விழித்தெழு இந்தியா!

நமது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கிற நேரம் இது. இந்த மும்பை தீவிரவாத தாக்குதல் அரசுக்கு மட்டும் அல்ல, சாதாரணமான பொதுமக்களுக்கு கூட பல அம்சங்களில் கண்ணைத் திறந்துள்ளது. இது நாள் வரை, பாகிஸ்தானை ஒரு தோல்வியுற்ற நாடு என்றும், இந்தியா பலவகைகளில் வெற்றி பெற்ற நாடு என்றும் நினைத்து வந்தோம். அந்த மூட நம்பிக்கை இந்த மும்பை நிகழ்வுகளால் உடைந்திருக்கிறது.

பாகிஸ்தான் எந்த அளவு பலவீனமாக, தன் குடிமக்களுக்கும், வந்து போகிற வெளிநாட்டவர்க்கும் பாதுகாப்பின்றி இருக்கிறதோ அதே போல்தான் இந்தியாவும் என்று இந்த தீவிரவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். வெறும் பத்து இருபது பேர்கள் ஒரு நாட்டையே தன் இராணுவம், கடற்படை, சிறப்பு காவல்படை என்று என்னென்ன வகை படைகள் வைத்திருக்கிறதோ அது எல்லாவற்றையும் எடுத்து வந்து நாட்கணக்கில் சண்டையிட வைத்து விட்டார்கள்.

முதலில் மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்த போது, அதன் தீவிரம் அரசுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. தவிர, எடுத்த எடுப்பில் மூத்த போலீஸ் அதிகாரிகள் இப்படி மாண்டு போனது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கொடுக்கப்படவில்லையா? அல்லது அவை தரம் வாய்ந்தவையாக இல்லையா?

பயங்கரவாதத்தை எதிர் கொள்ள வேண்டிய பலவித அரசுத் துறைகளினூடே ஒரு ஒருங்கிணைப்பும், ஒருங்கியக்கமும் போதவில்லையென்றும், காலம் தாழ்த்தாமல் ஒரு கூட்டுத்தலைமையை அமைத்துச் செயல்படவில்லையெனவும் பல ஊடகங்களும் செய்தி ஏடுகளும் கூறுகின்றன. இது அதிகார அமைப்பினுடைய தலைமையின் செயலின்மையை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு பத்துப் பதினைந்து தீவிரவாதிகள் கடல் வழியாக உட்புகுந்து 4 நாட்கள் நம் படைவீரர்களையே இந்தப் பாடு படுத்திவிட்டார்களே என்று எண்ணும்போது ஒரு சராசரி இந்தியக் குடிமகனுக்கு மிகவும் விசனமும் கோபமும் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இருந்தது வெறும் சம்பிரதாயமாக அமைந்த நம் பிரதமரின் பேச்சு. திடீரென்று பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தலைவரை அழைக்கப் பட்டதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. பாகிஸ்தானும் முதலில் ஐ.எஸ்.ஐ தலைவரை அனுப்புவதாக ஒப்புக் கொண்டு பிறகு பல்டி அடித்துவிட்டது. பாகிஸ்தான் இப்போது அனுப்புவதாக சொல்கிற கீழ்மட்ட ஐ.எஸ்.ஐ ஆசாமி எவ்வளவு உபயோகமாக இருக்கப் போகிறார்? முதலில் ஐ.எஸ்.ஐ தலைவரை அழைத்த நோக்கத்தின் பின்னால் உள்ள புத்திசாலித்தனமே கேள்விக்குரிய ஒன்று.

இன்னொரு வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் நம் நாட்டின் மீது இவ்வளவு பெரிய பயங்கரவாதிகளின் தாக்குதல் 4 நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்து, சுமார் 200 பேர்களைப் பலி வாங்கியிருக்கிறது. ஆனால் நம் குடியரசுத் தலைவரோ வியட்நாமிலும் இந்தோனேஷியாவிலும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். பாலித் தீவில் இந்த வார முடிவில் ஓய்வெடுப்பாராம்! இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்தான் நம் நாட்டின் முப்படைகளுக்கும் “சுப்ரீம் கமாண்டர்“!

(செய்தி – யாஹூ நியூஸ்)

இது போன்ற தீவிரவாத செயல்களில் மிகுந்த அனுபவம் உள்ள இஸ்ரேலிய அரசு இந்தியாவிற்கு உதவி செய்வதாகச் சொல்ல, இந்திய அரசு மறுத்திருக்கிறது. இஸ்ரேலிய அரசு, இந்த தீவிரவாத சம்பவத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் குழப்பம் மிகுந்ததாக இருப்பதாக குறை கூறி இருக்கிறது. இதில் இஸ்ரேலை நொந்து கொள்வதில் பயன் இல்லை. நமது நிலைமை அப்படித்தானே இருக்கிறது. ஆங்காங்கே நடக்கிற தீவிரவாத செயல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தும் அரசின் நடவடிக்கைகள் தொடர்பற்ற நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவின் எந்த மூலைக்கும் சில மணிநேரங்களில் செல்லக்கூடிய வசதி இருந்தும் பொதுவாக தீவிரவாத தடுப்பு பிரிவு இல்லாமலே இருப்பது கவலைக்குரிய விஷயம். ஒரு நகரமே ஒரு சில தீவிரவாதிகளின் கையில் இந்த பாடுபடுமென்றால் நமது அணு உலைகளின் பாதுகாப்பு என்னவாகும் என்று நினைக்க பதைக்கிறது.

இந்தச் சம்பவங்களை காண்கிற போது மக்களில் பலரும் நினைப்பது, 2001 செப். 11 க்கு பிறகு அமெரிக்காவில் ஒரு தீவிரவாத சம்பவம் கூட நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் மாதம் தோறும் தீவிரவாத செயல்கள் நடந்தும் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய அரசு ஏன் இப்படி உறங்குகிறது என்பதுதான். எந்தப் பிரச்சினைக்கும் தீவிர வாதம் தீர்வில்லை என்பதைத் தீவிரவாதிகளுக்கு உணர்த்துவதற்கு முன் நமது அரசியல்வாதிகள் முதலில் அவ்வாறு நம்ப வேண்டும்.

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்னவோ நிரபராதிகளை மட்டுமே பாதிப்பதாக பத்திரிகைகள், மனித உரிமைக் கழகம் ஆகியவை ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ‘நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கொள்கையின் பொருள், ‘ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக, நூறு தீவிரவாதிகளைத் தப்பிக்க விடலாம்’ என்பதன்று. இனிவரும் காலங்களில் ஒருவேளை பத்து நிரபராதிகள் தண்டிக்கப் பட நேர்ந்தாலும்கூட ஒரு தீவிரவாதியையும் தலையெடுக்க விடக் கூடாது என்கிற அளவில் அரசு தீர்மானமாக போடா (POTA) சட்டத்தை விட கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். இந்தியா உறக்கத்திலிருந்தும், செயலின்மையிலிருந்தும் விழித்தெழ வேண்டிய தருணம் இது.

3 Replies to “விழித்தெழு இந்தியா!”

  1. என் மனத்தில் தோன்றிய் கருத்துக்களை பிரதி பலித்துள்ள‌து உங்கள் கட்டுரை.

    இதற்குமுன் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்குப்பின் இதுபோன்ற பயங்கரவாதம் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருந்தால் தற்போது இவ்வளவு அப்பாவிகள் மற்றும் சிறப்பான போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உயிர்களையும் பலி கொடுத்திருக்கமாட்டோம் என்பது நிஜம்.

    இன்றைக்கு சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்திருக்கிறார். இதை முன்னமையே செய்திருக்கலாம். அவர் சோனியாவின் பெரிய ஜால்ரா எனபதற்காக‌ நாட்டின் பாதுகாப்பையே கேலிக்கூத்தாக்கும் இந்த விலையை நாடு கொடுத்திருக்கிறது.

    இந்த மும்பை நிகழ்வுக்கு சோனியா காந்தி தலைமையிலான காங்கிரசே முழுப் பொறுப்பு என்பது இந்தியாவிலிருக்கும் பெரும்பான்மையோருக்கு நிச்சயமாகத் தோன்றியிருக்கும்.

    நன்றி

  2. சரியாக சொன்னீர்கள்.
    ஆனால் இங்கே அரசாங்கமோ தீவிர வாதத்தை எதிர்ப்பதில் உண்மையான அக்கறையுடன் முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை.
    எந்த நாட்டில் எப்படி நிகழும்? பாடில் என்னவென்றால் என். எஸ். ஜி அனுப்பப்படும் விஷயத்தை டி வி யில் சொல்கிறார்.
    ஊடகங்களோ தெளிவாக அதிரடி படைகளின் திட்டங்களை எடுத்து சொல்கின்றன.
    இந்திய மக்களின் உயிர்கள் பைசா பெறாதவை.
    நாட்டை என்ன செய்ய காத்திருக்கிறார்கள்?
    நம்மால் முடிந்தது மனதை தேற்றிக்கொண்டு நமக்கிருக்கும் ஒரே அஸ்திரத்தை [ ஓட்டு] மக்கள் விரோத கட்சிகளுக்கு போடாமல் இருப்பதில் தேவலாம் என்ற கட்சிகளுக்கு போடலாம்.

  3. மிகச்சரியான வாதம். இந்தியர்களாகிய நாம் நேருவின் குடும்பம் விளைவித்த, விளைவிக்கின்ற குழப்பங்களால் நம் நிம்மதியை இழந்து விட்டிருக்கிறோம். நம்மில் வீரர்களுக்குப் பஞ்சமில்லை, ஆனால் அரதப் பழைய டெக்னிக்கையும் ஆயுதங்களையும் நம்பி நம் சகோதர வீரர்களின் உயிரைப் பணயம் வைப்பது முட்டாள் தனம்.

    இந்தியனே, விழித்துக் கொள். இனியும் தூங்கினாயோ, தூக்கத்திலேயே சமாதி ஆகிவிடுவாய். இது உனக்கான எச்சரிக்கை.

    மைனாரிட்டிகளை மகிழ்விப்பதற்காக எதையும் செய்யும் இந்த அரசு தூக்கி எறியப் பட வேண்டியது. இனி பொது மக்கள் சாரை சாரையாகத் தலைநகரைப் போய் முற்றுகையிட்டு இந்த அரசை பதவி விலகச் செய்ய வேண்டும். அந்த அந்நியப் பெண்மணியான அண்டோனியோ (அன்னை சோனியா என்று தவறாக அழைக்கப் படும் அவரே தான்) நல்ல வேளையில் இத்தாலிக்கு கிளப்ப வேண்டும்.

    இது மற்றுமோர் சுதந்திரப் போர். ஆனால் எதிர்க்க வேண்டியவர்கள் பரங்கியர் அல்லர். உள்ளிருக்கும் களவாணிகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *