ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

பெருமைக்குரிய சின்னமாக மாறிய துடைப்பம்

பெரும் தலைகள் மோதுகின்ற ஒரு களத்தில் சாமானிய மனிதன் ஒருவன் வெல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்திருப்பதால் தான், ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றி அனைவராலும் வியந்தோதப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக அனாயச வெற்றி பெற்றிருந்தபோதிலும், அதைச் சாதாரணமாக்கிவிட்டது ஆ.ஆ.கட்சியின் வெற்றி. குறிப்பாக, தலைநகர் தில்லியில் பாஜகவின் ஆட்சி அமையாமல் போனதற்கு ஆ.ஆ.கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகி இருக்கிறது.

எனவே, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் பின்புலம், அதன் எதிர்கால விளைவுகள் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி நாட்டிற்கு நல்லதா, ஊழல் மயமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பாஜகவின் பயணத்தில் ஆ.ஆ.க. என்ன விளைவை ஏற்படுத்தும்? ஊடகங்கள் ஆ.ஆ.க.யைக் கொண்டாட வேறு ஏதேனும் காரண்ங்கள் உள்ளனவா? என்று இப்போது பார்க்கலாம்.

ஆணிவேரும் சல்லிவேர்களும்…

குருவை மிஞ்சியவரா?
முதுகில் குத்தியவரா?

அண்ணா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய தளகர்த்தர்களுள் ஒருவராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் (45), ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர்; இந்திய வருவாய்த் துறை அலுவலராகப் பணியாற்றியவர். அதில் நிலவிய ஊழலை எதிர்த்துப் போராடி, விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவர் இவர். ஜனலோக்பாலுக்கான போராட்டம் இவருக்கு தலைநகரில் பெரும் மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அரசியலை வெளியிலிருந்து விமர்சித்துவந்த இவருக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தோன்றவே, 2012, நவம்பர் 26-இல் ஆம் ஆத்மி கட்சி உதித்தது.

அரசியலில் நேரடியாக நுழையக் கூடாது என்ற குருநாதர் அண்ணாவின் கட்டளையை மீறி அரசியலில் ஈடுபட்டதால், அவரது அதிருப்திக்கு ஆளானவர் கேஜ்ரிவால். ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது!

அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் நுழைவுக்கு அடித்தளமிட்டவர், அரசியல் விமர்சகரும் தேர்தல் புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவருமான யோகேந்திர யாதவ் (50). தூர்தர்ஷன், என்.டி.டி.வி,  சி.என்.என்- ஐ.பி.என். போன்ற தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அரசியல் ஆய்வுச் செய்திகளை வழங்கி வந்ததால் தில்லியில் மிகவும் பிரபலமானவர் யாதவ். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு இவரது களப்பணியும், செயல்திட்ட உருவாக்கமுமே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் புதிய படை

இவர்களுடன் நவீனப் படிப்பும் அரசியல் மீது கடும் விமர்சனமும் கொண்ட இளைஞர் பட்டாளம் இணைந்ததால் உருவானது சாமானியர்களின் கட்சி. கவிஞரும் கல்லூரிப் பேராசிரியருமான குமார் விஸ்வாஸ், பத்திரிகையாளரான மணிஷ் சிசோடியா, தீவிர இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் கோபால் ராய், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், ஸ்டார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான சஸியா இல்மி, உ.பி.யின் லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் ஊழியர் சஞ்சய் சிங் ஆகியோர் ஆம் ஆத்மியின் கட்சியின் வளர்ச்சியில் துடிப்புடன் செயலாற்றினர்.

அரசியலுக்கு கேஜ்ரிவால் புதியவரானாலும், தேர்ந்த அரசியல்வாதிகள் கூட இவரிடம் பாடம் கற்க வேண்டும். அந்த அளவிற்கு திட்டமிட்டுக் காய்களை நகர்த்தினார் கேஜ்ரிவால். காங்கிரஸ் கட்சியின் நீண்டகால ஆதரவாளர்களான முஸ்லிம்களை தனது பக்கம் திருப்புவது என்பது சாதாரணமானதா என்ன?

இஸ்லாமியர் ஆதரவு கிடைத்தது எப்படி?

ஆம் ஆத்மி கட்சியின்
இரு பெரும் மூளைகள்

தலைநகர் தில்லி மிகச் சிறிய மாநிலம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாநகராட்சிகளின் வார்டுகளுடன் ஒப்பிடுகையில் தலைநகரின் சட்டசபைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சராசரியாக 1.3 லட்சம் வாக்காளர்கள் கொண்டது ஒரு சட்டசபை தொகுதி. வாக்காளர் பட்டியல் மிகவும் துல்லியமானது; தலைநகரம் அல்லவா? எனவே, வீட்டுக்கு வீடு தொடர்பு கொள்ளும் திட்டத்தை, கட்சி ஆரம்பித்தவுடனேயே துவங்கிவிட்டார் கேஜ்ரிவால். இதன் பின்னணியில் யோகேந்திர யாதவ் இருந்தார். விஜயகாந்துக்கு பன்ருட்டி ராமசந்திரன் போல, யோகேந்திர யாதவ் தான் கேஜ்ரிவாலின் மூளையாக இருக்கிறார்!

தில்லி மக்கள்தொகையில் 40 சதவீதம் வரை முஸ்லிம்கள் உள்ளனர். சுல்தான்கள் ஆண்ட பகுதி என்பதால், இங்கு பலநூறு ஆண்டு பாரம்பரியம் கொண்ட முஸ்லிம்கள் உள்ளனர். இவர்கள் பொதுவாகவே பாஜகவை ஜென்மவைரியாக எதிர்ப்பவர்கள். காலம் காலமாக இவர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கே சென்று வந்தன. அதை மாற்ற முடிவெடுத்தார் அரவிந்த் கேஜ்ரிவால். அதற்காக அதீத மதவெறியரான, பரேலியில் உள்ள தர்கா நிர்வாகி மௌலானா தக்பீர் ரஸா கானை (கீழே படம்) நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் கேஜ்ரிவால் தயங்கவில்லை. இவர் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொலைமிரட்டல் (ஃபத்வா) வெளியிட்டவர். இந்த முஸ்லிம் தலைவரும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் நடுத்தர வர்க்க மக்களிடையே கேஜ்ரிவால் பெற்றிருந்த செல்வாக்குடன் இந்த 40 சதவீத முஸ்லிம்களின் வாக்குகளும் சேர்ந்ததே ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றிக்குக் காரணம். சொல்லப்போனால், நரேந்திர மோடியின் பிரசாரம் இல்லாதிருந்தால், ஆம் ஆத்மி கட்சி 40-க்கு மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியையே பிடித்திருக்கும்.

காங்கிரஸ் கட்சியின் சில ‘தவறான’ நடவடிக்கைகளால் முஸ்லிம் வாக்காளர்கள் அக்கட்சியிடமிருந்து அன்னியப்பட்டதும் கேஜ்ரிவாலுக்கு வசதியாகிவிட்டது. தலைநகரில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக அரசு நிர்வாகி என்ற முறையில் ஷீலா தீட்சித் எடுத்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்திவிட்டன. இப்போதும் கூட, காங்கிரஸ் வென்ற 8 தொகுதிகளில் 5 தொகுதிகள் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளே.

வாக்குக்காக சோரம் போகலாமா?

இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வைக்கச் சதி செய்ததாக பத்திரிகையாளர் சையத் முகமது அகமது காஸ்மி 2012 மார்ச்சில் கைது செய்யப்பட்டார். பிறகு தகுந்த சாட்சியங்களின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டியதாயிற்று. இவரது கைது தில்லி அரசு மீது முஸ்லிம்கள் அதிருப்தி கொள்ள முக்கிய காரணமாயிற்று. அதற்கு முன்னதாகவே 2008 செப். 19-ல் நடத்தப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுன்டரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை முஸ்லிம் மக்களிடையே ஏற்படுத்தி இருந்தது. தங்கள் நீண்ட நாளைய நண்பரான காங்கிரஸ் இந்த என்கவுன்டரை நடத்தியதை முஸ்லிம்கள் எதிர்பார்க்கவே இல்லை. தவிர, காங்கிரஸ் ஆதரவு பெற்ற முஸ்லிம்கள் பலர் வக்ஃப் வாரிய சொத்துக்களை ஆக்கிரமித்ததும் நிலைமையைச் சிக்கலாக்கியது.

இதன் விளைவாக, பல பிரபல இஸ்லாமியத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரமே மேற்கொண்டனர். அதன் விளைவாகவே, இதுவரை காணாத பெரும் தோல்வியை காங்கிரஸ் கட்சி தில்லியில் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடித்தளமாக உள்ள முஸ்லிம் மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாகத் திருப்பியதில் ஆ.ஆ.க. வெற்றி பெற்றது.

நீண்ட காலமாக பாஜகவின் வாக்கு வங்கியாக பஞ்சாபியர்களும், அகதிகளாக வந்த இந்துக்களும் உள்ளனர். இவர்களும் கூட, பாஜகவின் உள்கட்சிப்பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது. ஏனெனில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக முஸ்லிம் பெரும்பான்மை (30 சதவிகிதமும் அதற்கு மேலும்) மிகுந்த 20 தொகுதிகளை மறந்துவிட்டுத் தான் களம் காண வேண்டியிருந்தது.

ராஜதந்திர வியூகங்களும் உண்டு

sheela
நல்லவர் தான்- ஆனால்,
இருந்த இடம் தான் சரியில்லை

ஊழல் எதிர்ப்பில் ஆ.ஆ.க.யின் பிரவேசம் பாஜகவுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. ஊழலை எதிர்த்து மோடி நாடு முழுவதும் முழங்கிவரும் நிலையில், தில்லியில் மட்டும் ஏற்கனவே ஆ.ஆ.க. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சொந்தம் கொண்டாடும் நிலையில் இருந்தது. தவிர, உள்கட்சி நிர்பந்தங்களால் வேட்பாளர்கள் தேர்விலும் பாஜக சொதப்பியது. இவையல்லாது, பாஜகவாலும் காங்கிரஸாலும் சீட்டு மறுக்கப்பட்ட பலரை வேட்பாளராக்கி ஆ.ஆ.க. அழகு பார்த்தது (இது ஒருவகையில் ராஜதந்திரம் தான்; ஆனால், எந்த வகையில் நாகரிகம் என்று தெரியவில்லை). இத்தனையையும் தாண்டி, பாஜக பெற்றுள்ள வெற்றியும் சாதாரணமானதல்ல. எனினும் ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை பெற முடியாமல் போனது வருத்தமானதே.

தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், பல சாமானியர்களை வேட்பாளராக்கியதும்  ஆம் ஆத்மி கட்சி செய்த புதுமை. தங்கள் பகுதியின் பிரச்னைகளை மக்களே நேரிலோ, இணையம் வாயிலாகவோ சொன்னால், அதையும் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாகக் கூறி, அதை செய்தும் காட்டினர் ஆ.ஆ.க. நிர்வாகிகள். மொத்தத்தில் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது ஆ.ஆ.க. இதில் விசேஷம் என்னவென்றால், நாடு முழுவதிலும் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பாஜக தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், தில்லியில் ஆரம்பத்தில் ஏற்பட்ட தேக்க நிலை கடைசி வரை பாஜகவை அலைக்கழித்தது.

