ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருள் பற்றி சுவாமி விவேகானந்தரின் அழகிய உரை – தொடர்ச்சி…
.. வீண் விபரங்களைப் பற்றிப் பேசுவதில் உங்கள் பொழுதைப் போக்கவேண்டாம். அவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக விருக்கும் முக்கிய அம்சங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய வாழ்க்கையில் சரித்திர சம்பந்தமான முரண்பாடுகளிலிருக்கலாம். பிற்காலங்களில் அவர் வாழ்க்கையில் செருகப்பட்ட சம்பவங்களும் இருக்கலாம். எனினும், அதற்கு முன்னிராத உயர்ந்த கொள்கையை உபதேசித்த ஒரு மகானுடைய வாழ்க்கை இவைகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கவேண்டும்.
பார்க்க: கண்ணன் எந்தக் குலம்?
சாதாரணமாக தீர்க்கதரிசிகள் முன்னிருந்த கருத்துக்களைப் பூரணப்படுத்திக் கூறுகிறார்கள்; அல்லது தங்கள் காலத்திலே நிலவியிருந்த கருத்துக்களை உருவகப்படுத்திக் கூறுகிறார்கள் என்னலாம். அத்தகையவர்களைப் பற்றி அவர்கள் வாழ்க்கை உண்மையானதா, அல்லவா என்றூ சந்தேகிக்க இடமிருக்கிறது. ஆனால், எவ்வித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுவதற்காகவே வேலை, அன்பு செய்வதற்காகவே அன்பு, சேவை செய்வதற்காகவே கடமை என்ற லட்சியங்கள் அவரால்தான் முதன்முதல் உபதேசிக்கப்பட்டன. அவர் காலத்திற்குமுன் அவை யிருந்தனவென்று சொல்லக் கூடியவர்களிருந்தால், அதை நிரூபிக்கும்படி அவர்களை அறைகூவி யழைக்கிறேன். இவைகளைப் போதித்த ஒருவர் இருந்திருக்கத்தான் வேண்டும். இக் கருத்துக்கள் வேறு எவரிடமிருந்தும் பெற்றிருக்க முடியாது; ஏனெனில், அவை அக்காலத்து வாயுமண்டலத்திலிருக்கவில்லை.
ஸ்ரீ கிருஷ்ணர்தான் இத் தத்துவங்களை முதன் முதலில் உபதேசம் செய்தருளினார். அவருடைய சிஷ்யரான வியாசர் அவைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். அவர் உபதேசங்கள் அனைத்திலும் உயர்ந்தது அவர் கோபிகளுக்குக் கொடுத்த இவ்வுன்னத அன்புதான். அன்பு உன்மத்தம் உங்கள் மனத்தில் புகுந்து கோபிகளுடைய அருட் பேரன்பின் தன்மையை உணர்ந்தால்தான், நீங்கள் உண்மையில் அன்பின் தன்மையை உணர்ந்தவர்களாவீர்கள். உலகத்தை மறந்து, சுயநலத்தைத் துறந்து, தூய்மையின் உருவமாகி, தத்துவார்த்தங்களின் ஆராய்ச்சியையும் மறந்து, அந்த அன்புப் பைத்தியத்திலே ஈடுபடும்போதுதான், அன்பு செய்வதற்காகவே அன்பு என்ற அந்த கோபிகளின் எல்லையற்ற அன்பின் மகிமையை அறிவீர்கள். அவ்வன்பே அனைத்திலும் உயர்ந்தது. அதைப் பெற்றால் அனைத்தும் பெற்றவர்களாவீர்கள்.
இந்த உயர்ந்த நிலையிலிருந்து அடுத்த படிக்கு வருகிறோம் – ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையை உபதேசித்தருளினார். நமது தேசத்தில் புதிய முறையாக ஒரு வாதம் கிளம்பியிருக்கிறது. கோபிகளுடைய லீலைகள் நன்றாகவில்லையெனச் சில ஐரோப்பியர்கள் நினனக்கிறார்கள். டாக்டர் இன்னார் அப்படி நினைக்கிறார், அப்படியானால் அந்தப் பாகம் போகவேண்டியது தான். ஐரோப்பியர்கள் அனுமதியின்றிக் கிருஷ்ணன் இருக்க முடியுமா? முடியவே முடியாது! மகாபாரதத்தில் இரண்டு இடங்களில் தவிர வேறு இடங்களில் கோபிகளைப் பற்றிச் சொல்லப் படவில்லை. அவைகளும் முக்கியமான இடங்கள் இல்ல. திரௌபதி பிரார்த்தனையிலும், சிசுபாலன் பேச்சிலும் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவை பின் செருகப் பட்டனவையாகத் தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் வாதம் செய்கிறார்கள்., ஏன்? ஐரோப்பியர்களுக்குப் பிடிக்காததை அவசியம் எடுத்துவிட வேண்டுமல்லவா? ஆதலால், இவை பின்னால் செருகப் பட்டவை! இப்படியே கிருஷ்ணனைக் கூடப் பின்னால் செருகப்பட்டவன் என்று சொல்விடலாமே! இம்மனிதர்களுடைய மதமே வியாபாரமாக இருக்கிறது. இங்கு ஒரு காரியம் செய்து மறுமையில் அதற்காக வட்டியுடன் இன்பம் அனுபவிக்கவேண்டும் என்ற வியாபார மன்ப்பான்மையுள்ளவர்கள் அவர்கள். அத்தகைய மனப்பான்மையில் கோபிகைகளுடையது போன்ற அன்பிற்கு இடமேது?
வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. உபநிடதங்கள் பல்வேறு விதமாகப் பொருள் செய்யப் பட்டிருப்பதால், அவைகளைக் கிரகிப்பது கடினமாயிருக்கிறது. எனவே வேதங்களுக்கு மூலப் பொருளான அந்தப் பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன.
அதற்குப் பின்வந்த பாஷ்யகாரர்கள் சிலர், கீதைக்கு வியாக்கியானம் எழுதும்போதுகூடப் பல சமயங்களில் அதன் உண்மைக் கருத்தை உணராமலிருந்தது ஆச்சரியமான விஷயம். கீதை என்ன உபதேசிக்கிறது, பாஷ்யகாரர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். அத்வைதியாக இருக்கும் பாஷ்யகாரர், உபநிஷதங்களில் இருக்கும் துவைதப் பொருள் கொடுக்கும் சுலோகங்களைச் சித்திரவதை செய்து அவைகளுக்குள் அத்வைதப் பொருளைப் புகுத்த முயற்சி செய்கிறார். பாஷ்யகாரர் துவைதியாக இருந்தால் அவர் அத்வைதப் பொருள் கொடுக்கும் சுலோகங்களைச் சித்திரவதை செய்து அவைகளுக்குத் துவைதப் பொருள் வருவிக்க முயற்சி செய்கிறார்.
ஆனால் கீதையில் இங்ஙனம் கருத்துக்களை மாற்றியமைக்க முயற்சியே இல்லாமலிருப்பதைக் காண்பீர்கள். அவைகள் எல்லாம் சரி என்று பகவான் சொல்லுகிறார். ‘மனித ஆத்மா ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் படிப்படியாக மேலே சென்று கடைசியில் தன் இறுதி லட்சியமான நிர்குணப் பரம்பொருளை, பிரம்மத்தை அடைகிறது’ என்று கீதை உபதேசம் செய்கிறது. கர்மகாண்டம் கூட, நேராக மோட்சம் அளிக்காதெனினும், அதைப் பெறுவதற்கு உதவியாக இருக்கலாம் என்று கீதையில் காட்டப் படுகிறது. விக்கிரகங்கள், பூஜைகள், சின்னங்கள் – இவையனைத்தும் ஒரு நிபந்தனையின் பேரில் உதவியாக இருக்கும்; அதாவது முதலில் உள்ளத் தூய்மை வேண்டும், உள்ளத்தூய்மையும், சிரத்தையும் இருந்தால் மாத்திரமே எல்லா வழிபாடுகளும் பலன் அளிக்கும்.
இத்தனை விதமான வழிபாடுகளும், வழிபாட்டு முறைகளும் அவசியமா என்பது அடுத்த கேள்வி. ஆம் அவசியம் தான். இல்லாவிடில் அவை ஏன் இருக்க வேண்டும்? தற்காலத்தில் சிலர் சொல்கிறது போல மதம் என்பது கெட்ட அக்கிரமக் காரர்களால் பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யப் பட்ட சூழ்ச்சி அல்ல. இது பார்வைக்கு எவ்வளவு சரியாகத் தோன்றினாலும், உண்மையல்ல. மதங்கள் மனித ஆத்மாவின் அவசியத்தையொட்டிப் பிறந்தவை. இப்பலவிதமான அனுஷ்டானங்களும், பலதிறப்பட்ட மனித உள்ளங்களின் வேட்கையைத் தணிக்க உண்டானவை. இவ்வேட்கை தீர்ந்த அந்நாளே, இவைகளும் மறைந்துவிடும். அவ்வேட்கை இருக்கும் வரை மற்றவர்கள் எவ்வளவு கண்டனம் செய்தாலும், அவை இருந்தே தீரும்.
விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.
மூலம்: சுவாமி விவேகாந்தரின் உரை “இந்தியப் பெரியோர்கள்”
மொழியாக்கம்: அமரர் திரு தி.சு.அவினாசிலிங்கம்,
நன்றி: இந்தியப் பிரசங்கங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை வெளியீடு.