சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் ஒரு புறநானூற்றுப் பாடலை ஒரு குழுமத்தில் நண்பர் ஒருவர் இட்டு அது குறித்த கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து நடந்த உரையாடலில் நான் எழுதியது இது.

பாடலின் பொருள் இது தான். பாடல் பதிவின் இறுதியில்.

“குரவு, தளவு, குருந்து, முல்லை என்ற நான்கைத் தவிர வேறு மலர்கள் இல்லை. வரகு, தினை, கொள், அவரை நான்கைத் தவிர வேறு உணவு இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கைத் தவிர வேறு (சிறந்த) குடிகள் இல்லை. பகைவர் முன் எதிர்த்து நின்று பெரிய தந்தங்கள் கொண்ட யானைகளை வீழ்த்தி இறந்துபோன வீரனின் நடுகல்லைத் தவிர, நெல்லை இறைத்துத் தொழுவதற்கு வேறு தெய்வம் இல்லை”.

“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”.

‘இதுவன்றி வேறு தெய்வம் இல்லை’ – போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். நடுகல் வழிப்பாட்டை விடவும் பலமடங்கு மிக அதிகமாக இந்து தெய்வங்களைப் பற்றி வருவதையும் பார்க்கவேண்டும்.

பழைய பாடல்களில் ‘உயர்ந்ததென்றால் இதுதான்’ என்று வரிசைப்படுத்துவதற்கு உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போவார்கள். கடைசி வரியில் உயர்த்திப் பாடவந்த பொருளை வைப்பார்கள். இது ஒரு கவிமரபு. இப்பாடலில் முதலில் கூறப்பட்ட மலர்கள், தானியங்கள், குடிகள் எல்லாம் அதற்காகத் தான்.

குடிகளைப் பற்றிக் கூறியதில் முக்கியமான வரலாற்றுக் குறிப்பு உள்ளது. இதில் கூறப்பட்ட குடிகளின் பெயர்கள் அனைத்தும் இசையுடனும் துடி, பறை, கடம்பு ஆகிய இசைக்கருவிகளுடனும் தொடர்புடையவை. இவை சங்ககாலத்தில் இசைக்கலைஞர்களாக வாழ்ந்த பாணர் குலங்களின் பெயர்கள். பாணர்கள் தொடக்கத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்ததற்கான தடயங்கள் இத்தகைய பாடல்கள். பிறகு சமண, பௌத்த மதங்களின் தாக்கத்தால், அவர்கள் சமூக அடுக்கில் மிகவும் கீழே சென்று ‘இழிசினர்’ என்று அடையாளப் படுத்தப் பட்டார்கள். பிறகு திருஞான சம்பந்தர் தமிழிசையை மீண்டும் உயிர்ப்பித்த போது தாங்கள் இழந்த சமூக அந்தஸ்தை ஓரளவு மீண்டும் பெற்றார்கள். சம்பந்தர் குறித்த எனது கட்டுரையில் விரிவாக இது பற்றி எழுதிருக்கிறேன் (கட்டுரை இங்கே – http://goo.gl/rtNhel)

இந்தக் கவிமரபைப் பல பிற்காலப் பாடல்களிலும் பார்க்கலாம். உதாரணமாக,

பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே.

(அப்பர் தேவாரம்).

புஷ்பேஷு ஜாதீ புருஷேஷு விஷ்ணு |
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சீ ||

(ஒரு சம்ஸ்கிருத தனிப்பாடல்)

பூ என்றால் மல்லிகை. புருஷன் என்றால் விஷ்ணு. பெண்மகள் என்றால் ரம்பை. நகரம் என்றால் காஞ்சி.

கல்கி சிவகாமி சபதம் நாவலில் இந்தப் பாட்டை வைத்தே பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமிடையில் போர் உருவானதாக எழுதிச் செல்கிறார். இந்தப் புறநானூற்றுப் பாடலும் இதே போன்ற ஒன்று. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் கூறப்படும் உதாரணங்களும் கூட போர்வெற்றிக் கொண்டாட்டத்துடன் தொடர்புடையவை. வெற்றிமாலையில் கோர்த்து அணையும் மலர்கள், வெற்றி விருந்தில் சமைத்து உண்ணும் தானியங்கள், வெற்றிப் பாடல்களை இசைக்கும் பாணர் குலங்கள் ஆகியவையே உதாரணமாகக் கூறப்பட்டன.

பாடல்: புறநானூறு – 335 (முதல் சில அடிகளில் சொற்கள் கிடைக்கவில்லை).

பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை, துறை: மூதில் முல்லை

அடல் அருந் துப்பின் …
……………….குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பதிவில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *