நாட்டுப் படலம் (31-35) Canto of the Country (31-35)
பின்வரும் ஐந்து பாடல்களும் சென்றமுறை இடம்பெற்ற திணைமயக்க உத்தியின் தொடர்ச்சி. ஆகவே, 30ஆம் பாடலின்கீழ் தரப்பட்டுள்ள விளக்கத்தை வாசிப்பது இந்தப் பாடல்களை ரசிக்க உதவும்.
The following five verses are part of the craft of ‘mixed metaphors’ elucidated in our earlier section. Please read through the elucidation part of Verse 30, which would help to appreciate these verses,
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன்தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஓதையின்
வெருவி, மால் வரைச் சூல்மழை மின்னுமே. 31
சொற்பொருள்: துருவை – செம்மறியாடு. மென் பிணை – (செம்மறியாட்டின்) மெல்லியல்பு கொண்ட பெண்துணை. துளக்கு – அச்சம். மருப்பு இணை – ஒன்றை ஒன்று ஒத்த, ஒரேமாதிரி அமைந்துள்ள இரண்டு கொம்புகள். உரும் – இடி. ஓதை – ஓசை.
மென்மையான இயல்பு கொண்டதாகிய செம்மறிப் பெண்துணை ஈன்றெடுத்த கிடாக்கள், வரிவரியான அமைப்புகளைக் கொண்டதும், ஒத்த தோற்றத்தை உடையவையுமான தம்முடைய கொம்புகள் ஒன்றையொன்று மோதித் தாக்கும்படியாகத் தங்கள் வலிய தலைகளைக் கொண்டு தமக்குள் முட்டிக் கொள்ளும்போது உண்டாகும் பேரொலியைக் கேட்டு, சூல்கொண்டு மலைகளில் தங்கிக்கிடந்த மேகங்கள் அதிர்ச்சியால் வாய் பிளப்பதால் அவற்றின் மின்னலாகிய பற்கள் வானெங்கிலும் பளிச்சிடும்.
(அவை கொம்புகளால் முட்டிக்கொள்ளும் ஓசை பள்ளத்தாக்கு எங்கிலும் எதிரொலித்தது என்று இப்படி ஒரு நிகழ்வை நேரில் கண்டவர் குறிப்பிடுகிறார். ஆகவே, கவியின் கற்பனை அளவுக்கதிகமான புனைவு இல்லை; வழக்கமாக நடப்பதன் கவித்துவ சித்திரிப்பு என்று அறிய முடிகிறது.)
இயற்கையாக ஏற்படும் மின்னல்களின்மேல் கவி தன் குறிப்பை ஏற்றுகிறார். மென்மையான குணம் உடைய பெண் ஆடு ஈன்ற கிடாக்கள் கடுமையாக மோதும் காட்சியில் உள்ள முரண் ஒரு புறம். வெண்மேகங்கள் நீர்நிறைந்து, மலைகளின் மேல் தங்கி (சூல்கொள்ளும் மேகங்கள் என்பது மரபு) தம்முள் சேரும் நீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்கக் கருத்து, பிறகு மழையாகப் பொழியும் என்பது இலக்கிய வழக்கு. அப்படிச் சூல்கொண்டு தங்கியிருக்கும் மேகங்கள் ஆட்டுக்கிடாக்களின் கொம்புகள் மோதும் ஒலியால் அதிர்ச்சியுற்று வாய் பிளப்பதால் அவற்றின் பற்கள் மின்னலாக ஒளிருகின்றன என்ற கற்பனை ஒருபுறம். காட்டுப் பகுதியைச் (முல்லை நிலம்) சேர்ந்த ஆடுகளையும், மலைப் பகுதியில் (குறிஞ்சி) தவழும் மேகங்களையும் ஒன்றிணைத்துத் திணை மயக்கம் ஏற்படுத்துகிறான்.
Translation: Wild billy-goats, born of the gentle natured ewe, rammed their heads against each other in violent and power knocks, locking their ribbed horns in a fist of fray, the furious thuds that shocked the impregnated clouds and left them with mouths agape, their teeth flashing in rows of lightning.
Elucidation: Violent, warring rams, born of ewes of submissive nature is by itself a picture in contrast. Tradition has it that impregnated clouds in labour rest on mountains, which is echoed in Milton’s
“Mountains on whose barren breast
The labouring clouds do often rest…”
(L’Allegro)
The violent knocks of rams of the forestlands send waves of shock all around, causing the clouds resting on mountains to gasp and go agape, which in turn exhibits their ‘teeth’ in the resulting flash of lightnings. The ‘mixture of elements of different lands’ takes place in the acts of goats of forestland, causing the clouds (of the hills) to flash lightning all around. A poetic expression and interpretation of a natural event. Tamil poetry groups expressions of this kind under the head ‘thar kurippu etram’ or to put it in English terminology, ‘looking at nature through the spectacles of the poet’.
கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன்தொடர்ப் படுக்கும் வனவாரி சூழ்
குன்றுடைக் குலமள்ளர் குழூஉக் குரல்,
இன்துணைக் களி அன்னம் இரிக்குமே. 32
சொற்பொருள்: பிடி – பெண் யானை மள்ளர் – வீரர் (இந்த இடத்தில்) யானைகளைப் பிடித்துப் பழக்கப் படுத்துவதில் பயிற்சி பெற்றவர்கள். இரிக்கும் – சிதறி ஓடச் செய்யும். இரிதல் – சிதறி ஓடுதல்.
குட்டிகளுடன் உள்ள பெண்யானைகளை விட்டுவிட்டு, ஆண்யானைகளை மட்டும் பிடித்து, அவற்றைச் சங்கிலிகளால் கட்டுவதில் பயிற்சியுடைய வீரர்கள் எழுப்பும் பெருங்குரல், தம்முடைய இணைகளோடு வயல்களில் சுற்றித் திரியும் அன்னங்களை பயந்து சிதறி ஓடச் செய்யும்.
காடுகளில் ஏற்படும் அதட்டலான குரலோசை, வயல்களில் உள்ள அன்னங்களைச் சிதறச் செய்கிறது. திணை மயக்கம் ஏற்படுகிறது.
Translation: The angry shouts of men trained in capturing elephants, who leave she-elephants with their calves alone and take only the male elephants as captives and are chaining them (to be trained) makes the pairs of swans that wander on the paddy fields, scatter away in fright.
Elucidation: Trained men take male elephants in captivation and chain them. Their angry shouts trouble swans in the farms to run away helter-skelter. Not the mix of elements – an act in the forest causing something in the farmlands.
வள்ளி கொள்பவர் கொள்வன, மாமணி;
துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே. 33
சொற்பொருள்: வள்ளி – வள்ளிக் கிழங்கு. துள்ளி – துளி, துளிகள். தூங்கிய – தொங்கிய.
வள்ளிக் கிழங்குகளைத் தோண்டி எடுப்பவர்கள் (அகழ்ந்த நிலத்தின் அடியில்) கிடைக்கும் மணிகளை விட்டெறிகிறார்கள். அந்த மணிகள் மாமரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் மாம்பழங்களின் மேல் பட்டுச் சிதறுகின்றன. அவ்வாறு படுவதால் (நன்கு பழுத்த) மாங்கனிகள் பிளவுபட்டு அவற்றிலிருந்து சாறு சொட்டுச் சொட்டாகச் சிந்துகிறது. புன்னை மரங்களின் பூக்கள் பொன்னிறமாகத் தரையெங்கும் சிதறிக் கிடக்கின்றன. பொன்மயமான அவற்றின் மகரந்தப் பொடிகள் தரைமுழுதும் புள்ளிகளால் அமைந்த படுக்கையைப் போல விரிந்து கிடக்கின்றன. அந்தப் படுக்கையின்மேல்—எப்போதும் தாமரை மலர்களில் தங்கிக் கிடக்கும்—அன்னங்கள் துயில்கொள்கின்றன.
வள்ளிக் கிழங்கு, குறிஞ்சி நிலத்துக்கு உரியது. மாமரம், மாங்கனி ஆகியவை மருத நிலப் பொருட்கள். புன்னை, நெய்தல் நிலத்துக்கு உரியது. அன்னம், தாமரை ஆகியவை மருத நிலத்துக்கு உரியவை. ஒரு நிலத்துக்கு உரிய பொருளை மற்ற நிலத்துக்கு உரிய பொருளோடு கொண்டு கூட்டுகிறான் கவி.
Translation: Persons digging for sweet-potato, throw the precious stones that lie under the surface, away. Pelted precious stones hit juicy fruits of mangoes hanging on branches, making them drip. The golden specks of pollen falling from the densely flowering Punnai trees (Calophyllum inophyllum or Alexandrian laurel) form a bed under the branches; and on that bed the swans that surround lotuses go to sleep.
Elucidation: Sweet potato is a product of the hilly tracts; mango belongs to farmland; Punnai grows along lands surrounding seashores. And thus results the amazing mix.
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும் குரவை, கடைசியர்,
புன்தலைப் புனம் காப்புடை போதர
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி. 34
சொற்பொருள்: கொன்றை – கொன்றைப் பழத்தைத் துளைத்து உருவாக்கப்பட்ட குழல். வேயங்குழல் – மூங்கிலால் ஆன புல்லாங்குழல். கோவலர் – இடையர். கடைசியர் – விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்யும் மருதநிலத்துப் பெண்கள். உறக்கும் – உறங்கச் செய்யும். புனம் காப்பு – தினைப்புனம் போன்றவற்றைக் காக்கும் செய்கை (காவலிருக்கும் பெண்களின் செய்கை). குரவை – குரவைக் கூத்து ஆடும்போது இசைக்கப்படும் பண். நுளைச்சியர் – மீனவப் பெண்கள் (நெய்தல் நிலம்).
வயல்களில் வேலைசெய்பவர்களாகிய மருத நிலத்துப் பெண்கள் ஆடும் குரவைக் கூத்தின்போது பாடல்கள் ஒலிக்கின்றன. கொன்றைக் குழல், வேயங்குழல் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றவர்களான இடையர்கள் குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள கன்றுகள் துயில்கொள்ள இசைக்கப்படும் தாலாட்டாக மருதநிலத்துப் பெண்களின் குரவை ஒலிக்கின்றது. அத்தோடு நில்லாமல் தினைப்புனங்களைக் காத்துக் கொண்டிருக்கும் பெண்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் தங்களுடைய காவல் தொழிலை மறக்கச் செய்கின்றது. அப்படியே நெய்தல் நிலத்திலும் பரவி, அங்குள்ள மீனவப் பெண்களையும் மயக்குகிறது.
Translation: The songs of farmland lassies sung in accompaniment to their dance, are heard in the dwellings of shepherds, who are masters of the flutes (made of the pods of Konrai fruit and that of bamboo) and put the calves tethered in their sheds, to sleep. The song fills the air and spreads over to yonder lands where the hunter-women stand in guard over fields of millet (and other drygrains) to shoo away parrots, sparrows and other birds. They lose their minds in the songs and the fields go off-guard. The air sweeps across, carrying the song of farmland women, over to the shores, and enchant the hearts of fisherwomen.
Elucidation:–
சேம்பு கால்இறச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன
காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே. 35
சொற்பொருள்: குளத் தூம்பு – குளத்தின் மதகு. கால – கக்குதல். சுரிவளை – சங்கு இனம், நத்தைகளின் வகை. காம்பு – மூங்கில். கால் – காற்று. பொர – தாக்க. நான்றுஎன – தொங்குவதைப் போல (நாலுதல் – தொங்குதல். நாண்டுகொள்ளுதல் என்று இன்றும் வழக்கத்தில் உள்ள சொல்). தேறல் – தேன்.
பெரிய மலைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின்மேல் பலத்த காற்று வீசுவதால் அவை நாலாபுறமும் அலைபடுகின்றன. அவ்வாறு ஆகும் சமயத்தில் அருகிலிருக்கும் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரியபெரிய தேன்கூடுகளின்மேல் படுவதனால் அவை உடைகின்றன. தேன்கூடுகள் உடைவதனால், அவற்றிலிருந்து பெருகிஓடும் தேன், மலைச் சரிவுகளில் ஓடிவருவது ஏதோ ஒரு நீண்ட பாம்பு மலையின் மேலிருந்து தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அப்படிப் பெருகிவரும் தேன் செங்கழுநீர் மலர்கள் நிறைந்திருக்கும் குளங்களை நிறைக்கிறது. குளங்களை நிறைத்த தேன் மதகின் வழியாக (நீரோடு கலந்து) வேகமாக வெளியேறும்போது, அந்த வேகத்தால் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள சேம்புகளின் தண்டு முறிந்து போகிறது. அங்கே மேய்ந்துகொண்டிருக்கும் சங்கினங்கள் தேனைப் பருகுகின்றன.
நான்கே நான்கு அடிகளுக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்! மேற்படிப் பாடல் ஒரு சான்று. (திணித்தல் என்ற சொல் stuffing என்ற பொருளில் பயன்பட்டிருக்கிறது. தமிழை ஆங்கிலத்தின் துணைகொண்டு விளக்க நேரிடினும், இன்றைய சூழலை அனுசரித்து இதையும் செய்ய நேர்ந்தது. இல்லாவிட்டால் இச்சொல் பிழைபட உணரப்படலாம்.) கவிஞனுடைய மனம் எப்படிப்பட்ட மாயப் படிவங்களை உருவாக்க முடியும், எப்படி அவற்றையெல்லாம் கையகலம் இடத்துக்குள் கவனமாக இழைக்க முடியும் என்பதற்கு மேற்படி நெசவு சாட்சி.
Translation: Whacked by violent winds, tall bamboo shoots, grown densely on the hills, sway wildy and poke large loads of honeycombs hanging from nearby branches. (So heavy and so many were such combs that were ripped open that) Honey oozing from them swelled in a stream and found its serpentine way down the slopes, causing the illusion of an unusually long and heavy python descending down the rocks. The flow of honey then reached large water-tanks of paddylands, where the red water lilies had already filled all the surface. The tanks filled to the brim, mixed with the flow of honey, started overflowing and the current of the flow was so strong as to break the stem of the tuber, Sembu, planted in the fields. There, honey filled water spread all over the cultivated land, where mollusks bearing the burden of their spiraling shells, sipped on the cocktail.
Elucidation: A kaleidoscope of vivid imagery painted within a short space of four lines, four-foot long, each. How much can one pack within a quartet, sixteen foot long! You have a sample of how much Kamban can pack, above. High hills where tall bamboos grow; and winds howl their way through, violently. You have tall trees whose branches are bent with the loads of honeycombs nearby, that get torn by the sway of bamboo stems. And down flows honey on the slopes of the hill resembling a huge snake. The picture goes on. Amazing is the ways in which a mind of the caliber of Kamban can wield its magic and weave it through words!