ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதிகவியான வால்மீகி முனிவருக்கு பிறகு பல பெருமக்கள் தமது வழியில் – தமது மொழியில் கவிதையாக, உரைநடையாக, ஓவியமாக என்று உருவாக்கி உலகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். நமது பாரத தேசத்தில் மட்டும் அல்ல – அதைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணம் பரவி இருக்கிறது. தற்காலத்தில் ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளில் கூட ராமாயணம் பிரபலமாக இருக்கிறது. மற்ற எத்தனையோ புராணங்கள் இருந்தும் ராமாயணம் இந்த அளவுக்கு பேசப்பட காரணம் என்ன? அது நமது வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அளவில் ஒன்றிய தன்மைதான்.
பரந்து விரிந்த பாரத நாட்டில் ஓரிடத்திலிருந்து சில நூறு மைல்கள் பிரயாணம் செய்தோமானால் மக்கள் பேசுகிற மொழியே மாறிப்போய்விடும். மேலிடையாக ஒவ்வொரு மொழியும் தனித்தனியாக அடையாளங்களைக் கொண்டிருப்பதால் புரியவே புரியாது. ஆனால் “ராமா” என்ற ஒற்றை மந்திரம் இமயம் முதல் குமரி வரை எல்லோருக்கும் புரியும்! மொழியால் விலகிச்செல்லும் இந்த பிரதேசங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது ராமாயணம் போன்ற நமது கலாச்சார பண்பாட்டு காவியங்கள் தான் என்பது வெளிப்படை.
சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல்
~ கம்பராமாயணம், அனுமபடலம்
கம்ப நாட்டாழ்வார் ராமனே பரப்ரம்மம் என்கிறார். வால்மீகி ராமாயணத்திலும் அப்படியே. தெய்வமாக பார்த்தால் தெய்வம். மனிதனாகப் பார்த்தால் மனிதன். காவிய நாயகனாகப் பார்த்தால் அப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.. ராமன் என்கிற அவதாரம், மனிதர்களாகிய நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே பார்க்கிறவர்களுக்கு தகுந்த வகையில் ஒரு உயர்வுத் தன்மையை எடுத்து வைக்கிறது. ராமாயணத்தில் ராமன் மட்டும் அல்ல. அங்கே ஒவ்வொரு கதை மாந்தரும் ஒரு தர்மத்தை எடுத்து நடத்திக் காட்டுகிறார்கள். வாழ்க்கையின் உன்னதத்தை தெய்வமே இறங்கி வந்து வாழ்ந்து நமக்கு காட்டியதுதான் ராமாயணம். நல்லவனாக இருப்பது மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டியது ராமாயணம்.
மேலும் ராமாயணத்தை வெறும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எழுந்த போராட்டம் என்றும் ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கையின் மர்ம சுழற்சியில் தர்மத்துக்கும் தர்மத்துக்குமே போராட்டம் வந்து விடுகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பெற்ற மகனைக் காட்டுக்கு அனுப்புவதா அல்லது அதை விடுத்து ராஜநீதிப்படி நல்லவனான மகனை அரசமர்த்துவதா? தந்தை சொல்லைக் காப்பாற்றுவதற்காக காட்டுக்கு செல்வதா அல்லது தர்ம சாத்திரங்கள் சொன்னபடி இறந்து போன தந்தைக்கு ஈமக்கடன்களை தலைப்பிள்ளையாக இருந்து செய்வதா? அழுது அழுது ஏங்கி தவித்து அடைந்த மனைவியை சேர்ந்திருப்பதா அல்லது அதே அரசநீதிப்படி மனைவியை துறந்து நேர்மையை நிலை நிறுத்துவதா? என்று வெவ்வேறு விதமான தர்மங்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும் எதை பின்பற்றுவது என்ற குழப்பங்கள் எழுந்து அதில் நமக்கு வழிகாட்டுதலாக நல்ல எடுத்துக்காட்டுகளை அள்ளித்தருவது ராமாயணம் என்னும் இந்த மஹா காவியம்!
பக்தியே வடிவாக அனுமன். சேவையே வடிவாக இலக்குவன். கருணையே வடிவாக சீதை. வேதத்தின் – வேதம் காட்டிய தர்மத்தின் விழுப்போருளாக ராமன் ! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை – என்று பித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய மரவுரி தரித்து காட்டுக்கு கிளம்பிய ரகு குல வீரன் ராமன்.
அதர்மத்தின் வழி நடந்த பெரும் பேரரசான ராவண ராஜ்ஜியத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய கர்ம வீரன் ராமன்! ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவர் அவனை அண்டி தன்னை காப்பாற்றுமாறு கேட்க அண்டியவர்களை ரட்சித்த ஏக வீரன் ஸ்ரீராமன்! அதனாலேயே ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்று பெரியோர் கூறுவர்.
அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||
– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்
என்னை அண்டி விபீஷணன் என்ன அந்த ராவணனே வந்து சரணாகதி செய்தாலும், அவனையும் காப்பேன் என்று ராமன் விபீஷன சரணாகதியின் போது, அதை மறுதலித்து பேசும் சுக்ரீவனிடம் சொல்கிறான். மகா பாதகத்தை செய்த ராவணனையே மன்னிக்கக் கூடிய கருணை கடல் ராமன்.
இந்த வீர புருஷனின் சரித்திரத்தை சம்ஸ்க்ருதத்தில் சுருக்கமாக அதே சமயத்தில் மிக கம்பீரமாக இயற்றப்பட்ட காவியம் தான் இந்த மஹா வீர வைபவம். இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காவியத்தை இயற்றிய மஹான், ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்தில் பிரதான குருமார்களில் ஒருவரான வேதாந்த தேசிகர். இந்த காவியம் ரகுவீரனான ராமனின் குணங்களையும் ராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளையும் நூறுக்கும் குறைவான ஸ்லோகங்களுடன் எடுத்து சொல்கிறது. இந்த ஸ்லோகங்கள் சொல்லும், பொருளும், சொல்லின் ஒலியும் இயைந்து ஒரு தெய்வீக அனுபவத்தை மெய்சிலிர்க்க அளிப்பது தெய்வீக அருள் பெற்ற கவியின் சாதுர்யம்.
கத்யம் என்பது சம்ஸ்க்ருதத்தில் உரை நடை வடிவில் இயற்றப்படும் காவியம் ஆகும். இதில் ஓசை நயம் மிகுந்து சொல்வதற்கு மிக அழகாக இருக்கும். தமிழில் வசன கவிதையை இதற்க்கு ஒப்பிடலாம். சரியானபடி உச்சரித்தால் அந்த அந்த வார்த்தைகளின் உணர்ச்சியும் மனதிற்குள் எழும் – இது அந்த மொழியின் சிறப்பு மட்டும் அல்ல – இந்த வகையில் அமைத்த கவியின் திறமையும் தான்.
நிகரற்ற கவி, வைஷ்ணவ குருபரம்பரையில் முக்கியமானவர், வேத – வேதாந்தங்களின் கரை கடந்து விளங்கிய மேதை – என்று பல சிறப்புகள் பெற்ற ஸ்வாமி வேதாந்த தேசிகன், வாழ்ந்த காலம் மிகவும் சிக்கலானது. பொதுவாக பாரத தேசத்துக்கே சோதனையான காலகட்டம் அது. கல்லெறி தூரத்திற்குள் இரண்டு மூன்று நாடுகள் – அரசுகள் எனும் படியாக எங்கும் குறுநில மன்னர்கள். பாரத தேசத்துக்கென்று, குப்தர்கள், மௌர்யர்கள் போல பொதுவான ஒரு பேரரசு என்று எதுவும் இல்லை. மக்களும் சமணம், சாக்கியம், பௌத்தம் என்று வெவ்வேறு மதங்களின் பிடியில் சிக்கி இருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் துருக்கர் படையெடுப்பு வேறு ஏற்பட்டு மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். இந்த சோதனைகளை எல்லாம் தாங்கி கடந்து, ஹிந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் வைதீக மதமும், அதில் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயமும், விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் நமக்கு கிடைத்திருப்பதற்கு ஸ்வாமி தேசிகன் ஒரு முக்கிய காரணம். ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற ஆசாரியர்களுக்கு பிறகு பெரிய அளவில் தமிழிலும், வட மொழியிலும் பல நூல்களை இயற்றியவர்கள் என்று எடுத்துக் கொண்டோமானால் வேதாந்த தேசிகனை தவிர்க்க முடியாது.
இந்த மகான் ராமானுஜர் மறைந்த பிறகு சுமார் நூற்றி ஐம்பது வருடங்களுக்குள் காஞ்சிபுரத்தை அடுத்த திருத்தண்கா என்றும் துப்புல் (தூய புல் – தர்ப்ப புல்லை குறிக்கும்) என்றும் அழைக்கப்படும் ஊரில் அனந்த சூரி மற்றும் தொத்திராம்பா தம்பதியர்களுக்கு பிள்ளையாக அவதரித்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் வேங்கடநாதன். இவர் தனது தாய்மாமனான அப்புள்ளார் என்ற ஆசார்யாரிடமே கல்வி அனைத்தும் கற்றார். இருபத்தி ஒரு வயதில் திருமணம் நடந்தது. கல்வி கேள்விகளில் மிகச்சிறந்து இளம் வயதிலேயே ஆசார்யனாக ஏற்றுக்கொள்ளப் பட்டார்.
வேதாந்த தேசிகரது வாழ்வில் நிகழ்ந்த சாதனைகள் எண்ணற்றவை. கருடனை உபாசித்து பல மந்திர சித்திகள் பெற்றவர். பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடாழ்வானே இவரது உபாசனையில் மகிழ்ந்து ஹயக்ரீவ மந்திரங்களை கொடுக்க அதன் மூலம் ஹயக்ரீவரை துதித்து ஞானத்தைப் பெற்றார். சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும், கலைகளையும் கற்று சர்வக்ஞரானார்.
சிலை வடிப்பது போன்ற நுண்கலைகளிலிருந்து, பகவான் கண்ணனின் கதையைச் சொல்லும் யாதவப்யுதயம் போன்ற காவியங்களை இயற்றுவது, சங்கல்ப சூர்யோதயம் போன்ற நாடகங்கள் எழுதுவது, பிரபந்த சாரம், மும்மணிக்கோவை போன்ற தமிழ் பாசுரங்கள் இயற்றுவது வரை புலமையில் காளிதாசனுக்கு ஈடாக விளங்கினார். துருக்கர் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் தாக்கப்பட நம்பெருமாளையும், உபய நாச்சிமார்களையும் சுமந்து சென்று காத்து பெருந்தொண்டு புரிந்தார். வைணவத்தில் ராமானுஜருக்கு அடுத்தபடி ஆசாரியராக இருந்து பல தத்துவ விவாதங்களில் வென்றார்.
இவருடைய பாலிய நண்பர் அத்வைதியான வித்யாரண்யர் என்ற துறவி. துருக்கர்களை விரட்டி அவர்களுக்கு எதிரான விஜய நகர சாம்ராஜ்ஜியம் அமைய மூல காரணமாய் இருந்தவர். அவர் தனது நண்பரான இவரை தம்முடன் இருக்குமாறு அழைத்த போதிலும் தேசிகர் மறுத்து விட்டார். வாழ்வில் பல சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து வந்த இந்த நிறை மனிதர் தனக்கென்று எதுவும் இல்லாமல் உஞ்சவிருத்தி எடுத்து உண்டு பரம வைஷ்ணவராகவே விளங்கினர்.
வேதாந்த தேசிகருடைய அபிமான ஸ்தலம் அதாவது மிகவும் விரும்பிய தலம் – திருவஹீந்திரபுரம். இங்கே இருக்கும் தேவநாயகப் பெருமாள் கோவிலில் ராமர் சந்நிதி உண்டு. இங்கே தான் ராமபிரானை தரிசித்து உள்ளம் உருகி இந்த மகாவீர வைபவம் என்றும் ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படும் ஸ்லோகங்கள் தேசிகரால் இயற்றப்பட்டன என்று தேசிகரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் வைபவ பிரகாசிகை போன்ற நூல்கள் கூறுகின்றன.
இனி அடுத்து வரும் பகுதியிலிருந்து மகாவீர வைபவத்தில் ராமனின் கல்யாண குணங்களை துளித்துளியாக ரசிப்போம். வேதாந்த மஹா தேசிகனைத் துணையாகக் கொண்டு ஸ்ரீ ராம பிரானின் அருளைப்பெருவோம்.
நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரில் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னியணிசேர் தூப்புல் வேதாந்த தேசிகனே !
இன்னுமொரு நூற்றாண்டிரும் !!
மஹா வீர வைபவம் கேட்டு ரசிக்க! (நன்றி: சுந்தர் கிடாம்பி அவர்கள்):
ஸ்ரீவேதாந்த தேசிகர் பற்றிய பல விவரங்களை அழகாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!
ஆடியோவில் சம்ஸ்கிருத உச்சரிப்பு கம்பீரமாக இருக்கிறது.
அற்புதமான ஆரம்பம். கருத்துச்செறிவான கட்டுரை. பீடிகையே இப்படி என்றால் இன்னும் ரகுவீர கத்யத்தின் அழகை அனுபவிக்க ஆவலாக இருக்கிறது. தங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அருமை ஸ்ரீகாந்த், நான் தற்பொழுது தான் ஸ்ரீ வைஷ்ணவத்தின் பெருமைகளை தெரிந்து கொள்ளும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் மஹா வீர வைபவத்தை கண்டு களிக்க
மிக ஆவலாக உள்ளேன்.