[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 29-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

காட்மாண்டில் உலக பௌத்த கவுன்சில் மாநாட்டுக்கு சற்றுமுன்னர் 1956 நவம்பர் 26-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர், நேபாள மன்னரின் அரண்மனையில் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துமதம் அதிகாரபூர்வமாகக் கோலோச்சும் நேபாளத்தில் புத்தமதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வது என்பது ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாகும்.

….பௌத்தமும் கம்யூனிசமும் என்னும் பொருள் பற்றி நான் பேசவேண்டும் என்று மாநாட்டிற்கு வந்திருப்போரில் பெரும்பாலோர் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

….உண்மையைக் கூறுவதானால் இது பாதி உலகைத் தன்பிடியில் வைத்துக்கொண்டுள்ள விஷயம். பௌத்த நாடுகளில் ஏராளமான மாணவர்கள் இதன் பிடியில் சிக்கி உள்ளனர். இந்த விஷயத்தின் பிந்திய அம்சத்தை நான் மிகுந்த கவலையோடு நோக்குகிறேன்.

கம்யூனிசம் வழங்கும் வாழ்க்கை முறையை விடச் சிறந்த வாழ்க்கை முறையை பௌத்தம் வழங்குகிறது என்பதை பௌத்த நாடுகளில் உள்ள இளம் தலைமுறையினரால் உணர முடியவில்லை என்றால் பௌத்தத்தின் கதி அதோகதிதான். அது ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைக்கு மேல் நீடிக்காது.

எனவே, பௌத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இளம் தலைமுறையினரைச் சமாளிப்பதும் பௌத்தம் கம்யூனிசத்துக்கு ஒரு மாற்றாக இருக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம். அப்போதுதான் அது நிலைத்து நிற்க முடியும் என்று பௌத்தம் நம்பிக்கை கொள்ள முடியும்.

இன்று ஐரோப்பாவின் பெரும்பாலான மக்களும் ஆசியாவின் பெரும்பாலான இளம் மக்களும் மார்க்ஸ் ஒருவர்தான் நாம் வழிபடக்கூடிய ஒரே தீர்க்கதரிசி என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் பௌத்த சங்கத்தின் பெரும்பகுதி மஞ்சள் ஆபத்தே தவிர வேறல்ல என்று கருதுகின்றனர். இதனை பிக்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கார்ல் மார்க்சுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்கள் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பௌத்தம் அதனுடன் போட்டியிட முடியும்.

இப்பொழுது இந்த முன்னுரையுடன் பௌத்தத்திலும் மார்க்சியத்திலும் அல்லது கம்யூனிசத்திலும் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன். பௌத்தத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே எங்கு இலட்சிய ஒற்றுமைகள் உள்ளன, எங்கு வேறுபாடுகள் இருக்கின்றன என்பது குறித்து சில முக்கியமான விஷயங்களை உங்களிடம் கூறப்போகிறேன்.

மூன்றாவதாக குறிக்கோளை எய்துவதில் பௌத்த வாழ்க்கை முறை நிலையானதா அல்லது கம்யூனிச வாழ்க்கை முறை நிலையானதா? குறிப்பிட்டதொரு பாதை ஒரு நிலையான பாதையாக இருக்கப்போவதில்லை என்றால் அது உங்களைக் காட்டுக்கு இட்டுச்செல்கிறது. என்றால் அந்தப் பாதையைப் பின்பற்றுவதில் அர்த்தமில்லை. பயன் இல்லை. ஆனால் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட பாதை தாமதமானதாக, சுற்றி வளைத்து அழைத்து செல்லக்கூடியதாக, சிரமங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அது உங்களைப் பத்திரமான இடத்துக்கு இட்டுச்செல்லும். நீங்கள் கடைப்பிடிக்கும் லட்சியங்கள் அங்கு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக வடிவமைத்துக்கொள்ளத் துணை நிற்கும்.

எனவே, அவரசரப்பட்டு குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும்பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என்கருத்து. வாழ்க்கையில் குறுக்கு வழியில் செல்லுவது எப்போதுமே அபாயகரமானது, மிகவும் ஆபத்தானது.

சரி, இனி விஷயத்துக்கு வருவோம். கம்யூனிசச் சித்தாந்தம் என்பது என்ன? அது எதிலிருந்து தொடங்குகிறது. ஏழைகள் செல்வந்தர்களால் சுரண்டப்படுகின்றனர். அவர்களிடம் சொத்து இருப்பதே இதற்குக் காரணம். அவர்கள் மக்களை அடிமைப் படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் அடிமைப்படுத்துவது ஏழைகளைத் துன்ப துயரத்திலும் துக்கத்திலும் வறுமையிலும் ஆழ்த்துகிறது. இதுதான் கார்ல் மார்க்சின் அடிப்படைத் தத்துவம். அவர் சுரண்டல் என்னும் சொல்லை இங்கு பயன்படுத்துகிறார். இதற்கு கார்ல் மார்க்ஸ் கூறும் பரிகாரம், தீர்வு, மருந்து என்ன?

வறுமையைப் போக்குவதற்கும், ஒரு குறிப்பிட்ட வர்க்கம் துன்ப துயரங்கள் அனுபவிப்பதற்கும் முடிவு கட்ட தனியார் சொத்துரிமையை ஒழித்துக்கட்டுவது ஒன்றுதான் வழி என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

எவரும் தனிச்சொத்துக்கள் வைத்திருக்கக்கூடாது, ஏனென்றால் தனிச்சொத்துரிமையால்தான் ஒருவன் எதையும் தனதாக்கிக் கொள்கிறான். உரிமையின்றி சொத்துக்களைக் கையாளுகிறான். அல்லது மோசடி செய்கிறான். கார்ல் மார்க்ஸின் மொழியில் கூறுவதானால் தொழிலாளர்கள்தான் உபரி மதிப்பை உற்பத்தி செய்கின்றனர். ஆனாலும் அவர்கள் உற்பத்தி செய்யும் உபரிமதிப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது உடைமை உரிமையாளனால் அபகரித்துக் கொள்ளப்படுகிறது.

உழைக்கும் மனிதனின் முயற்சியால் உற்பத்தி செய்யப்படும் உபரி மதிப்பை உடைமையாளன் ஏன் அபகரித்துக்கொள்கிறான் என்ற கேள்வியைக் கார்ல் மார்க்ஸ் கேட்டார். இதற்கு ஒரே உடைமையாளன் அரசாங்கம்தான் என்பதே இதற்கு அவரது பதில். இதனாலேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை அவர் வலியுறுத்தினார். இது கார்ல் மார்க்ஸ் முன்வைத்த மூன்றாவது முன்மொழிவாகும்.

அரசாங்கம் சுரண்டப்பட்ட வர்க்கங்களாலன்றி சுரண்டும் வர்க்கங்களால் நிர்வகிக்கப்படக்கூடாது. அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவ வேண்டும். இவைதான் கார்ல்மார்க்சின் அடிப்படையான கருத்துக்கள். ரஷ்யாவில் கம்யூனிசத்துக்கு இவைதான் ஆதார அடிப்படையாக, அடித்தளமாக அமைந்தன. இவைமேலும் விரிவுப்படுத்தப்பட்டு கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டன என்பதில் ஐயமில்லை. எனினும் இவைதான் அடிப்படையான பிரச்சினைகள்.

இப்போது ஒருகணம் பௌத்தத்துக்கு செல்லுவோம். கார்ல் மார்க்ஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து புத்தர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நான் ஏற்கனவே கூறியதுபோல் ஏழைகள் சுரண்டப்படும் விஷயத்திலிருந்துதான் கார்ல் மார்க்ஸ் தொடங்குகிறார். இதுபற்றி புத்தர் என்ன சொல்கிறார்? அவர் எங்கிருந்து தொடங்குகிறார்? அவர் தமது மதத்தின் கட்டமைப்பை எழுப்பியுள்ள அடித்தளம் என்ன? புத்தரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதையேதான் கூறினார்.

அவர் சொன்னார், உலகில் துக்கம் இருக்கிறது. ‘சுரண்டல்’ எனும் சொல்லை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் துக்கம் எனப்படுவதன் மீதுதான் அவர் தமது மதத்துக்கான அஸ்திவாரத்தை இட்டார். உலகில் துக்கம் இருக்கிறது. துக்கம் என்னும் சொல் பல்வேறு வகைகளில் அர்த்தம் செய்துகொள்ளப்படுகிறது என்பதில் ஐயமில்லை. மறுபிறவி, வாழ்க்கைச் சக்கரம் இதுதான் துக்கம் எனப் பொருள்கொள்ளப்படுகிறது. இதை நான் ஏற்பதற்கில்லை. வறுமை என்னும் பொருளில் துக்கம் என்னும் சொல் பௌத்த நூல்களில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது எனக் கருதுகிறேன். எனவே, அடித்தளம் என்பதைப் பொருத்தவரையில் உண்மையில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை என்பது தெள்ளத் தெளிவு.

அடித்தளம் பெறுவதற்கு பௌத்தர்கள் கார்ல் மார்க்சிடம் செல்வது அவசியமற்றது. தேவையற்றது. இந்த அடித்தளம் ஏற்கனவே இருக்கிறது. அது நன்கு இடப்பட்டுள்ளது. புத்தர் தமது முதல் விளக்கப் பேருரையான தர்மச் சக்கர பரவர்த்தன சுத்தத்தை எங்கு தொடங்குகிறாரோ அங்குதான் அந்த அடித்தளம் உள்ளது.

எனவே கார்ல் மார்க்ஸால் கவரப்பட்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். தர்மச் சக்கர பரவர்த்தன சுத்தத்தைப் படியுங்கள். அதில் புத்தர் என்ன சொல்லுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினையில் நீங்கள் போதிய அளவு திருப்திடையவீர்கள். புத்தர் தமது மதத்துக்கான அடித்தளத்தை கடவுள் மீதோ அல்லது ஆன்மா மீதோ அல்லது இவைபோன்ற வேறு எந்த இயல்நிலை கடந்தவற்றின் மீதோ இடவில்லை.

மக்களின் துன்ப துயரங்கள் மீதே அவர் தலையாய முக்கிய கவனம் செலுத்தினார். எனவே மார்க்சியம் அல்லது கம்யூனிசத்தைப் பொருத்தவரையில் பௌத்தம் அதனைப் போதிய அளவில் பெற்றுள்ளது. மார்க்ஸ் சொன்னதை புத்தர் மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.

சொத்து என்னும் விஷயத்தைப் பொருத்தவரையில் புத்தர் கோட்பாட்டுக்கும் கார்ல் மார்க்ஸ் போதித்த கோட்பாட்டிற்கும் இடையே நெருங்கிய உறவும் ஒருமைப்பாடும் இருப்பதைக் காண்பீர்கள். சுரண்டல் நடப்பதைத் தடுப்பதற்கு உற்பத்தி சாதனங்கள், அதாவது சொத்து அரசிடம் இருக்க வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூறினார். நிலம் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். தொழில்துறை அரசுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும், அப்போதுதான் எந்தத் தனி உடைமை உரிமையாளரும் குறுக்கிட்டு தொழிலாளி தனது உழைப்பின் ஆதாயங்களைக் கொள்ளையடிக்க முடியாது, அபகரிக்க முடியாது. இதைத்தான் மார்க்சியம் கூறியுள்ளது.

இனி நாம் சங்க விஷயத்துக்கு– பௌத்த சங்க விஷயத்துக்கு– வருவோம். பௌத்தத் துறவிகளுக்கு புத்தர் வகுத்துத் தந்த வாழ்க்கை நியதிகளைப் பரிசீலிப்போம். புத்தர் வகுத்தளித்த விதிகள் என்ன? எந்தத் துறவியும் சொந்தமாக சொத்து ஏதும் வைத்திருக்ககூடாது என்று அவர் கூறினார். கொள்கை ரீதியில் கூறினால் எந்தத் துறவியும் சொந்த சொத்து வைத்திருக்கலாகாது. இது சம்பந்தமாக இங்கும் அங்கும் சில பிறழ்வுகள் இருக்கலாம். சிலநாடுகளில் துறவிகள் சொத்துக்கள் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் துறவிகள் சொத்துக்களை வைத்திருக்கவில்லை. உண்மையில் சங்கத்துக்கு வகுத்துத் தரப்பட்டுள்ள விதிமுறைகள், ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் வகுத்துத் தந்துள்ள விதிமுறைகளை விடக் கடுமையானவை. இதனை விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்கிறேன். இது குறித்து இதுவரை எவரும் விவாதிக்கவில்லை. எந்த முடிவுக்கும் வரவில்லை.

சங்கத்தைத் தோற்றுவிக்கும்போது இதில் புத்தருக்கு என்ன நோக்கம் இருந்தது? இதை ஏன் செய்தார்? புத்தர் இந்த மதத்தைப் பரப்பிக்கொண்டிருந்த வேளையில் பரிவ்ராஜாக்கள் புத்தருக்கு முன்னரே அதில் இருந்தனர். பரிவ்ராஜாக்கள் என்றால் வீடுவாசல் இல்லாதவன், தனது வீட்டை இழந்தவன் என்று பொருள்.

ஆரியர்கள் காலத்தில் ஆரிய இனத்தைச் சேர்ந்த பல்வேறு குலமரபுக் குழுக்கள், எல்லா குலமரபுக் குழுக்களையும் போலவே, தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருந்தன. சில குலமரபுக் குழுக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை இழந்து குறிக்கோளின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. இந்த நாடோடிகள்தான் பரிவ்ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த பரிவ்ராஜாக்களுக்கு புத்தர் மாபெரும் உதவி செய்தார், அவர்களை ஓர் அமைப்பாக ஒன்று திரட்டினார். அவர்களுக்கு வாழ்க்கை விதிகளைத் தயாரித்துக் கொடுத்தார். விநயாபிடிகத்தில் இடம் பெற்றிருந்தவையே இந்த விதிகள். இந்த வழிகளின்படி ஒரு பிக்கு எந்தச் சொத்தும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. பௌத்த விதிகளின்படி ஒரு பிக்கு ஏழு பொருள்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.

ஒரு சவர கத்தி, தண்ணீர் குடிப்பதற்கு ஒரு சொம்பு, மூன்று சிவராக்கள், தையல் வேலைக்கு ஊசி முதலியவையே அவை. தனியார் சொத்துரிமையை மறுப்பதுதான் பொதுவுடைமை தத்துவத்தின் சத்தும் சாரமும் என்றால் தனியார் சொத்துரிமைப் பற்றி விநயா பிடிகத்தில் காணப்படுவது போன்ற மிகக்கடுமையான விதி வேறு ஏதேனும் இருக்க முடியுமா என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அப்படி ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே தனியார் சொத்துடைமை எதுவும் இருக்காது என்று கம்யூனிசத் தத்துவத்தில் இடம் பெற்றுள்ள விதி எந்த இளம் மக்களையாவது கவர்ந்திழுக்குமானால் அத்தகைய விதி புத்தரின் தத்துவத்தில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒரே கேள்வி தனியார் சொத்துடைமையை மறுக்கும் விதி சமுதாயத்தில் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதேயாகும். இது கல்வி சூழ்நிலையையும், காலத்தையும், சந்தர்ப்பத்தையும் மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கையும் பொறுத்திருக்கிறது. எனினும் சித்தாந்தத்தை பொறுத்தவரையில் தனியார் சொத்துரிமையை ரத்து செய்வதில் தவறேதும் இருக்கிறதா என்றால், இருக்காது. ஏனென்றால் பௌத்த சங்கத்தை அமைப்பதில் இந்தச் சலுகையை ஏற்கனவே அளித்துள்ளது.

இப்போது இந்த விஷயத்தின் இன்னொரு அம்சத்துக்கு வருவோம். கம்யூனிசத்தைக் கொண்டுவரும் பொருட்டு எத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க கார்ல் மார்க்சோ கம்யூனிஸ்டுகளோ விரும்புகின்றனர்? இது முக்கியமான கேள்வி. துக்கம் இருந்து வருவதை அங்கீகரிப்பது, சொத்துரிமையை ஒழிப்பது என்ற அடிப்படையில் அமைந்த கம்யூனிசத்தைக் கொண்டுவருவதற்கு வன்முறையையும் பகைவர்களைக் கொல்லுவதையும் வழிமுறையாக கடைபிடிக்க கம்யூனிஸ்டுகள் விரும்புகின்றனர்.

இதில்தான் புத்தருக்கும் கார்ல் மார்க்சுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு அமைந்துள்ளது. குறிப்பிட்ட கோட்பாடுகளைக் கடைபிடிக்கும்படி மக்களைத் தூண்டுவதற்கு புத்தர் கடைப்பிடிக்கும் வழி ஒழுக்க போதனையும் அன்புமாகும்.

எதையும் அன்பு வெல்லுமே தவிர அதிகாரம் வெல்லாது என்ற சித்தாந்தத்தை, போதனையை, எதிராளிக்கு ஊட்டி அவனைத் தன் பக்கம் ஈர்க்க அவர் விரும்புகிறார். இங்குதான் ஓர் அடிப்படையான வேறுபாடு நிலவுகிறது. புத்தர் வன்முறையை அங்கீகரிக்க மாட்டார். கம்யூனிஸ்டுகள் அங்கீகரிப்பர்.

இதன்மூலம் கம்யூனிஸ்டுகள் உடனடியாக பலன்பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மனிதர்களை ஒழித்துக்கட்டும் வழிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளும்போது, உங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் உயிரோடு இருப்பதில்லை.

உங்கள் சித்தாந்தம் போல் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். காரியம் சாதிப்பதற்கான வழிமுறைகளை உங்கள் விருப்பம்போல் கடைப்பிடியுங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல் புத்தரின் வழி, நீண்ட வழி. மனச்சோர்வூட்டுகிற வழி என்றுகூட சிலர் கூறலாம். ஆனால் இதுதான் நிச்சயமான, சத்தியமான வழி என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

என்னுடைய கம்யூனிஸ்டு நண்பர்களைச் சந்திக்கும்போது இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எப்போதும் அவர்களைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் அவர்களால் என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதைப் பச்சையாக பட்டவர்த்தனமாக நான் கூறியாக வேண்டும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனப்படுவதை வன்முறை மூலம்தான் அவர்கள் உருவாக்குகின்றனர். செல்வம் படைத்த அனைவரையும் அவர்கள் ஓட்டாண்டியாக்குகின்றனர். அவர்களது அரசியல் உரிமையைப் பறிக்கின்றனர். சட்டமன்றத்தில் அவர்கள் இடம்பெற முடியாது. வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்காது. அவர்கள் நாட்டின் இரண்டாந்தர பிரஜைகளாகவே இருப்பார்கள். ஆளப்படுபவர்களாக இருப்பார்கள். ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் பங்குகொள்ளக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.

சர்வாதிகாரம் என்பது மக்களை ஆள்வதற்கு ஒரு சரியான முறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என நான் கேட்கும்போது அவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் தெரியுமா? “இல்லை நாங்கள் அப்படி நினைக்கவில்லை, சர்வாதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை..”

“அப்படியானால் நீங்கள் எப்படி அதை அனுமதிக்கிறீர்கள்?” என்று நாம் கேட்டால் அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். “இது இடைக்காலக் கட்டம், இதில் சர்வாதிகாரம் இருந்தாக வேண்டும்” என்கின்றனர்.

நாம் தொடர்ந்து அது சரி இந்த இடைக்கால கட்டம் என்பது எத்தனை ஆண்டுகள்? இருபது ஆண்டுகளா? நாற்பது ஆண்டுகளா, ஐம்பது ஆண்டுகளா? என்று கேட்கிறோம். பதில் இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எப்படியோ தானாகவே மறைந்துவிடும் என்று அரைத்த மாவையே அரைப்பதுபோல் பதிலளிக்கின்றனர்.

நல்லது. அவர்கள் கூறுவதுபோல் சர்வாதிகாரம் அஸ்தமித்துவிடும் என்றே வைத்துக்கொள்வோம். இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சர்வாதிகாரம் மறைந்துவிடும்போது என்ன நடைபெறும்? அதனிடத்தில் எது இடம் பெறும்? மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையான அரசாங்கம் தேவையில்லையா? இதற்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.

பிறகு மீண்டும் புத்தரிடம் செல்லுகிறோம். அவருடைய தம்மம் பற்றிய இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். அவர் என்ன கூறுகிறார்? மனிதனது மனத்தையும் உலகத்தின் மனத்தையும் மாற்றினாலொழிய உலகத்தை சீர்படுத்த முடியாது என்று புத்தர் உலகுக்குக் கூறியது மிகப் பெரிய விஷயமாகும். மனம் மாறினால், கம்யூனிச அமைப்பு முறையை மனம் ஏற்றுக்கொண்டால், அதனை விசுவாசத்தோடு நேசித்தால் அது நிரந்தரமாகிவிடுகிறது.

மனிதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஒரு படை வீரனோ அல்லது காவல்துறை அதிகாரியோ தேவையில்லை. ஏன்? இதற்கான பதில் இதுதான். புத்தர் மனச்சான்றை ஊக்குவித்து நீங்கள் சரியான வழியில் செல்லுவதற்கு வழிகாட்டும் காவலாளியாக அதை மாற்றியிருக்கிறார். மனம் மாற்றப்பட்டு எந்த ஒரு விஷயமும் நிரந்தரமாகிவிடும்போது எத்தகைய இடர்பாடும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

கம்யூனிச அமைப்பு வன்முறையை அடிப்படையாகக் கொண்டது. நாளைய தினம் ரஷ்யாவில் சர்வாதிகாரம் தோல்வியடைந்து அதன் தோல்விக்கான அறிகுறிகளை நான் காணும்போது என்ன நடக்கும்? கம்யூனிச அமைப்புக்கு என்ன நேரும் என்பதை உண்மையிலேயே நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

நாட்டின் சொத்தைக் கபளீகரம் செய்து கொள்வதற்கு ரஷ்ய மக்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டு கொடிய ரத்தக் களறியில் ஈடுபடுவார்கள். இவ்வாறுதான் அதன் விளைவு இருக்கும். ஏன்? ஏனென்றால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து கம்யூனிச அமைப்பு முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடந்துகொள்கிறார்கள்.

ஏனென்றால் தாங்கள் தூக்கிலிடப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு. இத்தகைய அமைப்பு ஆழ வேரூன்ற முடியாது. இந்தக் கேள்விகளுக்குக் கம்யூனிஸ்டுகள் பதிலளிக்க இயலவில்லை என்றால் அவர்களது அமைப்பு என்னவாகும்? வன்முறை மறைந்துவிடும்போது அதனைப் பின்பற்றுவதில் பயனேதும் இருக்காது. ஏனென்றால் மனம் மாறாத போது வன்முறை தேவை. முடிவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். புத்த மதத்தில் நான் காணும் மிக முக்கியமான அம்சம் அது ஒரு ஜனநாயக அமைப்பு முறை என்பதேயாகும். வஜ்ஜிகளை வெற்றிக்கொள்ள அஜாத சத்ரு விரும்புகிறார் என்று அவரது பிரதமர் புத்தரிடம் சென்று கூறியபோது, வஜ்ஜிகள் தங்களுடைய தொன்னெடுங்கால மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வரும்வரை அவர்களை ஒருபோதும் உங்கள் மன்னரால் வெற்றிகொள்ள முடியாது என்று புத்தர் அவனிடம் கூறினார்.

தாம் சொன்னதன் பொருளை என்ன காரணத்தினாலோ புத்தர் விளக்கிக் கூறவில்லை. வஜ்ஜிகள் நடத்திவரும் ஜனநாயகக் குடியரசு முறையிலான அரசாங்கத்தை மனதில் வைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் சொன்னார், “வஜ்ஜிகள் தங்கள் ஆட்சி முறையைக் கடைப்பிடித்து வரும்வரை அவர்களை எவரும் வெல்ல முடியாது.” புத்தர் ஒரு மாபெரும் ஜனநாயகவாதி என்பதிலும் அணுவளவும் ஐயமில்லை.

எனவே ஜனாதிபதி என்னை அனுமதித்தால் பின்வருமாறு கூறுவேன். நான் அரசியல் துறை மாணக்கனாக இருந்துள்ளேன். பொருளாதாரத் துறை மாணவனாக இருந்துள்ளேன். பொருளாதாரத் துறைப் பேராசிரியராக இருந்துள்ளேன். கார்ல் மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டுள்ளேன். அதேசமயம் புத்தரின் தம்மத்தைப் படிப்பதிலும் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தபிறகு, ஒரு திட்டவட்டமான தீர்மானமான முடிவுக்கு வந்தேன். உலகை இன்று ஒரு மாபெரும் பிரச்சினை எதிர்நோக்குகிறது. உலகில் துக்கம் நிலவுகிறது. அந்தத் துக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதே அந்தப் பிரச்சினை. இதற்குப் புத்தர் தெரிவித்துள்ள யோசனைகள்தான், பரிகாரம்தான் மிகவும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது, இதுவே சிறந்தது என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தேன்.

……இந்தப் பிரச்சினையை நான் எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க விரும்பினேனோ அதைத்தான் செய்துள்ளேன். கம்யூனிஸ்டுகளின் வெற்றிகளைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். புத்தரைப் போல் நாம் விழிப்படைவோமானால் அன்பு, நீதி, நல்லெண்ணம் என்னும் வழிமுறைகளைப் பின்பற்றி இதே சாதனையை நம்மாலும் புரிய முடியும் என்பதில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு.’’

என்று முடிக்கிறார் அம்பேத்கர்.

ஆகவே கம்யூனிசம் வன்முறையை அடிப்படையாகவும் மதத்தை வெறுப்பனவாகவும் இருந்த காரணத்தினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை கம்யூனிசச் சித்தாந்தத்திற்கு ஆட்படவிடவில்லை.

கடைசியாக அவர்முன் நின்றது பௌத்தம்.

(தொடரும்…)

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

பாகம் 1 முதல் 6 வரை இந்துமதத்தைச் சீர்திருத்த முயன்ற அம்பேத்கர், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலித் தலைவர்களின் நிராகரிப்பையும் மீறி மதமாற்றத்தையே தீர்வாக அறிவித்ததையும், அதன் ஆன்மிகப் பயன்களாக அவர் சொன்னவைகளையும் பார்த்தோம்.

பாகம் 7 முதல் 10 வரை, தீண்டத்தகாதவர்களுக்கான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அரசியல் காரணங்கள், அதை இந்துமதத்திற்குள்ளிருந்து தீர்க்கமுடியாததென அவர் நம்புவதற்கான அவரது வாதங்கள், தகுதிவாய்ந்த தலித் ஒருவருக்கு ஒருவருட சங்கராச்சாரிய பதவிக்கான வேண்டுகோள், மதமாற்றத்திற்கு இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அவருக்கு வந்த மறைமுக அழைப்பு, நேரடி அழுத்தம் ஆகியவற்றைப் பார்த்தோம்.

பாகம் 11 முதல் 13 வரை, இந்துமதத்தின் மாற்றாக சீக்கிய மதத்தை அவர் சிந்தித்தது, கிறித்துவ நிறுவன அமைப்பை ஒதுக்கியது, மதமாற்ற வாய்ப்பை ஆக்கிரமிக்க ஐரோப்பியர்கள் செய்த உத்தி ஆகியவற்றைப் பார்த்தோம்.

பகுதி 14 முதல் 18 வரை, இஸ்லாம்– அடிமைகளை உருவாக்குவது, பெண்களை கீழ்த்தர துயரநிலையில் வைப்பது, மனநோய் பரப்புவது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைபோடும் பிற்போக்கானது, பகுத்தறிவுக்கு எதிரான ஷரியா சட்டம் கொண்டது, தேச பக்தி, தேசியக் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்பதான அவரது வாதங்களைப் பார்த்தோம்.

பகுதி 19 முதல் பாகம் 24 வரை, நடைமுறைக்கு ஒவ்வாத இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்குக் கீழ்ப்படியாமை குணம், இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், இஸ்லாமிய மன்னர்களால் இந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசாரச் சீரழிவு, வன்கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான கருத்துகளைப் பார்த்தோம்.

பாகம் 25, 26-இல் இந்துவை வெறுக்க இஸ்லாமை தவறு என்று தன் வருத்தத்தையும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிட்டது எவ்வளவு அவசர அவசியம் என்று தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறார்.

பாகம் 27 தொடங்கி கம்யூனிஸத்திற்கான அவரது மாற்றுக்கருத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்…

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25 || பாகம் 26 || பாகம் 27 || பாகம் 28

2 Replies to “[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்”

  1. ///எனவே, அவரசரப்பட்டு குறுக்கு வழிகளில் செல்லுவதைவிட மெதுவாகச் செல்லும்பாதையில், சுற்றி வளைத்துச் செல்லுவது எவ்வளவோ நல்லது என்பது என்கருத்து////

    இப்படிச் சொன்னவர் இன்னும் கொஞ்சம் சுற்றி வளைத்து செல்வதாக நினைத்து ஹிந்து மதத்திலேயே இருந்திருக்கலாம். எது எப்படியோ, தலித்துகள் என்றால் மதம் மாறியே தீரவேண்டும் என்கிற டெம்ப்ளேட் உணர்ச்சியை அவர்கள் மனதில் ஆழப்பதிய வைத்த வரலாற்றுக் குற்றத்தை அம்பேத்கர் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் எல்லாரும் கிறிஸ்தவத்தில் தான் இருக்கிறார்கள். அம்பேத்கர் இவ்வளவு பாடு பட்டு ஆய்வெல்லாம் செய்து புத்தமதம் மாறியது வீனாகிப் போனது. அவரை தலையில் தூக்கி வைத்து ஆடும் ஒருவரும் அவரை மதித்துப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அம்பேத்கரை குலதெய்வம் போல் கொண்டாடுபவர்களெல்லாம் பாதிரிமார்களின் மூலைச் சலவைக்கு ஆட்பட்டு மிஷனரிகளுக்கு விலை போய்விட்டனர். அம்பேத்கார் உயிருடன் இருந்திருந்தால் மிஷனரிகளுக்குவிலை போவதை விட தலித்துகளைப் பார்த்து ‘நீங்கள் இந்து மதத்திலேயே இருந்துவிடுங்கள்’ என்று கூறியிருப்பார்.

    வாழ்க்கை முறை , வாழிடம், சுற்றம் சூழம் வாழும் மனிதர்கள் என்று எதுவும் மாறாத நிலையில், தலித்துகள் தங்கள் வழிபாட்டு முறையையும் வழிபடும் தெய்வத்தையும் மாற்றினாலே அவர்களின் வாழ்க்கை நிலை மாறிவிடும் என்று ஒரு படித்த மேதை எப்படி கணக்கிட்டாரோ என்று தெரியவில்லை.

  2. மதம் என்பதை ஏதோ ஒரு கம்பெனி வேலையை ராஜினாமா செய்து, இன்னொரு கம்பெனி வேலைக்குச் செல்வதைப் போல அம்பேத்கார் நினைத்து விட்டார் போலும். பொதுவாக ஒரு மனிதன் கடவுளைக்கும்பிடுவதும், ஒரு மதத்தில் இனைந்திருப்பதும் தனக்கு மரியாதை கிடைக்கும் என்பதற்காக அல்ல. ஏதோ ஒரு அபார சக்தியும், மகிமையும் நாம் இனைந்திருப்பதால் தன்னைக் காக்கிறது என்று என்னுவதாலேயே அதில் இருக்கிறான். மனிதர்கள் இறைவழிபாட்டால் பிரச்சனை தீரும் என்று நம்புவதாலேயே அதனைச் செய்கிறார்கள். அம்பேத்கார் வழியில் தலித்துக்கள் எல்லாருமே புத்தம் தழுவாமைக்கு முக்கியக் காரனம், புத்தரிடம் மகிமைக் கதைகள் இல்லை. புத்தர் ஒரு மனிதராகவே, போதனை மட்டுமே செய்யும் குருவாகவே அறியப்பட்டார். ஆனால் தலித்துக்கள் அம்பேத்காரே வேண்டாமென்று ஒதுக்கி விட்டுப் போன கிறிஸ்தவத்திற்கும், மிஷனரிகளுக்கும் விலை போவதற்கு முக்கியக் காரணம், ஏசுவிற்கு நிறைய மகிமைக் கதைகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்லிச் சொல்லி, ஏசுவைக் கும்பிட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றன என்று ஆழப்பரப்பப்படுவதால். ஆனால் புத்தரிடம் அந்த ஈர்ப்பும் மகிமையும் கிடைக்கவில்லை. ஆக உணர்வுப்பூர்வமாக அனுகப்பட வேண்டிய விஷயத்தை அம்பேத்கார் அறிவுப்பூர்வமாக மட்டுமே அனுகி தலித் சகோதரர்கள் வெளிநாட்டு மிஷனரிகளிடம் கூட்டம் கூட்டமாக விலை போகும் வாய்ப்பை, தோற்றுவாயை ஏற்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

    இதனால் தலித் சகோதரர்கள் இழந்தது தங்களது சொந்த பாரம்பரியம். மூதாதையர்களின் அற்புதமான இறைசார்ந்த கலாச்சார வாழ்க்கை முறை. மூலைச் சலவையற்ற சுதந்திரமான வாழ்க்கை தர்மம். தலை முறைத் தலைமுறையாக வந்த முன்னோர்களின் சங்கிலிப் பினைப்பான உறவுத் தொடர்புகள்.

    நல்லதோ கெட்டதோ, தி க மற்றும் தி மு க போன்றவர்களால் அரசாங்க சட்டதிட்டங்களில் மாற்றம் ஏற்பட்டு தலித் மக்கள் இன்று சக மனிதர்களைப் போல் செல்வமும், செல்வாக்கும் பெற்று வாழ்கின்றனர். ஆனால் அப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்ற முயலாமல் ஒரு மதத்தை மாற்றுவதால் அவர்கள் வாழ்க்கை மாறி விடும் என்று மதிப்பிற்குரிய அம்பேத்கார் நினைத்தது, ஏதோ ஒரு வேகத்தில் எங்கோ சறுக்கியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *