பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்

‘புலிநகக் கொன்றை’ நாவலில் ஒரு இடம்.

மதுரையில் ஒரு படு சுமாரான லாட்ஜில் ரூம் போட்டிருப்பான் கண்ணன். கதவைத் தட்டி ராத்திரிக்கு ஏதாவது ஏற்பாடு செய்யட்டுங்களா என்று கேட்கும் சீப்பான லாட்ஜ். மார்க்சீய ஞான தாகத்துடன் அலையும் துடிப்பான இளைஞன் அவன். அவனது ரூம் முழுக்க கல்லாகக் கனக்கும் காகிதக் கட்டுகளில் மார்க்ஸ், லெனின், எங்கல்ஸ். உழைக்கும் வர்க்கத்திற்காக உயிரையே தரத் துடித்தாலும் அவனும் மனிதன் தானே.. காவியேறிய பற்களுடன் அறைக்குள் வருபவளது நாற்றத்தையும் சகித்துக் கொண்டு, அருகே இழுக்கிறான். ‘தலகாணி இல்லையா? இடுப்புக்கு அண்டக் குடுக்கணும்ல என்று சுற்று முற்றும் பார்க்கும் அவள் லெனினின் இரண்டு பாகங்களை எடுத்துக் கட்டில் மீது வைக்கிறாள்.

“… கண்ணனுக்கு முடியவில்லை. அவள் உதவி செய்யவில்லை. கடைசியில் அவள் இல்லாமலே அவனால் என்ன செய்திருக்க முடியுமோ அதைச் செய்தாள்.. லெனினுக்கு சேதமில்லை. இரண்டாம் பாகத்தின் நீல அட்டை தான் சிறிது கசங்கிய மாதிரி இருந்தது.”

‘பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்’ புத்தகத்தைப் படித்து முடித்து வைத்ததும் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்கும் நாவலின் இந்தப் பகுதி நினைவில் எழுந்தது. மார்க்சியம் புகுந்த இடங்களில் சேதம் இல்லாதது ஏதாவது உண்டா என்ற எண்ணம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எதிர்மறை சித்தாந்தங்கள் மீதான கசப்புணர்வு மனதில் பீறிட்டது.

“இந்தத் தேசத்தின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் மேலாகச் சித்தாந்தத்தை வைக்கும் எந்த அமைப்பும் இயக்கமும் ஒதுக்கப் படவேண்டியதே. இது தான் நமது வரலாறும் உலக வரலாறும் நமக்குக் கற்றுத் தரும் ஒரே பாடம்.”

என்னும் புத்தகத்தின் கடைசி வரிகளின் நிரூபணமே அதற்கு முந்தைய அத்தியாயங்களில் முழுதுமாக விரிந்து கிடக்கிறது.

புத்தகத்தை ஏற்கனவே ஹரன்பிரசன்னா அறிமுகப் படுத்தி இருக்கிறார். இது குறித்து இன்னும் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமென்று நினைக்கிறேன்.

கம்யூனிசம் பற்றிய ‘நடுநிலையான’ பார்வையை இந்த நூல் தரவில்லை. தலைப்பில் ஆரம்பித்து எல்லாமே ஒரு பக்கச் சார்புடையதாக இருக்கிறது என்று சில வாசக நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். ‘தீபத்தின் ஒளியில் திருக்குறள் படிக்கலாம், வீட்டுக் கூரையையும் எரிக்கலாம். அறிவியல் அணு குண்டையும் உருவாக்கியிருக்கிறது, உயிர் காக்கும் மருந்துகளையும் அளித்துள்ளது. அது போலத் தான் கம்யூனிசமும். அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இந்து மதத்துல கூடத் தான் எவ்வளவு மூட நம்பிக்கை இருக்கிறது’ என்றெல்லாம் குன்சாக ஒரு ‘தத்துவ’ வாதத்தை எடுத்து விடுகிறார்கள்.

உண்மையில் இது அவர்களது புரிதல் குறைபாட்டையும், கம்யூனிசம் குறித்த முழு அறியாமையையும் தான் காட்டுகிறது என்று நான் கூறினேன். கம்யூனிசம் தீபமும் அல்ல, அறிவியலும் அல்ல. அடிப்படையில் அது ஒரு சித்தாந்த வைரஸ். கம்யூனிசம் குறித்து வரலாறும், கம்யூனிசப் பிரசாரங்களுமே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் எல்லா விஷயங்களும் பிறழ்வுகளோ, வழிதவறல்களோ அல்ல. அந்த சித்தாந்தத்தின் முகங்களே அவை தான். இந்த முக்கியமான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“லெனினும் ஸ்டாலினும் மா சே துங்கும் போல் பாட்டும் காஸ்ட்ரோவும் விதிவிலக்குகள் அல்லர். அவர்களே மார்க்சிய அரசுகளின் நாயகர்கள். மார்க்ஸிய விதிகளைப் பயன்படுத்தி சர்வாதிகாரிகள் ஆனவர்கள் அல்லர் அவர்கள். மார்க்ஸிய விதிகளால் சர்வாதிகாரிகள் ஆனவர்கள். மானுட விடுதலையின் பெயரால் மானுட உயிர்களைத் துச்சமாக மதிக்கவும் அழித்தொழிக்கவும் அவர்களுக்கு மார்க்சியம் சித்தாந்தப் பயிற்சி அளித்தது. வேறு ஏதேதோ காரணங்களால் மானுட விடுதலைக்கான ஆயுதமாக அவர்கள் மார்க்ஸியத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அது, அதிகாரத்தை மனித இதயமின்றிப் பயன்படுத்தும் சித்தாந்த வலிமையை அவர்களுக்கு அளித்தது.”

– கம்யூனிஸம், பக். 144

இவ்வளவு தெளிவாக, உறுதியாக வாசகருக்கு இந்தக் கருத்தை எடுத்துரைப்பது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றி.

இந்திய அளவில், அம்பேத்கர் முதல் அருண் ஷோரி வரை பல சிந்தனையாளர்கள் கம்யூனிசத்தின் அடிப்படைகளையும், வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்துத்துவ சிந்தனையாளர்களில், சீதா ராம் கோயல், ராம் ஸ்வரூப் ஆகியோர் 1950களிலேயே ஸ்டாலினின் படுகொலைகள் பற்றி அரசல் புரசலாக வந்த செய்திகளைக் கவனப் படுத்தி கம்யூனிசத்தை நிராகரித்தவர்கள். அந்தக் காலகட்டத்தை “நேருவின் சோஷலிச காதல் முக்கோணம்” என்று துல்லியமாக புத்தகம் சித்தரிக்கிறது.

“சோவியத் யூனியன் – நேரு – இந்திய கம்யூனிஸ்டுகள் என்ற ஒரு காதல் முக்கோணத்தின் மூலம் இந்திய கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸுக்குள் இருந்த எதிர்ப்பையும் தன்னால் நிர்வகிக்க முடியும் என்று நேரு நம்பினார். கொள்கை மோகம் மட்டுமல்ல, சுய-அகங்கார நோக்கங்களும் நேருவை ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் மையல் கொள்ள வைத்திருந்தன.”

– பக், 215

காஷ்மீர் விவகாரத்திலும், 1962 சீனப் படையெடுப்பின் போதும் இந்த மையல் எந்த அளவுக்கு இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் ஊறு விளைவித்தது என்பதை விலாவாரியாக புத்தகம் எடுத்துக் காட்டுகிறது. கிருஷ்ண மேனன், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. குறிப்பாக 1962ல் சி.ஐ.ஏ தயாரித்த ரகசிய ஆவணம் (இப்போது ரகசிய நீக்கம் செய்யப் பட்டுள்ளது) கூறும் தகவல்கள் அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி செய்த தேசத்துரோகத்தின் “விஸ்வ ரூப தரிசனத்தை” நமக்கு அளிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்டுகள் எப்படி இந்தியாவின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்தெடுத்து சீனாவுடன் இணைக்கவும், இந்தியாவெங்கும் மிகப் பெரும் சட்டம் ஒழுங்கு பிரசினைகளை ஏற்படுத்தவும் அன்னிய சக்திகளுடன் கைகோர்த்து திட்டம் தீட்டினார்கள் என்பது குறித்த ஆதாரங்கள் மறுதலிக்க முடியாதவை.

‘நான் வஞ்சிக்கப் பட்டேன்’ என்று கசங்கிய காகிதத்தில் தனது கையெழுத்தில் எழுதி வைத்துச் செத்துப் போன அவர் யாரோ ஒரு சாதாரண பிரஜை அல்ல, ஒரு இந்தியப் பிரதமர். லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்தின் பின்னணியில் ஒருக்கும் கம்யூனிஸ்டு சதி வலையையும் துரோகங்களையும் ஒரு புனைவின் விறுவிறுப்புடன் எடுத்துரைக்கிறது ‘சுதந்திர இந்தியாவில் துரோகங்கள்’ எனும் அத்தியாயம். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு சோவியத் அளித்த “உதவி”க்கு இந்தியா தந்த பொருளாதார விலையை மதிப்பிட்டால், இந்தியா எப்படி பலியாடாகத் தன்னை ஒரு மாபெரும் சுரண்டலுக்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தெரிய வருகிறது. சோவியத் உளவுத்துறை ஒரு கட்டத்தில் இந்தியாவின் பிரதமரின் குடும்பம் முதற்கொண்டு இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்களையும் செய்தி அமைப்புகளையும் எந்த அளவு கட்டுப் படுத்தியிருக்கிறது என்பதைப் படித்தால் நம் ஊடகங்கள் மீது நமக்கு இருக்கும் அவநம்பிக்கை இன்னும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் 2008ம் ஆண்டில் கூட இந்தியாவில் உள்ள சீன தொழில் நிறுவனங்களில் பணிபுரிய 50,000 சீனர்களுக்கு தொழில் முறை விசாக்கள் வழங்க இந்திய அரசு நிர்ப்பந்திக்கப் பட்டது. இந்தியாவில் உள்ள சீன முதலீட்டு நிறுவனங்களில் இந்திய உழைப்பாளிகளைத் தவிர்த்து விட்டு, சட்டவிரோதமாக சீனர்களை நேரடியாக சீனாவிலிருந்து இறக்கிக் கொள்ள சீனா கடைப்பிடிக்கும் வழிமுறை இது. இதற்கான அரசியல் நெருக்கடியை உருவாக்குவது இந்திய இடது சாரிகள். (பக் – 251). சீனாவிலேயே கம்யூனிசப் பாசக் கயிற்றின் முறுக்குகள் பொசுங்கி, அந்த நெருப்பில் சீன அரசபோக வர்க்கமும், ஊழல் பெருச்சாளிகளும் சுருட்டு பிடித்துக் கொண்டிருக்க, இங்கே துரோக வரலாறு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

*****

பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ
நன்னலப் புள்ளினங்காள்

என்று வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் பார்த்து நம்மாழ்வார் பாடுகிறார். சுதந்திர ஞானத் தேடலையும், அனைத்து உயிர்களையும் அரவணைக்கும் மானுட நேயத்தையும் எக்காலத்தும் போற்றிக் கடைப்பிடிக்கும் ஒரு பண்பாட்டில் எழுந்த கவிக்குரல் அது.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில் பொன்னுலகக் கனவை உலகெங்கிலுமாக முன்வைத்து வைரஸ் போலப் பரவிய கம்யூனிச சித்தாந்தம் உலகுக்கு அளித்ததெல்லாம் இருட் கொடைகள் மட்டுமே.

இன்றைக்கு தமிழ் நாட்டில் தங்கள் மூளையைத் தொலைத்த இளைஞர் கும்பல் ஒன்று சே குவேராவின் படத்தை டி ஷர்ட்களில் அணிந்து கொண்டு திரிகிறது. புரட்சி பற்றி சே குவேரா சொன்ன இந்தப் பொன்மொழியையும் சேர்த்து அந்த டி ஷர்ட்கள் வெளியிடப் பட்டால், இந்த புரட்சி நாயகனைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள இன்னும் வசதியாக இருக்கும் –

‘போராட்டத்தில் வெறுப்பு ஒரு முக்கியமான அம்சம். எதிரியை எல்லா விதத்திலும் வளைந்து கொடுக்காத விதமாக வெறுக்க வேண்டும். அந்த வெறுப்பு ஒரு மனிதனை அவனது இயற்கையின் விளிம்புக்கே கொண்டு செல்ல வேண்டும். திறமையான, வன்முறை நிறைந்த, பச்சை ரத்தத்தில் தயக்கமின்றித் தேர்ந்தெடுத்துக் கொன்று குவிக்கும் இயந்திரமாக அவனை அந்த வெறுப்பு மாற்ற வேண்டும். இதையே நாம் நம் போர் வீரர்களிடம் எதிர்பார்க்கிறோம்..”

– பக். 268

கம்யூனிசத்தின் ஆரம்ப கணங்களிலேயே அதன் ரத்தவெறியும் வன்முறையும் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டது. ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று வாழ்த்துச் சொன்ன பாரதியார், அதற்கடுத்த வருடம் தான் எழுதிய ஒரு கட்டுரையில், ஸ்ரீமான் லெனின் தனது எதிராளிகளைக் கொன்றொழிக்கும் உபாயங்கள் முற்றிலும் தர்ம விரோதமாக இருப்பதாகவும் அவை ஏற்கத் தக்கவை அல்ல என்றும் பதிவு செய்திருக்கிறார்.

எதிராளிகள் மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்துக்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறந்து இயக்கத்தில் சேர்ந்த காம்ரேடுகளின் பெரும் பகுதியினர் எப்படி கம்யூனிச சர்வாதிகாரத்தாலேயே வேட்டையாடி அழிக்கப் பட்டனர் என்பது பற்றிய வரலாறுகள் பதற வைப்பவை. இந்த வேட்டையில் லெனின், ட்ராட்ஸ்கி, சே குவேரா யாருமே தப்பவில்லை. இவற்றை ஒரு பறவைப் பார்வையாக, அதே சமயம் உணர்ச்சி குன்றாமல் கச்சிதமாக புத்தகம் விவரித்துச் செல்கிறது.

‘எனக்கு விஷமிடப் பட்டுள்ளது, என் மனைவியிடம் சொல்லுங்கள்’ என்று கடைசி கணங்களில் தன் சமையல் காரரிடம் கதறுகிறார் லெனின். மானுட சமத்துவத்தைத் தன் அறிவின் வீச்சால் சிந்தித்தலைந்த டிராட்ஸ்கியின் தலை ஸ்டாலினின் ஏஜெண்டால் பனிப்பாறைகள் உடைக்கும் கோடாலியால் பிளக்கப் படுகிறது. புகாரினின் கண்ணீரும் ரத்தமும் என்றென்றைக்குமாக வற்றாமல் ‘பின் தொடரும் நிழலின் குரலாக’ தமிழ் இலக்கிய வாசகனின் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. முதலாளித்துவ சதியை மிஞ்சும் வகையில் “சோஷலிச சதி” செயல்பட்டு சேகுவேராவைச் சித்திரவதை செய்து கொன்று அவரை “என்றென்றைக்குமாக புரட்சியின் போஸ்டர் பையனாக” மாற்றுகிறது.

தன்னை மோதியவர்களையும், அணைத்தவர்களையும், உரசியவர்களையும் மட்டும் அழிக்கவில்லை இந்த சித்தாந்தம். அது பரவிய பிரதேசங்களில் வாழ்ந்த மனிதத் திரள் முழுவதன் மீதும் அதன் கொடுங்கரம் இறுகியது.

“மாவோவின் ராஜ்ஜியம் முடிவடைந்த போது, மிகக் குறைவாக மதிப்பிட்டப் படும் கணக்குகளின் படி – அதாவது கட்சியின் சொந்தக் கணக்குகளின் படி, 2,50,000* முதல் 5,00,000 சீனர்கள் மாவோவுக்குப் பலி கொடுக்கப் பட்டிருந்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி 1966-69ல் நான்கு லட்சம் மக்கள் இறந்ததாக ஒப்புக் கொள்கிறது. டெங் ஜியோபிங் சொல்லும் கணக்கின் படி கட்சி நடத்திய கும்பல் வன்முறைகளில் 10 லட்சம் சீனர்கள் இறந்தனர். 1966ன் இலையுதிர் காலத்திலும் வசந்த காலத்திலும் மட்டும் கட்சி உறுப்பினர்களில் மார்க்சியக் கொள்கைக்கு எதிரானவர்கள் எனக் கண்டுபிடிக்கப் பட்டுக் களை எடுக்கப் பட்டவர்கள் 4 லட்சம் என்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மார்ஷல் சென் யீ.”

– பக், 156 (* – புத்தகத்தில் 2,50,0000 என்று ஒரு 0 கூடுதலாக அச்சாகியிருக்கிறது)

வர்க்க எதிரிகள், குலாக்குகள், களைகள், துரோகிகள், பிற்போக்குவாதிகள் என்று முத்திரை குத்தப் பட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாகப் படுகொலை செய்யப் பட்டதைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது, மரணங்கள் வெறும் புள்ளி விவரங்களாக ஆகி விட்ட நிதர்சனம் மனதைச் சுடுகிறது.

மார்க்சிய சித்தாந்தக் கருத்துக் குருடர்கள் திட்டமிட்டு உருவாக்கிய பஞ்சங்களால் மக்கள் நரமாமிசம் உண்ணும் நிலைக்குத் தள்ளப் பட்டு, ஏன் தங்கள் குழந்தைகளையே சமைத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப் பட்ட அவலம் பற்றிய சித்தரிப்புகள் எந்த இரும்பு நெஞ்சத்தையும் உலுக்கிப் போடக் கூடியவை. Churchill’s secert War புத்தகம் விவரிக்கும் பிரிட்டிஷார் உருவாக்கிய 1942-43களின் வங்காளப் பெரும் பஞ்சம் பற்றிய விவரணங்களைப் படித்த போது அதிர்ந்திருக்கிறேன். ஆனால் மார்க்சியப் பஞ்சங்களின் கொடூரங்கள் அதைத் தூக்கிச் சாப்பிடுவதாக உள்ளன.

‘திபெத்தில் எரிந்த நாலந்தா’அத்தியாயத்தைப் படித்து முடித்த போது, காட்டெருமையின் குளம்புகளில் சிக்கிக் கொண்ட குழந்தை என்று வெங்கட் சாமிநாதன் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வர்ணனை தான் மனதில் எழுந்தது. நமது மார்க்சிய சமூகவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கி.பி. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் வைதீக இந்து மதம் பௌத்தத்தை அராஜக வன்முறைகள் மூலம் அழித்தது என்று சலிக்காமல் கதையாடல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இவை சம்பந்தமில்லாத உதிரித் தகவல்களைச் சேர்த்து, சட்டகங்களின் அடிப்படையில் புனையப் பட்ட ஊகங்கள். அடுத்த முறை ஒரு மார்க்சியவாதி அப்படிப் பேசும் போது அவர் முகத்துக்கு நேரே நீங்கள் நீட்ட வேண்டியது இந்த அத்தியாயம். புத்த மத பெண் துறவிகளை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தது, பல நூற்றாண்டுகளாக பௌத்த புனித பாரம்பரியம் கொண்ட லாமாக்களைப் படுகொலை செய்தது, தங்கள் மடாலயங்களையும் புனித நூல்களையும் திபெத்தியரைக் கொண்டே எரியூட்டச் செய்தது, புத்தமதத்தைப் பின்பற்றிய ஒரே காரணத்துக்காக சிறைச்சாலைகளில் மலச் சட்டிகளில் உணவுண்ண வைத்தது, கம்யூன்கள் என்ற பெயரில் பள்ளிகள் உருவாக்கி திபெத்தியர்களை முற்றாக மூளைச் சலவை செய்து புத்தமதத்தை அவர்கள் மனங்க்ளில் இருந்து அழிக்கத் திட்டமிட்டது. 20,000க்கும் மேற்பட்ட பழம்பெருமை வாய்ந்த திபெத்திய தெய்வ விக்கிரகங்களை உலோகமாக உருக்கி ஓடவிட்டது, திபெத்திய மக்கள் தொகையைக் குறைக்க நச்சு ஊசிகள் மூலம் கிராமங்களில் கருக்கலைப்பு செய்தது … இப்படி கடந்த 60 ஆண்டுகளில் பௌத்த மதத்திற்கு மிகப் பெரும் சேவை புரிந்த சித்தாந்தம் எது என்று அவர்களிடம் கேளுங்கள். புத்தனின் பெயரை உச்சரிக்கக் கூட, மார்க்சியவாதி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் எவருக்கும் தார்மீக உரிமை கிடையாது.

இத்தகைய புத்தகத்திற்கு மிகவும் தேவைப்படும் ஒரு குரூர நகைச்சுவைப் பரிமாணத்தை அளிப்பவை சர்வாதிகாரிகளின் பாலியல் கள்ள உறவு குறித்த துணுக்குகளும், மற்றும்’அறிவியலும் மார்க்சியமும்’ என்ற அத்தியாயமும். லெனினின் மூளை எப்படி மற்ற மேதைகளின் மூளையை விட உயர்தரமானது என்று நிரூபிக்க நடக்கும் பரிசோதனைகள். மன நிலை சரியில்லாதவர்கள் குறித்த மாவோவின் அரசு நடைமுறைகள். ஒரே இனச் செடிகள் பக்கத்தில் பக்கத்தில் நடப்பட்டால் வர்க்க ஒற்றுமையுடன் போட்டி போடாமல் வளரும் என்ற அபார கண்டுபிடிப்பு. இவையெல்லாம் படிப்பதற்கு உண்மையிலேயே சுவாரசியமாக இருக்கின்றன. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அறிவியல் அறிஞர்களையும் பலி கொண்டுள்ளது மார்க்சியம் என்பது நம் சூழலில் பலர் அறியாதது. நிகோலாய் வாவிலோய் என்ற அறிவியல் அறிஞரின் வாழ்வு மிகவும் பரிதாபகரமானது. பள்ளிகளில் பாடமாக வைக்கப் பட வேண்டியது. சூழலியலை உலகளாவிய இயக்கமாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு பெருமளவில் இருந்தும், எப்படி தங்கள் சித்தாந்தக் குருட்டுத்தனத்தால் மார்க்சியர்கள் அந்த வாய்ப்பைத் தவற விட்டனர் என்பதையும் நேர்மையுடன் அலசுகிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிசம் முழுவதுமே இப்படித் தான் என்றால், ஈ கே நாயனார், நல்லகண்ணு போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் அந்த அரசியல் முகாமில் இருப்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி இயல்பாக எழக் கூடியதே. ‘தவளை மனிதர்களின் மனவியல்’ என்ற கடைசி அத்தியாயம் இந்த பிரசினை குறித்து அறிவு பூர்வமாக ஆராய்கிறது. டபிள்யூ.ஆர்.வரதராஜன் போன்று கடைசி வரை மார்க்சியராக வாழ்ந்து கடாசப் பட்டவர்களும், சுந்தர ராமசாமி போன்று தன் சிந்தனை முதிர்ச்சியால் சித்தாந்த இருட்சிறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களுமாக, இரண்டு தரப்புக்கும் உதாரணங்கள் நம் சூழலில் உள்ளன. இவ்வளவு தூரம் கம்யூனிச வரலாற்றை அறிந்து கொண்ட பிறகு, மானுட நேயத்தில் வேரூன்றிய வைணவ மரபில் பிறந்து வளர்ந்திருந்தும் எப்படி எஸ்.என்.நாகராஜனை மார்க்சிய சித்தாந்தம் கருத்தளவில் சே குவேராவுக்கு ஈடான வெறுப்பாளராகவே மாற்றியது என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதில்லை. ஆனால் இந்த நாகராஜனை எப்படி ஜெயமோகன் தமிழின் நவீனகாலத்திய “முதற்சிந்தனையாளர்களில்” ஒருவர் என்று பட்டியலிடுகிறார் என்பது உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது.

இந்தியாவில் நக்சல் இயக்கம், மாவோயிஸ்டு பயங்கரவாதம் என்று சிலவற்றுக்கு அப்பால் கம்யூனிசத்தின் வன்முறைக் கொடும் கரம் பரவ முடியவில்லை என்பது உண்மையில் ஆறுதல் தரும் விஷயம். ஆனால் இதற்குக் காரணம் கம்யூனிசம் அல்ல. புரட்சிக்கு இடையூறாக இந்திய மார்க்சியர்கள் எப்போதும் கருதி வந்த இந்து மதமும், இந்தியப் பண்பாடும், காந்தியமும், இந்திய ஜனநாயக அரசியல் அமைப்புமே இதற்குக் காரணம். அரசியல் கடைதலில் தோன்றிய கம்யூனிச விஷத்தையும் தன் வீரியத்தால் உண்டு அழியாதிருக்கும் திருநீலகண்டமாக இந்தியப் பண்பாடு திகழ்கிறது. கருத்தளவில் அதே தன்மையைக் கொண்டிருந்தும் கூட ஏன் ஆரிய – திராவிட இனவாதம் இந்தியாவில் ருவாண்டாவைப் போல இனப்படுகொலைகளை நிகழ்த்தவில்லை என்பதற்கான விடையையும் இதனுடன் இணைத்து சிந்தித்துப் பார்க்கலாம்.

*****

கம்யூனிசம் ஏற்கனவே அடித்துத் துவைத்துப் பிழியப் பட்ட சப்ஜெக்ட் தானே என்று கேட்கலாம். ஆனால் இத்தகைய ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு அரவிந்தன் நீலகண்டன் தந்திருக்கும் உழைப்பு சாதாரணமானதல்ல. புத்தகத்தின் இறுதியில் சான்றுக் குறிப்புகளே (References) 26 பக்கங்களுக்கு இருக்கிறது. அனேகமாக எல்லா சான்றுகளுமே கம்யூனிஸ்டுகளே வெளியிட்டுள்ள பல நூல்களில் இருந்தும், ரஷ்ய, சீன பதிப்புகளில் இருந்துமே தரப்பட்டிருப்பது குறிப்பிட்டுக் கவனிக்க வேண்டியது. கடிதங்கள், அரசு ஆவணங்கள், பத்திரிகை செய்திகள், சோவியத் பிரசுரங்கள் என்று சான்றளிக்கப் பட்ட தரவுகளின் வீச்சும் பரந்து பட்டதாக இருக்கிறது. மேலும், கம்யூனிசம் பற்றிய மற்ற புத்தகங்களில் நீங்கள் அறிய வராத சில விஷயங்களையும் இந்தப் புத்தகம் கவனப் படுத்துகிறது. பொது வாசகர்கள் படிக்கும் படியும் இருக்க வேண்டும், அதே சமயம் தீவிர கம்யூனிச சித்தாந்திகளும் மறுதலிக்க முடியாதபடி உறுதியான ஆதாரங்கள் தர வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார் அரவிந்தன். ஒரு ஆய்வு நூலுக்கான ஆழமும், நல்ல வெகுஜன அபுனைவுக்கான கச்சிதமும் எளிமையும் இணைந்த ஒரு நூல் இது என்று சொல்வேன்.

சில எடிட்டிங் பிழைகளும், அச்சுப் பிழைகளும் உள்ளன. உதாரணமாக,பெரியா என்பவரை அறிமுகப் படுத்தும் முன்பே அவரது கொலை சாகசங்க்ள் வந்துவிடுகின்றன. ஒருசில இடங்களில் வருடக் கணக்கு சரியாக இல்லை. கம்யூனிசத்தின் அழிவு சக்தியைப் பற்றி சந்தேகம் எதுவும் இல்லை என்றாலும் சில புள்ளிவிவரங்களில் எண்கள் தவறுதலாக அச்சிடப் பட்டிருக்கலாமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்தச் சிறு குறைகள் அடுத்த பதிப்பில் களையப் படவேண்டும்.

ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ தமிழில் கம்யூனிசத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய அமரத்துவம் வாய்ந்த இலக்கியப் படைப்பு. ஆனாலும், அது ஒரு புனைவு என்பதால் புனைவிற்கே உரிய அதன் நெருக்கம், அதே சமயம் அதன் எல்லைகள் இரண்டையும் அதைப் படிக்கும் வாசகர்கள் கருத்தில் கொள்ளக் கூடும். தமிழில் புறவயமாக கம்யூனிசத்தை ஆதார பூர்வமாக விமர்சிக்கும் ஒரு நல்ல சமகால அபுனைவு நூல் இல்லாதிருந்தது. அந்த வகையில் அரவிந்தன் நீலகண்டனின் இந்தப் புத்தகம் தமிழுக்கு ஒரு கொடை.

சொல்லப் போனால் ஆங்கிலத்தில் கூட கம்யூனிசத்தை ஒட்டுமொத்தமாகவும், இந்தியப் பார்வையிலும் விமர்சிக்கும் இத்தகைய ஒரு நூலை சமீபத்தில் இந்திய எழுத்தாளர் யாரும் எனக்குத் தெரிந்து எழுதவில்லை. எனவே இது தேசிய அளவிலும் ஒரு முக்கியமான நூலாகிறது. இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட வேண்டும்.

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம்
ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்

பக்கங்கள்: 312
விலை: ரூ. 160

வெளியிட்டோர்:
கிழக்கு பதிப்பகம்
177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை – 600 014

இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்குப் பதிப்பக அரங்கில் கிடைக்கும்.
இணையம் மூலம் வாங்க: https://www.nhm.in/shop/

18 Replies to “பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம்”

  1. அருமயான விமர்சனம்.. அரவிந்தன் அவர்களின் பங்களிப்பு இந்தியா முழுவதும் தேவை..குறிப்பாக தமிழகத்துக்கு மிகவும் அதியவசியம்..

    ஒரு பாறை எந்த இடத்தில வலுஅற்றதாக இருகின்றதோ அந்த இடத்தை அளவில் சிறியதாக உள்ள உளி வைத்து தகர்த்தல் அந்த பாறை முழுவதும் தகர்க்க படும்.. இந்திய என்ற பாறை இன்று தனித்தமிழ் தேசியம் என்ற உளி கொண்டு தகர்க்க நடக்கும் முயற்சிகள் முறியடிக்க படவேண்டும்..

    ஆனால் என்மனத்தில் அரவிந்தன் போன்ற படைபாளிகளுக்கு எந்த சூழ்ச்சி மற்றும் அச்றுத்தல் நிகழாமல் எல்லாம் வல்ல கடவுளை நாம் வேண்டுவோம்..

  2. இன்றே வாங்கிப்படித்து பயனுறுகிறேன்.
    திரு,அரவிந்த நீலகண்டருக்கும்;தமிழ்ஹிந்து வலை தளத்திற்கும் நன்றி.

  3. அய்யா நம்ம ஊர்ல யாரவது செத்து போயிட்டா அவர்கள் போட்டோவில் அவர் பிறந்த மற்றும் இறந்த தேதி எழுதி வைப்பார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் படத்துக்கு கீழே அவர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கையை தான் எழுத வேண்டும். தமிழிலே கம்யுனிச சிந்தனைவாதிகள் அதிகம், அனால் நம் அரவிந்தன் நீலகண்டன் ஒருவர் போதும் அவர்களை புற முதுகு காட்டி ஓட செய்வதற்கு.

  4. Communism நல்ல system களில் ஒன்று என்று தான் நினைத்திருந்தேன். இக்கட்டுரையைப் படித்ததில் என் எண்ணம் சரியல்ல என்று தெரிகிறது. ‘பஞ்சம், படுகொலை, பேரழிவு’ என்னும் புத்தகத்தின் தலைப்பை அப்படியே கட்டுரையின் மையக் கருத்து பிரதிபலிக்கிறது. Growing naxal menace என்னும் தலைப்போடு கூடிய படம் Communism இந்நாட்டை எந்த அளவு இறுக்கிப் பிடித்திருந்து அழித்து வருகிறது என்கிற உண்மைச் சித்திரத்தைத் தருகிறது. எல்லாம் இருந்தும் இந்தியப் பண்பாடு Communism என்னும் ஆலஹால விஷத்தையும் ஜீரணம் செய்கிறது என்பது ஆறுதல் தும் விஷயம்.

  5. இந்த நூல் குறித்த ஒரு மின் அஞ்ச்ல் விவாதத்தில் அ.நீ சில கருத்துக்களை அருமையாக சொல்லியிருந்தார்.. வாசகர்களுக்காக அவற்றையும் கீழே பதிவு செய்கிறேன்.

    ————–

    இந்த நூல் மார்க்ஸியத்தின் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கிறது.
    பொன்னுலக கனவு, சமத்துவம் இத்யாதி இந்த சிந்தனைகள் மார்க்ஸுக்கு
    முன்னரும் பலகாலமாக மேற்கில் இருந்தன. ஆனால் மார்க்ஸ் அந்த சோஷலிச
    பார்வைகளிலிருந்து எப்படி மாறுபட்டார்? அவர் முன்வைத்த
    வரலாற்றுப்பார்வையில் ஆதாரமாக இருந்த தவறுகள் என்ன என்பதை வைத்தே இந்நூல்
    அந்த ஆதார பிழைகளின் நீட்சியாக கம்யூனிசம் நடத்திய மானுடத்துக்கு எதிரான
    பெருங்குற்றங்களை காண்கிறது. இந்நூலின் மைய அச்சு கவனிக்காமலே போகக்
    கூடும். ஏனெனில் அதிக சுவாரசியம் இல்லாத ஒரு பாராவுக்குள் அல்லது சில
    பக்கங்களுக்குள் அது உள்ளது. அந்த மைய அச்சைப் பிடித்தால் அதன் ஊடாக
    மார்க்ஸியம் புரிந்த படுகொலைகளையும் இன ஒழிப்புகளையும் புரிந்து கொள்ள
    முடியும். நாசிகள் செய்த படுகொலைகளில் -ஹிட்லர் திட்டமிட்டு செய்த அந்த
    அசாத்திய திறமையுடனான வதை முகாம்களில் கூட ஹிட்லரின் பைத்தியக்காரத்தனம்,
    அவனது விளக்கமுடியாத உன்மத்தம் இருந்தது. ஆனால் லெனினோ ஸ்டாலினோ மாவோவோ
    செய்த அதே திறமையுடனான படுகொலைகளில் அந்த உன்மத்தத்தை காணுவது கடினம்.
    அதன் பின்னால் இருந்த தெளிவான சித்தாந்த சமன்பாடுகள் மார்க்ஸிலிருந்தே
    பெறமுடிந்தவை. உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனஒழிப்பை எவ்வித
    உணர்ச்சி எழுப்பலும் இல்லாமல் அதற்கான ‘நியாயமான’ காரணங்களுடன் வரலாறு
    சார்ந்து பேசிய பெருமை மார்க்ஸியத்தின் ஆதி பிதாமகர்களுக்கு உண்டு. அதை
    இந்த நூல் சொல்கிறது.

    இந்த நூல் பிரச்சார நூலா அல்லது மார்க்சியத்தை விமர்சனம் செய்யும் நூலா
    அல்லது மார்க்சிய எதிர்ப்பு நூலா என்பது வாசகர்களின் மனநிலையைப்
    பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் நாம் மார்க்சியத்தை நிராகரிப்பவன்.
    ஆனால் என்னால் இயன்றவரை நடுநிலைமை சார்ந்த நிராகரிப்புடனேயே
    மார்க்ஸியத்தை இந்நூலில் அணுகியுள்ளேன். உதாரணமாக அடிமை முறை குறித்த
    மார்க்ஸின் பார்வையை இப்படி இந்நூல் முன்வைக்கிறது:
    —–
    “அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மார்க்ஸ் தீவிரமாக
    இருந்தார். ஆனால் அடிமைமுறை என்பது வரலாற்றில் ஓர் அத்தியாவசியமான நிலை
    என்பதில் அவருக்கு மாற்றுக்கருத்து இருக்கவில்லை. 1847 இல் மார்க்ஸ்
    எழுதினார்: “நேரடியான அடிமைமுறை என்பது ஆலை உற்பத்திக்கு இயந்திரங்கள்
    போலவே முக்கியமானது. அடிமைமுறை இல்லாமல் உங்களுக்கு பருத்தி கிடையாது.
    பருத்தி இல்லாமல் நவீன தொழிற்சாலைகள் இல்லை. அடிமை முறையே காலனிகளுக்கு
    அதன் மதிப்பை அளிக்கிறது. காலனிகளே உலக வர்த்தகத்தை உருவாக்கியுள்ளன.
    உலகவர்த்தகமே பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன. எனவே அடிமைமுறை
    என்பது மிகவும் முக்கியத்துவம் கொன்ட ஒரு பொருளாதார வகைப்பாடு ஆகும். உலக
    நாடுகளிலேயே முற்போக்கான நாடான வடஅமெரிக்கா அடிமைமுறை இல்லையென்றால்
    பிற்போக்குத்தனத்தில் மூழ்கிவிடும். அமெரிக்கா இல்லையென்றால் நவீன
    வர்த்தகமும் பண்பாடும் இல்லாமல் போய்விடும். அடிமை முறை இல்லையென்றால்
    அமெரிக்காவே இல்லாமல் போய்விடும்.” கார்ல்மார்க்ஸ் அடிமைமுறையை
    ஆதரிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் குறிப்பிட்டாகவேண்டும். ஆனால்
    கருப்பின அடிமைமுறையை ஒரு பொருளாதார வகைப்பாடாக மட்டுமே காணும் மார்க்ஸிய
    முறையில் ஒரு மனிதத்தன்மையின்மை இருக்கிறது. பிற மனிதர்களை மதிப்பிழக்கச்
    செய்யும் முறை இருக்கிறது. மார்க்ஸிய மொழியாடலில் இது ஐரோப்பியப் பண்பாடு
    சாராத பிறசமுதாயங்களை முழுக்க மனிதத்தன்மை இல்லாமல் ஆக்கும் விதத்தில்
    பயன்படுத்தப்படுகிறது. பின்னாட்களில் மார்க்ஸியத்தை ஏற்காத சுதேசியப்
    பண்பாடுகளை இதேபோல மனிதத்தன்மையற்ற விதத்தில் முத்திரை குத்த இது
    முன்னோடியாக உள்ளது.”
    ——-

    ஆம் மார்க்ஸிய எதிர்ப்பாளர்களுக்கு இந்நூல் நிச்சயமாக மார்க்ஸிய
    எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு பயன்படும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்நூல்
    மார்க்ஸியத்தின் ஆதார மனிதத்தன்மையற்ற சில முக்கிய புள்ளிகளையும்
    அப்புள்ளிகளில் தொடங்கி மானுட பேரழிவாக அலைவீசிய ஒரு பேரிடர் நிகழ்வையும்
    இணைத்து பேசுகிறது. இந்துத்துவமோ அல்லது ஏன் இந்திய அரசின் மிக மோசமான
    தவறுகளோ கூட மார்க்ஸியம் நிகழ்த்திய மானுட சோகத்துடன் ஒப்பிட்டால்
    எவ்விதத்திலும் அது அத்தனை பெரியதாக அமைந்ததே கிடையாது. இந்நூலை பிரச்சார
    நூலாக ஒதுக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஏனெனில் அதுதான் மிகவும்
    வசதியான எளிமையான நிராகரிப்பு.

    அன்புடன்,
    அ.நீ

  6. எனக்கு இந்த கம்யுனிசம் தத்துவம் எல்லாம் புரிவதில்லை. அனால் ஒன்று தெரியும். எந்த மோசமான பிரச்சினை, இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருந்தாலும் என்றுமே சேவைப் பணிகளில் ஈடுபட்டதில்லை. சுனாமியில் சென்னையில் பட்டினபாக்கத்தில் நான் பார்த்த ஒருகாட்சி. நூற்றுக்கணக்கான மக்கள் பரபரப்பாக ஓடி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர்.சாமான்களை எல்லாம் பிளாட்பாரத்தில். மக்கள் முகத்தில் பீதி. ஐந்து ஆறு கம்யுனிஸ்ட் இளைஞர்கள் கையில் பானர்பிடித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கு என்று எந்தவிதமான பரபப்பும் இல்லாமல் கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

  7. A. K. Chandramouli ji,

    An ounce of reality is worth thousands of words !

    Very nicely put sir.

    .

  8. அவர்களுக்கு எப்படி நம் பாரத தத்துவ தரிசன சாரம் புரிவதில்லையோ,அதே போல் எனக்கும் கம்யுனிச தத்துவம் ஒன்றுமே புரிவதில்லை ஆனால் அவர்கள் இல்லை என்றால் சில முதலாளிகள் இதற்கு மேலும் தொழிலாளர்களை சுரண்டி கொண்டிருப்பார்கள் என்பது என் சொந்த கருத்து. இயற்கை எல்லாவற்றையும் ஒரு சமன படுத்துவதற்காக பலவற்றை உருவாக்கிஉள்ளது. அதில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

    அதே சமயத்தில் திரு. சந்திர மௌலி -யின் கருத்தை நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன். மனிதர்கள் எல்லோரையும் ஏதோ ஒரு நிறத்துடன் (முதலாளி, தொழிலாளி, என்பது போலே] பார்ப்பதுதான் காரணமோ?

  9. இடது சாரிகள் மட்டுமல்ல…..அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீகளும் அயோக்கியர்கள்தான்….

    எழுத்தாளர் பிரபஞ்சன் சமீபத்தில் ஒரு கட்டுரையில் தாம் மேடையில் பேசுவதை விரும்பாமல் இருந்ததாகவும், பாபர் மசூதி இடிப்புக்கு பிறகே மேடைகளில் பேச ஆரம்பித்ததாகவும் எழுதியுள்ளார்……ஒரு வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டது தம்மை அந்த அளவு பாதித்து ,பொங்கி எழ வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்…..

    அதே பிரபஞ்சன் , புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்புகளை வைத்து மானுடம் வெல்லும், வானம் வசப்படும் என்று இரண்டு நூல்களை எழுதியுள்ளார்…..அதில் ஒரு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வேறு கிடைத்தது….[ இந்த சாகித்ய அகடமி விருதில் உள்ள அரசியல் தனி ]…….திரு .ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து நாவல் எழுதிய பிரபஞ்சன் வேதபுரீஸ்வரர் கோவில் இடிப்பை பற்றி மழுப்பியுள்ளார்…..ஏன் வேதபுரீஸ்வரர் கோயில் வழிபாட்டுத்தலமாக பிரபஞ்சனுக்கு தெரியவில்லையா?

  10. Another book can be written just by replacing the word communism with Abhrhamic religions.

  11. இந்த புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. இவ்வளவு அபத்தமான ஒரு விமர்சனக்கட்டுரையைப் படித்த பிறகு புத்தகத்தின் லட்சணம் தெரிந்து போனது. என்னைக் காப்பாற்றிய தமிழ்ஹிந்துவுக்கு நன்றி.
    ச.ராஜசேகரன்

  12. அன்புள்ள ராஜசேகரன் ,

    சிறந்த கட்டுரையை அபத்தம் என்று சொல்லியுள்ள தாங்கள், அது ஏன் அபத்தம் என்று கருதுகிறீர்கள் என்று ஒரு காரணமும் சொல்லவில்லை. தாங்கள் ஒரு மூளைச்சலவை செய்யப்ப்பட்ட முன்னாள் கம்யூனிஸ்டு என்பது தெளிவாகிறது. சிறிதாவது மனித தன்மையுடன் எழுத கற்றுக்கொள்ளுங்கள். கம்யூனிசம் ஒரு பேமானித்தனம் என்பதை பல விளக்கங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளனர் பலரும்.இதே தமிழ் இந்து தளத்தில் பல்வேறு கட்டுரைகளில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கைகள் உலகம் முழுவதும் இன்று கண்டிக்கப்பட்டுவருகின்றன.

    ஒன்று: கம்யூனிசம் ஜனநாயகத்துக்கு எதிரானது.

    இரண்டு:- தனி மனிதனின் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, மாற்றுக்கருத்துக்களை பகிர்ந்து, விவாதிக்கும் உரிமை ஆகியவற்றை அழிக்கும் தீய சக்தி கம்யூனிசம்.

    மூன்று:- கம்யூனிசம் என்பது வளத்தை பங்கு போடுவது அல்ல. வறுமையை அதிகப்படுத்தி , வறுமையை பங்கு போடுவது.

