1. அயோத்தி
பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி. அப்படிப்பட்ட பூமியில் காசி, ராமேஸ்வரம், ஹரித்வாரம்-ரிஷிகேசம், பத்ரிநாத்-கேதார்நாத், துவாரகா-மதுரா, ஷீரடி, பண்டரிபுரம், கொல்லூர்-பத்ராசலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை என்று இப்படி அநேக திவ்ய க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. நீராடும் க்ஷேத்திரம் (தீர்த்தம்) முக்கியமானதாக இருக்கும். தரிசனம் செய்யும் (மூர்த்தி) க்ஷேத்திரம் முக்கியமானதாக இருக்கும். மூர்த்தி, தீர்த்தம் இரண்டுமே முக்கியமான தலங்களும் உண்டு.
இவைகளைத் தவிர இன்னும் அநேக முக்கியமான தலங்கள் உள்ளன. அவற்றுள் மிக மிக முக்கியமான நகரமான அயோத்தியில் ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். சீதா, ராம, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராய் பட்டாபிஷேகம் செய்துகொண்டதும் அயோத்தி மாநகரத்தில்தான் நிகழ்ந்தது. ராமராஜ்யம் மிக உயர்வாகத் திகழ்ந்தது. அதற்கு முன் ராஜ்யம் நடத்திய தசரதர் போன்றவர்களும் ராஜ்ய பரிபாலனம் நன்றாகவே செய்து வந்தார்கள்.
அயோத்தியில் வீடுகளுக்குக் கதவுகளே கிடையாதாம். கதவு இருந்தாலும் யாரும் அதைப் பூட்ட மாட்டார்களாம். தானம் கொடுக்கவே முடியாதாம். ஏனென்றால் வாங்கிக்கொள்ள வறியவர்களே கிடையாதாம். அப்படிப்பட்ட செழிப்பான பூமி. எல்லா மன்னர்களும் செங்கோல் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அயோத்தி மாநகரத்தை மனதில் நினைத்து நமஸ்கரிப்போம்.