சில நாட்களுக்கு முன்னால் ‘Path to War‘ எனும் திரைபடத்தை ஏதோ ஒரு ஓடிடி தளத்தில் பார்த்தேன். வியட்நாம் போர் எப்படி அமெரிக்க முடிவுகளால் வடிவமைக்கப்பட்டது என்பதை காட்டும் திரைப்படம்.
லிண்டன் ஜான்சன் குறித்த பிற படங்களை பார்த்திருக்கிறேன். மிகவும் அற்பமாக கருதப்பட்டதொரு பதவியிலிருந்து முழுக்க முழுக்க விபத்தாக -கென்னடி கொலையால்- ஜனாதிபதியாகி, அவருடைய சொந்த வாக்காளர் தொகுதிக்கே உவக்காத இன சமத்துவ சட்டங்களை அமுல்படுத்தியதை காட்டும் திரைப்படங்கள் இரண்டை பார்த்திருக்கிறேன். இரண்டிலுமே அவர் ஒரு ஹீரோ.
இதில் அவ்வாறல்ல. ஆனால் அமெரிக்க மைய பார்வையை தாண்டி இந்த திரைப்படம், அது உத்தேசிக்காமலே- காட்டும் உண்மை வெள்ளைமாளிகையில் அல்லது கேம்ப் டேவிட்டில் அதன் சகல வசதிகள் அதன் சகல பாதுகாப்புகளுக்குள்ளே இருந்து வாழ்வின் விளிம்பில் வாழும் கிழவர்கள் எடுக்கும் முடிவுகள் வியட்நாமில் அடுத்த இரு நாட்களுக்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அப்பாவி குழந்தைகள் பெண்கள் என எல்லா தரப்பினரின் வாழ்க்கைகளையும் கொடூரமாக சிதறடித்து களைந்துவிட முடியும். என்ன ஒரு கொடூரமான உலகசூழல் என்பது நமக்கு முகத்தில் அறைகிறது.
இவற்றையெல்லாம் மீறி வியட்நாம் மக்கள் எழுந்து தம் நாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். கம்யூனிசத்தை தாண்டிய ஒரு பார்வை வியட்நாமை செயல்படுத்தியுள்ளது. சீனா சோவியத் ஆகிய பெரும் ஆதிக்க சக்திகளை மீறிய செயல்பாடு அது.
ஆனால் வியட்நாம் போர் குறித்த பொது சித்திரம் முழுக்க முழுக்க அமெரிக்க ஹாலிவுட்டால் கட்டமைக்கப்படுவது. அமெரிக்க வீரர்களின் துயரம். அவர்களுக்கு அவர்கள் அரசு செய்த துரோகம். இப்படி மட்டுமே அது கட்டமைக்கப்படுகிறது.
இறந்த ஒவ்வொரு அமெரிக்க வீரனுக்கும் சில நூறு அப்பாவி வியட்நாம் ஆசியர்கள் இறந்திருக்கிறார்கள். ஆனால் வியட்நாம் இப்படியெல்லாம் அழுது திரைப்படங்கள் எடுத்தில்லை. நான் என் பதின்ம வயதில் சோவியத் புத்தகங்களில் அமெரிக்கா வியட்நாம் மீது நடத்திய வேதியியல் போர் குறித்து படித்திருக்கிறேன். தலைமுறைகளை பாதித்ததாக. கொடூரமான படங்களுடன். அப்போது அவற்றை நான் சோவியத் பிரச்சாரங்கள் என நினைத்தேன். ஆனால் அவை உண்மை என்பதை பின்னர் அமெரிக்க ஆவணங்கள் மூலமே அறிந்து கொண்டேன். இந்த வேதி பொருட்களை -ஏஜெண்ட் ஆரஞ்ச் என்று பெயர்- வியட்நாம் எங்கும் தெளித்த அமெரிக்க விமானிகள் பலருக்கு புறு நோய் வந்ததால் இந்த ஆவணங்கள் வெளிவந்தன. தெளித்தவனுக்கே புற்றுநோய் என்றால், ஏஜெண்ட் ஆரஞ்ச் மழையென மேல்விழுந்த மக்களின் கதி என்னவாயிருக்கும்? அதை குறித்த ஆவணங்களை தேடிப்பாருங்கள்.
வியட்நாமியர்கள் இவை குறித்து பெரிதாக திரைப்படங்கள் எதுவும் எடுத்து சர்வதேச வெளியில் அமெரிக்கா போல ஒப்பாரி வைத்ததாக தெரியவில்லை. தம் வலிகளைத் தாண்டி தம் வலிமையால் பிரகாசிக்கிறார்கள். அவர்களுக்கு கம்யூனிசம் என்பது அவர்களின் உண்மையான தேசிய உணர்வுக்கு ஒரு வாகனம் என்பதை தாண்டி வேறெதுவுமில்லை.
இறுதியில் தெரியக்கூடிய விடயம் ஒன்றே ஒன்றுதான். உன் மண்ணை உன் சந்ததியை நீதான் காப்பாற்ற வேண்டும். உன் மண்ணில் வேர் கொண்ட தலைவன் உன்னை தன் குடும்பமென்று நினைக்கக் கூடிய தலைவன் – அப்படி ஒருவனால் மட்டுமே நீ காப்பாற்றப்பட முடியும்.
அதனால்தான், அதனால் மட்டுமே, பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற கட்சிகள், அரசியல் இயக்கங்களின் சில கோமாளித்தனங்களையும் தாண்டி நான் நரேந்திர தமோதரதாஸ் மோதி என்கிற அந்த ஒற்றை மனிதர் மீது நம்பிக்கை வைக்கிறேன். வராது வந்த மாமணி அந்த தலைவர்.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)