ஆ.ஆ.க. வீட்டுக்கு வீடு தொடர்பு கொண்டு பிரசாரம் செய்ததன் பலனை இப்போது அறுவடை செய்திருக்கிறது. இக்கட்சிக்கு உதவியாக மின்கட்டணங்களை உயர்த்தி உதவினார் ஷீலா தீட்சித். அதை எதிர்த்து மின்கட்டணம் செலுத்த மறுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தை ஆ.ஆ.க. துவங்கியது. அதற்கு தில்லி மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்து சுத்தமான குடிநீர் கிடைப்பது தில்லியில் சவாலாக மாறிவிட்ட நிலையில், ஆ.ஆ.க. ஆட்சிக்கு வந்தால் தினசரி 700 லிட்டர் குடிநீர் இலவசம் என்ற கேஜ்ரிவாலின் அறிவிப்பு பலரையும் வசீகரித்தது. இது சாத்தியமா என்று ஆராயும் நிலையில் அங்கு யாரும் இல்லை.

 

 

இத்தனைக்கும் ஆட்சி நிர்வாகத்தில் ஷீலா தீட்சித்திற்கு நல்ல பெயருண்டு. தலைநகரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஷீலா அரசு சிறப்பாகவே செயல்பட்டது. தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஊழல் பெருச்சாளி என்ற பெயரைப் பெற்றபோதும் ஷீலா மீது ஊழல் கறை படியவில்லை. காமன்வெல்த் விளையாட்டு ஊழல்களில் சுரேஷ் கல்மாதி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் பெயர் நாறியபோதும், ஷீலா நல்லவர் என்றே தில்லி மக்கள் நம்பிவந்தனர். தில்லி அதிகாரவர்க்கமும் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஷீலாவின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டது. தலைநகரில் அதிகரித்த கற்பழிப்புகள், குறிப்பாக ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் தில்லி காங்கிரஸ் அரசின் நம்பகத் தன்மையைக் கெடுத்துவிட்டன.

மத்தியிலும் மாநிலத்திலும் நிலவிய காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையை தனக்கு சாதகமாக்க பாஜக முயற்சித்ததில் 75 சதவீத வெற்றி பெற்றிருக்கிறது. ராஜஸ்தானிலும் மத்தியப்பிரதேசத்திலும் அக்கட்சி பெற்றுள்ள வெற்றி பிரமாண்டமானது. காங்கிரஸ் ஆண்ட ராஜஸ்தானில் 17 மாவட்டங்களில் அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை என்ற தகவல், பாஜகவின் வெற்றிக்கு ஒரு சோறு பதம். சத்தீஸ்கரிலும் கூட மாவோயிஸ்ட்களின் தாக்குதல்களால் ஏற்பட்ட மக்கள் அதிருப்தி அலையை மீறி அங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது பாஜக. ஆனால், தலைநகர் மாநிலமான தில்லியில் ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸையும் ஒருசேர எதிர்த்தாக வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுவிட்டது.

அதிலும், களப்பணியில் முன்னணியில் இருந்த ஆ.ஆ.க.யை வெல்ல வேண்டிய நிலைமை பாஜகவுக்கு நிச்சயம் புதிதாகவே இருந்தது. ஆயினும் “ஆ.ஆ.க. ஒரு பொருட்டல்ல; காங்கிரஸுக்கும் எங்களுக்கும் தான் போட்டி” என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு பிரசாரம் செய்தனர் பாஜகவினர். காங்கிரஸிலும் இதே நிலை தான். உண்மையில் அங்கு கேஜ்ரிவாலுக்கு சாதகமாக வீசிய அலையை கடைசியில் தான் இரு பெரும் கட்சிகளும் உணர்ந்தன. அதையும் மீறித் தான் தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளது.

வாக்கு வித்யாசம் சொல்லும் பாடம்:

மோடியை எதிர்க்காமல் கள்ள மௌனம்

இவ்விரு கட்சிகளின் வாக்கு வித்யாசம் பல தொகுதிகளில் மிகவும் குறைவு. தனிப்பெரும் கட்சியாக வென்ற பாஜக 31 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் ஒரு தொகுதியிலும் முத்திரை பதித்தன. ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் பிறர் 2 தொகுதிகளிலும் வென்றனர். இதில் பாஜக ஆ.ஆ.க.யை 19 தொகுதிகளிலும் காங்கிரஸை 10 தொகுதிகளிலும் தோற்கடித்துள்ளது

ஆ.ஆ.க. வென்ற 28 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தில் 23 இடங்களில் உள்ளது. இவற்றில் 350 வாக்குகள் முதல் 2,000 வாக்குகள் வரையிலான வேறுபாட்டில் (MARGIN) 7 தொகுதிகளில் ஆ.ஆ.க. வென்றுள்ளது. மாறாக பாஜக வென்ற பல தொகுதிகளிலும் வாக்கு வித்யாசம் மிகவும் அதிகம். அதாவது நூலிழையில் பாஜக பெரும் வெற்றியை இழந்துள்ளது.

தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது.

இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால் பாஜகவுக்கு எந்தப் பாதகமும் இல்லை. அக்கட்சி அதீத தன்னம்பிக்கையில் மிதக்காமல், தன்னுணர்வுடன் உறுதியாகச் செயல்படவே இத்தகைய தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன எனலாம். ஆ.ஆ.க.யின் தேர்தல் செயல்முறைகளைப் பரிசீலிப்பதும் பாஜகவுக்கு உதவக்கூடும்.

தில்லியில் ஆ.ஆ.க.க்கு வாக்களித்த இளைஞர்கள் பலர் தங்கள் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்று கூறியதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தது. அதாவது ‘தில்லி முதல்வராக கேஜ்ரிவாலையும் பிரதமராக மோடியையுமே தேர்வு செய்வோம்’ என்பதே பலரது பதிலாக இருந்துள்ளது. எனவே தான் அரவிந்த் கேஜ்ரிவால், தனது பிரசாரத்தில் எங்குமே மோடியை எதிர்த்துப் பிரசாரம் செய்யவில்லை.

அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது தில்லியில் உள்ள 7 எம்.பி. தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும் வாய்ப்பு காணப்படுகிறது. அத்துடன் தில்லி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால், ஹர்ஷவர்த்தனுக்கே அதிக வெற்றிவாய்ப்பு இருக்கும்.

நல்லதா? கெட்டதா?

kejrival
தன்னம்பிக்கைக்கும் அகங்காரத்திற்கும்
நூலிழை தான் வித்யாசம்!

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி, சாமானியனின் அரசியல் வெற்றியாக முன்வைக்கப்படுவது நல்லதே. அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் நிலையில் ஆ.ஆ.க. புதிய ரத்தத்தை தேர்தல் அரசியலில் பாய்ச்சி இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே சந்தடியின்றி பெரும் அதிருப்தி அலை அரசியலுக்கு எதிராக எழுந்து வருவதையே அண்ணாவின் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர் கூட்டத்தைக் காணும்போது தெரிகிறது.

எனவே, கேஜ்ரிவாலின் பிற குறைபாடுகள் எவ்வளவு இருப்பினும், ஆ.ஆ.க.யின் எழுச்சி எதிர்கால இந்திய அரசியலில் நன்மை அளிப்பதாகவே இருக்கும். தவிர, பாஜகவின் ஊழலுக்கு எதிரான வெற்றிப் பயணம் ஆர்ப்பாட்டமின்றித் தொடரவே, இத்தேர்தல் முடிவுகள் உதவியுள்ளன.

2011-ஆம் ஆண்டு அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பாஜக மற்றும் சங்க பரிவார அமைப்பினர் இயல்பாகவும், எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் பங்கேற்றனர். ஆகவே அதன் வெற்றியில் பாஜகவுக்கும் பங்குண்டு. அந்த இயக்கத்தின் வெற்றியில் விளைந்ததே ஆம் ஆத்மி கட்சி என்றும் கூறலாம். இன்று தில்லியில் பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள ஆ.ஆ.க.வின் வெற்றி தேசிய அளவில் தொடருமா என்ற கேள்வி உள்ளது. இப்போதே தங்கள் அடுத்த இலக்கு மும்பை என்று ஆ.ஆ.க. நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், மும்பையும் தில்லியும் ஒன்றல்ல; அதேபோலத் தான் நாடு முழுவதும் ஆ.ஆ.க.யின் செயல்பாடுகளும் இருக்கும். தில்லியில் தேமுதிக பெற்ற முடிவுகளையே பிற மாநிலங்களில் ஆ.ஆ.க. பெற வேண்டியிருக்கும். ஆ.ஆ.க. நாட்டின் பிற பகுதிகளில் செய்யும் பிரசாரம் பாஜகவுக்கும் மோடிக்கும் உதவுவதாகவே இருக்கும்.

எதிர்காலத் தேர்தல் முடிவுபாஜகவுக்கே சாதகமாக இருக்கும்!
எதிர்காலத் தேர்தல் முடிவு
பாஜகவுக்கே சாதகமாக இருக்கும்!

ஊடகங்கள் ஆ.ஆ.க.யை இப்போது கொண்டாடக் காரணம் இல்லாமல் இல்லை. ஒருகாலத்தில் அண்ணாவையும் இப்படித் தான் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடினர். பிறகு காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் அதிகரித்ததும் அப்படியே அவரைக் கைவிட்டுவிட்டனர். இப்போதும் கூட மோடி அலையை மட்டம் தட்டவே ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் கேஜ்ரிவாலைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அண்ணாவுக்கு நேர்ந்ததே விரைவில் கேஜ்ரிவாலுக்கும் நிகழும். எஜமானரான காங்கிரஸின் கண்ணசைவே அதையும் நிர்ணயிக்கும்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்; வெற்றி நெருங்குகையில் நிதானம் வர வேண்டும். இந்த இரண்டுமே அரவிந்த் கேஜ்ரிவாலிடம் இல்லை என்பது சற்றே வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. ‘காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜகவுடன் ஆ.ஆ.க. இணைந்து ஆட்சி அமைக்கலாம்’ என்று பிரசாந்த் பூஷன் ஆலோசனை கூறியபோது, ‘வேண்டுமானால் பாஜகவும் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைக்கட்டும்’ என்று எகத்தாளமாகக் கூறி இருக்கிறார் கேஜ்ரிவால். இதில் அவரது முதிர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டது.

இப்போதும் கூட ஆ.ஆ.க. ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கூறியபோது, 18 நிபந்தனைகளை – அவை ஏற்க முடியாதவை என்று கேஜ்ரிவாலுக்கே தெரியும்- ஆம் ஆத்மி கட்சி விதித்து ஆட்சி அமைப்பதிலிருந்து தன்னை காத்துக் கொண்டுள்ளது. ஜனலோக்பாலுக்காக உண்ணாவிரதம் இருக்கும் குருநாதர் ஹஸாரேவைக் கேலி செய்யவும் கூட கேஜ்ரிவால் இப்போது தயாராகிவிட்டார். வெற்றி ஆணவத்தில் பேசும் வார்த்தைகளில் தான் ஒருவருடைய தோல்விக்கான படுகுழி வெட்டப்படுகிறது. இதை கேஜ்ரிவாலுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

தில்லியில் பிளவுபட்ட தேர்தல் முடிவுகளின் தன்மையைத் தீர ஆராய்ந்த தனிப்பெரும் கட்சி பாஜக ஆட்சி அமைக்க மறுத்ததும் நியாயமானதே. யாரை எதிர்த்து வெற்றி பெற்றதோ அதே காங்கிரஸ் உதவியுடன் பாஜக ஆள்வது சாத்தியமில்லாதது. தவிர, அதற்கு பெரும் ‘விலை’யும் கொடுக்க வேண்டியிருக்கும். ஆ.ஆ.க.க்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்க உதவலாம் என்றால் புது மாப்பிள்ளை போல கேஜ்ரிவால் அதிகமாகவே முறுக்குகிறார். அவரது நிதானமற்ற நிலையே தற்போது நிலையற்ற தன்மையை உருவாக்கிவிட்டது. ஆட்சி அமைக்க பாஜக, ஆ.ஆ.க. இரு கட்சிகளும் மறுத்த நிலையில், துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் காங்கிரஸ் ஆட்சியே தில்லியில் தொடர்கிறது. அடுத்து வரும் தேர்தலில் ஆ.ஆ.க. இதற்கான பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

 

.

19 Replies to “ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்”

  1. அரவிந்த் கேஜ்ரிவாலிடம் நம்ப ஊரு விஜயகாந்த் மாதிரி காமெடீ சென்ஸ் நெரிய உள்ளது. அவர் நேர்ரு காங்க்ரெஸ், BJP க்கு எழுதிய கடிதம் அதை நன்று உணர்த்துகின்றது. படித்த மக்கள் இப்பொழுது AAP யை அஸ்ஸாம் கணபரிசத் உடன் ஒப்பிட்டு கொண்டு இருப்பது — மிக நல்ல மாற்றம்.

  2. I feel that in addition to the reasons mentioned by the author (in this well-researched article), the major thing that changed the
    tide for the AAP was the attempt by some in the media ( I feel at the behest of the Congress) to tarnish the image of some of the members of the AAP, which backfired. This made the people of Delhi angry and completely turned the tide in AAP’s favour; and in this wave of sympathy some of BJP’s votes were also washed away.
    KRISHNAMURTHY

  3. BJP must have learnt a lesson in DELHI. For internal reasons/conflicts, MODI can be projected as PM but common (WO)man does not care who is the PM. Hence, it should field good corruption free candidates in the election.

  4. தனி பெரும்பான்மை கட்சி பா ஜே க. காங்கிரஸ் மொத்தமாக நிரகரிக்கபட்டுளது எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் கடமை காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்யவேண்டும் அல்லது தனி பெரும் கட்சியை ஆதரிக்கவேண்டும் தவறினால் மக்களமன்னிக்கமாட்டர்கள்

  5. ஒரு கொச்சையான பழமொழி உண்டு. இங்கு சொல்லலாமா தெரியவில்லை; இருந்தாலும் அவசியம் கருதி சொல்லுகிறேன் சற்று மறைமுகமாக. குரங்கிடம் சென்று ‘அது’ மருந்துக்கு வேண்டும் என்று கேட்டால் அது கையில் பிடித்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுமாம். அதுபோலத்தான் இருக்கிறது இந்த ஆம் ஆத்மி கட்சியின் போக்கு. ஆதரவு தருகிறோம் ஆட்சி அமையுங்கள் என்றால், சொன்ன வாக்குறுதி எதையும் செய்து முடிக்க முடியாது என்கிற பயத்தில் போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவு தெரியும் வரை இருந்த இடம் தெரியாமல் இருந்தவர்கள் இன்று ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள், ஒருவர் ராகுலை எதிர்த்து நின்று அந்த பாரம்பரிய ஆட்சியை ஒழிக்கப்போகிறேன் என்கிறார், மற்றொருவர் அண்ணா ஹசாரே உண்ணா நோன்பு இருக்குமிடம் சென்று முன்னாள் ராணுவ தளபதியோடு மோதல் போக்கில் ஈடுபடுகிறார். ஆளுக்கு ஒரு குல்லாய் போட்டுக்கொண்டு இப்போது ஊரெங்கும் ஒரே குல்லாய் மயம். தமிழ் நாட்டிலும் இந்த கட்சியின் தலைவர்கள் பெயர் போடுகிறார்கள், அவர்கள் யாரோ தெரியவில்லை. நண்டு கொழுத்தா வளையில் தங்காதாம். இவர்கள் ஒரு ஆட்டம் ஆடி ஓய்ந்த பின்னர்தான் அடங்குவார்கள் போல இருக்கிறது. இவர்களைப் போல வாய்ப்பந்தல் போட்டவர்கள் பலபேர் உண்டு. இவர்கள் சொன்னதெல்லாம் செய்யமுடியுமா என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் போதும், அதுவரை இப்படித்தான். ஊடகங்களுக்கு நல்ல வேட்டை, நிறைய செய்திகள் கிடைக்கும், பேட்டிகள் போடலாம், குல்லாய் தலைகள் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கலாம். இவை தவிர உருப்படியாக நடக்கப் போவது எதுவும் இல்லை.

  6. தமிழக விஜய்காந்த் — மக்களோடும் ஆண்டவனோடும் மட்டும்தான் கூட்டணி.

    டெல்லி விஜய்காந்த் — எங்கள் கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். அக் கோரிக்கைகளை இரு கட்சிகளும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தால், பொது மக்கள் கருத்தைக் கேட்டு ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலிப்போம்’ என்றார் அரவிந்த் கேஜரிவால்.

  7. திரு கோபாலன் ஐயா அவர்களிடம் இருந்து ஒரு நல்ல கருத்துப்பதிவு. துணிந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்று மக்களுக்கு தாங்கள் அள்ளிவீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கேஜெரிவால் குழாம் முடிவுஎடுத்து செயல்படலாமே? இவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொண்டு விடுவார்கள்.

  8. \\ குரங்கிடம் சென்று ‘அது’ மருந்துக்கு வேண்டும் என்று கேட்டால் அது கையில் பிடித்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுமாம். அதுபோலத்தான் இருக்கிறது இந்த ஆம் ஆத்மி கட்சியின் போக்கு. ஆதரவு தருகிறோம் ஆட்சி அமையுங்கள் என்றால், சொன்ன வாக்குறுதி எதையும் செய்து முடிக்க முடியாது என்கிற பயத்தில் போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். \\

    வெறும் குரங்கு இல்லை. ஆப் கட்சி அரசியல் ஆசை என்ற இஞ்சி தின்ற குரங்கு என்று புரிகிறது 🙂

  9. கெஜ்ரிவாலின் வெற்றி மோடியின் பிரதமர் கனவை ஓரளவு களைத்து விட்டதாகவே கொள்ளலாம். மத்திய பிரதேசத்தில் பெற்ற வெற்றியானது சௌகானின் திறமை மிக்க ஆட்சியாலேயே! ராஜஸ்தானை பொருத்த வரை ஐந்து வருடம் ஒரு முறை ஆட்சியை மாற்றியே முடிவை தருவது அந்த மக்களின் வழக்கம். எனவே இந்த இரண்டு மாநில வெற்றிகள் மோடியினால் வரவில்லை என்பதை மோடியே ஒத்துக் கொள்வார்.

    அடுத்து கெஜ்ரிவால் களம் இறங்கப் போவது குஜராத்தில். மோடியின் முதல்வர் நாற்காலியையே ஆட்டிப் பார்க்க கெஜ்ரிவால் துணிந்து விட்டது அவரது அசாத்திய துணிச்சலையே காட்டுகிறது. கெஜ்ரிவாலின் குஜராத் வெற்றியையும் ஆவலோடு எதிர் பார்ப்போம். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறுவதையே விரும்புவர்.

  10. திரு அரவிந்த் கேஜ்ரிவாலின் போக்கு தேர்தல் வரை சரியாக இருந்தது. ஒருவரும் ஆட்சி அமைக்கவில்லை என்றால், இவர்கள் மக்களுக்கு காட்டும் மரியாதை என்ன. பொதுவாக தேர்தலில் வாக்களித்த மக்களின் என்னங்களை பூர்த்தி செய்வத அரசியல் கட்சியின் கடமை கூட. தானும் ஆட்சி அமைக்க மாட்டார். பா.ஜ.க.வுக்கும் ஆதரவு தர மாட்டார். தான் ஆட்சி அமைக்கிறேன்,. நீங்கள் ஆதரவு தாரங்கள் என்று பா.ஜ.கா.விடம் இவர் கேட்டுக்கொண்டால், அவர்கள் நிச்சயமாக மறு பரிசீலனை பண்ணுவார்கள். யாரும் ஆட்சி அமைக்கவில்லை என்றால், மீண்டும் ஆறு மாதத்தில் தேர்தல். யார் வீட்டு காசு நழ்டமாக போகிறது. இது தான் இவர்கள் காட்டும் தேச பக்தியா? தற்போதுள்ள சூழ்நிலையில் தான் ஆட்சி அமைக்கட்டும். அல்லது கண்ட கண்ட நிபந்தனை இன்று பா. ஜ. க. வுக்கு ஆதரவு தரட்டும். காங்கிரசை ஓட ஓட விரட்டி பின் என்ன லாபம். பொதுவாக அரசியல் பழமொழி உண்டு. அரசியலில் நிரந்தர நட்பும் இல்லை பகையும் இல்லை. அரவிந்த் மனம் திருந்துவாரா.

  11. வைக்கோல் போரில் படுத்திருக்கும் நாயைப் போல தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் விதண்டாவாதம் செய்பவர்களை டில்லி மக்கள் விரைவில் கண்டு கொள்வார்கள். இவர்களின் 18 அம்ச கண்டிஷன்களைப் பார்த்தால் எனக்கு ஏனோ ரூபாய்க்கு மூன்ரு படி அரிசி ஞாபகம் வருகிறது.

  12. suvanappiriyan
    மத்திய பிரதேசத்தில் பெற்ற வெற்றியானது சௌகானின் திறமை மிக்க ஆட்சியாலேயே! ராஜஸ்தானை பொருத்த வரை ஐந்து வருடம் ஒரு முறை ஆட்சியை மாற்றியே முடிவை தருவது அந்த மக்களின் வழக்கம். எனவே இந்த இரண்டு மாநில வெற்றிகள் மோடியினால் வரவில்லை என்பதை மோடியே ஒத்துக் கொள்வார். – –
    என்று சொன்ன நீங்கள் இன்னும் ஒன்றை சொல்லி இருக்கலாம். குஜராத் வெற்றி கூட மோடி வெற்றி இல்லை. தன் கையால் எப்படி கை சின்னத்திர்ற்கு ஓட்டு போடலாம் என்ற அந்த மாநில மக்க்ளின் மூட நம்பிக்கையால்தான் என்று சொன்னால் மிகவும் நன்ராக இருந்து இருக்கும் .

    நிற்க – கவனமாக படிக்கவும்.
    “குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக 19 மாவட்டங்களில் கட்சியின் அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை சேர்ந்த சுக்தேவ் படேல் கூறியுள்ளார்.”

    நான் வேனா படிட்சு டாக்டர் ஆயிடட்ட என்ற சத்யராஜ் ஜோக் ஜாபகம் வருகின்றது

  13. சென்னை, டிச.15-

    நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பா.ஜ டில்லியில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியவில்லை. மோடி அலை டெல்லியில் எடுபடவில்லை என பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அது பற்றிய ஒரு அலசல்.

    மோடி அலை எடுபடவில்லை என்பது சற்றும் நம்பத்தக்கதல்ல. மோடியின் பிரச்சாரத்தின் பலனாகவே பா.ஜனதா கூட்டணி 32 தொகுதிகளை கைப்பற்றியது. இது தவிர டெல்லி கண்டோன்மண்ட், கரோல் பாக், மடிப்பூர், ரோஹிணி, சத்தார் பஜார், சங்கம் விஹார், திலக் நகர், திமர்புர் மற்றும் விகாஸ்புரி ஆகிய 9 தொகுதிகளை பா.ஜ. சொற்ப வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சியிடம் இழக்க நேர்ந்தது.

    இந்த 9 தொகுதிகளில் பா.ஜ. கட்சியினர் சற்று தீவிரமாக வேலை செய்திருந்தால் அவற்றை எளிதாக கைப்பற்றியிருக்கமுடியும். மாநிலத்திலும் பா.ஜ ஆட்சியை கைப்பற்றியிருக்கும்.

    மோடியின் பிரசாரத்தின் பலனாகவே 32 தொகுதிகளில் பா.ஜ வெற்றி பெற்று அங்கு கெஜ்ரிவால் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற முடியாமல் தடுக்க முடிந்தது. மோடியின் பிரச்சாரம் இல்லையென்றால் எளிதாக கெஜ்ரிவால் ஆட்சியமைத்திருப்பார் என்பது திண்ணம்.

    தற்போது கவர்னர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் மறு தேர்தல் நடத்தப்பட்டால் கண்டிப்பாக கெஜ்ரிவால் தற்போது கைப்பற்றியுள்ள 28 தொகுதிகளில் 10 தொகுதிகளை இழக்க அதிக வாய்ப்புள்ளது. பா.ஜனதா 42 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாகும்.

    அப்போதாவது நிதீஷ்குமார் போன்றவர்கள் உண்மையை உணர்வார்கள் என நம்பப்படுகிறது.

    –மாலைமலர்

  14. ஆம் ஆத்மி கட்ச்சிக்கும் பா ஜ கட்ச்சிக்கும் உள்ள வாக்கு வித்யாசம் டெல்லி மக்கள் மனதை பிரதிபலிப்பதை யாரும் மறுக்கமுடியாது. இதை எந்த ஊடகங்களும் எடுத்து கூறாதது பெரும் தவறாகவே முடியும்

  15. கதை facebook இல் சுட்டது
    #கதை

    ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

    பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

    ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

    குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

    குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

    ”அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க” என்று யோசனை சொன்னான்.

    வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ”என்னாச்சு?” என்றான் தோட்டக்காரன்.

    ”வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்” என்றன குரங்குகள்.

    புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

  16. Am an resident of delhi for several years ; The public mood was unpredictable. Everybody was under the impression that AAP may get 5-10 seats and spoil the chances of BJP… However the results turned otherwise.

    This shows the comonman’s frustration towards the exisiting system. AK has formed the got with the outside support of Cong which will see to it they cannot perform at all…

    HOWEVER AK IS BEST REMEMBERED FOR HIS CONTRIUTION FOR MAKING THE RTI ACT…

    LETS WIT AND WATCH..

    JAI HIND

  17. இந்த அர்விந்த் கேஜ்ரிவால் அடிக்கும் கும்மாளம் தாங்கவில்லை.இவர் செய்த சில செயல்களை இதோ பட்டியல் இடலாம்:-

    1.18 நிபந்தனைகளை இவர் விதித்தார். அந்த நிபந்தனைகளை ஏற்கத்தயாரா என்று பாஜக , காங்கிரஸ் ஆகிய இரு முக்கிய கட்சிகளையும் கேட்டார். காங்கிரஸ் அந்த 18- லே எந்த நிபந்தனையையும் ஏற்கவில்லை.இருந்தும் கூட, காங்கிரஸ் ஆதரவுடன் அமைச்சரவை அமைத்துள்ளார்.

    2. அண்ணா ஹசாரேயின் சம்மதம் இன்றி தனியாக வெளக்கமாற்று சின்னத்தில் ஆம் ஆத்மி கட்சியை துவங்கிய இவர் , கட்சியை ஆரம்பிக்கும் போதோ, கட்சியின் சார்பில் யாரை வேட்பாளரை நிறுத்தும் போதோ டெல்லி பொதுமக்களிடம் எவ்வித ஆலோசனையையும் கோராத இவர், காங்கிரசிடம் ஆதரவு பெற்று மந்திரிசபை அமைக்கலாமா இல்லையா என்பதுபற்றி மட்டும் , பொதுமக்கள் கருத்தினை பெற்று மந்திரிசபை அமைப்பதாக ஒரு நாடகம் ஆடினார். இவருடைய கட்சியான ஆம் ஆத்மிக்கு ஒட்டுப்போட்ட 29 சதவீத மக்களிடம் அல்லவா கேட்டிருக்கவேண்டும் ? அந்த இருபத்து ஒன்பது சதவீதம் யார் என்று இவருக்கு எப்படித்தெரியும் ? வாக்கு போட்டது ரகசியம் அல்லவா ? தேர்தல் கமிஷனிடம் ஆம் ஆத்மி கட்சியின் சின்னத்தில் வாக்களித்தவர்கள் பட்டியலை கொடுங்கள் என்று கேட்டு பெற்றாரா ? தேர்தல் கமிஷன் கொடுக்காதே ? கொடுத்தால் தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் அவமானப்பட்டு கம்பி என்ன வேண்டி வருமே ? யாரை ஏமாற்றுகிறாய் ?

    3.தான் பதவி ஏற்றவுடன் குளிரில் வாடும் மக்களுக்காக 45 ஷெல்டர்களை இரண்டு நாளில் ( அதாவது 48 மணி நேரத்தில் ) கட்டித்தருவதாக சொன்னாரே , பதவி ஏற்று 15- நாட்கள் ஆகியும் இன்றுவரை முடியவில்லையே அய்யா ?

    4. அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றவுடன், டெல்லியில் கைவிடப்பட்டு தெருவோரம் நிற்கும் டெல்லி போக்குவரத்து கழக பஸ்களை , தற்காலிக வீடுகளாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இதில் என்ன ப்யூட்டி என்றால், அந்த பஸ்களில் பலவற்றை நம் டெல்லிப் பொதுமக்கள் ஏற்கனவே தற்காலிக தங்குமிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதும், அது பற்றி பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது என்பது தான். ஏனய்யா இந்த பித்தலாட்டம் ?

    5. லோக்பாலுக்காக இரண்டுமுறை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். லோக்பால் வரவில்லை. உண்ணாவிரதம் செத்தது தான் கண்டபலன். இப்போது காங்கிரஸ் காரர்களே அவர்களின் ஏஜெண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் வேறு வழி இல்லாமல், பேருக்கு ஒரு லோக்பால் சட்டத்தினை நிறைவேற்றி உள்ளனர்.

    6. ஜனாதிபதி பிரணாப் குமார் முகர்ஜி, 15 மத்திய மந்திரிகள், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள ( ஒரு மத்திய மந்திரி உட்பட) ஆகியோரை வெளிச்சத்துக்கு கொண்டுவருவேன் என்று சொல்லி ஒட்டுக்கேட்டார். என்று வெளிச்சம் இவருக்கு கிடைக்குமோ யார் கண்டது ?

    7. ஜெனீவா ஹெச் எஸ் பி சி வங்கியில் 700 பேர் கருப்பு பணக் கணக்குகள் வைத்துள்ளனர் என்றார். இவரால் என்ன செய்ய முடியும் ?மத்திய அரசோ தூங்குகிறது . ஒரு மாநில முதல்வரான இவர் இப்போது அடங்கிவிட்டார். காங்கிரஸ் எஜமானர்களின் ஆதரவு தேவைப்படுவதால் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் வாய் சவடால் தான்.

    8. டெல்லி மின்சாரவாரியம் மின்கட்டணம் கட்டாத கட்டிடங்களின் இணைப்பை துண்டித்தபோது, இவரே கட்டிங் பிளேயருடன் தொலைக்காட்சியினரையும் உடன் அழைத்துச் சென்று , மீண்டும் திருட்டு கனெக் ஷன் கொடுத்தார். இதேபோல இப்போது உள்ள எதிர்க்கட்சியினராகிய பாஜக செய்தால், இவர் முதல் அமைச்சர் ஆனபின் சும்மா இருப்பாரா ?

    9.இவரது கட்சி குண்டர்கள், ஒரு காவல்துறை கான்ஸ்டபிளை , போராட்டத்தின்போது , தாக்கியதில் அவர் மரணம் அடைந்தார் . ஆனால் அந்த கான்ஸ்டபிளுக்கு ஏற்கனவே நெஞ்சுவலி / இருதயபிரச்சினை இருந்தது என்று சொல்லி மூடிவிட்டனர்.

    10.அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று யாரோ ஒருவர் சொன்னதாக அடிக்கடி பலரும் மேற்கோள் காட்டுவார்கள்.அதுயார் என்று எனக்கு தெரியாது. வெறும் பழமொழி தானே என்று அலட்சியமாக இருந்தேன். இந்திய குல்லுகபட்டன் வி பி சிங்கு, 1989- தேர்தலின்போது இராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கு எண்- என் பாக்கெட்டில் தான் இருக்கு. ஆட்சிக்கு வந்தவுடன் அதன்மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி உதார் விட்டான். ஆட்சிக்கு வந்தவுடன் கம்யூனிஸ்டுகளையும், பாஜகவையும் தாஜா செய்வதிலேயே அவன் வாழ்க்கை முடிந்தது. கடைசிவரை சுவிஸ் வங்கி அப்படியே ராஜீவ்காந்தி அவர்களின் லோட்டஸ் என்ற கணக்கை வைத்திருந்தது.

    அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களாவது சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டாரா என்று டெல்லி வாக்காளப் பெருமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

    காங்கிரசின் ஊழல்களுக்கு எதிராக இவர் ஏதாவது நடவடிக்கைஎடுத்தால் நிச்சயம் மீண்டும் இவருக்கு மறுவாய்ப்பு கொடுப்பார்கள். இவர் சோனியாவின் கைக்கூலி என்று தெரிந்துவிட்டால், இவரை டெல்லி சாக்கடையில் அமிழ்த்திவிடுவார்கள். இவர் யார் என்பதை நிரூபிக்க , இன்னும் நாலு மாதம்தான் இருக்கிறது. ஏனெனில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், காங்கிரஸ்காரர்கள் இவருக்கு தொடர்ந்து ஆதரவு தரமாட்டார்கள். இவர் என்ன செய்யப்போகிறார் ? காலம் தான் பதில் சொல்லும்.

  18. விஜயகாந்த் அவர்கள் வரும் 2014- மேமாதப் பாராளுமன்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப்போவதாக இன்றைய செய்தித்தாள்களில் யூகம் வந்துள்ளது. தமிழகத்தில் அண்ணா அசாரே அவர்கள் வந்து கூட்டம் போட்டபோது கூட, அவரது கூட்டத்துக்கு அதிக வரவேற்பு இல்லை. மேலும் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் டெல்லியில் வெற்றிபெற்ற பின்னர் , அவர் காங்கிரசின் ஆதரவுடன் தான் அரசு அமைத்துள்ளார். ஊழலை எதிர்த்தும், மத்திய காங்கிரசின் ஆட்சியில் ஊழல் அதிகம் இருப்பதால், அதனை விரட்டுவோம் என்றும் பொது மக்களிடம் சொல்லி ஒட்டு வாங்கி விட்டு, பிறகு காங்கிரஸ் ஊழல் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட்டார் கேஜ்ரிவால்.

    தமிழகத்தில் ஆம் ஆத்மியுடன் விஜயகாந்த் கூட்டணி போட்டால், விஜயகாந்துக்கு அவரது வாக்குவங்கியில் ஒரு இரண்டு சதவீதம் கூட கூடுதலாக கிடைக்காது. பாராளுமன்ற தேர்தலுடன் அவரது கட்சி முடிவுக்கு வந்துவிடும். இதனை அவர் சிந்திப்பாரா ? கடவுளுக்கே வெளிச்சம். அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியை சேர்ந்த ஓரிரு எம் எல் ஏக்கள் அவருக்கு எதிராக ஒரு மாதத்துக்குள்ளேயே கொடி பிடிக்கின்றனர்.

    மேலும் முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மகன் அடிக்கடி அரவிந்த் கெஜ்ரிவாலை வந்து சந்திக்கிறார் என்று மீடியாக்களில் பலமுறை செய்தி வருகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரசின் ஏஜென்ட் என்று எல்லோரும் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்கள். பேசாமல் , ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக , நேரடியாக காங்கிரசுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்கலாம். ஏனெனில், இரண்டுமே தற்கொலை தான். விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப்போகிறார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *