ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்

Swami Vivekanandaசெப்டம்பர் 11 அமெரிக்க வரலாற்றில் மறக்கமுடியாத நாள். நான் சொல்வது செப்டம்பர் 11, 1893. அந்த நாளில்தான் இந்தியாவிலிருந்து சென்ற முன்பின் தெரியாத துறவியொருவர் சுமார் ஏழாயிரம் பேராசிரியர்களும், சிந்தனையாளர்களும், மதகுருமார்களும், தத்துவவாதிகளும், பெருந்தனவந்தரும் நிறைந்த உலகச் சமயப் பெருமன்றத்தில் எழுந்து நின்று ”அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே!” என்று தொடங்கிய அழைப்பிலேயே உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தார். காவி அங்கியும், காவித் தலைப்பாகையும், இடுப்பில் அங்கியின்மேல் வரிந்து கட்டிய மஞ்சள் துண்டுமாக, மேலைநாட்டவரின் கண்களில் வினோதப் பிராணியாகக் காட்சியளித்த அவரது மதுரமான குரலில் வெளிப்பட்ட முதல் 5 ஆங்கில வார்த்தைகளுக்குத் தொடங்கிய கையொலி அடங்க முழுதாக இரண்டு நிமிடங்களுக்கு மேலானது.

இதைப் பற்றிப் பின்னாளில் நினைவுகூர்ந்த திருமதி பிளாட்ஜட் சொன்னார்: “அந்த இளைஞன் எழுந்து நின்று அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே என்றதும், 7000 பேர் தாமறியாத ஏதோ ஒன்றுக்கு அஞ்சலியாக எழுந்து நின்றனர்.”

ஒரு தலைமுறை முந்தைய பொதுவுடைமையாளர்கள் சுவாமி விவேகானந்தரை ‘வீரத்துறவி’ என்று புகழ்ந்து பேசுவர், எழுதுவர். “சூறாவளித் துறவி” (The cyclonic saint) என அமெரிக்கத் தாளிகைகள் அவனை வர்ணித்து மகிழ்ந்தன. அடிமைப்பட்டுத் தன்னம்பிக்கை இழந்து கிடந்த பாரதத்தின் முதுகெலும்பில் மின்னற் சாரமேற்றி நிமிர்ந்து நிற்கவைத்த தீரன் அவன். அவனுடைய வாழ்க்கை அவனுடைய தோற்றத்தைப் போலவே வசீகரமானது. அவனுடைய சொற்கள் அவனுடைய கண்களைப் போன்றே ஒளிவீசுவன. அவனுடைய அறிவு அவனுடைய தோள்களைப் போல விசாலமானது. அவனுடைய சிந்தனை அவனுடைய பார்வையைப் போன்றே ஆழமானது.

அவன் ஆன்மீகச் சிங்கம்.

அந்த அதிசயிக்கத்தக்க மகானின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இங்கே பார்க்கலாம். அவை நம் வாழ்க்கைக்குப் பொருளூட்டி, நெஞ்சுக்கு உரமூட்டுவன. ‘திமிர்ந்த ஞானச் செறுக்கு’ என்ற வாக்குக்கு இலக்கணமாய் நிற்பன.

மனித சிந்தனைப் போக்கையே மாற்றவும் வல்லன. மேலே படியுங்கள்….

—-

1. துயருற்றோருக்குத் தோள் தருவான்

“நான் ஒரு துறவி. எனக்கு வேண்டியது ஒன்றுதான். விதவையின் கண்ணீரைத் துடைக்காத, அநாதையின் பசியைப் போக்காத மதத்தையோ, கடவுளையோ என்னால் நம்ப முடியாது… எதை உனது மதம் என்று பெருமிதத்தோடு சொல்கிறாயோ அதை நடைமுறைக்குக் கொண்டுவா, முன்னேறு. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!”
–விவேகானந்தர், சென்னை அழகியசிங்கருக்கு எழுதிய கடிதம் (அக் 27, 1894)

<>oOo<>

நரேந்திரநாத தத்தாவின் (விவேகானந்தருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் அதுதான்) சிறுவயதிலிருந்து தொடங்கி காலவரிசைப்படி வரலாற்றைச் சொல்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல. அவர் வாழ்க்கையே சுடர் விடுவதுதான் என்றாலும் அதிலும் தெரிந்தெடுத்த சில வைரங்களை உங்கள் முன் இட்டு, முன்பு இவரை அறியாதவருக்கு (முழுவதும் அறிவதற்கு முயலும்) விவேகமும், அறிந்தவருக்கு ஆனந்தமும் ஊட்டுவது நோக்கம்.

ஆனால் இவர் ஒருநாள் உலகுபோற்றும் மகான் ஆவார் என்பதற்கான அடையாளங்கள் நரேந்திரனாய் இருந்த போதே தெரிந்தன. முளையிலே தெரிந்த குறிகளில் ஓரிரண்டைப் பார்ப்போம்.

அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். அந்நாட்களில் அந்தக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அல்லது கட்டணத் தள்ளுபடி கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்யுமுன் அந்த மாணவர் தன் ஏழைமையை நிரூபிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் தீர்மானம் எடுப்பது ராஜ்குமார் என்ற முதுநிலை ஊழியரின் கையில் இருந்தது. பரீட்சை வந்துவிட்டது.

நரேந்திரனின் வகுப்புத் தோழனான ஹரிதாஸ் சட்டோபாத்யாயா பெரும் பணநெருக்கடியில் இருந்தான். அதுவரை சுமந்துபோன கட்டணங்களையோ, தேர்வுக் கட்டணத்தையோ செலுத்த முடியாத நிலை. என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன் என்பதாக நரேந்திரன் நண்பனுக்குச் சொல்லியிருந்தான்.

ஓரிரண்டு நாட்களுக்குப் பின் ராஜ்குமாரின் அலுவலக அறையில் ஒரே மாணவர் கூட்டம். அதில் நுழைந்து நரேந்திரன் சென்றான். “ஐயா, ஹரிதாஸால் கட்டணங்களைச் செலுத்த இயலாது. அவற்றுக்குத் தள்ளுபடி கொடுப்பீர்களா? அவன் பரீட்சை எழுதாவிட்டால் வாழ்க்கையே பாழாகிவிடும்.”

“உன்னுடைய அதிகப்பிரசங்கித்தனமான பரிந்துரையை யாரும் கேட்கவில்லை. நீ போய் உன் துருத்தியை ஊது. கட்டணம் செலுத்தாவிட்டால் பரீட்சைக்கு அனுப்பமுடியாது” என்றார் ராஜ்குமார். நரேந்திரன் அங்கிருந்து அகன்றான். நண்பருக்குப் பெருத்த ஏமாற்றம்.

“கிழவர் அப்படித்தான் பேசுவார். நீ தைரியம் இழக்காதே. நான் ஏதாவது வழி கண்டுபிடிக்கிறேன்” என்றான் நரேந்திரன்.

மாலை கல்லூரி முடிந்தது. நரேந்திரன் வீட்டுக்குப் போகவில்லை. கஞ்சா பிடிப்பவர்களின் கூடாரம் ஒன்று இருந்தது. இருள் கவியும் வேளையில் ராஜ்குமார் அங்கே வருவது தெரிந்தது. திடீரென்று அவர்முன்னே போய் வழிமறைத்து நின்றான் நரேந்திரன். அந்த நேரத்தில் அங்கே நரேனை எதிர்பார்க்காவிட்டாலும் ராஜ்குமார் அமைதியாகக் கேட்டார் “என்ன விஷயம், தத்தா? நீ இங்கே!” என்றார்.

மறுபடியும் பொறுமையாக ஹரிதாஸின் நிலைமையைச் சொன்னான் நரேன். அதுமட்டுமல்ல, இந்த வேண்டுகோள் மறுக்கப் பட்டால் கஞ்சாக் கூடாரத்திற்கு ராஜ்குமார் வருவது கல்லூரியில் விளம்பரமாகும் எனவும் தெளிவுபடுத்தினான். “எதுக்கப்பா இப்படிக் கோபிக்கிறாய்? செய்துவிடுவோம். நீ சொல்லி நான் மறுக்கமுடியுமா” என்றார் முதியவர்.

பழைய கட்டணத்தைக் கல்லூரியே கொடுக்கும், தேர்வுக்கானதை மட்டும் ஹரிதாஸ் செலுத்தவேண்டும் என்று முடிவாயிற்று. நரேன் அவரிடமிருந்து விடை பெற்றான்.

காலம் அறிந்து,ஆங்கு இடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து – மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமைவலி தெரிந்து
ஆள்வினை ஆளப் படும்

(நீதிநெறி விளக்கம், 51)

3 Replies to “ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்”

  1. இந்து மதத்தின் ஆணிவேரை அறிந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஆற்றிய தொண்டை அனைவரும் தொடர்ந்து , பரம்பொருளின் அருள் பெறுவோம்.

  2. சுவாமி விவேகானந்தர் நமக்கு ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இந்து மதத்தின் ஆணி வேர். வருடம் ஒருமுறை வரும் அவரது ஜெயந்தி விழாவை மட்டுமாவது அரசு விமரிசையாக கொண்டாடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *