“என்ன, இந்தியர்கள் இரும்பு எஃகு தயாரிக்கப் போகிறார்களா? அப்படி மட்டும் நடந்து விட்டால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு இரும்புத் துண்டையும் சாப்பிடுவேன் என்று பந்தயம் வைக்கிறேன்” – 1907ஆம் ஆண்டு இப்படிச் கூறியவர் சர் ஃபிரடெரிக் அப்காட். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ரயில்வே துறைத் தலைவர். அந்த சவாலை ஏற்றார் பாரத மண்ணின் மைந்தர் ஜாம்ஷெட்ஜி டாடா. உலகத் தரம் வாய்ந்த இரும்பாலைகளை இந்தியாவில் வெற்றிகரமாக நிறுவினார். காலச் சக்கரம் சுழன்றது. 2007ம் ஆண்டு கோரஸ் என்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய இரும்புத் தொழில் நிறுவனத்தை பல பன்னாட்டு நிறுவனங்களை ஏலத்தில் தோற்கடித்து இந்தியாவின் டாட்டா குழுமம் வாங்கியது. உலகின் முதல் 5 இரும்புத் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
“இந்தியாவாவது, ஒரு தேசமாக நீடிப்பதாவது? இன்னும் பத்தே வருடங்கள். உள்நாட்டுப் போர்களில் சிதறி சின்னாபின்னமாகப் போகிறது. அப்போது இந்த அடிமைகள் அவர்களைக் கட்டி வைத்து ஆண்ட நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வார்கள்” – 1947ல் இந்தியாவை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எல்லா அதிகாரிகள் மனதிலும் இந்த எண்ணம் தான் இருந்தது. பலருக்கு அதுவே உள்ளக் கிடக்கையாகவும் இருந்தது.
அதைப் பொய்யாக்குவதற்கு ஒரு இரும்பு மனிதரை பாரத மாதா ஈன்றெடுத்திருந்தாள். சர்தார் வல்லபாய் படேல். 565 சமஸ்தானங்ளையும் ஒரு தேசமாக இணைக்க வேண்டிய மலைக்க வைக்கும் பணி. இந்தப் பணியில் சாம, தான, பேத, தண்டம் என்று இந்திய மரபு கூறும் நான்கு வழிகளையும் பயன்படுத்தினார் அவர். இந்தியா எனும் ஒருங்கிணைந்த நவீன தேசத்தின் சித்திரத்தை உலக வரைபடத்தில் அழுத்தமாக இடம் பெறச் செய்தார். ஹைதராபாத், ஜுனாகட் மாகாணங்களை அவர் இந்திய யூனியனுடன் இணைத்த விதம், உலகின் மாபெரும் அரசியல் ராஜதந்திர சாணக்கியர்களும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது. “சர்தார்” என்ற ஹிந்தி திரைப்படம் அந்த சரித்திரத்தை சமீப காலங்களில் நமக்கு நினைவூட்டியது.
சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த வெற்றிகரமான வழக்கறிஞராக தன் இளமைக் காலத்தைத் தொடங்கிய படேல், அதைத் துறந்து கேடா, பர்டோலி சத்தியாக்கிரகங்களின் ஊடாக விவசாயிகளின், வனவாசிகளின் தோளோடு தோள் நின்று போராடும் மக்கள் தலைவராக ஆனார். 1931க்குப் பின் காங்கிரஸ் கட்சியை அதன் மிகச் சிக்கலான வரலாற்றுத் தருணங்களில் வழி நடத்தினார். அழிக்கப் பட்ட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றினார். அகமதாபாத் நகராட்சித் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என தான் வகித்த அத்தனை பதவிகளுக்கும் பெருமை சேர்த்தார். நேர்மைக்கும், மன உறுதிக்கும், நல்லாட்சிக்கும், நிர்வாகத் திறனுக்கும் இன்றளவும் நினைவு கூரப் படும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
அவரது நினைவை என்றென்றைக்குமாக நிலை நிறுத்தும் வகையில் 182 அடி உயரமுள்ள சர்தார் படேலின் இரும்புச் சிலையை இந்திய ஒற்றுமைச் சின்னமாக நிறுவ குஜராத் அரசு முடிவு செய்து அடிக்கல் நாட்டியிருக்கிறது. குஜராத் மாநிலம் கேவடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிப் படுகையில் உள்ள ஒரு தீவில், சர்தார் சரோவர் அணைக்கட்டுகளை நோக்கி கம்பீரமாக நிற்கப் போகிறது இச்சிலை. அமெரிக்காவின் சுதந்திர தேவி போன்ற புகழ்பெற்ற சிலைகளை விஞ்சும் வகையில் உலகிலேயே மிகப் பெரிய சிலையாக இது இருக்கும். இந்த சிலை அமைப்புத் திட்டம், ஏதோ மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து காண்டிராக்ட் கொடுத்து பணிகளை முடித்து திறப்பு விழா நடத்தும் சம்பிரதாயமான பொதுப்பணித் துறை சமாசாரம் அல்ல. இதை முன்வைத்து தேசிய ஒற்றுமை குறித்த மாபெரும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும் என்பதும் இதற்காகப் பொறுப்பேற்றுள்ள சர்தால் படேல் தேசிய ஒற்றுமை அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்.
ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும். படேல் நினைவு நாளான டிசம்பர் 15 அன்று இந்த தேசிய ஒற்றுமை இயக்கம் வெற்றிகரமாகத் தொடங்கி இருக்கிறது.
முதல் கட்டமாக, டிசம்பர் 15 அன்று இந்தியாவின் 565 இடங்களில் “ஒற்றுமை ஓட்டம்” நடத்துவதாகத் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது. நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில், நரேந்திர மோடி கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திலும் பல இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
2014 மார்ச் மாதம் வரை இந்த இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளன. பா.ஜ.க தொண்டர்கள் 1,87,000 ஊராட்சி ஒன்றியங்களைத் தொடர்பு கொண்டு சிலைக்கான மண்ணையும் இரும்புத் துகள்களையும் சேகரிக்க இருக்கின்றனர். இதற்காக, ஒவ்வொரு ஊரையும் அடையாளப் படுத்தும் உபகரணங்களுடன் (tracking devices) கூடிய விசேஷ பெட்டிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த இயக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோரி நரேந்திர மோதி எழுதிக் கையெழுத்திட்ட கடிதம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கும் பாஜக தொண்டர்களால் வழங்கப் படும். 3 லட்சத்திற்கும் மேலான பள்ளிகளும் தொடர்பு கொள்ளப் படும்.
இந்த இயக்கத்தில் இணையும் அனைத்து கிராமங்களின் புகைப்படங்களையும் கோர்த்து ஒரு பிரம்மாண்டமான படத்தொகுப்பு (collage) உருவாக்கப் படும். ஒவ்வொரு கிராமத்தினரும் கையெழுத்திட்ட பதாகைகள் 80 கிமீ நீளமுள்ள நீண்ட துணியில் இடம் பெறும். இவை ஒற்றுமை சிலை வளாகத்தில் அமைய இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப் படும்.
“இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?” என்று கேட்கிறார் சமூகவியலாளர் ஷிவ் விஸ்வநாதன். இந்த இயக்கம் உருவாக்கும் மாபெரும் மக்கள் தொடர்பு சாத்தியங்களால் காங்கிரஸ் கிலி அடைந்துள்ளது. ”படேல் சிலையை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறது பாஜக” என்று புலம்புகிறார்கள் காங்கிரஸ் தலைகள். நேரு குடும்பத்தையும் அதன் சமீபத்திய தயாரிப்பான முட்டாள் இளவரசனையும் வைத்து அரசியல் செய்வது இனிமேலும் எடுபடாது என்ற விஷயம் காங்கிரசுக்கு எப்போது தான் உறைக்குமோ தெரியவில்லை.
உண்மையில் சுதேசி இயக்கமும் காங்கிரசும் விடுதலைப் போராட்ட காலங்களில் உருவாக்கிய மக்கள் தொடர்பு சாதனங்கள் தான் இவை. 1800களின் இறுதியில் சுதேசி கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கான நிதியைத் திரட்ட, பால கங்காதர திலகர் கிராமம் தோறும் சென்று மக்களிடம் ஒரு பைசா வசூலித்தார். இந்தியர்கள் சுயமாக ஒரு சுதேசி உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார் மதன் மோகன் மாளவியா. ஒவ்வொரு நகரிலும் சென்று அங்குள்ள பிரபுக்களிடமும் பொதுமக்களிடமும் விதவிதமாக இறைஞ்சி சில்லறைகள் சேர்த்து புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவினார். 1960களில் கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைப்பதற்காக தேசம் முழுவதும் ஒரு ரூபாய் நன்கொடை அட்டைகளின் மூலம் விவேகானந்த கேந்திரம் நிதி திரட்டியது. இவற்றின் மூலம் குறிப்பிட்ட திட்டம் நிறைவேறியது மட்டுமல்லாமல் தேசபக்தியும் தேசிய ஒருமைப் பாட்டு உணர்வும் பரவின என்பது வரலாறு. புதிய வரலாற்றைப் படைக்கப் போகும் தேசிய நாயகர் நரேந்திர மோதியின் தலைமையில் இந்த இயக்கம் தொடங்கியிருப்பது இயல்பானதே.
கட்சி சார்புகள் கடந்து, ஒவ்வொரு இந்தியரும் சர்தார் படேலின் நினைவைப் போற்றும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
Stop building statues of leaders. This is Criminal wastage of money. People can get united only for the purpose and not for jingoism.
kmv,
Every purpose needs a symbol and symbolism.
Statue of Sardarji Patel is surely the symbol of India’s unity. Will you say national flag and anthem as jingoism ? If so, let that stay !
கண்டிப்பாக அரிய மாமனிதரின் சிலை இந்தியாவின் ஒற்றுமையை பறை சாற்றும்.
வாழ்க பாரதம்!
https://www.statueofunity.in/
It is but natural and fitting to build such a moument for the national hero, who was instrumental in building our unified India, by public contribution from every citizen of India.
நாடு மறந்துவிட்டது பாரதத்தின் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் மற்றும் மூளை மனிதர் ராஜாஜி
I would have participated in the run if I am in India. Anyone know how to enroll in contributing the steel? My close relatives in India who are farmers would love to make their contribution.
The nature of the people is to forget the past and live in the present. Let us not live in the name of past glories. The culture of projecting a past leader and living under the shadow should not be the motto of BJP. Let BJP build statues of Patelji at its own cost in all the BJP offices where space is available.