ராமபிரான் திரு அவதாரம்
அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்து வந்தார் தசரத சக்ரவர்த்தி.
அவருக்கு கௌசல்யா (கோசலை), கைகேயி, சுமத்திரை என்று மூன்று பட்ட மகிஷிகள் இருந்தனர்.
ஆனால் தசரத மகாராஜாவுக்கு ஒரு பெரிய குறை இருந்தது. அது என்னவென்றால் தனக்குப் பின் அரசாட்சி செய்ய ஒரு வாரிசு இல்லை என்பதுதான். அவர் தனது குல குருவான வசிஷ்டரை அழைத்து ஆலோசனை செய்தார். அவர் ரிஷிய சிருங்கர் என்ற பெரும் முனிவரை அழைத்து வந்து அவர்மூலம் புத்திர காமேஷ்டி என்ற யாகத்தைச் செய்தால் குழந்தை பிறக்கும் என்று அறிவுரை கூறினார்.
மன்னரும் அவ்வாறே ரிஷிய சிருங்கரை (கலைக்கோட்டு முனிவர்) அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தார்.
அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.
அவ்வாறே அவர்கள் அந்த அமுதத்தைப் பருகினர். கருவுற்றுப் பத்தாம் மாதம் குழந்தைகளை ஈன்றனர்.
கௌசல்யா – ஸ்ரீ ராமன்
கைகேயி – ஸ்ரீ பரதன்
சுமத்திரை – ஸ்ரீ லக்ஷ்மணன், ஸ்ரீ சத்ருக்னன்
இந்தக் குழந்தைகளில் லக்ஷ்மணன் (இலக்குவன்) எப்போதும் ராமனுடன் இருக்க விரும்பியதும், சத்ருக்னன் பரதனுடன் இருக்க விரும்பியதும் மிக இயல்பாகவே நடந்தன.
விஸ்வாமித்திரரின் யாகத்தை ராம லக்ஷ்மணர் காப்பாற்றுதல்
வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் தசரத மகாராஜா, ராமர் உட்பட நான்கு சகோதரர்களையும் விஸ்வாமித்திர முனிவரிடம் கல்வி கற்க அனுப்பினார். அவர்கள் ராஜகுமாரர்களுக்குரிய போர்க்கலை உட்பட எல்லாக் கலைகளையும் அவரிடம் கற்றுத் திரும்பினர்.
ஒருநாள் விஸ்வாமித்திரர் வந்து “சக்ரவர்த்தி! நான் ஒரு யாகம் செய்யப் போகிறேன். அந்த யாகத்துக்கு அரக்கர்கள் பல இடையூறுகளைச் செய்கின்றனர். என்னுடன் ராமனையும் லக்ஷ்மணனையும் அனுப்பி வையுங்கள். அவர்களால்தான் யாகத்தை அரக்கர்களிடமிருந்து காக்க முடியும்” என்று கூறினார். சிறிய வயதினரான தனது பிள்ளைகளை அனுப்ப தசரதருக்கு மனம் இல்லை.
“மகரிஷி! அவர்கள் குழந்தைகள். நானே வந்து உங்கள் யாகத்துக்குக் காவல் நிற்கிறேன்” என்று தசரதர் கூறினார். விஸ்வாமித்திரருக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. எதுவும் வேண்டாம் என்று கூறித் திரும்பிச் செல்ல முயன்றார். உடனே வசிஷ்டர் சமாதானம் செய்தார். “சக்ரவர்த்திகளே! நீங்கள் ராம, லக்ஷ்மணர்களை முனிவர் பெருமானுடன் அனுப்புங்கள். அதனால் அவர்களுக்கு நல்லதுதான் நடக்கும்” என்று முக்காலமும் உணர்ந்த வசிஷ்டர் தசரதருக்கு உறுதி கூறினார்.
ராமரையும் லக்ஷ்மணரையும் அழைத்துக் கொண்டு விஸ்வாமித்திரர் காட்டில் தனது இருப்பிடத்துச் சென்றார். அங்கே யாகசாலையை அழிக்க மாரீசன், சுபாகு, தாடகை போன்ற அரக்கர்கள் வருகின்றனர். தாடகை ஒரு பெண்ணாயிற்றே என்று ராமர் தயங்கினார். ‘யாகம் முதலிய காரியங்களுக்குத் தடை செய்யும் அரக்கியைப் பெண் என்று பார்க்காதே. அவளைக் கொல்வதே தர்மம்’ என்று விஸ்வாமித்திரர் அவருக்கு உணர்த்தினார். தாடகையையும் சுபாகுவையும் ராம லக்ஷ்மணர் போரிட்டுக் கொன்று விட்டனர். ராமர் எய்த ஓர் அம்பினால் மாரீசன் கடலுக்குள் வெகுதூரம் தூக்கி எறியப்பட்டான்.
விஸ்வாமித்திரர் வேள்வியை நல்லபடியாக முடித்தபின் ராம, லக்ஷ்மணரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அவர் தசரதனுக்குக் கொடுத்த வாக்குப்படி அவர்களை நேராக அயோத்திக்கு அல்லவா அழைத்துப் போயிருக்க வேண்டும்? வேறொரு இடத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்….
பால ராமாயணம், என்னுடைய உறவினரான திருமதி லலிதா சேதுராமனின் இந்தப் படைப்பு அருமையாகவும், சுருக்கமாகவும் உள்ளது. அவருக்கு என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ராமாயணம் ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொரு மாதிரி வரும், இது சிறுவர்களுக்கான எளிமையான படைப்பு. இங்கே இட்டமைக்கு நன்றி.
திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் ராமாயணத் தொடர் எழுதப் போவதாய் என் நண்பர் கொடுத்த தகவலின் மூலம் இங்கே வந்தேன். கம்பரை நன்கு ஆய்வு செய்து அவர் எழுதப் போவதாகவும் அறிந்தேன். காத்திருக்கேன். நன்றி
காத்திருக்கும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு:
கம்ப ராமாயணத் தொடர் இன்றுவரையில் ஐந்து பாகங்களாக வெளிவந்திருக்கிறது. நானும் திரு மதுரபாரதி அவர்களும் உரை, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியனவற்றைச் செய்துவருகிறோம்.
காத்திருப்பதாகச் சொல்லும் தங்களுடைய ஆர்வத்துக்கு எங்கள் வாழ்த்து. எங்களுடைய முயற்சிக்குத் தாங்கள் அளிக்கும் ஆதரவுக்கு எங்கள் நன்றி.