இசையில் தொடங்குதம்மா

நமக்கெப்போதுமே சாதனையாளர்களைக் கடவுளாகவோ, அதி மனிதர்களாகவோ ஆக்கிப் பார்ப்பதில் ஒரு பெரும் விருப்பம் உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு தினசரியில் வெளிவந்திருந்த ஒரு திரைப்பட விளம்பரத்தில் இளையராஜாவை ‘இளையராஜா சுவாமிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஒருபுறம் இசைஞானி, சித்தர், வாழும் ரமணர் என்றெல்லாம் கடவுளாக்கும் புகழுரைகள்; இப்படி காது கூசும் புகழுரைகளுக்காகவே இளையராஜாவை வெறுக்கும் அப்பாவிகள். இன்னொரு பக்கம் பார்ப்பன அடிவருடி, ஆன்மிக வேஷதாரி, தலித் த்ரோகி என்றெல்லாம் வெளிப்படும் துவேஷங்கள். இந்த இரண்டு துருவங்களுக்கும் நடுவே, இளையராஜாவின் இசையைப் பற்றிய் உண்மையான மதிப்பீடு பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதேயில்லை.

ஒரு காலத்தில் இளையராஜாவை நானும் கடவுளைப் போலப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ இரவுகள் முழுதும் தூங்காமல் அவர் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நண்பர்களுடன் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் பேசிப் பேசி மகிழ்ந்திருக்கிறேன். ரஜினி படத்துக்கு முதல் காட்சி டிக்கெட் வாங்கப் பறக்கும் ரசிகன் போல, கேஸட் வெளியீடு முடிந்து பாடல்களைக் கேட்பதற்குத் தவித்துப் போயிருக்கிறேன்.

இன்று அந்த தவிப்பு இல்லை. நான் பெரிதும் முயற்சிக்காமலே பல்வேறு சிறந்த இசைக் கலைஞர்களின் படைப்புகள் என்னை மகிழ்வித்திருக்கின்றன. இளையராஜாவைப் போல் வேறொருவர் இல்லை என்ற எண்ணம் பல சமயங்களில் உடையும்படி ஆனது. இருந்தாலும், அத்தனை இசைக் கலைஞர்களையும் ஒரே ஆளிடம், ஒரே ஒரு தனி மனிதரிடம் பார்க்க நேரிடுகையில் என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

ஸ்ட்லீ டேனால் இளையராஜா அளவுக்கு பாப் இசையில் ஜாஸ் ‘Chord progressions’ தர முடியும். ஆனால் அவர்களால் இளையராஜா அளவுக்கு மேற்கத்திய க்ளாஸிகல் (Western classical) செறிந்த பாப் பாடலைத் தர முடியாது. இளையராஜாவின் ஹம்ஸநாதத்தையும், பாவனியையும், இன்னபிற ராகங்களையும், நம் நாட்டின் சிறந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் தரமுடியும்; ஆனால் அவர்களால் ஜாஸும், மிகச்சிறந்த ரெக்கேயும் (Regge), மனம் மயக்கும் ப்ளூவும் (Blue), நாட்டுப்புறப்பாடல்களும் தரமுடியுமா என்பது மிகவும் சந்தேகம். தெலோனியஸ் மாங்கின் பியானோ, சைமன் – அண்ட்- கார்ஃபங்கலின் ஹார்மோனி எல்லாமும் இளையராஜாவிடம் கேட்டிருக்கிறேன். தேனிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு இந்த அத்தனை வடிவங்களும் சாத்தியப்பட்டது, அதுவும், மிகச்சிறந்த விதத்தில் சாத்தியப்பட்டது எப்படி என்று நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.

