‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்னும் மொழிக்கேற்ப முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே மெய்ச் சமயமாகக் கருதி, தவ வாழ்க்கை வாழ்ந்தவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். சைவம் தழைக்கும் பொருட்டு அவதரித்த மகான். சுமார் 79 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து ஆன்மிக, இலக்கிய சேவை புரிந்தவர். முருகப் பெருமானின் குகப்பிரம்ம நெறிக்கும் தெய்வத் தமிழ் மொழிக்கும் தமது கவித் திறத்தால் சிறப்புச் செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையையும் தெளிவுபட விளக்கிய தவசீலர்.
ஒருமுறை பாம்பன் சுவாமிகள் அன்பர் ந. சுப்ரமண்யப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க கந்த சஷ்டி விழாவுக்காகத் திருவனந்தபுரம் சென்றிருந்தார். விழாவில் சிறப்பான அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவாமிகள் தமது திருக்கரத்தால் அன்னதானத்தைத் தொடங்கி வைத்து, தாமும் சேவையில் கலந்து கொண்டார். காலையில் தொடங்கிய அன்னதானம் மாலை சூரியன் மறையும்வரை தொடர்ந்து நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து உண்டனர்.
மாலையில் அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் ‘எத்தனை முறை சமையல் நடந்தது?’ என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள். அதற்கு அந்த அன்பர், ‘காலையில் சமைத்ததுதான், காய்கறிகள் மட்டுமே தீரத் தீர சமைக்க வேண்டி இருந்தது. உணவு அள்ள அள்ளக் குறையவில்லை’ என்றார் வியப்புடன். அது கேட்டு ஆச்சர்யமுற்ற சுவாமிகள், ‘எல்லாம் முருகனின் திருவருட் கருணை, அவனருளால் தான் இது சாத்தியம்!’ என்று கூறி முருகனைத் தொழுதார். அன்பர்களும் இவ்வற்புதம் குறித்து ஆச்சரியம் அடைந்தனர்.
பாம்பன் சுவாமிகள் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. சுருக்கமாகவும் அதேசமயம் தெளிவாகவும் விளக்குகிறீர்கள். அன்புடன் . ஜெயக்குமார்
மிக்க நன்றி, ஜெயகுமார்.
மகான்கள் எல்லா நன்மைகளும் நமக்காக செய்வார்கள். ஆனால் செய்ததெல்லாம் இறைவன் என்று அவனை போற்றுவார்கள். இவர்கள் நமக்கு கிடைத்தது நம் பாக்கியம்.