி விமர்சனங்களை தீவிரமாக முன்வைப்பதிலும் தவறில்லை. நிச்சயம் இதை மிகப் பெரிய துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் அவர்கள் நிச்சயம் லேசாகச் சிலிர்த்துவிட்டு அடங்கிவிடவே 100% வாய்ப்பு இருக்கிறது.
ஊடகங்கள் உண்மையைப் புரிந்துகொண்டு நிதானமாக நடந்துகொள்வது நிச்சயம் சரிதான்.
ஆனால், இதே நிதானம் ஊடகங்களுக்கு எல்லா விஷயங்களிலும் இருப்பதில்லை என்பதால் இந்த திடீர் கண்ணியம் மிக மிக கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது. அதிலும் திராவிட திராவக ஆட்சியில் நடந்திருப்பதால்தான் இந்த நிதானம். வேறு ஆட்சியிலென்றால் ஆட்சியை அவர்களே கலைத்திருப்பார்கள். எனவே ஊடகத்தினரின் செலக்டிவான இந்த கண்ணியமான நிதானம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வட கிழக்கு மாநிலம் காடும் மலையும் நிறைந்தது. எளிதில் பொருளாதார, வளர்ச்சி நடவடிக்கைகளை அமல்படுத்த முடியாத பகுதி. அங்கு போதைப் பயிர்கள், போதை வர்த்தகம் சில பகுதிகளில் தடையற்று நடந்துவருகிறது. நம் தேசத்தின் எல்லைப்பகுதியில் இருப்பதால் அந்நிய நாட்டு ஊடுருவல், தீவிரவாதம், ஆயுதங்கள் எளிதில் மக்களுக்கும் கிடைப்பது என கொதி நிலையில் இருக்கும் பகுதிகள் அவை. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க கிறிஸ்த சக்திகளின் கோட்டை அது.
இப்படி அனைத்துவகையிலும் தீர்க்கவே முடியாத பிரச்னைகள் ஆழமாக ஆரம்பம் முதலே (சுதந்தரத்துக்கு முன்பிருந்தே) நிலவிவரும் நிலையில் எந்தவொரு அரசாலும் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையையும் அங்கு எடுக்கவே முடியாது.
அங்கு இருக்கும் கனிம வளங்கள் சார்ந்து தனியார் நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் போட்டியில் எந்த நிறுவனத்துக்கு கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையோ அது அங்கிருக்கும் வனவாசிகளைத் தூண்டிவிடும். மாவோயிஸ, கம்யூனிஸ ப்ரோக்கர் சக்திகள் மக்கள் உரிமை, மண்ணுரிமை என்று உணவில் படரும் பூஞ்சைகளாகப் பல்கிப் பெருகும்.
போதைத் தடுப்பு தொடர்பாகவோ தீவிரவாதத் தடுப்பு சார்ந்தோ சட்ட ஒழுங்கை நிலைநாட்ட ராணுவம் அங்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டியிருக்கும். தீவிரவாத பிரிவினைவாத சக்திகள் துப்பாக்கியால் சுடும்போது பதிலுக்கு சுடுவதுதான் ராணுவத்தின் வேலை. அந்த வேலையை அவர்கள் செய்யவிடாமல் தடுக்க ஐரோப்பிய அமெரிக்க பாணியில் பெண்கள் நிர்வாணமாக கிராம எல்லையில் வந்து நின்று தடுப்பார்கள்.
இதை அவர்களில் சிலர் பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டு வீடியோ எடுப்பார்கள். ஊடகங்களிடம் சொன்னால் அதி உயர் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் அங்கு கூடாரமே போட்டு அமரவும் தயாராக இருப்பார்கள். அப்படிச் செய்தால் விஷயம் அம்பலமாகிவிடும் என்பதால் போராளிகளைவிட்டே அந்த வீடியோக்கள் அமெச்சூர்த்தனமாக எடுக்கப்படும். ஒருவேளை கோடிகளைக் கொட்டித் தரக்கூடிய அந்த வீடியோக்களை போராளிகளே ஊடகங்களுக்குத் தராமல் தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் நோக்கிலும் ஊடகங்களை இந்த இந்து-இந்திய விரோதப் போரில் இரண்டாம் வரிசையில் நிறுத்திவைத்திருக்கலாம்.
எது எப்படியானாலும் அந்த நிர்வாணப் போராட்டம் போன்றவை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு திரைக்கதை எழுதப்பட்டு நடப்பவையே.
மணிப்பூரில் இந்திய ராணுவத்தை எதிர்த்து இது பல காலமாக வெற்றிகரமாக நடந்துவரும் பிரிவினைத் தந்திரமே. தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் ஒரு பழங்குடி அப்பாவியை அனுப்பி ராணுவம் ஒரு பெண்ணை இழுத்துவரச் சொன்னது. அவர்களைப் பொறுத்தவரையில் ராணுவ உடையுடன் சென்று இழுத்துவருவதை வீடியோ எடுத்தால் தேசத்துக்கு மேலும் பெரிய அவமானம்; உலகமே அதை இன்னும் தீவிரமாக எதிர்க்கும் என்பதால் பழங்குடி இளைஞர்களை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயற்சி செய்தார்கள். ஆனால், பிரிவினைவாத தீவிரவாத இந்து விரோத சக்திகள் அதையும் மிகப் பெரிய அளவில் எடுத்துச் சென்று தேசத்தைத் தலைகுனியவைத்தார்கள்.
எதிரிகள் மிகத் தெளிவாக விரித்தவலையில் சிக்கிக்கொண்டது தேசம்.
ஊடகங்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருக்கும். அங்கு நடந்தது ராணுவ அத்துமீறலோ, பெண் ஒடுக்குதலோ, வன்முறையோ, அராஜகமோ இல்லை. ஆனால் அப்படியாகவே அது திரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் நடக்கும்போது அதுவும் திமுக ஆட்சியில் இருக்கும்போது நடந்தால் ஊடகங்கள் எப்படி நிதானமாக, செய்திகளைப் பொறுப்புடன் வெளியிடுகிறார்களோ அப்படியே எல்லா நிகழ்வுகளையும் வெளியிடவேண்டும். அதை அவர்கள் செய்வதில்லை. அந்தவகையில் அவர்கள் பிரிவினைவாத , இந்து விரோத அராஜக, அரசியல் சக்திகளின் ஆறாம் விரலாகவே இருக்கிறார்கள். தேசத்தின் நான்காம் தூணாக அல்ல.
அந்தக் கலவரமும் கள்ளக்குறிச்சி மரணங்களும் ஒரே தரத்திலானவை அல்ல. ஆனால், ஊடகங்கள் அதை வெளியிடுவதில் இருக்கும் தந்திரம், தார்மிகம் பற்றியே நாம் புரிந்துகொண்டாகவேண்டும்.
பிரிவினைவாத, இந்து விரோத ஊடகங்களை ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், அவர்கள் இப்படியான விஷயங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஊடக, தகவல் தொழில்நுட்பத்துறை என்பது போன்றவற்றில் இவற்றைத் தடுக்க சட்டங்கள் நிச்சயம் இருக்கும். ஆனால் மத்திய அரசு இவற்றில் 100-ல் ஒரு பங்கு நடவடிக்கைகூட எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.
நிச்சயமாக அரசியல் கட்சியாக பாஜகவோ அதன் துணை அமைப்புகளோ உண்மைகளைப் பேசினால் மட்டும் போதாது. அரசு அதிகார வர்க்கத் துறை சார்ந்து நடவடிக்கை எடுத்தால்கூடப் போதாது. இவை அனைத்தையும் திரிக்கவே செய்வார்கள். நடுநிலையோடு செயல்படும் ஊடகங்கள் மிகவும் அவசியம். அல்லது இருக்கும் ஊடங்களில் நடுநிலையோடு செயல்படுபவர்களை இடம்பெறச் செய்யவேண்டும்.
தூர்தர்ஷன் தூங்கி வழிந்துகொண்டிருக்கிறது. உலகில் தகவல் தொழில்ட்பம், காட்சி ஊடகவியல், துறைகளில் மிகப் பெரிய புரட்சி நடந்தேறிவிட்டிருக்கிறது. தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் அதற்கு இருந்த மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் அபரிமிதமானது. தனியார் துறைக்கு தாரை வார்க்கப்பட்டபின் அதே முன்னணி நிலையை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் இந்த அளவுக்கு பரிதாபமான நிலைக்குப் போயிருக்கத் தேவையில்லை.
இதில் பெரிய கொடுமை என்னவென்றால் தூர்தர்ஷனுக்கு அரசு கோடிகளைக் கொட்டிக் கொடுத்துவருகிறது. மத்திய அரசு தன் தரப்பு நியாயங்களையும் தேச தர்ம நலனையும் காக்கும் நோக்கில் தூர்தர்ஷனை நிச்சயம் முன்னணி இடத்துக்குக் கொண்டுவந்தாகவேண்டும்.
பேருந்து போக்குவரத்துத்துறை, தொலைபேசித் துறை போன்றவற்றை தனியாருக்குக் கொடுத்ததன் மூலமும் ரயில்வே மற்றும் விண்வெளி ஆராய்ச்சித்துறையையும் தாரைவார்க்கத் தொடங்கியிருப்பதன் மூலமும் தேசத்துக்கும் தர்மத்துக்குமான குழியை நிதானமாகத் தோண்டிவருகிறது. தனியார் மயமாக்கம் என்றால் அந்நியமயமாக்கம் என்றே அர்த்தம். இந்துவிரோதம்-கிறிஸ்தவமயமாக்கம் என்பதே யதார்த்தம். இதற்கான தெளிவான அழுத்தமான எடுத்துக்காட்டு ஊடகத்துறையில் நடந்திருக்கும் தனியார்மயமாக்கமே. தூர்தர்ஷன் இந்து-இந்திய நலன் சார்ந்தும் மத்திய அரசு சார்ந்தும் செய்யவேண்டிய கடமையில் ஆயிரத்தில் ஒரு பங்குகூடச் செய்வதில்லை.
தனியார் மயமாக்கத்தை ஊக்குவித்த காங்கிரஸ் ஆட்சிகாலத்திலிருந்தே தூர்தர்ஷன் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. அவர்களுடைய பிரிவினைவாத, தர்ம விரோதச் செயல்பாடுகளுக்கு தனியாரை வளர்ப்பதுதான் நல்லது. எனவே அதை அவர்கள் செய்தார்கள். தர்ம, தேச நலனின் அக்கறை கொண்ட பாஜகவும் அதே தனியார்மயமாக்கத்துக்குத் துணை நிற்பதும் தூர்தர்ஷன் போன்றவற்றை மீட்க முயற்சி செய்யாமல் இருப்பதும் மிகப் பெரிய தவறு.
விண்வெளி, ரயில்வேயையெல்லாம் தனியாருக்குத் தாரைவார்ப்பதைவிட ஊடகத்துறையை விட்டுக் கொடுத்தது மிக மிகப் பெரிய தவறு. அது மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுடைய சிந்தனையை வடிவமைக்கிறது. நம் வரலாறை அதுவே கட்டமைக்கிறது.
இப்படியான முக்கியமான துறையை பாஜக கோட்டைவிட்டபடி இருப்பது முழுக்கவும் தவறு. இந்து இளைஞர்களுக்கான வாழ்வாதார நோக்கில் கூட தூர்தர்ஷன் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்யமுடியும். செய்யவேண்டும். பரமத உபகார்அர்த்தம் இதம் தனியார்மயம்?
ஊடகங்களில் நடக்கும் திரிபுவாதம், மிகை அவதூறுகள் பற்றி பிரதமர் எப்போதும் சொல்வது, ’என்னை அவர்கள் ஆதி முதலே அவதூறு செய்துதான் வருகிறார்கள். நான் அனைத்தையும் தாங்கிக் கொள்ளவில்லையா. விவசாயிகள் போராட்டமாகட்டும், மணிப்பூர் கலவரமாகட்டும் எல்லாமே என்னையும் என் அரசையும் குறிவைத்துச் செய்யப்படும் விஷமப் போராட்டங்களே. பிரசாரங்களே… நான் எப்படி அவற்றைச் சமாளிக்கிறேனோஅதுவே சரி. மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டு எனக்கும் என் ஆட்சிக்கும்தானே ஆதரவாக இருக்கிறார்கள். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் பற்றற்று கடமையைத் தொடர்ந்து செய்துவருவதே நல்லது’ என்கிறார்.
மாண்பு மிகு பிரதமர் அவர்களே, ஒருவகையில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நடப்பது உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எதிரான போர் அல்ல. இந்துவுக்கும் இந்தியாவுக்கும் எதிராகப் பிரிவினைவாதிகள் நடத்தும் போர். எப்படிப் புரிந்துகொள்வீர்கள் என்பது தெரியவில்லை. நீங்களும் உங்கள் கட்சியும் வெற்றி பெற்றுவருகின்றன. இந்துவும் இந்தியாவும் தோற்றுவருகின்றன.
இந்த இரண்டு தரப்புக்கும் உங்கள் ஆட்சியில் கிடைத்த அளவுக்கு நன்மைகள் வேறு ஆட்சியில் கிடைத்ததுமில்லை. கிடைக்கப் போவதுமில்லை. இருந்தும் நன்மைகளைவிட தீமைகளும் திரிபுகளும் உள்ளடி வேலைகளும் மிக மிக அதிகம்.
ஒரு நன்மை கிடைத்தால் இரண்டு தீமையைப் பொறுத்தாகவேண்டும் என்று யாரும் யாரைப் பார்த்தும் சொல்லமுடியாதல்லவா. உங்கள் மூலமான நன்மைகளுக்கு மிகுந்த நன்றி. தீமைகளைத் துடைத்தும் எறியுங்கள். காவி உடையில் கறையும் ஒருபக்கம் இருக்கட்டும் என்று சொல்ல முடியுமா என்ன?
ஊடகங்களும் அரசு அதிகார வர்க்கங்களும் இந்து-இந்திய விரோதமாகச் செய்யும் இவற்றை மத்திய அரசால் எதனால் தடுக்க முடியாமல் போகிறது?
அதற்கு மூன்று காரணங்கள் இருக்கமுடியும்.
ஒன்று : கருத்து சுதந்தரம்.
இரண்டு: தேசமும் தர்மமும் தன்னைத்தானே காத்துக்கொண்டுவிடும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று: இவர்களே ஏதேனும் பொறியில் சிக்கவைக்கப்பட்டிருப்பார்கள். பிணைக்கைதியால் சாகசங்கள் செய்ய முடியுமா என்ன?
கருத்து சுதந்தரமென்றால் அது சம வாய்ப்பு தருவதாக இருக்கவேண்டும். இந்து ஆதரவு சக்திகளுக்கும் ஊடக பலமும் கருத்து சுதந்தர உரிமையும் இருக்கவேண்டும். இங்கு அப்படி இல்லை. எதிரி 80% பலத்துடன் இருக்கிறான். நாம் 20%த்துடன் மிக பலவீனமாக இருக்கிறோம்.
மணிப்பூர் விவகாரத்தில் உண்மைகளைப் பேசிய ஊடகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தூர்தர்ஷனில்கூட உண்மைகள் சொல்லப்படவில்லை. சொன்ன சொற்ப உண்மைகளும் யாருக்கும் சென்று சேரவும் இல்லை.
தேசத்தின் மற்றும் தர்மத்தின் பலம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
மூன்றாவது உண்மையாக இருக்கும்பட்சத்தில், எதிரிகள் தன் படையை பலப்படுத்துவதற்கு முன்பாக நம் தரப்பில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது உறுதியாகும். நம் தரப்பை நமக்குத் தெரியாமலே பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்.
நம் கோட்டைக் கதவுகளைக் காக்கும் தளபதிகளை மேலைத் துப்பாக்கிகள் குறிவைத்திருக்கின்றன. அந்த தளபதிகளுக்கு மட்டுமே அது தெரியும். அவர்கள் அரை அங்குலம் நகர்ந்தாலும் சுடப்பட்டுவிடுவார்கள். எனவே அவர்கள் மந்தகாசப் புன்னகையுடன் கொத்தளங்கள் மேல் உலாவருகிறார்கள், கோட்டைக் கதவைத் திறந்துவிட்டு.
அப்படியாக இரண்டு விஷயங்கள் நமக்கு எதிராக இருக்கும்நிலையில் தர்மம் தானாகவே தர்மத்தைக் காத்துக்கொண்டால்தான் உண்டு என்றுதான் பாதுகாப்பாகச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான் அனைவருக்கும் நல்லது போலிருக்கிறது.
கருத்துச் சுதந்தர விஷயத்தில் எதிரிகளை அவதூறு செய்யும் உரிமை நமக்குத் தேவையில்லை. உண்மைகளை எந்தவித இழப்பும் இன்றிச் சொல்லும் வசதி வாய்ப்புகள் மிகவும் அவசியம். மூன்றாவது விஷயம் உண்மையாக இருக்கும் நிலையில் முதல் இரண்டும் சாத்தியமே இல்லை. எனவே மாட்டிக்கொண்டிருப்பவர்கள் தமக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து முடிவெடுத்து கருத்து சுதந்தரத்தையும் தர்மத்தையும் காக்கத் தம்மை பலிதானம் தந்தாகவேண்டும். ஒருவர் போனால் அவருடைய இடத்துக்கு இன்னொரு பிணைக்கைதியைக் கொண்டுவந்து நிறுத்தும் சாமர்த்தியமும் எதிரிக்கு உண்டு. அப்படியான நிலையில் நாம் தோல்வியைத் தவிர்க்க ஏகப்பட்ட தியாகங்கள் நமக்குத் தேவைப்படும்.எதிர் அணிக்கும் அதே மருந்தைக் கொடுத்து துணிந்து களமாடவேண்டும்.
துரோகியாக ஆக்கப்படுவதைவிட எதிர்த்து நின்று களப்பலியாவது மேல்.
வெற்றி தாமதமாகலாம். தோல்வியை ஏற்றுக்கொண்டு முடங்கிவிடவேண்டாம்.
தர்மம் நிச்சயம் தன்னைக் காப்பாற்றுபவர்களைக் காப்பாற்றும்.
தேவை துணிச்சலும் தியாகமும் மட்டுமே.
Good article..but I doubt the government won’t look into it.
For votes it will do odd things
.
அருமை. உண்மையில் தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு ஊடகத்துறையும் மிகப் பெரியத் தடை. கருத்தாக்கத்திலும் அதைக் கொண்டு சேர்ப்பதிலும் ஹிந்து இயக்கங்கள் கற்காலத்தில் பயணிக்கின்றன. செயல்படுபவர்களுக்கு சரியான உதவியும் அளிக்கப்படுவதில்லை.