கோயமுத்தூரில் இளையராஜாவின் மிகப்பெரிய விசிறிகள் (சகோதரர்கள்) இரண்டு பேர் ஸ்டார் ட்ராக் என்றொரு ஆடியோ கடை வைத்திருக்கிறார்கள். இப்போது போன்று MP3 பாடல்கள் வந்து தெருவெங்கும் பாடல்கள் மலினப்படாத காலம் அது. பெரும்பாலான கைக்கெட்டாத பாடல்கள் இந்த ‘ஸ்டார் ட்ராக்’கிலிருந்துதான் எங்களுக்குக் கிடைக்கும். பாடல்கள் மட்டுமில்லாமல் இளையராஜாவைப் பற்றிய சுவையான பல செய்திகளையும் (நிறைய கற்பனை கலந்து) எங்களுக்குச் சொல்வார்கள். இளையராஜா என்னும் கல்ட் (Cult)-டில் சிக்கியிருந்த எனக்கும், என் நண்பர்களுக்கும் அப்பாடல்களும், செய்திகளும் மிகுந்த மகிழ்ச்சியூட்டும்.

அதுவுமில்லாமல் இளையராஜா தமிழ்நாட்டில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருந்த காலங்கள் நாங்கள் அறியாதவை. அவற்றைப் பற்றியெல்லாம் இந்த சகோதரர்கள் நிறைய ‘கதை, கதை’யாக சொல்வார்கள். அவர்கள் சொல்லும் கதையையெல்லாம் கேட்டு அவர்கள் பதிவு செய்து தரும் கேசட்டையோ, இளையராஜாவின் புதுப்பட கேசட்டையோ நாங்கள் வாங்கிக் கொண்டு ஹாஸ்டலுக்கு வருவோம். ப்ஸ்ஸில் வரும்போதே எப்போதடா ஹாஸ்டல் வரும் என்றிருக்கும்.

ஹாஸ்டலுக்கோ, இல்லை என் நண்பர்கள் தனியே வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கும் வீட்டுக்கோ ஓடிப்போய், சுமாரான, கதவில்லாத கேஸட் ப்ளேயரில் அந்தக் கேஸட்டைப் போட்டுக் கேட்பது… ஹா… சுகம்! அப்படித்தான் ‘ஹே ராம்’ படப்பாடல்களையும் நான் முதல்முறை கேட்டேன். அப்போதெல்லாம் நான் கமலஹாசனின் பெரிய விசிறியாக இருந்தேன். ஸ்டார் ட்ராக் கடைக்காரர்கள் வேறு (இவர்களை இனிமேல் ஜாஃபர் என்றே அழைப்போம். அப்படித்தான் நாங்கள் அழைத்தோம். அண்ணன் – தம்பி இருவருமே எங்களுக்கு ஜாஃப்ர்தான். இருவரில் யார் பெயர் ஜாஃபர் என்று எங்களுக்குத் தெரியாது. அதைப் பற்றி எங்களுக்குக் கவலையுமில்லை) “பாட்டெல்லாம் ஹங்கேரியில பண்ணி இருக்காங்க… பிரமாதமா பண்ணி இருக்காரு… ரொம்ப லிமிடெட் கேஸட்தான் வந்திருக்கு. சீக்கிரம் வந்து வாங்கீட்டுப் போய்டுங்க” என்று சொல்லி வைத்திருந்தார்கள்.

அதைப் போலவே சொல்லி வைத்து வாங்கிக் கேட்ட கேஸட் ‘ஹே ராம்’. முதல் முறை கேட்ட பாடல்களில் எனக்கு நன்றாக நினைவிலிருந்த ஒரே பாட்டு “இசையில் தொடங்குதம்மா”தான். இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். அலாதியான பிருகாக்களும், ட்யூனும், பாடல் வரிகளும் மனதோடு ஒட்டி விட்டன.

இப்போது கொஞ்சம் கர்நாடக சங்கீதப் பாடல்கள் கேட்டதில் இப்பாடலின் ராகம் ‘ஹம்ஸநாதம்’ என்று தெரிகிறது. இப்பாடல் எனக்கு ‘அஜய் சக்ரவர்த்தி’ என்றதொரு மிகச்சிறந்த ஹிந்துஸ்தானி பாடகரையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்பாடலின் ப்ரிலூட், முதல், இரண்டு இண்டர்லூட்கள் (Interlude – சரணத்துக்கும், பல்லவிக்கும் இடைப்பட்ட இசை) அனைத்துமே மிக அழகானவை. இப்படத்தின் பிற பாடல்களையும் நான் ரசித்திருந்தாலும், நான் இன்றுவரை தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்பது இந்தப்பாடல்தான். ‘தரதிந்தம், தரரம், தரரம், தரந்திந்தம்’ என்ற கோரஸின் பிண்ணனியில் வரும் பாஸ் கிடார், அதைத் தொடர்ந்து வரும் ஷெனாய் இரண்டும் இப்பாடலுக்கு மிகவும் அழகூட்டுபவை. (இதைப் போலவே மனம் மயக்கும் இன்னொரு ஷெனாய் மகாநதி படத்தின் ‘ஸ்ரீரங்க ரங்கநாதரின்’ பாடலில் இருக்கிறது).

இப்படத்தின் திரைக்கதையமைப்பில் இப்பாடல் இல்லையென்றும், இளையராஜாவே ‘இந்த இடத்தில் இப்பாடல் இருந்தால் சிறப்பாக இருக்கும்’ என்று விரும்பிக் கேட்டுக் கொண்டதால் இப்பாடல் சேர்க்கப்பட்டதென்றும் ஒரு கட்டுரையில் படித்தேன். இப்பாடலையும் எழுதியதும் அவரே!

சமீபத்தில் இதே ராகத்தில் அமைந்த ‘பண்டுரீதி கோலு’ என்ற தியாகராஜரின் கீர்த்தனையைக் கேட்டேன். செம்பை வைத்தியநாத பாகவதர் பாடிய பாடலின் நேரடி ஒலிப்பதிவு அது. செம்பை வைத்தியநாத பாகவதர் அலட்டிக் கொள்ளாமல் பாடும் அப்பாடல் கேட்டுக் கொண்டிரும்போதே என்னைக் கையைப் பிடித்து இழுத்துப் போய் ‘இசையில் தொடங்குதம்மா’வில் நிறுத்துகிறது. ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலின் ஹிந்துஸ்தானி சாயலும், ஒரு ஹிந்துஸ்தானி பாடகருக்கு இருக்க வேண்டிய செம்பை வைத்தியநாத பாகவதரின் குரலும் இரண்டு பாடல்களையும் என்னை மிக எளிதாக இடம்மாற்ற வைக்கின்றன. உண்மையில் கர்நாடக இசைப் பாடல்களும் ஐம்பது வருடங்கள் முன்புவரை பெரும்பாலான பொதுமக்கள் ரசித்து வந்திருக்கிறார்கள். மதுரை மணி ஐயர் கச்சேரியென்றால் ஒரு பெரிய ஊரே திரண்டு நின்றுக் கேட்டுச் செல்லும் என்று என் வயதான உறவினர் ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது பெரும்பாலும் கர்நாடக இசைப்பாடல்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நாம் வேண்டாம் என்று விலகி ஓடினாலும், ஒரு அழகான ஹம்ஸநாதத்தை நமக்குத் தந்திருக்கிறார் இளையராஜா.

இப்பாடலும், அதன் நினைவுகளும் என்னை, என் கோயமுத்தூர் ஹாஸ்டலின் ஜன்னலுக்கு இழுத்துச் செல்கின்றன. உங்களை கொஞ்சநேரம் ஹம்ஸநாதத்துடன் விட்டுவிட்டு, ஜன்னல் வழியே தெரியும் நட்சத்திரங்களையும், கோயமுத்தூர் இளங்குளிர் காற்றையும், எப்போதாவது செல்லும் ரயில் சத்தத்தையும் கொஞ்ச நேரம் அனுபவித்து விட்டு வருகிறேன்.

தொடரும் ….

12 Replies to “இசையில் தொடங்குதம்மா”

  1. சேதுபதி அருமையாக இருக்கிறது. நன்றி.

