இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “என்னப்பா… பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே…”, அதற்கு அடுத்தவன் அலுத்துக்கொண்டான்… “என்னவோ போ… கணக்கு பரிட்சைய நினைச்ச பயம்மா இருக்கு. பிள்ளையாருக்கு தேங்கா உடைக்கறதா தோப்புக் காரணம் போட்டுப் பிரார்த்தனை எல்லாம் செய்துகொண்டு இருக்கேன்..”. அதற்கு அடுத்தவன் “அது சரி. அதான் பிள்ளையார்க்கிட்ட வேண்டிக்கிட்ட இல்ல.. அவரே எழுதி கொடுத்துடுவார்”. இவன் “ஆமா.. முதல்ல அவரே கணக்குல வீக்கா இருந்தா என்ன செய்யறது?” என்று சிரித்துக் கலைந்தார்கள்.
எங்கே பிரார்த்தனை செய்கிறோமோ இல்லையோ, பரீட்சை வந்தால் பிள்ளைகளெல்லாம் பிள்ளையாரிடம் ஒரு ஆப்ளிகேஷன் போட்டுவிடுவது வழக்கமாக இருக்கிறது. பிள்ளையார் அவ்வளவு சுலபமான தெய்வமாக இருக்கிறார். அவ்வையார் கூட பிள்ளையாரிடம் பால், தேன், பாகு, பருப்பு என நான் உனக்கு நான்கு தருவேன். நீ எனக்கு அவ்வளவு கூட தரவேண்டியது இல்லை – மூன்றே மூன்று தமிழை மட்டும் தா என்று விளையாட்டாகக் கேட்டது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
பிள்ளையார் என்றும், கணபதி என்றும், விநாயகர் என்றும் துதிக்கப்படுகிற இந்த தெய்வம் எத்தனைக்கு எத்தனை எளிமையாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை ஆத்மீகத்தில் பெருமைகள் பொதிந்தது. லலிதா சகாஸ்ரநாமம், விஷ்ணு சகாஸ்ரநாமம், சிவ சகாஸ்ரநாமம் என்று பிரசித்தமாக இருக்கும் சகாச்ரனாமங்களைப்போல் கணேசருக்கும் சகாஸ்ரநாமம் உண்டு.
ஹிந்து மதத்தில் காணபத்யம் என்றே கணேச வழிபாடு இருந்தாலும் மற்ற சைவம், வைணவம், சாக்தம் என்று ஒவ்வொரு உட்பிரிவிலும் கணபதி உண்டு. முதல்படியாக “கணானாம்த்வா கணபதிம் ஹவாமகே” என்று வேதம் கணபதியை போற்றுகிறது! சைவத்தில் சிவபெருமானுக்கே கணபதிதான் தடைகளை நீக்கிக் கொடுப்பதாக புராணம் சொல்கிறது. வைணவத்தில் கஜானனர் என்ற நாமத்துடன் மஹாவிஷ்ணுவின் சேனை முதலியாக இருக்கிறார்.
சக்தி வழிபாட்டில், மிகவும் போற்றப்படும் சௌந்தர்ய லஹரியை முதலில் இயற்றியது பிள்ளையார் என்று கீழ்கண்ட பாடலில் தெரிய வருகிறது:
பிறைதவழும் எழில்தோன்றப் பிறந்குகதிர் வெண்கோட்டன்
செறிகதிர்செய் தடங்குடுமிச் செம்பொன் மால்வரை வாய்ப்ப
மறைபுகழும் சௌந்தரிய லஹரியினை வகுத்தெழுதும்
விறல்கெழுமு வேழமுகன் விரைமலர்த்தாளிணை தொழுவாம்!
இவ்வளவு ஏன், ஹிந்து மதத்துக்கு – வேதத்துக்கு மாற்றானது என்று இருக்கும் பௌத்த – ஜைன மதங்களில் கூட விநாயகர் உண்டு. தந்திர வழிபாடுகளில் விநாயகருக்குச் சம்பந்தம் நிறைய உண்டு. அவரது உருவமே பிரணவ வடிவினதாகவும், யோக மார்க்கத்துக்கு நெருங்கிய தொடர்பு உடையதாகவும் இருக்கிறது. அவ்வையாரின் விநாயகர் அகவல் யோக மார்க்கத்துக்கு ஒரு பொக்கிஷம். அதில் யோகத்தைக் குறித்தான பல கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.
என்னதான் அவர் பெரியவராக, வேறொரு நாயகர் இல்லாத விநாயகராக இருந்தாலும் அவருக்கு மூஞ்சூறுதான் வாகனம் – யாரையும் ஈர்க்கும் அன்பு வடிவம். தெரு முனை, குளக்கரை என்று எங்கும் வசிப்பிடம் – குழந்தைக்கு குழந்தையாகவும், யோகிக்கு யோகமாகவும் இருக்கிறார்.
வீட்டிலிருக்கும் சின்னப் பயலிடம் உனக்கு எந்த சாமி பிடிக்கும் என்று கேட்டபோது சொன்னான் , “எனக்கு பிள்ளையாரையும் கண்ணனையும் மட்டும் பிடிக்கும்”. ஏன் என்று கேட்டதற்கு “ரெண்டு பெரும் நிறைய விளையாடுகிறார்கள். கையில் எப்போதும் திங்கறதுக்கு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்று. ஆச்சர்யம் தான் விநாயகரின் எளிமையும் பெருமையும்.
“சேனாநீனாம் அஹம் ஸ்கந்த: ” என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் “படைத்தலைவர்களில் நான் ஸ்கந்தன்!” என்று தேவ செனாபதியை முருகனை சொல்லுகிறார். அப்படிப்பட்ட முருகனுக்கு வள்ளியை திருமணம் செய்து வைத்தது பிள்ளையார். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை விபீஷனரிடம் இருந்து சாமர்த்தியமாக வாங்கி எழுந்தருளப்பண்ணியது பிள்ளையார்! என்று பிள்ளையாரின் மீது பல ஐதீகங்கள் உண்டு.
அது மட்டும் அல்ல, சிதம்பரத்தில் பொல்லாப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அந்த பிள்ளையாருக்கு ஏன் அந்த பெயர் வந்தது? சிதம்பரத்தில் நம்பியாண்டார் நம்பி என்கிற அடியார் இருந்தார். திருமுறைகள் முழுவதையும் எடுத்து காத்துக் கொடுத்தவர் அவர்தான். அவருடைய சிறு வயதில் ஒரு நாள் எதோ காரணத்தால் பிள்ளையார் கோவில் பூஜையை தன்னால் செய்ய முடியவில்லை என்று இவரை நடத்தச் சொல்லி அவரது தந்தையார் பணித்தார். சிறுவனான நம்பியும் கோவிலுக்குச் சென்று பூஜை செய்து பிரசாதத்தை பிள்ளையாருக்கு படைத்தார்.
பிள்ளையார் இவர் எதிர்பார்த்தது போல் உண்ணவில்லை. நம்பி கலங்கி அழவும் பிள்ளையார் மனமிரங்கிப் பிரசாதத்தை உண்டு விடுகிறார். செய்தி கேட்ட தந்தையார் நம்ப மாட்டாமல் கோவிலுக்கு வந்து பார்க்க அவர் முன்பும் பிள்ளையார் பிரசாதத்தை உண்டுவிட அதிலிருந்து அந்த பிள்ளையாருக்கு பொல்லாப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்டது.
இதேபோல இன்னொரு சம்பவம் உண்டு. திருவாரூரில் மாற்றுரைத்த பிள்ளையார் என்ற கோவில் உண்டு. சுந்தரர் தமது மனைவியரான பரவையாருக்கு கொடுக்க பொன் வேண்ட அதை பிள்ளையார் கொடுக்கிறார். பொன்னைக் கொடுத்த பிள்ளையாரிடமே அதை ஊருக்கு பத்திரமாக எடுத்துச் செல்ல சுந்தரர் வேண்டிக்கொள்கிறார்.
அதை தானே எடுத்து வந்து கொடுப்பதாகவும் அருகில் உள்ள குளத்தில் பொன் அத்தனையையும் போட்டு விடச்சொல்லி பின் திருவாரூரில் இருக்கும் கமலாலயம் என்னும் பெரிய குளத்திலிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு பிள்ளையார் சொல்கிறார்.
பின்னர் சுந்தரர் திருவாரூருக்கு வந்து பரவையாரை அழைத்துக்கொண்டு கமலாலயம் வர அவருக்கு அந்த குளத்திலிருந்தே பொன் அத்தனையும் கிடைக்கிறது. ஆனால் நல்ல தரமான பொன் தானா என்று சந்தேகம் வர பிள்ளையார் தோன்றி அது பத்தரை மாற்று பொன் என்று தங்கத்துக்கு மாற்று உரைத்ததினால், மாற்றுரைத்த பிள்ளையார் என்று அழைக்கப் படுகிறார். இந்த மாற்றுரைத்த பிள்ளையார் கோவில் இன்றும் திருவாரூரில் இருக்கிறது.
எங்கள் ஊர்புரங்களில் ஒரு நம்பிக்கை. பிள்ளையார் சிலை புதிதாக அடித்து பிரதிஷ்டை செய்வதை விட எங்கிருந்தாவது கேட்பாரின்றி இருக்கும் பிள்ளையார் சிலையை கொண்டு வந்து வைத்தால் அதற்கு சக்தி அதிகம் என்று நம்பிக்கை. புதிதாக குடியிருப்புகள் வரும்போது கண்டிப்பாக இப்படி ஒரு பிள்ளையார் சிலையை கொண்டுவந்து வைத்து விடுவார்கள். இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் தெருக்குத்தல் என்னும் தோஷம் நீங்க வித விதமாக பிள்ளையார் சிலை வைத்து விடுகிறார்கள். எங்கே இருந்தாலும் அதற்குரிய மரியாதை கொடுத்து பூஜித்து வந்தால் நன்மை நடக்கும் என்பது உறுதி.
விநாயகரை மிக சுலபமாக வழிபடலாம். அவ்வை சொன்னபடி பாலும், தேனும் படைத்து பொதுவாக கிடைக்கும் அறுகம்புல், எருக்கம் பூ மாலை கட்டி போட்டாலே பிள்ளையாரின் அருள் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும் என்று விரும்பினால் கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லலாம்:
சுமுகஸ்ச: ஏகதந்தஸ்ச கபிலோ கஜ கர்னக:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்பகர்னோ ஹேரம்ப: ஸ்கந்த பூர்வஜ:
இந்த ஸ்லோகத்தில் அடுத்து அடுத்து விநாயகரின் பதினாறு பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றது. இதை மனமார த்யானித்து வந்தால் விநாயகரின் அருள் கிடைக்கும். தொல்லைகள் எல்லாம் நீங்கி, நன்மைகள் நடக்க ஒவ்வொரு தேய்பிறை நான்காம் நாளிலும் (கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி திதி), சங்கட ஹர சதுர்த்தி என்று விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது மிகவும் சிறந்தது.
எல்லா தெய்வங்களையும் பூஜை செய்து பலன் பெற முதலில் கணபதியைத்தான் வழிபடுவது வழக்கம். எல்லா யாகங்களிலும் முதலில் விநாயகருக்குத்தான் முதல் மரியாதை. இப்படி இன்னொரு தெய்வம் கொடுக்கும் பலனைப் பெற்றுத்தரக் கூட பிள்ளையாரை நாட வேண்டும் என்று இருக்கும் போது நேராக பிள்ளையாரிடமே வேண்டிக்கொண்டால் சுலபமாக உடனடி பலன் கிடைக்கும் தானே!
எளிமையான மொழி அமைப்பில் எழுதியுள்ள கட்டுரை மூலம் விநாயகரின் எளிமையை விரித்திருக்கிறீர்கள்.
சௌந்தர்ய லஹரியை முதலில் படைத்தவர் விநாயகர்தான் என்பது நான் அறிந்திராத ஒரு புதிய தகவலாக இருந்தது.
உங்கள் தேடல்கள் தொடரட்டும்.
அன்புள்ள ஸ்ரீகாந்த்,
உங்கள் கட்டுரையை விநாயக சதுர்த்தி தினமான இன்று தான் படிக்கும் வாய்ப்பு நேரிட்டது. மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணி தொடரட்டும்.
‘நிலாக்காயுது… நேரம் நல்ல நேரம்… ‘
‘நேத்து ராத்திரி யம்மா…’
‘ஆடி மாசக் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க…’
இவையெல்லாம் யாவை என்று நினைக்கிறீர்கள் ?
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இறைவனின் திருக்கோயிலுக்கும் திருவுருவுக்கும் முன்பாக ‘கலைஞர்’கள் நிகழ்த்துகிற இசை மற்றும் பட்டிமன்ற நிகழ்சிகள் !
பெரிய பெரிய விஷயங்களைஎல்லாம் விவாதிக்கிற நமக்கு (ஹிந்துக்களுக்கு) இவற்றை எப்படிச் சமாளிப்பது என்கிற அறிவை இறைவன் தருவாரா ?
போலிப் பகுத்தறிவுவாதிகளும் கணபதியின் ‘சித்தி, புத்தி’ களைப் பற்றிக்
கிண்டலடிக்கிறார்களேயல்லாமல், “கடவுள் என்கிற பெயரில் ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள் ?” என்று கேட்பதில்லை. ஒரு வேளை அவர்கள் இவற்றின் பின்புலமாகக் கூட இருக்கலாம். ஆனால் What about Religious/Spiritual Hindus?
பாண்டிச்சேரியில் அருள்புரியும் மணக்குள விநாயகர் மீது பாட்டுக்கொரு புலவன் அருட்கவி சுப்பிரமணிய பாரதி இயற்றிய பாமாலை மிக சிறப்பானது. வேதாந்தம் முழுவதும் அந்த சுமார் 400 வரிகளில் அடக்கிவிட்டார் பாரதி. இதனை தினசரி பாராயணம் செய்து நான் நல்ல மன அமைதி பெறுகிறேன். விரும்புவோர் அனைவரும் படித்து மகிழலாம்.
Vinayagar athangarailum kulakkaraiyulum erukka karanam enna?