பிரபல உபன்யாசகர் துஷ்யந்த் ஶ்ரீதர் மீது பிரபல ஆலயப் பாதுகாப்பு போராளி ரங்கராஜன் நரசிம்மன் விடுத்துக் கொண்டிருக்கும் சமீபத்திய எதிர்ப்பு வீடியோ ஏவுகணைகள் குறித்து எனது கருத்து என்ன என்று கேட்டார் நண்பர் ஒருவர். “அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி கோமாளித்தனத்தைக் குறிவைத்து குருட்டு சம்பிரதாயவாத கோமாளித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்”, என்று கூறினேன்.
ஆம். சம்பந்தப் பட்டவர்கள் தம்மளவில் சாஸ்திர ஞானம், மொழிப்புலமை, இந்துப் பண்பாட்டு பிரக்ஞை, சம்பிரதாய பற்று, செயல் முனைப்பு ஆகிய நற்பண்புகளைக் கொண்டுள்ள நபர்களாக இருந்தும், “வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை” என்ற அளவில் தான் அந்த வீடியோக்களின் பெரும்பான்மை கருத்துக்கள் முதிர்ச்சியற்றவையாக, மொண்ணைத்தனமாக உள்ளன. உண்மையில் சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் நட்புணர்வுடன், ஒரு நல்ல நடுவரின் மட்டுறுத்தலில் ஒரு அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்திருக்கலாம். அந்த விவாதம் சில நல்ல திறப்புகளை அளித்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்பது தான் நமது துரதிர்ஷ்டம்.
“5091 BCE டிசம்பர் 23 – ராமர் சித்ரகூடம் வருகை. 5077 BCE அக்டோபர் 20 – ஹனுமார் அசோகவனத்தில் சீதையை சந்தித்தல்..” – இப்படி ஒரு பட்டியல் துஷ்யந்த் ஶ்ரீதர் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ராமாயணம் (பகுதி 1) ஆங்கில நூலில் உள்ளது. சமகால வரலாற்றை செய்தித் தாள்களில் இருந்து மேற்கோள் காட்டுவது போன்ற முழு நிச்சயத்துடன் உள்ள இந்தத் தேதிகள் ஜோதிட, சம்ஸ்கிருத அறிஞர் ஜெயஶ்ரீ சாரநாதனின் “ஆய்வுகளில்” இருந்து பெறப்பட்டவை என்று நூல் குறிப்பிடுகிறது. ஜெயஶ்ரீ அவர்கள் எழுதும் இதிகாச-புராண “வரலாற்று ஆராய்ச்சி” பதிவுகளில் கொஞ்சம் வரலாற்றுக் கண்ணோட்டம், நிறைய அதி-ஊகங்கள் (wild speculations), ஓட்டைப் பானை கோட்பாடுகள் (crackpot theories) எல்லாம் கலந்திருக்கும். எனவே தீவிரமான வரலாற்றாசிரியர்களால் அவை பொருட்படுத்தப் படுவதில்லை.
துஷ்யந்த் ஶ்ரீதர் BITS பல்கலையில் தொழில்நுட்பக் கல்வி கற்றவர். பாராட்டுக்குரிய வகையில் முழுதும் ஆங்கிலத்திலேயே உபன்யாசம் செய்யும் திறன் பெற்றவர். ஆனால் பல சமயங்களில் தமிழ் சரியாகத் தெரியாத வர்க்கத்தினர், தலைமுறையினரை மனதில் வைத்து தமிழ் உபன்யாசங்களின் நடுவிலும் நிறைய ஆங்கிலத்தைக் கலந்து பேசிவிடுகிறார் (பள்ளியில் கற்காத தமிழை உபன்யாசம் மூலமாவது சற்று பரிச்சயப் படுத்திக் கொள்ளலாம் என்ற சாத்தியமும் இதனால் அடிபட்டுப் போகிறது. இது வருத்தமளிக்கும் விஷயம்). ஆனால், ஆங்கிலப் பயன்பாட்டைத் தாண்டி, பொதுவாக அவரது உபன்யாசங்களைக் கேட்டவரையில், அதில் தென்படுவதெல்லாம் நவீன மோஸ்தரில் வெளிப்படும் சம்பிரதாயக் கண்ணோட்டமே அன்றி ஆழமான, சுதந்திரமான அறிவியல் நோக்கோ, ஆராய்ச்சிப் பார்வையோ அல்ல. எனவே அதிகம் யோசிக்காமல் ஜெயஶ்ரீ அவர்களின் கருத்தை அவர் அப்படியே தனது நூலில் தந்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பக்த ஜனங்களிடையில், வெகுஜன அளவில் இந்த ராமாயண டைரிக் குறிப்பு ஏதோ ஒரு புதிய விஷயம் போல ஆச்சரியத்துடன் பார்க்கப் படுகிறது. ஆனால் ராமாயண கால ஆராய்ச்சி குறித்த பரிச்சயமும் வாசிப்பும் உள்ளவர்களுக்கு இதெல்லாம் ஏற்கனவே நன்கு தெரிந்த விஷயங்கள் தான். குறிப்பாக மேற்கூறிய காலக்கணக்கு ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் அங்கங்கு கூறப்பட்டுள்ள வானியல் தரவுகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் கணக்கிட்டுக் கூறப்படும் Astronomical Dating என்ற அணுகுமுறையில் அமைந்தது (நிலேஷ் ஓக் என்பவர் இதில் பிரபலம், அவரது பல வீடியோக்களை நீங்கள் யூட்யூபில் காணலாம்). ஆனால் கறாரான வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஏற்பதில்லை. அகழ்வாராய்ச்சி, வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்படும் தேர்கள், போர்கள், வெண்கல, இரும்பு ஆயுதங்கள், நகரப் பண்பாடு இத்யாதி பௌதிக கலாசாரம் (material culture ) சார்ந்த விஷயங்கள் என எல்லாவற்றையும் சேர்த்துத் தான் காலக்கணிப்பு செய்யமுடியும் என்று கூறுகிறார்கள். இதன்படி ராமாயண காலம் என்பது 2500 BCEக்கு முந்தையதாக இருக்க முடியாது என்கிறார்கள். எப்படியானாலும், இவையெல்லாமே ஒவ்வொரு வகையான ஆராய்ச்சிக் கருத்துக்கள் தான். எதுவுமே முடிந்த முடிபு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நிற்க. ஆனால், ஒரு உபன்யாசகரும், ஒரு ஶ்ரீவைஷ்ணவப் பெண்மணியும் இப்படி ஒருவிதமான ஆராய்ச்சிக் கருத்தைக் கூறிவிட்டார்கள் என்பதே ஆகப்பெரிய அபச்சாரம், சம்பிரதாய விரோதம் என்று தாம்தூம் என்று குதிக்கிறார் ராமபாணம் ர.நரசிம்மன். அவர் போனில் உரையாடும் ஶ்ரீவைஷ்ணவ சிம்மங்களும் அதையே வழிமொழிகிறார்கள். ஶ்ரீராமர் பல லட்சம் ஆண்டுகள் முன்பு திரேதாயுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்பற்கு மாறாக எதுவுமே கூறப்படக் கூடாது என்கின்றனர். ஒரு திருவல்லிக்கேணி பெரியவர், “இப்படித் தான் அந்தக் காலத்தில மு.ராகவையங்கார் ஆழ்வார்கள் காலம் பற்றி, பாசுரங்களில் உள்ள மன்னர்கள் மற்றும் பிற குறிப்புகளை வைத்து ஆராய்ச்சி செய்து 7ம் நூற்றாண்டு, 8ம் நூற்றாண்டு என்றெல்லாம் கூறினார். அவரே நன்னா சம்பிரதாயம் தெரிந்தவர் தான்… அது அவரது ஆராய்ச்சி.. ஆனா சம்பிரதாயத்தில் வேறு மாதிரி இருக்கே. நம்ம அதைத் தான் ஏற்றுக் கொள்ளணும். அப்போவே அவரது கருத்தை எதிர்த்து காஞ்சி அண்ணன் சுவாமி எழுதினார்” என்று பொரிந்து தள்ளுகிறார். ஆக, ராமர் வரலாற்றை விடுங்கள். இவரைப் பொறுத்த வரையில், திருக்குருகூர் மாறன் சடகோபன் என்கிற ஶ்ரீ நம்மாழ்வார் விஷயத்திலும் கூட, நாம் நன்கு அறிந்த வரலாற்றிற்கு முற்றிலும் முரணாக அவர் துவாபர யுகத்தில் வாழ்ந்தார் என்ற ஐதிகக் கருத்தைத் தான் “சம்பிரதாயமாக” உள்ளவர்கள் ஏற்கவேண்டுமாம், கூறவேண்டுமாம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள் ஸ்வாமி.
அந்த வீடியோக்களில் வைணவ சுடராழி D. A. ஜோசப் அவர்களின் உரை ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு. அவரது கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படவில்லை என்றாலும், அவற்றை அவர் முன்வைத்த விதம் சிறப்பாக இருந்தது. “ராமர் திரேதாயுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல, அப்படி ராமாயணத்தில் பகுத்தறிவுக்கு முரணாக ஏராளமான விஷயங்கள் உள்ளன – ஹனுமார் கடலைத் தாண்டியது, ராவணனுக்கு பத்து தலை, சீதையின் அக்னி பிரவேசம் இத்யாதி. காலக்கணக்கை மட்டும் இப்படி மாற்றினால் போதுமா? மற்றதை எல்லாம் என்ன செய்வீர்கள்? அவற்றையும் மாற்றுவீர்களா? இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவையில்லாதது. நம்பிக்கையே தேவை. சாஸ்திரத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கையை வளர்ப்போம். நம்பிக்கையினால் அற்புதங்கள் விளையும்.. “ என்கிறார்.
அவர் சொல்வதில் நியாயம் இருப்பது போலத் தோன்றுகிறது, ஆனால் அந்த நியாயம் கடந்தகாலத்தில், அதிலும் கூட முற்றிலும் மதநம்பிக்கை சார்ந்த அல்லது கள்ளங்கபடமற்ற கிராமிய வாழ்க்கைப் பண்பாட்டு மனநிலை சார்ந்த நேர்கோட்டு வாழ்க்கையில் மட்டுமே செல்லுபடியாகக் கூடியது. இப்போது நாம் வாழும் காலம் அறிவு யுகம், அறிவியல் யுகம், தகவல் தொழில்நுட்ப யுகம், செயற்கை நுண்ணறிவின் யுகம். இன்றைய நவீன வாழ்க்கை என்பது அதற்கே உரிய பல்வேறு சிடுக்குகளையும் சிக்கல்களையும் கொண்டது. இத்தகைய சூழலில் இளைய தலைமுறையினரின் கேள்விகள் எல்லாவற்றையும் வெறுமனே “நம்பிக்கை” என்ற ஒற்றைச் சொல்லை வைத்து அடைத்து விட முடியாது. மேலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் போல, அறிவும் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரணானது என்று இந்து தர்மம் எப்போதுமே கருதியதில்லை. இந்து தர்மத்தில் சாதாரண நம்பிக்கை சார்ந்த (Faith based) பக்தி மட்டும் இல்லை, உபநிஷதங்களும், அறிவுத்தேடலை மையப்படுத்திய ஆறு தத்துவ தரிசனங்களும் கூட உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.
ஒரு உதாரணம்: வேதங்கள் புராணங்களும் சம்பிரதாயவாதிக கூறுவது போல மனிதரால் படைக்கப்படாமல் தெய்வீகமாகத் தோன்றியவை (அபௌருஷேயம்) அல்ல, மாறாக, 3000-2500 BCE காலகட்டத்தில் ஆழ்ந்த ஞானமும் யோகசக்தியும் கொண்ட பழங்கால மகரிஷிகளால் பழங்காலத்தில் பாடப்பட்டவை, அவற்றில் உள்ள தரிசனங்கள் இன்றும் மனிதகுலம் முழுமைக்கும் வழிகாட்டக் கூடியவை என்று நவீனக் கல்வி கற்ற, இந்துப் பண்பாட்டு உணர்வும் பற்றும் கொண்ட ஒரு இந்து இளைஞர் கருதுகிறார், அதை வெளிப்படையாக பதிவு செய்கிறார். இதை அவர் சும்மா சொல்லவில்லை, வேதங்களைப் பற்றிய சரியான புரிதல் கொண்ட நூல்களையும், சரியான வேத மந்திர மொழியாக்கங்களையும் வாசித்து விட்டு சிந்தனைத் தெளிவினால் இக்கருத்தை வந்தடைந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சம்பிரதாயவாதிகள் ஏன் அவர்மீது பாய்ந்து பிடுங்க வேண்டும்? சொல்லப் போனால், இந்து மரபிலேயே மீமாம்சகர்களைத் தவிர்த்த மற்ற தத்துவ தரிசனங்களும் இதுபோன்ற ஒரு கருத்தைத் தான் கூறியிருக்கின்றன. அதுபற்றிய அறிதல் கூட கூச்சலிடும் சம்பிரதாயவாதிகளுக்கு இல்லை என்பது தான் நமது துரதிர்ஷ்டம்.
நமக்குத் தேவை முதிர்ச்சியான, ஆழமான, பன்முகப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள். ராமரின் வரலாறோ, காலமோ எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும், ராமாயணம் என்ற மகத்தான நூலில் இருந்து அது தரும் அறநெறிகள், தரிசனங்கள், நற்பண்புகள், தெய்வீகம் ஆகியவற்றை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக எடுத்துக் கொள்வோம் என்பது ஒரு கண்ணோட்டம். இந்து தர்மத்தின் மீது ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டு, ராமாயணத்தில் உள்ள பௌராணிகமான, கவிதைக் கற்பனை, அற்புதங்கள் சார்ந்த அம்சங்களை ஒரு தளத்திலும், அதற்குள் உள்ள மையமான வரலாற்றுக் கதையாடலை (historical core) மற்றொரு தளத்திலும் வைத்து அறிவுபூர்வமாக அணுகி ஆராய்ந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்பது மற்றொரு கண்ணோட்டம். இரண்டுக்கும் அததற்கு உரிய மதிப்பு உண்டு. இரண்டையும் ஒன்றுக்கொன்று முரணாகப் பார்க்காமல் சமன்வயப் படுத்த வேண்டிய தேவையும் முதிர்ச்சியும் இன்றைய இந்துமதத்தில் இருக்க வேண்டும். இருக்கிறது என்பதே உண்மை.
அத்தகைய கண்ணோட்டத்தை முன்வைக்கக் கூடிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஆசாரியர்கள் உள்ளனர். பிரபல உபன்யாசகர்களுக்கும், பிரபல சம்பிரதாயவாதிகளுக்கும் இது இன்னும் சரியாகப் புரியவில்லை என்றால் அது அவர்களின் போதாமையையே காட்டுகிறது. அவர்கள் சற்று முயற்சி செய்யவேண்டும், திறந்த மனதுடன் இத்தகைய விஷயங்களை அணுகவேண்டும் என்பதே நமது அவா.
ஶ்ரீராமஜயம்.
“சென்ற பதிவில் சம்பிரதாயவாதிகளை தக்கபடி கடுமையாக விமர்சித்தது மிகச்சரி, ஆனால், நீங்களே கூறியுள்ள படி இந்து தர்ம கருத்துக்கள் நவீனக் கல்வி கற்ற இளைய தலைமுறையினருக்கும் சென்று சேரும் வகையில் எடுத்துரைக்கும் துஷ்யந்த் ஶ்ரீதர், ஜெயஶ்ரீ சாரநாதன் போன்றோரையும் சேர்த்து குட்டுவது சரியா? அவர்களுக்கு நீங்கள் ஆதரவு அல்லவா தெரிவிக்க வேண்டும்?” என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் ஒரு நண்பர். அந்தப் பதிவு ஏற்கனவே நீளமாகி விட்டதால் சில விஷயங்களை சுருக்கமாக எழுத வேண்டியதாகி விட்டது. இதற்கு பதில் கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
துஷ்யந்த், ஜெயஶ்ரீ ஆகியோர் தங்களது கருத்துக்களைக் கூறுவதற்கான முழு சுதந்திரம் உள்ளது. அந்த சுதந்திரத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதனால்தான் அவர்களை சென்சார் செய்யத் துடிக்கும் சம்பிரதாயவாதிகளை எதிர்க்கிறேன். மற்றபடி ‘அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி’ என்று குறிப்பிட்டது அந்தக் கருத்துக்களின் மீதான எனது விமர்சனம். விமர்சனம் உள்ளது என்பதால், ஆதரவு இல்லை என்று ஆகிவிடாது.
சம்பிரதாயமான உபன்யாசகரான துஷ்யந்த் தனது வழமையான பாணியில் கதைகள், உபதேசங்களை மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், அதைத் தாண்டி ராமாயண கால ஆராய்ச்சி மற்றும் வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசுகிறார். ஒருவகையில் இந்த விஷயங்களை பேச முற்படுவது என்பதே அவரது துறையில் ஒரு ‘ரிஸ்க்’ தான். இது தெரிந்தும் கூட, இத்தகைய கருத்துக்களைப் பேசுவது அவரது சிரத்தையையும், உண்மையான சமூக அக்கறையையும் காட்டுகிறது. இது நிச்சயம் பாராட்டுக்குரியது.
ர.நரசிம்மனின் தாக்குதல் வீடியோக்களில் கவனித்த இன்னொரு விஷயம். மறைந்த தொல்லியலாளர் இரா.நாகசாமி ஶ்ரீராமானுஜர் வரலாறு குறித்த திரிபுகளை தனது நூலில் எழுதியபோது, ஜெயஶ்ரீ சாரநாதன் அதற்கான காத்திரமான எதிர்வினையை வரலாற்று ஆராய்ச்சி ஆதாரங்களுடன் எழுதினார் என்பதை ஒரு நல்ல பங்களிப்பாக அந்த வீடியோக்களில் பேசிய 2-3 சம்பிரதாயவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அடுத்த மூச்சிலேயே, அவரது ராமாயண கால ஆராய்ச்சி பற்றி கடுமையான கண்டனங்களையும் கூறுகின்றனர். அதாவது, அந்த திரிபுகளுக்கு மறுப்பு தெரிவிக்க சம்பிரதாயவாதிகளால் இயலவில்லை, அப்போது வரலாற்று அறிஞரின் உதவி தேவைப் படுகிறது. ஆனால் அதே அறிஞர் தனது வேறு ஒரு ஆராய்ச்சிக் கருத்தை முன்வைக்கும்போது, அது “சம்பிரதாய விரோதம்” என்று முத்திரை குத்தப்பட்டு அவருக்கு வசவுகள் விழுகின்றன. பரிதாபம்.
மற்றபடி, கோயில் பிரசினைகள், வழக்குககள் என்றே கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் ர.நரசிம்மன் இதைப் பிடித்துக் கொண்டு சரமாரியாக தொடர் தாக்குதல் வீடியோக்களை வெளியிட்டு வருவதன் காரணம், உள்நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மேலும் இந்த வீடியோக்களில் பேசியுள்ள சம்பிரதாய வைணவ வித்வான்கள், பிரபல உபன்யாசகர்கள், ஆசாரியர்கள் தங்களது பேச்சு ஒரு திட்டமிட்ட தொடர் தாக்குதலின் ஒரு பகுதி என்ற விஷயத்தை அறிவார்களா, அது அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டதா என்பதும் தெரியவில்லை.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
நானே பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பவன் தான். ஆனால் துஷ்யந்த் ஶ்ரீதர் பேச்சுக்களில் எமக்கு உடன்பாடில்லை. ரங்கராஜன் நரசிம்மன் போன்ற பெரியோர்கள் கூறுவது சரியே. ஆனால் கூறும் விதம் ஏற்புடையது இல்லாமல் இருக்கலாம்.
அடியேன் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளைக் கேட்பவன். அவர் நூல்களைப் படிப்பவன். பெரும்பாலும் நான் அவரையே ஏற்கிறேன், விரும்புகிறேன்.
ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. அவர் காணொளிகள் பலவற்றையும் நான் பார்த்துக் கொண்டே வருகிறேன்.
மேலும், நான் சுத்தாத்துவித வைதீக சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவன். இப்போது ஆரம்ப நிலை தான்…
எனக்கொரு சந்தேகம்….. எந்தச் சம்பிரதாய வாதி, நம்மாழ்வார் துவாபர யுகம் எனச் சொன்னது ??
மேலும், ஶ்ரீமான் ஜடாயு அவர்களே ! அடியேன் தங்களிடம் சில ஐயங்களை விளக்கிக் கொள்ள விழைகிறேன். உதவுவீரா ? எம்போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் தான் உதவ வேண்டும்.
ஜடாயு அவர்களே…. அடியேன் தங்களிடம் சிலவற்றை உரையாட விழைகிறேன்.
சம்பிரதாயமான உபன்யாசகரான துஷ்யந்த் தனது வழமையான பாணியில் கதைகள், உபதேசங்களை மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ……,…….. இது நிச்சயம் பாராட்டுக்குரியது.
இதில் என்னதான் சொல்ல வருகிறீர்?
மேலும்……
பகவான் விஷ்ணு, மச்சம் கூர்ம, வராஹ நரசிம்ம அவதாரங்களை முருகப் பெருமான் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே எடுத்து விட்டார். இதற்கு ஆதாரம் ஸ்காந்த மஹா புராணத்து தக்ஷ காண்டம் மற்றும் உபதேச காண்டம் ஆகியன. கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணத்துத் தட்ச காண்டத்து, ததீசி உத்தரப் படலத்திலும் கூர்ம வராஹ அவதாரங்கள் வரலாறு உள்ளன. கோனேரியப்பர் மற்றும் ஞான வரோதயர் ஆகியோர் தமிழில் தழுவி எழுதிய உபதேச காண்டங்களிலும் மஹா விஷ்ணு தசாவதாரங்கள் நிச்சயம் ஓர் அத்தியாரத்தில் இருக்கும். இப்போது இரு பெரியோர்கள் அருளிய இரு உபதேச காண்டங்களும் கிடைத்தற்கரியது; இணைய தளத்தில் கூட ஆவணமாகக் கிடைப்பதில்லை.
இப்போது கூறுங்கள்…. இராமாயணம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன் என்றால் முருகப்பெருமான் அவதாரம் எப்போது நடந்தது எனும் வினா வரும் ! ஒன்று அதைப் பொய் என்று விடுவார்கள்; இல்லை எனில் இவ்வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஏதேனும் ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். பிறகு மஹாபாரதமும் மாற்றப் படும். சரிதானே ?
வரலாற்றைக் காட்டிலும் புராண இதிகாசங்கள் மனித சக்திக்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது. அவை எல்லாம் வெளிநாட்டவரின் வரலாற்று ஆய்வு முறையான கி.மு. – கி.பி. ஆகியவற்றுக்குள் அடக்க இயலாது. திருத்தொண்டர் புராணம் மற்றும் இதற்குச் சிறிது விதிவிலக்கு. சான்றாக, சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் காலம் எளிமையாகக் கணிக்கப் படக்கூடியவை; கி.பி.7 – 8ம் நூற்றாண்டு என அவை முடிவெடுக்கப் பட்டன. ஆனால், கண்ணப்பர், சண்டேசுரர், கோச்செங்கணான் ஆகியோர் காலத்தைக் கணிப்பது இயலாத காரியம்; ஏனெனில் அவர்கள் கலியுகத்தின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்கள்.
நம் இந்திய வரலாற்றுக் காலக் கணக்கீடு என்பது, கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் எனக் கணிக்கப்படுகிறது. அதுவே சரி. இராம பிரான் திரேதா யுகம். கிருஷ்ணர் துவாபர யுகம். அவ்வளவே. இதெல்லாம் ஏழாயிரம் ஆண்டில் அடங்கா. இதெல்லாம் வெளிநாட்டு வரலாற்றுக் கோட்பாடுகளுக்கு அடங்காது.
வெளிநாட்டு வரலாற்று ஆய்வு முறை வேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் அதைக்கொண்டு முறையாக ஆராய வேண்டும். எதை ஆராய முடியுமோ அதை மட்டுமே ஆராய வேண்டும். துணி முதலானவற்றை, மீட்டரால் தான் அளவிட வேண்டும்; நீர் முதலானவற்றை, லிட்டரால் தான் அளவிட வேண்டும்; காய் முதலான வற்றை, கிலோவால் தான் அளவிட வேண்டும். இதை மாற்றிச் செய்தால் அது கண்டிக்கப் பட வேண்டும். இதை நான் ஒரு சிறுவனாகவும் மாணவனாகவும் கூறும் அபிப்பிராயம்.