  2. இளையராஜாவைப் பற்றிய சமூகப்பார்வையுடன் தொடங்கும் கட்டுரை அவரது திறமைகளை வரிசைப்படுத்துவதுடன் பல இசைக்கலைஞர்களுடன் ராஜாவை ஒப்பிட்டு, கட்டுரையின் ஆசிரியரது இளையராஜா குறித்த பார்வையினை அவரது வாழ்க்கையின் இளமையிலிருந்து ஆரம்பித்து தற்போது உணரும் விதம் வரை அழகாக விளக்கி இருக்கிறார்.

    சேதுபதி அவர்களது கட்டுரைகள் எப்போதும் அழகியல் தன்மை கொண்டவை. அவரது “இசையில் நனையும் காடு ” என்ற கட்டுரையில் ( வார்த்தை இலக்கிய இதழில் வெளிவந்தது) அவரது இசையனுபவத்தை கட்டுரையாக மாற்றியிருந்தார். இசையில் தொடங்குதம்மா” வும் அழகாய் ஆரம்பித்திருக்கிறது., தொடருங்கள் சேதுபதி.

    அன்புடன்,

    ஜெயக்குமார்

  3. இளையராஜா ஒரு கடவுள் அருள் பெற்ற இசைக் கலைஞன் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. கலை வாணியின் அருள் பெற்ற அந்தக் கலைஞனைப் பற்றி அழகாக ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள், காத்திருக்கிறோம்.

    நன்றி

    தமிழ்செல்வன்

  4. தென்னிந்தியாவில் இளையராஜா ஒரு cult தான் என்பதில் சந்தேகம் இல்லை.
    அவருடைய திருவாசகம் பற்றி பேசுவது இந்த “தமிழ் ஹிந்து” இணையதலத்திற்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  5. ராஜா சேதுபதி, அருமையாக இருக்கிறது… இசையைத் தொடருங்கள்.

    நன்றி
    Kargil Jay

  6. முதல் முறையாக சங்கீதம் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் ஒருவர் இளைய ராஜாவைப் ப்ற்றி எழுதியிருக்கிறார். இன்னும் வேறு யாராவது எழுதியிருக்கலாம். என் பார்வையில் பட்டது என்னவோ சேதுபதி எழுதியிருப்பது தான். இது காறும், ‘நமக்குன்னு’ ஒரு நம்ம ஆள் வேணும்யா’ என்று தமிழ் நாட்டுக்கே உரிய ஜாதி துவேஷத்தில் இளைய் ராஜாவை முன்னுக்கு வைத்தவர்களும், கஷ்டப்படுத்தாமல் கேட்க் சௌகரியம் தருவதுமான வெகு ஜன கவர்ச்சிக்க்காக் பேசுகிறவர்களும் இளைய ராஜாவை முன்னுக்கு வைத்திருக்கிறார்கள்.
    இதெல்லாம் தான் தமிழ் நாட்டு வியாதிகள். ஆனாலும் இன்னமும் இளையராஜா கவர்வதாக இல்லை. சில சமயங்களில் அவரிடம் முன்னால் இருந்து இப்போது தனித்துப் போய்விட்ட ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டு அவர் பெயர் குறிப்பிடாமல் வெறுப்பும் அலட்சியமும் தெரிய பேசியதும் எனக்கு உவப்பாயிருந்ததில்லை. ஆனால் இவ்வளவும் சேதுபதி எழுதியிருப்பதற்கு அன்னியமானவை. சேதுபதி நின்று நிதானித்து எவ்வித மாச்சரியமும் இல்லாது தன் ரசனையை மாத்திரமே எழுதியிருப்பதால் அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். என் அபிப்ராயங்களை நான் மறு பரிசீலனை செய்யவேண்டும். செய்வேன். இன்னுமொன்ற் கடைசியாக, சங்கீதத்தில் என் ரசனையும் அபிப்ராயங்களும் wholly and strictly subjective. சேதுபதிக்கு என் நன்றி. வெ.சா.

  7. வீர வேல் ! வெற்றி வேல் !

    இளையராஜா தனக்கென்று சில தார்மீக நெறிகளை பின்பற்றுபவர்.
    வால் பிடித்து அலையும் வாலிகளின் உலகில், தனது கருத்தை தைரியமாக சொல்லுபவர். பின்பற்றுபவர்.

    திக மேடையில்கூட கடவுள் இல்லை என்று சொல்லுபவன் முட்டாள், கடவுள் உண்டு என்று சொன்ன வீரர்.

    இப்படி தைரியமாக இருந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவிழ்த்து யாருக்கும் தெரியாதவராக ஆக்கி அழித்துவிடுவதுதான் தமிழ்நாட்டில் நாம் கண்டது.

    ஆனால், இளையராஜாவை அப்படி செய்யமுடியவில்லை. காரணம், அவர் ஹிந்து தர்மத்தின்படி தன் வாழ்வை அமைத்து, அதில் உறுதியாக இருப்பவர்.

    இப்படி எல்லாம் தைரியமாக இருந்ததால்தான் அவருக்கு வரும் வாய்ப்புகள் மறைமுகமாக குறைக்கப்படுகின்றன என்பது என் கருத்து. இந்த சூழ்நிலையிலும்கூட தன் ஸ்வதர்மத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. ஹிந்து கடவுளரையும், மதத்தையும் கேவலப்படுத்தும் படங்களுக்கு இசை அமைக்கமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

    எப்போதும் தியான நிலையில் இருக்கும் ஒரு ஞானி.

    மற்ற எல்லா ஹிந்துக்களும் பின்பற்ற வேண்டிய ஆசான் அவர்.

    அரசியல் கூட்டணிக்காக கருநாகங்களின் காலில் மலர் சொரிந்துகொண்டே, அதே சமயத்தில் இந்துக்களின் நலனுக்காக பாடுபடுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவரை வலம் வந்து வணங்கி பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்.

    காற்றில் ஆடும் இலையில்கூட இசையை உண்டாக்கும் ஆத்ம ஞானம் உள்ளவர் அவர். ஆனால், கம்ப்யூட்டர் ஸிந்தஸைஸர் இல்லாவிட்டால் இசையை அடையாளம் காண முடியாத தவளைகள், உண்மையை கைகழுவிவிட்டு, பொய்மைக்குள் புகுந்ததால் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியாவின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கின்றன.

    உலகம் முழுவதும் அறிந்து கொண்டாட வேண்டிய ஒரு இசை மேதையை ஹிந்துவாக இருப்பதால் ஆபிரகாமிய சக்திகள் ஒதுக்குகின்றன.

    ஆனால், இவற்றை பொருட்படுத்தாது இளையராஜா என்னும் ஒரு இசை ஞானம் இசை என்னும் தெய்வீக அனுபவத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது.

    மனிதமும் அந்த இசையில் என்றென்றும் திளைக்கும். அந்த இசையை கட்டுரையாக மீட்டிய சேதுபதியே, உம் திறம் இப்பூமியில் நிலைக்கும்.

    வாழிய செந்தமிழ் ! வாழிய நற்றமிழர் !
    வாழிய பாரத மணித்திருநாடு !

    வந்தே மாதரம் !

  8. Dear Sethu

    Theriyatha visayamai irunthaal ezhungal… Best of luck god bless you

    By……Durai RAJA

  9. Even though , I’m a great fan of Illayaraja’s music, I’m not aware of his life story… So it is great start for readers like me to learn the Legend – The Mastero….

    Anticipating Eagerly for next edition…

    God Bless you for your wonderful literary skills.. I’m fortunate to be his room mate & see his talent from close quarters… Lot to learn from you too…

  10. ஏன் இசையை நிருத்திவிட்டிர்கலள். உங்கள் இசை இன்பவெள்ளத்தில் மூழ்க ஏடோடி வந்தோரை ஏன் ஏமாற்றுகிறீர்கள். இசையுக்கள் ஐயா! இதற்குசையுக்கள். ஐயா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *