’பைஸன் காளைமாடன்’ திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு. புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு. இந்த புனித நதியை கொண்டு வந்த பகீரதனின் பெயர் மாரி செல்வராஜ்.
எனக்கு தெரியும். வலதுசாரி சூழலில் சாதியை சனாதனமென கருதும் சூழலில் மாரி செல்வராஜை வசைபாடுவதை தேசிய கடமையாக கருதும் சூழலில் இதை சொல்வது கிண்டல்களையும் கேலிகளையும் வசைகளையும் கொண்டுவரும் என்பது.
ஆனால் இந்த சமுதாயத்தின் ஈடேற்றத்தையும் முன்னேற்றத்தையும் நீங்கள் விரும்புகிறவராக இருந்தால் மாரி செல்வராஜின் இந்த படம் உங்களிடம் நல்லுணர்வையும் நன்றியுணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
ஏன்?
சில விஷயங்களை பல்லாண்டுகளுக்கு முன்னர் இருந்து தொடங்கலாம் என்றிருக்கிறேன். இன்றைக்கு இந்தியா முழுவதும் எந்த கட்சியும் கட்டாயமாக பேச வேண்டிய பெயராக பாபா சாகேப் அம்பேத்கரின் பெயர் உள்ளது. இந்த சூழல் 1990களுக்கு பின்னர் ஏற்பட்டது. அதன் முன்னால் பள்ளி பாடபுத்தகங்களில் அவர் பெயர் பெரிய அளவில் இருக்காது. நானறிந்து நான் படித்த பாட நூல்களில் அவர் பெயர் இல்லை. மொரார்ஜி தேசாய் குறித்து கூட எங்கள் நாலாம் வகுப்பு பாடநூலில் பாடம் இருந்தது. இந்திரா காந்தி, அண்ணா துரை இவர்கள் குறித்தெல்லாம் படித்திருக்கிறோம் – நான் சொல்வது 1980களில். பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அவர் முக்கியத்துவம் குறித்து முதன் முதலில் நான் வாசித்தது விஜயபாரதம் என்கிற வார இதழில். அதன் பின்னர் ஆர். எஸ்.எஸ் அமைப்பின் பௌத்திக் திட்டவடிவில். ஏன் சொல்கிறேனென்றால் பாபா சாகேப் குறித்து 1990களுக்கு முன்னால் அனைத்து தரப்பு மக்களிடம் அவரது சிந்தனைகளையும் அவரது முக்கியத்துவத்தையும் கொண்டு சென்றது ஆர்.எஸ்,எஸ் அமைப்புதான்.
ஆர். எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய டாக்டர் ஹெட்கேவார், வீர சாவர்க்கர், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோரின் ஓவியங்களுடன் ‘இம்மூவரின் சிந்தனையும் ஒன்றுதான்’ என்கிற கட்டுரைத் தொடரையும் அதே வார இதழில் படித்தேன். பின்னர் தனஞ்செய் கீர் அவர்களின் ’டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கையும் பணியும்’ எனும் நூலை படித்தேன். அவர் சந்தித்த அவமானங்கள் அவற்றின் வேதனை வலி ஆகியவற்றை தெரிந்து கொண்டேன். புரிந்து கொண்டேனா என்றால் அவையெல்லாம் பட்டால் மட்டுமே புரிய முடிந்தவை.
டாக்டர் அம்பேத்கர் ஒன்றும் கஷ்டப்படவில்லை என்று சொல்கிற சிலர் உண்டு. ரெட்டைமலை சீனிவாசனும் மதுரை பிள்ளையும் கஷ்டப்படவில்லை. ஆனால் அவர்கள் சமுதாய மக்கள் கஷ்டப்படவில்லை என்று சொல்ல இதயமும் நேர்மையும் இல்லாத இழிமனதிருக்கே முடியும். அதுவே பாபா சாகேப் விடயத்திலும்.