    நான்கு:- கம்யூனிசத்தை பின்பற்றினால், நாடுகளும்,வீடுகளும் நாசமாகும். l

  13. மு,ஜெயராம்
    பொதுவாக நான் எழுத்தாளர்களை மதிப்பவன் காரணம் அவர்கள் எப்பொழுதுமே உலகம் சார்ந்த விசயங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்,
    ஆனால் இந்த விமர்சனத்தை எழுதியவரை அப்படி சொல்வதற்கு மனம் சற்று தயங்குகிறது, காரணம் ஒரு புத்தகத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் இந்த பூமியில் 5ல் ஒரு பங்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தத்துவத்தை கொச்சைப்படுத்த துணிந்திருக்கிறார்,
    அதுவும் கூட பரவாயில்லை இன்றைக்கு இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் போடும்போது ஒவ்வொரு ஐந்து ஆண்டுத்திட்டம் முன்வைக்கப்படுகிறது, அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது, (இல்லை) அதில் நீங்கள் சொல்லக்கூடிய நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஆட்சியாளர்கள் அதில் எத்தனை கோடி ஆட்டையைப் போடுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இந்த ஐந்து ஆண்டுத் திட்டங்களை உலகில் எந்த நாடு எந்த நாட்டின் தலைவர் அறிமுகம் செய்தார் எந்த கொள்கை அதனை அறிமுகம் செய்ய வைத்தது அதனால் எந்த நாடு மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இருந்த அமெரிக்காகை மிரள வைத்தது என்பதையும் தாங்கள் இங்கே பதிவு செய்து வைததிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களை பிடித்து ஆட்டிக்கொண்டீருக்கும் பேய் (இந்து தர்மம். இனவாதம். சாதியம். மதவாதம் எல்லாம் .) உங்களை அப்படி செய்யவிடவில்லை, உங்களுக்கு பிடிக்க வில்லை என்பதற்காக ஏன் இப்படி கொள்கையை கொச்சைப்படுத்து கீறிர்கள்,
    அதுபோகட்டும் இன்றைக்கும் உலகில் எந்த நாட்டில் அதிகமான மருத்துவர்க்ள் உருவாக்கப்படுகிறார்கள், உலகம் இயற்கை சீற்றாத்தால் பாதிக்கப்படும் போது எந்த நாட்டின் மருத்துவக்குழு முதல் ஓடிச்சென்று அவர்களை பாதுகாக்கிறது, என்பதையும் தெரிந்து கொண்டு தாங்கள் இதனை எழுதியிரூந்தால் நன்றாக இருக்கும், சரி அதுவும் கூட பரவாயில்லை நம் தமிழ்நாட்டில் இருக்கும் பெல். மின்சார உற்பத்தி மையங்களை இந்தியாவில் வந்து அமைத்துக்கொடுத்தவர்கள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்த் அமைத்துக்கொடுத்தவர்கள் அங்கிருந்த எடுக்கப்பட்ட நிலக்கரியை சோதனை செய்து இதன் முலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என ஒரு நாடு சொன்ன போது (உலகில் உள்ள நீங்கள் சொல்லக்கூடிய கொள்கையை கடைபிடிக்கும் நாடுகள் எல்லாம் இந்த நிலக்கரியால் எந்த பயனும் இல்லை என சொன்னது) எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள் இப்படி மனித இனத்திற்காக என்னென்றைக்கும் அயராது சிந்திக்க்கூடிய ஒரு கொள்கை என்றென்றைக்கும் பசுமையான கொள்கை உங்களைப்போன்ற லுச்சா பசங்களால் ஒன்றும் செய்ய இயலாது அதனை மக்களிடம் கொண்டு சென்று வார்த்து வளர்த்தெடுக்க எங்களைப்போன்ற பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நாங்கள் களத்தில் நிற்கின்றோம், எனவே தாங்கள் தங்களுடை அதிமேதாவித்தனத்தைக்கொண்டு இந்த கொள்கையை ஒன்றும் செய்ய முடியாது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

  14. ஸ்ரீ ஜடாயு அவர்களின் பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம் – புத்தக விமர்சனம் எப்போதும் போல இப்போதும் அருமை.
    கம்யூனிசம் மிக அபாயகரமானது. அது ஒரு போலி அறிவியல். அறிவியல் போல அது தெரிவது வெறும் கானல் நீர் போலத்தான். அதன் வழிமுறையில் நியாயப்படுத்தப்படும் வன்முறையும், மையப்படுத்துப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்பும் அதை கம்யூனிஸ்டுகளே அடிக்கடி நிராகரிக்கும் பாசிசத்தைவிட நாஜியிசத்தைவிட கொடுங்கோன்மையான கொலைகாரத்தனமான அரசியல் சித்தாந்தமாக நடைமுறையில் திகழச்செய்கின்றன. கம்யூனிசத்தில் கருணைக்கோ, மனிதனேயத்திற்கோ எள்ளளவும் இடமில்லை என்பதை கம்யூனிஸ்டுகளே அறிவார்கள்.
    இந்த கம்யூனிசத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நல்ல நூலை எழுதியிருக்கும் ஸ்ரீ அ.நீ அவர்கள் முயற்சி பாராட்டுக்குறியது. இந்தனூலை விரைவில் வாங்கிப்படிக்க விளைகின்றேன். ஆங்கிலத்திலும் இந்த நூலை வெளியிடவேண்டும் முடிந்தால் ஹிந்தி மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு பாரத தேசம் முழுதும் இந்த உண்மைகள் அனைவரையும் சென்னறடைய வகைசெய்ய வேண்டுகிறேன்.
    விபூதிபூஷன்

  15. கம்யூனிசம் பற்றிய விமரிசனத்தில் கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நாடுகள் செய்யும் செயல்களும் விமரிசனத்துக்கு உள்ளாவது தவிர்க்க இயலாதது. இன்று இந்தியாவின் எல்லைப்புற காஷ்மீர் மாநிலத்தின் பகுதிகளில் சீன வீரர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஊடுருவி உள்ளனர் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. இது குறித்து இந்தியாவில் உள்ள பிரகாஷ் காரத் மற்றும் கம்யூனிஸ்ட் சொம்புகள் யாரும் வாய் திறக்கவில்லை. அவர்கள் என்றுமே தேசத்துரோகிகளே என்பது மீண்டும் உறுதியாகிறது.

    மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சாம்ராஜ்யத்தினை விரிவுபடுத்த பிறநாடுகளின் மீது போர்தொடுத்து , பல கோடி மக்களை கொன்று , தங்கள் நிலவெறியை தீர்த்துக்கொண்டனர். ஆனால் கம்யூனிசம் என்பதும் மன்னராட்சியை விட எந்தவிதத்திலும் உயர்ந்தது அல்ல என்பதை நிரூபிக்கவே, 1962, மற்றும் 2013 ஆக இருமுறை இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளனர். தீயசக்தியாம் மன்மோகன் சிங் வாய் மூடி லட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சி நாட்டை விட்டே ஒழிக்கப்பட வேண்டும்.

  16. என்னுடைய முந்திய கடிதத்தில் ஒரு டைப்பிங் பிழை உள்ளது.

    10 கி மீ என்பதை 19 கி மீ என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *