தமிழாக்கம்: அரங்க. இரகுநாதன்
தனியன்கள்
காலடி தோன்றிய நாளடி தொட்டுஅவர்
காலடி பற்றிய காதலார்ச் … சீலர்க்கு
மாலடி பற்றுதல் மாணடி என்றவர்
தாளடி வீழ்ந்தேன் தவித்து.
பிரம்மஞானம் கூறி பிறப்பறுக்கும் ஆறென்(று)
இரண்டில்லா அத்வைதம் ஈந்தார் … சிறப்பொவ்வா
பத்தியில்லா ஞானமெனப் பண்டுரைத்தார் தாளிணையைப்
பத்திரமாய்ச் சிக்கெனவே பற்று.
வானப் பெரும்புகழ் வண்ஞானி சங்கரரின்
ஞானக் குவையெனும் நாயகன் பாமாலை
மோனப் பொருளுணர்ந்து முத்திபெற வெண்பாவில்
தீனன் பெயர்த்தேன் திளைத்து.
நூல்
ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம் கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே । ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥ 1॥
1) கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்
மூட⁴ ஜஹீஹி த⁴நாக³மத்ருʼஷ்ணாம் குரு ஸத்³பு³த்³தி⁴ம் மநஸி வித்ருʼஷ்ணாம் । யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோத³ய சித்தம் ॥ 2॥
2) சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி
புத்தியால் பெற்றவை போற்றுவாய் ..மெத்த
உழைப்பின் உயர்வை உளத்தில் இருத்திப்
பிழையற வாழ்தலே பீடு
நாரீஸ்தநப⁴ரநாபீ⁴தே³ஶம் த்³ருʼஷ்ட்வா மா கா³ மோஹாவேஶம் । ஏதந்மாம்ஸவஸாதி³விகாரம் மநஸி விசிந்தய வாரம் வாரம் ॥ 3॥
3) நங்கையரின் ஊனழகில் நல்லோரும் நேர்கெடுவர்
தங்கஉடல் வெற்றுத் தசைக்கோளம் … அங்கஎழில்
உன்நிலை மாற்றா(து) உயர்ந்திட பக்திஆழ்
அந்நிலையே ஆ(று)என்(று) அறி.
நலிநீத³லக³தஜலமதிதரலம் தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் । வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மாநக்³ரஸ்தம் லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் ॥ 4॥
4) கமலஇலை நீர்முத்து காண்சலன வாழ்க்கை
இமயமலை அன்னபெரும் இன்னல் … (இ)யமபயத்
துன்பத்தின் தாக்கத்தைத் தூளாக்கும் அப்பற்றே
இன்பத்துள் எல்லாம் இறை.
யாவத்³வித்தோபார்ஜநஸக்த- ஸ்தாவந்நிஜபரிவாரோ ரக்த: । பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜரதே³ஹே வார்தாம் கோঽபி ந ப்ருʼச்ச²தி கே³ஹே ॥ 5॥
5) பெறுமுன் உழைப்பால் பெருகும் உறவால்
பெறுவாய் மகிழ்ச்சி பிறரால் … ஒருகால்
செயலகெட்(டு) உடல்கெட்டு சீர்கெட்ட காலை
அயல்பட்டுச் செல்வர் அகன்று.
யாவத்பவநோ நிவஸதி தே³ஹே தாவத்ப்ருʼச்ச²தி குஶலம் கே³ஹே । க³தவதி வாயௌ தே³ஹாபாயே பா⁴ர்யா பி³ப்⁴யதி தஸ்மிந்காயே ॥ 6॥
6) உயிரோட்டம் உள்ளவரை உன்சுற்றம் கூடும்
உயிரோட்டம் நின்றாலோ ஓடும் … உயிரனைய
இல்லாளும் ஆவியிலா இக்கூட்டிற் கஞ்சியங்கே
நில்லாமல் நீங்கல் நினை
பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த: தருணஸ்தாவத்தருணீஸக்த: । வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த: பரமே ப்³ரஹ்மணி கோঽபி ந ஸக்த: ॥ 7॥
7) குழவிப் பருவம் குதூகலம ஆகும்
இளமை வனிதையர் ஈனக் …களியினில்
மீதமும் இல்லறம் மென்றிட என்றுதான்
நாதனை எண்ணுவாய் நீ
கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோঽயமதீவ விசித்ர: । கஸ்ய த்வம் க: குத ஆயாத- ஸ்தத்த்வம் சிந்தய ததி³ஹ ப்⁴ராத: ॥ 8॥
8) பெற்றவர் உற்றவர் பிள்ளையும் சுற்றமும்
வெற்றுற(வு) ஆகிடும் வேடிக்கை … மற்றிவர்பால்
பற்றோடு தாபமேன் பாசமேன் நேசமேன்
சற்றுநீ சிந்திப்பாய் சீர்.
ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம் நிஸ்ஸங்க³த்வே நிர்மோஹத்வம் । நிர்மோஹத்வே நிஶ்சலதத்த்வம் நிஶ்சலதத்த்வே ஜீவந்முக்தி: ॥ 9॥
9) நல்லவர் நட்பால் நசிந்திடும் வீண்அவா
வல்லதாம் ஆசை விலகிடும் … நில்லாது
மோகமும் ; உள்ளமும் ஒருமுகப் பட்டிடின்
வேகமாய்க் கிட்டிடும் வீடு.
கா தே காந்தா த⁴நக³தசிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா । த்ரிஜக³தி ஸஜ்ஜநஸங்க³திரேகா ப⁴வதி ப⁴வார்ணவதரணே நௌகா ॥ 10॥
10) மக்கள் மனைவியென மாயச் சகதியில்
சிக்கித் தவிக்கும் சிறுமதியே …. முக்காலும்
நல்லவர் நட்பொன்றே நம்பிறப் பாழியை
வெல்கிற ஓடமென் றுணர்
ஜடிலோ முண்டீ³ லுஞ்சி²தகேஶ: காஷாயாம்ப³ரப³ஹுக்ருʼதவேஷ: । பஶ்யந்நபி ச ந பஶ்யதி மூடோ⁴ ஹ்யுத³ரநிமித்தம் ப³ஹுக்ருʼதவேஷ: ॥ 11॥
11) மழித்தலும் நீட்டலும் மாற்றிடாப் பற்றை
ஒழித்திடாப் பொய்யன் உலகம்…பழித்த(து)
அழித்திடா ஞானமில் அந்தகன் அவனைக்
கொழித்திடும் எத்தனென்றே கொள்
அங்க³ம் க³லிதம் பலிதம் முண்ட³ம் த³ஶநவிஹீநம் ஜாதம் துண்ட³ம் । வ்ருʼத்³தோ⁴ யாதி க்³ருʼஹீத்வா த³ண்ட³ம் தத³பி ந முஞ்சத்யாஶாபிண்ட³ம் ॥ 12॥
12) உடலம் தளர்ந்தும் உரோமம் நரைத்தும்
நடக்கக் கழியே நயப்பார் … கடைவாயிற்
பற்களும் போயினும் பாரிதன் மானிடர்
பற்றுகள் விட்டிலர் பார்
அக்³ரே வஹ்நி: ப்ருʼஷ்டே² பா⁴நு: ராத்ரௌ சுபு³கஸமர்பிதஜாநு: । கரதலபி⁴க்ஷஸ்தருதலவாஸ- ஸ்தத³பி ந முஞ்சத்யாஶாபாஶ: ॥ 13॥
13) முகத்தை முழங்காலில் மூடி உறக்கச்
சுகத்தில் திளைத்துச் சுவைப்பான் …. புகலென
ஈண்டும் மரத்தடி ஏழையும் ஆசைகள்
ஈண்டல் விடுத்தல் இலை
குருதே க³ங்கா³ஸாக³ரக³மநம் வ்ரதபரிபாலநமத²வா தா³நம் । ஜ்ஞாநவிஹீந: ஸர்வமதேந முக்திம் ந ப⁴ஜதி ஜந்மஶதேந ॥ 14॥
14) கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்
ஸுரமந்தி³ரதருமூலநிவாஸ: ஶய்யா பூ⁴தலமஜிநம் வாஸ: । ஸர்வபரிக்³ரஹபோ⁴க³த்யாக:³ கஸ்ய ஸுக²ம் ந கரோதி விராக:³ ॥ 15॥
15) சொத்துச் சுகங்களால் சோரா தொதுக்கியே
வெற்றுத் தரையில் விழிமூடார் … சித்தம்
சிறிதும் கலங்காத சீலோர் மகிழ்வைப்
பறித்துக் குலைப்பவர் பாழ்
யோக³ரதோ வா போ⁴க³ரதோ வா ஸங்க³ரதோ வா ஸங்க³விஹீந: । யஸ்ய ப்³ரஹ்மணி ரமதே சித்தம் நந்த³தி நந்த³தி நந்த³த்யேவ ॥ 16॥
16) இனிமைக் களிபெற்றும் இன்யோகம் கற்றும்
தனிமை விழைந்தும் தகவோர் … கனிந்தும்
உகப்பாய்ப் பரத்தில் ஒருங்கிணைந் தார்க்கிவ்
இகத்திலும் இன்பம் இலக்கு
ப⁴க³வத்³கீ³தா கிஞ்சித³தீ⁴தா க³ங்கா³ஜலலவகணிகா பீதா । ஸக்ருʼத³பி யேந முராரிஸமர்சா க்ரியதே தஸ்ய யமேந ந சர்சா ॥ 17॥
17) கங்கைச் சுவைநீரைக் கைத்தலம் மாந்தியும்
அங்கண் அரியுரை அன்புளம் …. தங்கிடத்
தோன்றும் பொழுதில் தொழுது வழிபட
ஈண்டும் பிறப்பொன் றிலை
ரத்²யாசர்படவிரசிதகந்த:² புண்யாபுண்யவிவர்ஜிதபந்த:² । யோகீ³ யோக³நியோஜிதசித்தோ ரமதே பா³லோந்மத்தவதே³வ ॥ 18॥
18) கந்தல் உடுத்திக் கடுவினை நீக்கியும்
அந்தத் தியானலயிப்(பு) ஆழ்பவர் … புந்தியுடைப்
பிள்ளையாய் யோகியாய்ப் பிச்சிபோல் வாழ்வரே
தெள்ளியன் நற்றாள் திளைத்து
கஸ்த்வம் கோঽஹம் குத ஆயாத: கா மே ஜநநீ கோ மே தாத: । இதி பரிபா⁴வய ஸர்வமஸாரம் விஶ்வம் த்யக்த்வா ஸ்வப்நவிசாரம் ॥ 19॥
19) எவருந்தன் பெற்றோர் உறவென்று பார்க்கில்
இவரெல்லாம் பொய்யான ஏய்ப்பே … இவற்றைப்
புரட்டென்றும் மாயப் புரிவென்றும் தேரி
விருட்டென்று மாயை விரட்டு
த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு- ர்வ்யர்த²ம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: । ப⁴வ ஸமசித்த: ஸர்வத்ர த்வம் வாஞ்ச²ஸ்யசிராத்³யதி³ விஷ்ணுத்வம் ॥ 20॥
20) என்னுள் இருப்பான் இதர ருளுமிருப்பான்
என்னைப் பொருளின்றி ஏசாதே … தன்னுளே
காண்பானை மாற்றாருள் காண்பாரை மாறுகள்
காணாமல் நீங்கிடும் காண்
ஶத்ரௌ மித்ரே புத்ரே ப³ந்தௌ⁴ மா குரு யத்நம் விக்³ரஹஸந்தௌ⁴ । ஸர்வஸ்மிந்நபி பஶ்யாத்மாநம் ஸர்வத்ரோத்ஸ்ருʼஜ பே⁴தா³ஜ்ஞாநம் ॥ 21॥
21) நண்பன் பகையென்றும் நம்மவர் சுற்றமென்றும்
மண்ணில் பொருளற்ற மாறுகள் … உன்னுடைச்
சக்தியைப் பேதத்தில் சாகடித்தால் எப்போது
முத்தியை ஏற்பாய் மொழி
காமம் க்ரோத⁴ம் லோப⁴ம் மோஹம் த்யக்த்வாssத்மாநம் பா⁴வய கோsஹம் । ஆத்மஜ்ஞாநவிஹீநா மூடா⁴- ஸ்தே பச்யந்தே நரகநிகூ³டா:⁴ ॥ 22॥
22) சினத்துடன் காமம் சிதைத்திடும் ஆசை
மனத்துள மாயையும் மாய்க்கத் ..துணையினைத்
தேராத மூடனைத் தீயாக ஆரிருள்
சோரா தெரித்திடும் சூழ்ந்து
கே³யம் கீ³தாநாமஸஹஸ்ரம் த்⁴யேயம் ஶ்ரீபதிரூபமஜஸ்ரம் । நேயம் ஸஜ்ஜநஸங்கே³ சித்தம் தே³யம் தீ³நஜநாய ச வித்தம் ॥ 23॥
23) ஆயிரம் நாமமொடு ஆர்த்திடுவாய் கீதையும்நீ
மாயவனைத் தூயவுளத் துள்ளிருத்து … ஆய்ந்தபின்னர்
நல்லோரின் நட்பினையே நாடிநீ பெற்றதெல்லாம்
இல்லார்க்கும் ஈவாய் இசைந்து
ஸுக²த: க்ரியதே ராமாபோ⁴க:³ பஶ்சாத்³த⁴ந்த ஶரீரே ரோக:³ । யத்³யபி லோகே மரணம் ஶரணம் தத³பி ந முஞ்சதி பாபாசரணம் ॥ 24॥
24) மனிதா திளைக்கிறாய் மாதர் களியில்
பிணியில் உழல்கிறாய் பின்னர் … இனிஇதைச்
சாவுதான் நீக்கிச் சரிசெய்யும் என்றறிந்தும்
தீவினை நீக்கிடாய் தேர்ந்து
அர்த²மநர்த²ம் பா⁴வய நித்யம் நாஸ்திதத: ஸுக²லேஶ: ஸத்யம் । புத்ராத³பி த⁴நபா⁴ஜாம் பீ⁴தி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: ॥ 25॥
25) நிதியம் அமைதியை நீக்கும் மகிழ்ச்சி
மிதிபடும் செல்வம் மிகுந்தால் … விதியால்
மதித்த மகனும் மதியாப் பகையாம்
பொதிந்த அறமிதைப் போற்று
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேகவிசாரம் । ஜாப்யஸமேதஸமாதி⁴விதா⁴நம் குர்வவதா⁴நம் மஹத³வதா⁴நம் ॥ 26॥
26) பலனடக்கும் மூச்சுப் புலனொடுக்க யார்க்கும்
நலனடக்கும் நில்லாமை நிற்றல்.. கலங்கியும்
ஓர்ந்தும் உரைத்தும் இறைமையில் ஆழ்பவர்
சேர்ந்தாரே வீடெனும் சீர்.
கு³ருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த: ஸம்ஸாராத³சிராத்³ப⁴வ முக்த: । ஸேந்த்³ரியமாநஸநியமாதே³வம் த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥ 27॥
27) குருவவர் தாளைக் குவையெனக் கொள்வார்க்(கு)
இருவினை இன்னல்கள் இல்லை … உருகும்
புலன்கள் உருவில் புகுந்திடக் காட்டும்
நலன்கள் இறைமை நமக்கு
இப்பதிவின் ஆசிரியர் அரங்க. இரகுநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ் இலக்கியம், ஆன்மீகம் குறித்த பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
அருமையான மொழி பெயா்ப்பு. படித்தேன் ரசித்தேன்.மனம் மகிழ்தேன். இலக்கிய வளம் ஆழம் அதிகம்.ஆழ்ந்த ஞானம்.தொடரட்டும் பணிகள்.
தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு வந்தனம். மிக அருமையான வெண்பாக்கள். கட்டுரைகளின் தரமும், ஆழமும், லாவகமும் மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கின்றன. நன்றி. வணங்கி மகிழ்கிறேன்.
அருமையாக தமிழ் மொழியாக்கம் தந்தமைக்கு நன்றி.