அருண்ஷோரி என்னதான் அப்போது வலதுசாரி புத்தி ஜீவியாக ஏறத்தாழ இந்துக்கள் தரப்பில் பேசக்கூடிய ஒரே அறிவுஜீவி என்பது போன்ற தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருந்த போதிலும் கூட அவர் பாபா சாகேப் அம்பேத்கரை குறித்து புத்தகம் எழுதிய போது அதனை ஆர்.எஸ்.எஸ் எதிர்த்து எதிர்கொண்டது. ‘தேச பக்த அம்பேத்கரும் ஷோரியின் அம்பேத்கரும்’ எனும் கட்டுரைத் தொடர் ஆர்.எஸ்.எஸ் இதழ்களில் வெளியானது.
ஆர். எஸ்.எஸ் அமைப்பு பாபா சாகேப் குறித்து இந்த அறிவை எனக்கு தராதிருந்தால் எந்த சாதி வெறி பிடித்தவனையும் போல நானும் பாபா சாகேப் அம்பேத்கரை இழிவாக பேசியிருந்து கொண்டிருப்பேன். எப்படிப்பட்ட இழிநிலையில் நான் இருந்திருபேன் என நினைக்கவே மனம் பதறுகிறது. எனவே பாபா சாகேப் எனும் கலங்கரை வெளிச்சத்தை கைகாட்டிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் மீது என்றென்றும் எனக்கு நன்றி உண்டு. டாக்டர் ஹெட்கேவார் முதல் மதுகர் தத்தாத்ரேய தேவரஸ் அவர்கள் வரையிலான ஆர்.எஸ்.எஸ். அதிகார மமதையாலும் சாதிய பற்றினாலும் களங்கமடையாத ஆர்.எஸ்.எஸ். மகோன்னத பழம் நினைவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.

2020களுக்கு வருவோம்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தமிழக மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் பாபா சாகேப் அம்பேத்கரை எதிர்த்து மிக கடுமையான மோசமான மலினமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அதனை வெளிப்படையாக சமூக ஊடகங்களில் நான் கண்டித்தேன். ஆர். எஸ். எஸ் அமைப்பு அதனைக் கண்டிக்கும், அல்லது தன் நிலைபாட்டை விளக்கி ஒரு விளக்கமேனும் தரும் என எதிர்பார்த்தேன். இல்லை. மாறாக தொடர்ந்து ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டார். அத்துடன் மணியன் பெயரையே குறிப்பிடாமல் ஏற்கனவே விஜயபாரதத்தில் வந்த கட்டுரைகளையே மேற்கோள் காட்டி எழுதப்பட்ட என் கட்டுரையை பிரசுரிக்க மறுத்தது விஜயபாரதம்.
என் கட்டுரையை பிரசுரிக்க மறுத்தது பெரிய விஷயமல்ல. ஆனால் விஜயபாரதத்துக்கு ஏற்பட்டிருந்த மாறுதல் முக்கியமானது. மெக்காவில் இறங்கிய வசனங்களுக்கும் மெதீனாவில் இறங்கிய வசனங்களுக்குமான வேறுபாடு போன்றது.
இப்போது மாரி செல்வராஜுக்கு வருகிறேன்.
பைஸன் கதை இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதில் சந்து பொந்து என தேடி பல குறைகளைச் சொல்வோரைப் பார்க்கிறேன். சமூக ஊடகங்களில் இதை செய்யும் பலரும் தம்மை சங்கி என்றோ வலதுசாரி என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதை பார்க்கிறேன். விலகிவிட்டால் கூட கஷ்டமாகவே இருக்கிறது.
மாரி செல்வராஜ் படத்தில் ஆபாசம் இல்லை. அசட்டு நகைசுவை இல்லை. பெண்கள் மரியாதையுடன் காட்டப்படுகிறார்கள். ஆனால் ஆபாசமெல்லாம் இருக்கும் அசட்டு நகைசுவையெல்லாம் இருக்கும் படங்களை பாராட்டும் நமக்கு மாரி செல்வராஜ் படங்கள் மீது வெறுப்பு.
ஏன்?
சாதி வர்ணம் சனாதனம் என விவாதிக்கப்படும் போது தவறாமல் கீதை வந்துவிடும். அப்போது அதனை எல்லோரும் சொல்லும் ஒரு சுலோகம் ’சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என்பது. ஆனால் மேற்கோள் காட்டப்படாமல் ஆனால் காட்டப்பட வேண்டிய அவசியம் கொண்ட இரு சுலோகங்கள் உண்டு.
தைவாஸுர ஸம்பத் விபாக யோகத்தில் அசுர குணங்களை பட்டியலிடுகிறார் பகவான் கிருஷ்ணர்.
சுலோகம் 16:14 –
செல்வச்சீமான் உயர்ந்த குலத்தன்
எனக்கு நிகராய் யாருண்டு
வேட்போன் ஈவோன் மகிழ்வோன் யானே
என்றறியாமையில் மயங்கிடுவோர்
பின்னர் அதே அத்தியாயம் 18 ஆம் சுலோகத்தில் சொல்கிறார்:
அகந்தை பலமுடன் இறுமாப்புடைமை
காமம் கோபம் இவை உள்ளோர்
தத்தம் உடலிலும் ஏனையருள்ளும்
உறையும் என்னை வெறுக்கின்றார்.
பிறப்படிப்படையில் நான் உயர்ந்தவம் என் குலப்பெருமை என்ன தெரியுமா? நான் யாகம் செய்பவன், நான் பலசாலி, நான் பணக்காரன் என கருதுகிறவன் – சுயசாதி கௌரவம் கொண்டவனை கிருஷ்ணர் அரக்கத்தன்மை கொண்டவன் என்கிறார்.
பகவத் கீதை மோட்ச சாதனமாக எழுதப்பட்ட நூல். அதனை சமூக விடயங்களை விளக்க பயன்படுத்துதல் முறையாகாது என்பர். இருக்கலாம். ஆனால் உண்மையான ஆன்மிகம் சமூகத்தை மேம்படுத்தும் ஆற்றலை தன்னுள் கொண்டிருக்க வேண்டும். நீதியையும் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் அளிக்கும் சமூகமாக இருக்க ஆன்மீகம் வலிமையருள வேணும். அவ்வாறில்லாத ஆன்மிகம் குறைபாடுடையது. எனவேதான் 16:18 ஆம் சுலோகம் உண்மையில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஐந்து விஷயங்களை மாட்டிடையன் சொல்கிறான். அகங்காரம், பலம், தர்ப்பம்- இறுமாப்புடைமை, காமம், க்ரோதம் – இவை ஐந்தும் வெறுப்பின் ஊற்றுக்கண்கள். இதனால் ஏற்படும் வெறுப்பு தத்துவார்த்த ரீதியாக அபௌதிகமாக எங்கோ இருக்கும் வெறுப்பில்லை. அது வெளிப்படும் வெறுப்பு. பிறர் மீதான வெறுப்பு. மிகவும் பௌதீகமாக அவர்கள் உடல்கள் மீதான வெறுப்பு, அந்த வெறுப்பு நாம் ‘அவர்கள்’ என வரையறை செய்தவர் மீதான வெறுப்பு என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அதன் இறுதி இரை ஏன் அதன் முதன்மை இரை நாம் – நம்மிலும் அனைவரிலும் இருக்கும் தெய்வீகத்தை நாம் வெறுக்கிறோம். அந்த வெறுப்பால் நாம் எதையும் அடைய முடியாது.
ஆன்மாவின் வலிமையால் மட்டுமே அனைத்து சாதனைகளும் நிகழ்கின்றன. வெறுப்பு ஆற்றலை விரயப்படுத்துகிறது. அது தற்காலிக உற்சாகத்தை அளிக்கலாம். ஆனால் இறுதியில் அது உருவாக்குவது ஆழ்ந்த விரக்தியையே. உங்களை சுற்றி பாருங்கள் – வெறுப்பையும் வன்மத்தையும் மட்டுமே உமிழ்ந்தும் உண்டும் வாழ்பவர்கள் எந்த சாதனையும் செய்யாமல் இறுதியில் அனைத்து நற்குணங்களையும் இழந்து இழிந்தழிவதை காணலாம்.
தீண்டாமையின் அடிப்படை ஆரிய இனவாதக் கோட்பாடோ மத கோட்பாடோ அல்ல. அதன் அடிப்படை வெறுப்பு. அந்த வெறுப்பின் ஊற்றுக்கண் என் சாதியிடமோ உன் சாதியிடமோ என்றில்லை எங்கும் இருக்கலாம்.எங்கெல்லாம் அகங்காரமும், உடல் வலிமை அல்லது ஆற்றல்-அதிகாரம் ஆகியவற்றின் மீது மட்டுமே நம்பிக்கையும், இறுமாப்பும், காமமும், குரோதமும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தீண்டாமையின் ஊற்றுக்கண்கள் திறக்கின்றன.
மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர். நான் இந்து உணர்வாளர்களை, இந்து பண்பாட்டு சமூக ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.
எந்த இடத்திலும் சாதி மோதல்களில் தீண்டாமை பிரச்சனைகளில் கீதை சொல்லும் இந்த ஐந்து அசுர பண்புகளும் செயலாற்றுவதை காணலாம். சாதிகள் என்பதைத் தாண்டி இந்த அரக்க பண்புகளின் ஊற்றுக்கண்களை கண்டறிந்து அவற்றை களையுங்கள். அதை ஆவணப்படுத்துங்கள். அதை விடுத்து தம் வலியை காட்சி கவிதைகளாக நம் இதயத்துடன் உரையாட உருவாக்கும் இளைஞர்களை ‘நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் என்கிறார்கள்’ என்று சொல்லி இகழாதிருங்கள். பரிகாசம் செய்யாதிருங்கள். நாளை வருங்கால சந்ததிகள் உங்களையும் உங்கள் சித்தாந்ததங்களையும் எண்ணி அவமானமடையாமல் இருப்பார்கள்.
எனக்கு நடிகர், இயக்குனர் அமீர் மீது தனிப்பட்ட விலகல் உண்டு. இந்த திரைப்படத்தில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். ஐயமில்லை. ஆனால் இந்த பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்ததில் இந்து ஒற்றுமையை விரும்புகிறவர்களுக்கெல்லாம் ஒரு ஆழமான எச்சரிக்கை உள்ளது. இதையும் மாரி செல்வராக் தெரிந்து செய்யவில்லை. மாரி செல்வராஜுக்கு நம்பிக்கையூட்டிய திரைப்படமாக பருத்திவீரன் அமைந்துள்ளது என்பதாலும் அமீர் நல்ல நடிகர் என்பதாலும் செய்யப்பட்ட தேர்வு அது.
அமீர் தவ்ஹீது ஜமாத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர். ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் பர்தா விவாதப்பொருளாக்கப்படவிருந்தது, வேண்டுமென்றும் வேண்டாமென்றும் இருபக்கங்களிலும் இஸ்லாமிய சகோதரிகளே பேசவிருந்தனர். இந்நிகழ்ச்சியை ஜைனுலாப்தீனிடம் பேசி தடுக்க செய்தார் அமீர் என்று ஜைனுலாப்தீனே சொல்லியுள்ளார்.
பழனிபாபா இஸ்லாமிய அடிப்படைவாதி. வன்முறைவாதி. இந்து வெறுப்பாளன். அவர் 1980களின் இறுதியிலும் 90களிலும் வியூகம் ஒன்றை உருவாக்கினார். மீனாட்சிபுரம் மதமாற்றம் நினைவிருக்கலாம். அங்கு மதம் மாறியவர்கள் தேவேந்திரகுல வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களே. 1990களில் பசுபதி பாண்டியன் மேலெழுந்த போது ஏற்பட்ட மோதல்கள் இத்யாதியை பயன்படுத்தி பழனிபாபா மீண்டும் பெரும் மதமாற்றத்தை செய்ய திட்டமிட்டார். அது நடக்கவில்லை என்பது வேறு விடயம். ஆனால் பசுபதி பாண்டியனை ஒத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அமீர் எந்த இடத்திலும் நெற்றியில் நீறும் திலகமும் இடாமலே நடித்துள்ளார் (குண்டு வீச்சில் மயங்கி ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அவர் மயங்கிய நிலையில் அவர் நெற்றியில் ஒரு விபூதி கீற்று அவ்வளவுதான்.)
சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் இல்லா இடத்தில் மதமாற்ற நச்சரவு புகுந்துவிடும். நச்சரவு புகக்கூடாது என்பது முக்கியம். அதைவிட நம் வாழ்விடம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம். அந்த ஆரோக்கியமென்பது சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் என்பதிலிருந்தே எழ வேண்டும்.
இத்திரைப்படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ள நேர்த்தியை பாருங்கள். அவர்கள் அவர்களுக்கான முடிவுகளை தாமே எடுக்கிறார்கள். அவர்கள் அமைதியாக அழுத்தமாக இக்கதையை நகர்த்திச் செல்கிறார்கள். நீ விளையாடு எனும் முடிவை தமக்கை எடுக்கிறார். நான் உன் கைப்பிடிப்பேன் என்கிற முடிவை காதலி எடுக்கிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து கிட்டானுக்காக பேசு என்கிற முடிவை தன் தந்தைக்கு அந்த பெண் சொல்கிறார். ஒரு நொடிக்கும் குறைவாக என்று சொல்லலாம்- கிட்டானுக்கு ஒரு காதலி இருப்பதை கேட்டவுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண்ணில் அதிவேக மின்னலென தோன்றி மறையும் ஒரு உணர்வு- அது காட்சியாகக் காட்டாமலே காட்சியாக பதியவைக்கும் விதத்தில் காட்டப்பட்ட தன்மை – மாரி செல்வராஜ் நாம் ஒட்டுமொத்தமாக கொண்டாட வேண்டிய இயக்குநர்.

காளைமாடன் என்கிற தெய்வம் – இரு வித செயல்பாடுகள் கொண்டது. செல்வத்தை வளத்தை உணவை உருவாக்கும் ஏர்பூட்டி உழும் மாடாக அந்த தெய்வம். கூர் கொம்புகள் கொண்டு தடைகளை உடைக்கும் தெய்வம். தெய்வத்தின் இருநிலைகள் இந்து புராணங்களில் எப்போதும் காணலாம். பிள்ளையார் கொம்பை உடைத்து பாரதம் எழுதினார். பிள்ளையார் கொம்பை உடைத்து கஜமுகாசுரனை சம்காரம் செய்தார்.
மீண்டும் சொல்கிறேன். மாரி செல்வராஜுக்கு இந்து புராணங்களைத் தூக்கிப்பிடிக்க வேண்டிய சிலாகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு இந்து மத நூல்களின் மீதும் இந்து மதத்தின் மீதும் விலகலும் ஏன் வெறுப்புமே இருக்க இந்து வலதுசாரிகள் வேண்டிய அளவு கைங்கரியங்கள் செய்திருக்கிறார்கள். இந்துத்துவர்கள் செய்திருக்கிறோம். எனவே அவர் இங்கு இந்து மதத்தை விதந்தோத எவ்வித தேவையும் இல்லை.
இருந்த போதிலும் காளைமாடனின் இந்த இரு அடிப்படைத்தன்மைகள் எப்படி அவர் கதையாடல்கள் மூலமாக வெளிப்படுகின்றன?
வயலில் ஏர் செல்கின்ற பாதையை உருவாக்குகிறவன் இந்திரன் என்கிறது வேதம். அவன் காளையாக நிலத்தை உழுகிறான். அதனை செழுமையடைய செய்கிறான் என்கிறது வேதம். காளையாக அவனுக்கு இன்னொரு செயல்பாடு இருக்கிறது. கூர்முனை கொம்புகளுடன் அடைக்கப்பட்ட பசுக்களென இருக்கும் ஒளி கிரகணங்களை அவன் விடுவிக்கிறான். தடைகளை கொம்புகளால் மோதி நொறுக்கிறான் இந்திரன். ‘ரெக்க ரெக்க’ பாடலில் (அறிவும் வேடனும் இணைந்து பாடுகின்ற பாடல்) கொம்பு மாடனாக மலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒளியை மீட்க சொல்லும் வரிகளை கேட்ட போது எந்த அபௌருஷேயம் இந்திரன் காளையாக ஒளியை விடுவிக்கும் காட்சியை வேத கவிகளின் காட்சியில் தோற்றுவித்ததோ அதே அபௌருஷேயமே இங்கும் துலங்கி விகசிக்கிறதென உணர்ந்தேன். இது என் தனிப்பட்ட பார்வை.
வேதனைகளிலிருந்து ஒற்றுமைக்காக எழும் குரல்கள் நம் பண்பாட்டை முன்னகர்த்தி செல்கின்றன. வேத கவியான கவச ஐலூஷர் (Kavasha Ailusha) முதல் ஸ்ரீதர ஐயாவாளின் கங்கை துதி வரை வேதனைகளிலிருந்தும் மனிதர்களின் கீழ்மையால் ஏற்படும் அவமானங்களிலிருந்தும் மேலெழும் உன்னதமே நம் பண்பாட்டை செலுத்துகிறது. அந்த சனாதனமான அறம், ’யாவையும் சிதையினும், சிதையா அறம்’ தன்னை நாத்திகவாதியாகவும் பௌத்த சார்பு கொண்டவராகவும் வெளிப்படையாக கூறும் மாரி செல்வராக் வழியாக வெளிப்பட விருப்பம் கொண்டது, இன்னும் இந்த பண்பாட்டின் மீது தேசத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தின் மூலம் பல விஷயங்களை காட்டியுள்ளார். ஒரு சாதி ஆதிக்க சாதி, மறுசாதி ஒடுக்கப்படும் சாதி என்கிற இரட்டையைத் தாண்டி ஒரு சமூக யதார்த்தத்தைக் காட்டியுள்ளார். ‘நம் ஆட்கள் அங்கே வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் நம்மிடம் வியாபாரம் செய்ய வருகிறார்கள்’ என போகிற போக்கில் ஒரு வசனம் வருகிறது. இது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு சாதியும் இன்று தன்னை மட்டும் தன்-மைய பார்வையுடன் பார்க்கிறது. ஆனால் உண்மையில் ஒவ்வொரு சாதியும் வாழ்வதே – அது எந்த சாதியாக இருந்தாலும் – பிற சாதிகளுக்காகத்தான். இப்படி அனைத்து சமூகங்களின் உறவுகளே நம் சமுதாயம். நாம் தொடர்ந்து அந்த உறவுப்பாலங்களை உதாசீனப்படுத்தி விட்டோம். அவை மோசமான சர்க்கார் பாலங்களாக மாறிவிட்டன. இதனால் எப்போதும் அவை காவு வாங்குகின்றன. நாம் இந்த பழைய சீர்கெட்ட பாலங்களை முழுமையாக புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி சமுதாய நல்லிணக்கம் எனும் மதிப்பீடுகளின் அடிப்படையில் அவை சரி செய்யப்பட வேண்டும்.
இதில் சமயத்தின் பங்கு மிக முக்கியமானது. இப்படம் முழுக்க சமயக் குறியீடுகள் மெல்லிய நீரோட்டமென ஓடுகின்றன. காளைமாடன் எனும் தெய்வம், அதற்கான பலிக்கு செல்லும் ஆட்டின் புனிதத்தன்மை, தெய்வத்தால் ஏற்படும் பகை, இறுதியில் இழைக்கப்படும் அநீதியால் மனம் வெதும்பி சாமியாக வைத்திருந்த காளைக் கொம்பு மண்டையோட்டை நீர்நிலைக்குள் வீசி எறியும் தகப்பன், அப்படி தூக்கியெறியப்பட்ட சாமியை நீரிலிருந்து மீட்டு மேலெழும் கிட்டான். என ஆன்மிகக் குறியீடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
சோர்வடைந்து கபடியைத் துறந்து மனச்சோர்வடைகிறான் கதாநாயகன். அப்போது ஆசிரியர் வருகிறார். அவனை தன் பைக்கில் பின்னால் அமரவைத்து சொல்கிறார். நாம் சத்தியம் செய்வதே நமக்கு மிக முக்கியமான சந்தோஷம் தரும் விஷயத்தை செய்வதற்குத்தானே. உடலும் உள்ளமும் கபடியில் இயல்பாக இருக்கிறது உனக்கு. அதை செய்வதுதான் சரி. மனச்சோர்வடையும் வீரனுக்கு வாகன ஓட்டியான நல்லாசிரியர் என்கிற பிம்பம் மாரி செல்வராஜ் நினைத்துப் பார்த்து உருவாக்கியதாக இருக்கமுடியாது.
உன் பெயர் தமிழ்நாட்டு அணிக்கான பெயர் வரிசையில் இல்லை. நாளைக்குத் தேர்வு போட்டி ஆனால் முந்திய நாளே பட்டியல் தயாராகிறது அதில் உன் பெயர் இல்லை என்கிற செய்தியை கேட்கிறான் கிட்டான். எனவே சும்மா பெயருக்கு விளையாடினால் போதும் என சொல்லப்படும் போது அப்படி விளையாட எனக்குத் தெரியாது என்கிறான். எப்போதும் போல விளையாட்டுக்காக விளையாடுகிறான். நிஷ்காம கர்மம் என்பதை ஒரு இளைஞனுக்கு விளக்க வேண்டுமா? பைசனின் இந்த காட்சியை சொல்லுங்கள். காட்டுங்கள். இங்கு அவனது விளையாட்டால் அவனை அந்த பட்டியலில் மீண்டும் பெயரை நுழைக்கிறார் ஒருவர் – அவர் பெயர் காண்டீபன்.
தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். மாரி செல்வராஜ் இந்து மதக்குறியீடுகளில் ஒவ்வாமை கொண்டவராச்சே!

ஒவ்வொரு முறை சாதிய வன்கொடுமை நிகழும் போதெல்லாம் நான் கூறும் ஒரு விடயமுண்டு. அங்குள்ள ஆதீனங்கள், ஜீயர்கள் அல்லது ஆன்மிக பெரியவர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுங்கள். ஆறுதல் சொல்லுங்கள். இதை சொல்லும் போதெல்லாம் எனக்கு கிடைக்கும் பதில்கள் – பதில்கள் என்பதை விட வசவுகள் – என்னவென்றால் அதுவா அவர்கள் வேலை? அவர்களின் பணி ஆன்மீகம். அவர்களின் பணி இதுவல்ல. இதெல்லாம் அரசியல்வாதிகளால் ஏற்படுவது என்பது.
இந்த திரைப்படத்தில் கபடி வீரர் ஒருவர் அவரது மீசை பிய்த்தெறியப்பட்டு கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி வருகிறது. அறுபதாண்டுகளுக்கு முன்னதாக ராஜஸ்தானில் பட்டியல் சமுதாய இளைஞர் ஒருவர் முறுக்கு மீசை வைத்திருந்தார் என்பதற்காக கொல்லப்பட்டார். அப்போது ஒரு தலைவர் இப்படி எழுதினார். ‘இந்த கொடுமையை தர்மாச்சாரியார்கள் ஒருவரும் கண்டிக்கவில்லை. அவர்களுக்கு இந்த கொடுமைகள் தர்மத்துக்கு எதிரானவை என்பதே தெரியவில்லை. இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.’ தர்மாச்சாரியார்கள் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்ன அந்த தலைவரின் பெயர் மாதவ சதாசிவ கோல்வல்கர் என்பது – ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர்.
யோசித்துப்பாருங்கள். வட இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சாதிய வன்கொடுமை, தென்மாவட்டங்களில் நிகழ்ந்து அது மனதை பாதித்த வலியை மாரி செல்வராஜ் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நம்மில் எவரையும் பழி சொல்லவில்லை. குற்றம் சாட்டவில்லை. வன்மம் கொள்ளவில்லை. அந்த வலியை வேதனையை அதனால் ஏற்படும் அச்சத்தை பகிர்ந்து கொள்கிறார். நாம் அவரை ‘நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம்’ என்கிற கூட்டம் என்று கேலி செய்கிறோம்.
அப்படி செய்கிறவர்களில் சங்கிகளும் இருக்கிறார்கள். சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான். அவர் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக உழைத்தார். ஏன்? ஏனென்றால் அவர் நீங்கள் கேலி செய்யும் அதே ‘நசுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம்’ என்கிற வார்த்தைகளை ஒரு இந்துவாக அவர் நசுக்கப்பட்டதாகவும் பிதுக்கப்பட்டதாகவும் உணர்ந்தார். எனவேதான், மிகக் குறைந்த பட்ச கடமையாக, தீண்டாமைக்கு தர்மத்தில் இடமில்லை எனும் தீர்மானத்தை தர்மாச்சாரியார்கள் கொண்டு நிறைவேற்ற வைத்தார். அதைக் கூட சில முக்கிய மடாதிபதிகள் புறக்கணித்தார்கள். இப்படிப்பட்ட வரலாற்றை வைத்துக் கொண்டு மாரி செல்வராஜையும் பா.ரஞ்சித்தையும் நாம் கேலி செய்கிறோமே இது நம் மீது நாமே உமிழ்கிறோம் என்பது உங்களுக்கு தோன்றவில்லையா?
மாரி செல்வராஜ் அவரே சொல்வது போல கூடி சேர்ந்தால் கோடி நன்மை என்பதை வலியுறுத்தியிருக்கிறார். எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறார்.
எதையெல்லாம் ஆரோக்கியமான நல்ல சமுதாயத்தின் மாண்புகளாக கருதினீர்களோ அவற்ஐயெல்லாம் நோக்கிய பயணத்தை சாத்தியப்படுத்தும் உத்வேகத்தை இந்த இளைஞர் நமக்கு அளித்துள்ளார்.
பாராட்டுங்கள். திறந்த இதயத்துடன் பாராட்டுங்கள். அழுக்காற்றுடன் வசைபாடுவதை நிறுத்துங்கள்.
சரி, நாளையே மாரி செல்வராஜும் பா.ரஞ்சித்தும் இந்து விரோத திரைப்படம் ஒன்றை எடுத்தால் என்ன செய்வாய், உன் முகத்தை எங்கே வைத்துக் கொள்வாய் என்று கேட்கிறீர்களா? அப்போது அந்த திரைப்படத்தை அதன் உண்மை-போலித் தன்மையைப் பொறுத்து கட்டாயமாக விமர்சிப்பேன்.
காந்தாரா முதல் படம் பேசிய எந்த சத்தியமும் அந்த இரண்டாவது படத்தில் இல்லை. விஷம் இருந்தது. அதை விமர்சித்தேன். மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் விஷம் இருந்தது. அந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சியின் உண்மை வடிவின் மைய நாயகன் டாக்டர். கிருஷ்ணசாமி – இதை சுட்டிக்காட்டினேன். ஆனால் இந்த திரைப்படம் அற்புதம். எப்படி காந்தாரா எனும் திரைப்படம் ரிஷப் ஷெட்டியின் மூலம் தன்னைத்தானே வெளிப்படுத்தியதோ அப்படியே பைஸனும் தன்னைத்தானே வெளிப்படுத்தியுள்ளது.
நடித்த ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசை நம்முடன் வளர்கிறது. பாடல்கள் தனிச்சிறப்பு. ஒடுக்கப்பட்டவருக்குத்தான் ஒதுக்கப்படுவதன் வலி தெரியும். திரையுலகில் ஆதிக்க வெறியர்களால் ஒதுக்கப்பட்ட சின்மயி ஸ்ரீபாதா இத்திரைப்படத்தில் பாடியுள்ளார். அளவோடு நடித்து கபடி விளையாட்டு வீரராகவே வாழ்ந்து காட்டிய துருவ் விக்ரமை சொல்லவா? மைதானத்தில் அவரது ஒவ்வொரு அசைவும் எந்த அளவு அவர் தன்னை தயார் படுத்தியிருக்கிறார் என காட்டுகிறது. அவரது தந்தையாக வரும் பசுபதி நடிப்பின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார். தந்தையின் ஏக்கமும் அச்சமும் சாமியாடியின் உள் வலிமையும் அவரில் அலையடித்து சிறப்பிக்கிறது. லால், அமீர், ஆட்டைக் குத்தி கொன்று பின் வன்மத்துடன் தொடரும் நபர் – ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
நம் பிரதமர் அவரது மனதின் குரலில் மாரி செல்வராஜை பாராட்ட வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட அவா.
அது மாரி செல்வராஜுக்கு பெருமை என்பதால் அல்ல. அது நல்ல அரசியல் என்பதால் அல்ல. தமிழகத்தில் சமுதாய நல்லிணக்கத்துக்கு சிறப்பான கலைப்படைப்பைக் கொடுத்த இளைஞர் ஒருவருக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை என்பதால்.

படம் இன்னும் பார்க்கவில்லை.
பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். சமூக நல்லிணக்கம் ஆத்மார்த்தமாக யார் சொன்னாலும், சொல்வது யார் என்று பார்க்காமல் சுவீகரித்துக் கொள்வோம்.