திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலையம்மனும் புலி உருவில் வந்து காவல் காக்க, தவம் செய்த பெருமைக்குரியவர். இவரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. பிறப்பால் ஆங்கிலேயரானாலும் ஓர் இந்துவாகவே வாழ்ந்தவர். தனது நிலங்களையும், சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு அளித்ததுடன் பல உற்சவங்களையும் முன்னின்று ஆர்வத்துடன் நடத்தியவர். அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தம் சொந்தச் செலவில் பல்வேறு திருப்பணிகளைச் செய்தவர்.
வருடம் தவறாமல் அண்ணாமலையாரின் தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஐடன் துரை, அண்ணாமலையாரின் தேர்த் திருவிழாவையும் மிக விமர்சையாக நடத்தி வந்தார். ஒருநாள் அண்ணாமலை தீபத்தைக் காண ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. அப்போது பலத்த மழை பெய்திருந்ததால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த ஐடன் துரை, ‘சத்குரு நாதா, உன்னைக் காணவும் அருணாசலேஸ்வரரை தரிசிக்கவும் நான் வந்து கொண்டிருக்கிறேன். சத்குருவே நீயே உற்ற துணை!’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கியதோடு, ‘இது என்ன முட்டாள்தனம்! வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்குள் இறங்குவதாது, அதுவும் குதிரையுடன்? துரை அவ்வளவுதான், இனிப் பிழைக்க மாட்டார்’ எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் காரணத்தைக் கேட்க, ஸ்ரீ தேசிகர் அதற்கு, ‘ நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!’ என்று கூறிவிட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.
சிறிது நேரத்தில் ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரை ஏறினர். உடன் அருணாசலத்துக்கு வந்து, குருநாதரை தரிசித்து அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினார் ஐடன் துரை. பக்தர்களும் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் அளப்பரிய சக்தியையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.
ஆகா, அற்புதமான ஒரு நிகழ்வை விவரித்ததற்கு நன்றி. இறைவனிடம் பக்தி செலுத்துவதில் பாரதமும், பரங்கியர்களும் வேற்றில்லை என்று உணர்த்தியுள்ளீர்கள்.
இது போல ஒரு நிகழ்வு நான் பகவான் ரமணர் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
யோகிகளுக்கு கண்ணுக்குள் உலகம் முழுதையும் அறிந்திருக்கிறார்கள் என்று விளங்குகிறது. அல்பமான மனிதர்களுக்கு இறைவனின் தியானத்தால் இது சாதித்தால், அந்த எல்லாம் வல்ல இறைவன் எல்லாவற்றையும் ஒருசேர அறிந்தும், கண்காணித்தும் இருக்கிறான் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி
ஜயராமன்
அன்புள்ள ஐயா,
ஹிந்துக் கடவுளர்களையும் மொழி வாரியாக, மாநில வாரியாகப் பிரிக்கத் தொடங்கி விட்டனர்.
வெள்ளைக்காரர்களுக்கும், முகமதியர் பலருக்கும் இராம பிரானும், கண்ண பிரானும், மீனாட்சி தேவியும், ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளும் காட்சி தந்து அருள் பாலித்துள்ளனர்.
ஆவணங்களிலிருந்து ஆதாரம் திரட்டி வெளியிட்டால் நல்லது.
ரஹிம், லதிஃப், ரஸ்கான், அப்துல் கான் கானா, ஹரி தாஸ் போன்றோரும் முகமதியர்களே.
தேடுபொறியில் முயன்றேன். British Archives- ல் தகவல் கிடைத்திலது.
அன்புடன்,
தேவ்
நன்றி தேவ், ஜயராமன்.
ஸ்ரீ ராகவேந்திரர் மன்றோவிற்குக் காட்சி அளித்திருக்கிறார். ஏரிகாத்த ராமர் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்குக் காட்சி அளித்திருக்கிறார். ஆவணங்களை பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் குறிப்பில் தான் காண வேண்டும். அது அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. பார்க்கலாம். நன்றி!
பி.எஸ்.ரமணன்
திரு. ஜயராமன் அவர்களுக்கு,
பறங்கியர் என்பது போர்ச்சுகீசியர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருந்தது. ஆங்கிலேயரைத் துரை என்றே வழங்கிவந்தனர். பறங்கிப்பேட்டை தற்போதைய கடலூர் மாவட்டத்தில் உள்ளது. போர்டோ நோவோ என வழங்கிவந்த இப்பகுதி போர்ச்சுகீசியர் ஆளுமைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. இது போலவே சென்னையிலுள்ள பறங்கிமலையும் போர்ச்சுகீசியர் காலப்பெயரே என்பது கணிப்பு. இதைத்தான் இன்று ஏசுவின் சீடர் தாமசின் கல்லறை என்று திரித்துக் கூறி வருகின்றனர்.
அன்புள்ள ஐயா,
ஈசான்ய ஞான தேசிகரின் சமாதி அண்ணாமலை கிரிவலம் பாதையில்
உள்ளது. நான் பல முறை அங்கு சென்று தரிசித்துள்ளேன். மிகவும் சக்தி
வாய்ந்த இடம். கோவிலூர் மடத்திற்கு சொந்தமானது. அவர்கள் தமிழில்
பல அத்வைத நூல்கள் பதிப்பித்து உள்ளனர் கைவல்ய நவநீதம் முதலிய
நூல்கள் அவ்விடம் கிடைக்கும்.
நமஸ்காரம்,
சுப்ரமணியன். இரா