திருப்பரங்குன்றத்தின் திரிகோணமிதி தீபத்தூண் சர்ச்சையை முன்வைத்து முன்னாள் சங்கி ஒருவனின் சில சிந்தனைகள்.
திருப்பரங்குன்றம் சர்ச்சை என்பதை முழுமையாக பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்துக்களின் புனித நிலப்பரப்பு, குறிப்பாக அவர்களின் கோவில்கள் சார்ந்த புனித நிலப்பரப்பு, அவர்களின் சடங்குகள் சார்ந்த புனித நிலப்பரப்பு தொடர்ந்து குறுகிக் கொண்டே வருகிறது.
மண்டைக்காட்டில் அண்மையில் அம்மன் விசேஷத்துக்கு புனித நீர் எடுத்து வர யானையில் செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தனர் கத்தோலிக்க கிறித்தவர்கள். இந்துக்கள் கட்டுப்பட வேண்டியதாயிற்று. இதற்கு முன்னர் கடலில் புனித நீராடுவதைக் கூட எதிர்த்து பெண்களை மானப்பங்கப்படுத்திய நிகழ்வு பின்னர் இந்துக்களின் ஒருங்கிணைந்த எதிரடியால் நின்றது.
பொன்மலையில் வருடாந்திர கார்த்திகை தீபமேற்றுதல் சோனியா ஆட்சி ஏற்பட்ட அந்த வருடத்தில் தடுக்கப்பட்டது. அம்மலையில் கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டு என்றென்றும் இந்துக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பிள்ளையார்விளையில் முத்தாரம்மன் ஊர்வலம் பஞ்சாயத்து தெருவில் – பஞ்சாயத்துக்கு கிணறு நிலம் வழங்கியவர் இந்து- செல்லக்கூடாது காரணம் அங்கே ஒரு புரோத்தஸ்டண்ட் பாஸ்டரின் இல்லம் உள்ளது என சொல்லி நிறுத்தப்பட்டு தடியடி நடந்தது. ஒரு பெண்மணி போலீஸ் தடியடியால் கொல்லப்பட்டார்.
குமரி மாவட்டத்தில் எங்கெல்லாம் இந்துக்கள் வலிமையிழந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் சர்வ சகஜமாக இந்த வன்முறை அத்துமீறல்கள் நடக்கும். பெரிய மேடைகளில் செகத் கசுபர் போன்றவர்கள் திருவாசகத்தை மேற்கோள் காட்டி இந்துக்களை மயக்குவார்கள். ஆனால் களத்தில் கிடைக்கும் இடங்களிலெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் உரிமைகளையும் திட்டமிட்டு வியூகம் அமைத்து அழிப்பார்கள். இதில் அவர்கள் செயல்முறை திறன் வாய்ந்தவர்கள். Professionals.
ஒரே நேரத்தில் மண்டைக்காட்டம்மன் நாட்டார் தெய்வம் மேரியும் மாரியும் ஒன்று என்று அப்பாவி இந்துக்களிடம் சொல்லிக் கொண்டே மறுபக்கம் அதே மண்டைக்காட்டம்மன் கோவிலுக்கு வரும் இந்துக்களை மானப்பங்கப்படுத்தும் வித்தை அவர்களுக்கு தெரியும்.
இது குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நிகழ்கிறது. திண்டுக்கல்லில் பெருமாள்பட்டி கிராமத்தில் அங்குள்ள காளி அம்மன் கோவிலுக்கு ஒரு சுற்றுச்சுவர் கட்டக்கூட இந்துக்களுக்கு உரிமை இல்லாத நிலை. பெருமாள் பட்டியை அந்தோனி யார்பட்டி என்று மாற்றிவிடுவார்களோ என்கிற கவலை. ஆண்டி என்பவர் இந்துக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அவரது மகளின் நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய நாள் அவரை படுகொலை செய்தவர் அன்பு மதத்தவர்.
வி.களத்தூரில் அம்மன் கோவில் தேரோட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் காட்டிய எதிர்ப்பு மட்டுமல்ல அந்த எதிர்ப்பை இங்குள்ள போலி மதச்சார்பின்மை பேசும் கோஷ்டிகள் நியாயப்படுத்தினர். ஆனால் அன்றைய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தர்வேஷ் அகமது என நினைக்கிறேன் இந்துக்களின் உரிமைகளுக்காக போராடினார்.
எனவே திருப்பரங்குன்றம் என்பது ஒற்றை விசயமல்ல. இங்கு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் நிகழ்கின்ற வெளிப்பார்வைக்கு தெரியாமல் அழிக்கப்படும் இந்துக்களின் புனித நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த அடையாளமே திருப்பரங்குன்றம்.
அது உண்மையில் விளக்கேற்றும் தூணே அல்ல என்றும் மாபெரும் திரிகோணமிதி அளவை செயல்பாட்டுக்காக பிரிட்டிஷ் அமைத்த தூண் அது என்றும் இப்போது சொல்கிறார்கள். எனில் அதற்கான ஆவண சான்று தேவை.
ஆனால் இந்த வாதத்தை முன்வைப்போர் ஒரு முக்கிய அம்சத்தை தவறவிட்டுவிட்டார்கள். அவர்களுக்கு புரியவில்லை. இது உண்மை என்றால் இதுவே அந்த தூணில் தீபம் ஏற்றுவதற்கான மிகப் பெரிய நியாயத்தை வழங்குகிறது.
இவர்கள் திரிகோணமிதி அளவைக்கல் என்றவுடன் விவேக் செய்யும் மைல்கல் சாமி என்கிற அக்மார்க் ஆபாச அசட்டு நகைச்சுவை என்கிற ரீதியில் பேசுகிறார்கள். உண்மையில் திரிகோணமிதி அளவைக்கான தூண் என்பது அப்பகுதியின் ஆகச்சிறந்த அனைத்து திசைகளுடன், தொலைவுகள் சார்ந்து கண்டறியும் இடத்தில் வைக்கப்படுவதாகும். எனவே திருப்பரங்குன்றம் முழுமையாகவே இந்துக்களின் புனிதமலை என்கிற படியாலும் கார்த்திகை தீபம் அது மிகச்சிறப்பாக அனைவரும் காணும்விதத்தில் அமைந்துள்ள இடத்தில் ஏற்றப்பட வேணுமென்பதாலும் இந்த தூணில் ஏற்றப்படுவது இன்னும் சரியான விடயமாகும்.
இந்துக்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நடப்பது பெரும் பண்பாட்டு போர். அது ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஊர்களில் வெளியுலகத்துக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கு இன்றைய தேவை தற்காலிக உணர்ச்சிகர ஒற்றுமை மட்டும் அல்ல. அதிலிருந்து உருவாக வேண்டிய உண்மையான நீடித்த இந்து ஒற்றுமை. இந்நேரம் அது ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஏன் ஏற்படவில்லை? காரணம் சாதி. நீடித்த இந்து ஒற்றுமைக்குத் தேவை சாதிய ஒழிப்பும் தீண்டாமை அழிப்பும். ஒவ்வொரு இந்து கோவிலிலும் அது எந்த சமுதாயத்துடையது என்றாலும் அதில் அனைத்து இந்துக்களும் வணங்க உரிமை உண்டு என்பது இந்துத்துவ நிலைபாடாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. அதுவே மோடியை சாத்தியப்படுத்தியது. ஆனால் இங்கு என்றைக்கு சாதி என்பது சமுதாய மூலதனம் என்கிற நச்சு பிரச்சாரத்தை தொடங்கினார்களோ அன்றே இந்து ஒற்றுமை நசித்து போக ஆரம்பித்துவிட்டது. இந்து அமைப்புகளின் இந்த பலவீனமே இன்று இந்துக்களின் உரிமைகளை அழிக்கிறது.
இந்து அமைப்புகளில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இந்து வாக்கு வங்கி என்பது சாத்தியமாயிற்று. கட்சி வேறுபாடின்றி இந்து மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போருக்கு அந்தந்த இடங்கள் சார்ந்து இந்து வாக்கு வங்கி கிட்டும். இன்று என்னவாயிருக்கிறது? ஏறக்குறைய 51 விழுக்காட்டு முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய் அல்லது சீமானை முதலமைச்சராக ஏற்க தயாராக இருக்கிறார்கள். அதாவது 51 சதவிகித இளைஞர்களுக்கு முதலமைச்சராக கத்தோலிக்கர் ஒருவர் பதவி ஏற்பதில் பிரச்சனை இல்லை. எப்படிப்பட்ட தோல்வி இது என்பது இந்து இயக்கத்தவர்கள் சிந்திக்க வேண்டிய விடயம்.
இந்த அவமானகரமான நிலைக்கு முழு காரணம் இங்குள்ள இந்து இயக்கங்கள்தான். ஏன்? இன்னும் எழுதுவேன்.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
