தங்கலான்

மின்னுவதெல்லாம் பொன் அல்ல; தலித் அரசியல் பேசுபவரெல்லாம் தலித் போராளி அல்ல.

தங்கலான் உண்மையிலேயே மிகவும் துணிச்சலான தமிழ்த் திரைப்படம். இதன் திரைக்கதை – திரைமொழி எளிய பார்வையாளாருக்கு மட்டுமல்ல; தேர்ந்த பார்வையாளருக்குமே புரிவது கடினம்.

அடுத்ததாக கதை நிகழும் கற்பனை உலகில் பேசப்படும் வசனங்கள், நடை, உடை, பாவனை இவையெல்லாம் தமிழ் பார்வையாளர்களை ரொம்பவே நெருக்கடிக்கு உள்ளாக்கும். இந்தக் கதாபாத்திரங்களின் புறத்தோற்றம், வசனங்கள் அடிப்படையில் எந்தவொரு தமிழ் பார்வையாளருக்கும் அவற்றுடன் தம்மைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளவே முடியாது.

கதை நிகழும் காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். இந்த கதாபாத்திர நடை, உடை, பாவனைகள் எதுவும் துளியும் ரசிக்கும்படியாகவும் இல்லை. 

ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கு அனுப்பும் நோக்கமும் உண்டு என்பதால் அந்த மேற்குலகம் பார்க்க விரும்பும்படியாக இந்தக் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அது தமிழ் பார்வையாளரிடமிருந்து படத்தை வெகுவாக அந்நியப்படுத்துகிறது.

இருந்தும் இந்தத் திரைப்படத்தை இப்படித் துணிச்சலாக எடுத்திருப்பதற்கான ஒரே காரணம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ’ஜாதி இந்து’கதாபாத்திரங்கள். சோழர் காலத்து பிராமண ராஜகுரு (?), பிரிட்டிஷ் துரையின் தெலுங்கு பிராமண துபாஷி, ராமானுஜ திருக்குலத்து வைஷ்ணவ கதாபாத்திரம் (பெருமளவுக்கு கேலிக்குரியதாகவே படைக்கப்பட்டிருக்கிறது).

அந்தக் கதாபாத்திரங்களின் வசனங்கள், அவை தொடர்பான காட்சிகள் எல்லாமும் படு செயற்கையானதாகவும், க்ளிஷேயாக அரசியல் பிரசார நெடி மிகுந்தவையாகவும் இருக்கின்றன. திரைப்படத்தில் தமிழ் பார்வையாளருக்குப் ’புரியும் படியாகப்’ பேசுவது இவர்கள் மட்டுமே. அதாவது தமிழக/இந்திய/சர்வதேசச் சூழலில் செல்லுபடியாகும் அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.

இயக்குநரின் துணிச்சலுக்கான காரணம் இந்தக் கதாபாத்திரங்களில் இருக்கிறது. அவற்றின் அரசியலில் இருக்கிறது.

மாட்டுக் கறி துன்னாதே என்று சொல்லியபடி அறிமுகமாகும் வைணவர் காமெடி-குணச்சித்திர கதாபாத்திரமாக இருக்க, அதையே சொன்ன புத்தர் (சிலைவடிவில்) படம் முழுக்க போராளியின் வழிகாட்டியாக காட்சிப் படுத்தப்படுகிறார்.

இந்த தலித் போராளிகளிடம் கேட்க வேண்டிய ஒரே ஒருகேள்வி: மாட்டுக் கறிதுன்னுவியா மாட்டியா… அப்படித் துன்னுவன்னா புத்தரை என்ன பண்ணுவ?

புத்தருடைய பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலம் என சொல்லப்படுபவற்றில் ஒரு மனிதர் முதல் முதலும் கடைசியுமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் புலால் மறுப்பு. படம் முழுக்க புத்தர் வருகிறார். எருமை மாட்டுக் கறி துன்னவும் செய்கிறார்கள். புத்தர் என்றால் புலால் மறுப்பு மட்டுமேயா என்று ஒரு கேள்வி உங்களுக்கு வரக்கூடும். பிற சீலங்கள் எதையும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை.

போராளிகளின் நிஜ வாழ்வில் இந்தப் போலித்தனமே மலிந்திருப்பதால் திரைப்படக் கதாபாத்திரங்களும் அப்படியே போலிகளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கதாபாத்திரங்களும் சர்ச் நோக்கிலான இந்திய வரலாறு பற்றிய சுவிசேஷ வசனங்களும்தான் பா.ரஞ்சித் வகையறாவின் அரசியலின் அடிப்படை.

பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்க்கும் ஆண்டைகளிடமிருந்து அதாவது இந்துக்களிடமிருந்து தப்பித்து பேண்ட், சட்டையெல்லாம் கொடுத்து கூலி கொடுத்து கெளரவமாக நடத்தும் பிரிட்டிஷார் பக்கம் அதாவது கிறிஸ்தவர் போக வேண்டும் என்ற சுவிசேஷ அரசியலே திரைப்படத்தின் அடிநாதமாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால், இது சுல்தான் பாய்களுக்குப் பிடிக்காது என்பதாலோ என்னவோ கதையில் வரும் பிரிட்டிஷ்காரர் தங்கலானையும் அவனுடைய சனங்களையும் ஏமாற்றிக் கொல்பவராகவும் வருகிறார். இதுவும் துணிச்சலான விஷயமே.

உடனே இந்து மஹா ஜனங்கள் படம் பார்க்கப் படையெடுத்து விட வேண்டாம். ஜீசஸ் ஜீசஸ் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் கிறிஸ்தவர் நல்லவராக இல்லையென்றாலும் வில்லனாகக் காட்டப்படவில்லை. கிறிஸ்துவை விசுவசிக்காத பிரிட்டிஷ்காரரே கெட்டவராகக் காட்டப்பட்டிருக்கிறார்.

வில்லன் ஒரு பிரிட்டிஷ்காரர்… தங்க வேட்டையில் ஈடுபடுபவர். நான் ஒரு பிரிட்டிஷ்காரர் மாதிரி இருக்கிறேனா பார் என்று பிரிட்டிஷாரின் மிக பலவீனமான பிரதியாக எஜமான விசுவாசத்துடன்தான் அவரையும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்துக்களில் நல்லவர்கள் இருக்கவே முடியாது; கிறிஸ்தவர்களில் (முஸ்லிம்களில்) கெட்டவர்கள் இருக்கவே முடியாது. கெட்டவராக இருந்தால் கிறிஸ்தவராக (முஸ்லிமாக) இருக்கமாட்டார் என்ற வசனம் நினைவுக்கு வருகிறதா… வரவேண்டும்.

படம் எடுத்து முடித்ததும் பாதிரிக்குப் போட்டுக் காட்டியபோது இந்தத் திருத்தம் வந்திருக்க வாய்ப்பு உண்டு.

கலைநேர்த்தி (வடிவம்), உள்ளடக்கம் என்ற இரண்டின் அடிப்படையில் பார்க்கும் போது ஒரு கலைப்படைப்பாக படம் சிறப்பாக வந்திருக்கிறது. உள்ளடக்கம் சார்ந்துமே ரஞ்சித்தின் அரசியல் நெடி அடிக்கும் காட்சிகள் நீங்கலாக படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த அரசியல் என்பது மலினமானதாக இருப்பதாலும் அது படுசெயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் இந்தப் படம் சுமார் என்ற தளத்துக்கு இறங்கிவிடுகிறது. மேல்பூச்சான கலை இனிப்பு கரைந்த பின் கசப்பு அரசியல்தானே. அதுவும் செயற்கையாகக் காட்டப்பட்டிருப்பது தானே நாவில் உரைக்கும்.

அழகிய பெரியவன் போன்றோரின் பங்கு படத்தின் கலைநயத்துக்கு (தொன்மம் சார்ந்த மேஜிக்கல் ரியலிசக் காட்சியமைப்பு உட்பட) உதவியிருக்கும் என்று நினைக்கிறேன். 

கதை, மொழி சார்ந்து கலைத் துணிச்சலுடன் செயல்பட்டிருக்கும் இயக்குநர் தன் அரசியல் சார்ந்த காட்சிகளில் அமெச்சூர்தனமாகவே வெளிப்பட முக்கிய காரணம்: அதைச் சொல்லிச் சொல்லி அவரை உசுப்பேற்றும் அறிவுஜீவிக் கூட்டமே.

பா.ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாடு பல காரணங்களினால் பிழையானது.

முதலாவதாக, அது வரலாற்றில் நிகழ்ந்தவற்றின் அடிப்படையில் உருவானதல்ல. ஒரு அரசியல் நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டுவிட்டு வரலாறை அதற்கு ஏற்பத் திரித்துப் பார்க்கும் ஐரோப்பிய வழிமுறை அது.

இரண்டாவதாக, தமிழக அளவில் பட்டியல் ஜாதிகளின் போர்க்குண அரசியலாக அது முன் வைக்கப்படுகிறது. உண்மையில், அது சாம்பவர்கள் அரசியல் மட்டுமே. சாம்பவர்கள் நில உடமை இருந்து அதன் பின் இழந்தவர்கள்.

பட்டியல் ஜாதியினரில் வண்ணார்கள், தோட்டிகள், தோல் தொழில் செய்பவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், வெட்டியார்கள் இவர்கள்தான் உண்மையான தலித்கள். நில உடமையே இல்லாத அவர்களின் அரசியலே உண்மையான பட்டியல் ஜாதி அரசியல்.

சாம்பவர் அரசியல் இவர்களுடைய அரசியல் அல்ல. பட்டியலின அடுக்கில் இருக்கும் மேட்டுக்குடியான சாம்பவர்களின் அரசியலை எளியவர்களின் அரசியலாக முன்வைக்கும் அயோக்கியத்தனம் கொண்டதாகவே ரஞ்சித்தின் அரசியல் இருக்கிறது. தாங்கள் அனுபவித்திராக் கொடுமைகளை தாங்கள் அனுபவித்ததாகச் சொல்லிக் கொண்டு அது சார்ந்த அரசியல் சாசனப் பிராயச்சித்த நடவடிக்கைகளின் பலன்களை முழுமையாக அபகரிக்கும் அரசியல் அது.

அடுத்ததாக, பிரிட்டிஷார் காலத்தில் பஞ்சமி நிலம் என்ற பெயரில் சாம்பவர்களுக்குக் கிடைத்தவற்றில் பெருமளவிலானதை திராவிடப் பண்ணையார்களின் நீதிக்கட்சியும், திராவிட இயக்கத்தினரும்தான் அபகரித்திருக்கிறார்கள். அதைப் பேசும் துணிச்சல் சாம்பவர்களில் ஒருவருக்கும் இல்லை. ரஞ்சித்துக்கும் இல்லை.

திமுக எப்போது பாஜக பக்கம் நகர்கிறதோ அப்போது வேண்டுமானால் தமிழக ஜே.என்.யுவான லயோலா வளாகத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டு தலித் போராளிகள் இதைக் கையில் எடுப்பார்கள். அதுவுமே கூட நிலங்களை மீட்கும் நோக்கில் அல்ல; திமுகவை சனாதன, இந்துத்துவ எதிர்ப்பு டிராக்கில் ஸ்டெடியாக நிற்க வைக்கும் நோக்கில் மட்டுமே அவை செய்யவும்படும்.

பஞ்சமி நில மீட்பு தொடர்பாகப் பேசும் துணிச்சல் இந்துத்துவர்களுக்கும் இல்லை என்பதால் அந்த விஷயம் பேசப்படாமலே போய்க் கொண்டிருக்கிறது. அதைப் பேசினால் 10% மத்திய அரசு வசம் இருக்கும் இடங்கள் மட்டுமே பறிக்கப்படும். மத்திய அரசு மட்டுமே ’தமிழர்’ நிலத்தை அபகரித்ததாக, தன்னெழுச்சியாக ஓர் சமூக நீதிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதால் பயந்து இந்துத்துவர்கள் இதைப் பேசுவதே இல்லை. 

ஆக, பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் கோவில் நிலங்களையும் பறிப்பது ஒன்றே ஒரே செய்ய வேண்டிய போராட்டம். வகஃப் சொத்தெல்லாம் இந்து மன்னர்களும், இஸ்லாமியர்களும் தானமாகத் தந்தது. எனவே அது அவர்கள் வசம் தான் இருக்க வேண்டும். இந்து கோவில்களின் நிலம் எல்லாம் பிடுங்கப்பட்ட நிலம். எனவே, அதையெல்லாம் பறிக்கவேண்டும். ஆனால், அறநிலையத்துறையின் போர்வையில் க்ரிப்டோக்கள் (அதிகாரபூர்வமாக மதம் மாறாமல் வெறித்தனமாக கிறிஸ்தவத்தை கடைப்பிடிக்கும் மோசடியாளர்கள்) அதை ஆக்கிரமிக்கும் வரையில் அதை தலித் போராளிகள் மீட்கப் போராட வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. 

இறுதியாக, அது ரஞ்சித்தின் அரசியல் சாம்பவர் அரசியல் என்ற போர்வையில் க்ரிப்டோ அரசியலையே முன்வைக்கிறது. கதை நிகழும் காலம், இடம் ஆகியவற்றின் தேர்வில் மிகத் தெளிவான கிறிஸ்தவ நலன் இருக்கும். கபாலியில் சிங்கப்பூர்; காலாவில் மும்பை. அதிலும் ஹார்ட்கோர் இந்துத்துவமே எதிர்க்கப்படுகிறது என்ற போர்வையில் ஒட்டு மொத்த இந்து மதமும் எதிர்க்கப்பட்டது. தங்கலானின் கற்பனை உலகிலும் வர்ணாஸ்ரமவாதிகளே எதிரிகள். பிராமணர்கள் தங்க நகை அதிகம் அணிகிறார்கள் என்பதிலிருந்து இந்த வரலாறு உண்மை என்பது உறுதியாகவும் செய்கிறது.

பிரிட்டிஷார்காலத்தில் பங்காவாலாக இருந்தது தொடங்கி (குடிகாரதுரைக்கு ஒரு நொடி காற்று வீசுவது நின்றால் எழுந்து வந்து வயிற்றில் மிதித்துக் கொல்லப்பட்டதெல்லாம் தலித்களே) காஃபி, தேயிலை எஸ்டேட்களுக்கு சங்கிலி மாட்டி இழுத்துச் செல்லப்பட்டது வரை அனைத்து அராஜகங்களுக்கும் ஆளானதில் தலித்கள் கணிசமாக உண்டு. அந்த உண்மைகளைப் பேசினால் படத்துக்கு ஃபைனான்ஸ் கிடைக்காது. ஃபைனான்ஸ் கிடைத்தாலும் அறிவார்ந்த பார்வையாளர்களின் ஆதரவுகிடைக்காது. ஊடக வெளிச்சம் கிடைக்காது. கைவசம் இருக்கும் கலையைக் காசாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்தானே.

ஆக, ரஞ்சித்தின் அரசியல் என்பது ஜாதி இந்துக்கள் மீது மிகையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது; திராவிட இயக்க அராஜகங்களைப் பற்றிப்பேசாமல் இருக்கிறது. க்ரிப்டோ கிறிஸ்தவ அரசியலை தந்திரமாக முன்னெடுக்கிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் மிகப்பெரிய கலை-வரலாறு-அரசியல் என அனைத்திலும் அயோக்கியராகவே இருக்கிறார்.

அவருடைய மலின அரசியலே அவரை இப்படியான ஒரு படத்தைத் துணிச்சலாக அதாவது தமிழ் பார்வையாளருக்கு புரியாத திரை மொழியில், பிடிக்காத தோற்றத்துடன் எடுக்க வைத்திருக்கிறது. அந்த அரசியலுக்கு ஆஸ்கார் விருது கமிட்டி தொடங்கி அத்தனை ஊடகங்கள், அறிவு ஜீவிகள் வரை அனைத்து மட்ட ஆதரவு உண்டு. அவர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி விடுவார்கள்.

சனாதன, வைதிக, இந்துத்துவ அம்சங்கள் வேண்டாம். அவை தமிழர்களின் அடையாளம் அல்ல; அவையெல்லாம் திணிப்புகள் என்றுசொல்லப்படுகிறது. இயற்கை வழிபாடு, அறுவடை கொண்டாட்டம், நடுகல் வழிபாடு இடையே தமிழர் மதம் எனப்படுகிறது.

படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தலித் போராளிகளின் ஆவேசத்தைப் பார்க்கும்போது தமிழ்தேசியவாதிகளுடன் ’கை’ கோத்து அனைவரும் கிறிஸ்தவ, இஸ்லாமிய தமிழர்களை கொத்தாக கூண்டோடு தமிழர் மதம் பக்கம் அழைத்து வருவார்கள் என்று நினைக்கிறேன். புத்தரைக் கூட வழியில் விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் , கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அவர் அதிபிராமணரையே தன் லட்சியமாக முன் வைத்திருக்கிறார் என்பது தெரிய வரும்.

யாகம், வேள்வி, கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் என்று நின்று விடாமல் வேத ஞான மார்க்கம் நோக்கி மக்களை அழைத்துச் செல்ல வந்தவர் அவர். அவருடைய மடாலய விதிகள் (ஆண்பிஷுகளுக்கு பெண் பிஷுகள் அடங்கியவர்கள் என்பது உள்ளிட்ட) அனைத்துமே வேதாந்தத்தின் சாராம்சத்தையே அடிப்படையாகக் கொண்டது. எனவே ’தமிழர் மதத்தில்’ புத்தருக்கு இடம்கிடையாது.

இப்படி தலித் போராளிகள் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களை தமிழர் மதம் நோக்கி அழைத்துச் சென்றால் நிச்சயம் வரவேற்கத்தான் செய்ய வேண்டும். கிறிஸ்தவமும் இஸ்லாமும் வந்தேறி மதங்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் வன்முறையைக் கட்டவிழ்த்த மதங்களும் கூட. 

உள்ளத்தில் உண்மையிருந்தால்தான் வாக்கினில் ஒளி உண்டாகும்.

ரஞ்சித்அடிப்படையில் திரைப்படக் கலைஞர் அல்ல; அரசியல்வாதி. உடனே தீவிர அரசியல் போராளி என்று நினைத்துவிட வேண்டாம்.

மணிரத்னம் தனது காதல் கதைகளுக்குப் பின்புலமாக காஷ்மீர் தொடங்கி ஈழப் பிரச்னை வரை ஊறுகாயாகத் தொட்டுக் கொண்டது போல் பா.ரஞ்சித்தன் கேங்ஸ்டர் (இம்முறை தங்கவேட்டை) படங்களுக்கு போராளி அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டு வருகிறார்.

காலா, கபாலி போன்ற படங்களைவிட கலை ரீதியாக நல்ல முன்னேற்றம் இந்தப் படத்தில் தெரிகிறது. அரசியலிலும் அவர் மேம்பட்டால் தமிழுக்கு நல்ல படம் அவர் மூலம் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், அவர் அரும்பாடுபட்டு எடுத்துக் கொடுக்கும் தங்கக் கட்டிகள் எல்லாம் மண் கட்டிகளாகவே இருக்கும்.

அவர் அதையே தங்கக்கட்டி என்று நம்புகிறார். ’ஆமாம் ஆமாம்’என்று தூக்கிக் கொண்டாட ஒருகூட்டம் தயாராகவும் இருக்கிறது. எனவே, அடுத்த ஜென்மத்திலாவது அவர் அதிலிருந்து வெளியே வர அருகரின் அருள் கிடைக்கட்டும்.

2 Replies to “தங்கலான்”

  1. மிக அருமையான, தெளிவான விமர்சனம்.

  2. Ha..ha… the victory of this movie is measured how the oppressors of 2000+ yrs india sprew smoke from stomach….Thank you for writing this piece exposing your true dishonestly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *