தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.