“வேகம். வலிமை. விவேகம். நளினம் ”
எங்கெல்லாம் இந்த ஆற்றல்கள் ஒன்றாய் கலந்து ஒத்திசைகிறதோ, அங்கே ஒளிர்கிறது
தெய்வீகம். நம் அழகுணர்ச்சியின் மூலம் அது நம்மை தொடுகிறது.
இயற்கையிலும் இதை காணலாம்; இறைவடிவிலும் இது நிகழலாம். இந்த ஒத்திசைவை
சூரியனின் உதயத்தில் மட்டுமல்ல, நடராஜனின் நடனத்திலும், அரங்கனின் வையாளியிலும் காணலாம்.
வையாளி. இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வு உள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.
எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.
இந்த வேகத்தையும், வலிமையையும், அத்தோடு விவேகத்தையும் கொண்ட உயிரினம் குதிரை. இந்த ஆற்றல்களோடு நளினம் என்னும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் குதிரைக்கே உண்டு. இதிகாச பேரரசர்கள் தம்மிடம் வெளிப்பட்ட இந்த ஆற்றல்களை பரப்ப பரியை முன்வைத்தே திக்விஜயங்கள் செய்தனர். ஞானத்தின் அடையாளமாக வேதங்கள் உருவகமாய் காட்டுவதும் குதிரையையே. இந்த ஞானத்தின் மீதேறி ஞாலம் அறியவேண்டிய அனுபவமே அரங்கனாய் வையாளி உற்சவத்தில் வருகிறது.
சுமார் இருபது அடியார்கள் கொண்ட பரிவாரத்துடன் நம்பெருமாள் குதிரை வாகனத்தின் மீதமர்ந்திருக்கிறார். வேட்டையாட தேவையான வாள் மற்றும் வில்லோடு, அம்புறாத்துணி நிறைய அம்புகள் வைத்திருக்கிறார். கையில் மிகப் பெரிய ஈட்டி – பெருமாளின் பாதத்திலிருந்து குதிரை வாகனத்தின் தலைவரை நீளுகிறது. லேசாக பயம் வருகிறது. நம் பயத்தைப் பார்த்து, “அட, அசடே” என்று அவர் வதனத்தில் குமிழும் மென்னகை.
அந்த கள்ளச் சிரிப்பில் மயங்கி பூலோக இன்பங்கள் ஏதும் வேண்டாம் என்று உறங்காவில்லியைப் போல கிளம்பிவிடலாமா என்று நினைக்கும்போதே, அவர் மாயங்கள் காட்டும் மாயோனாகிறார். பூலோக இன்பமும், பூமகள் மணாளனுக்கு உகந்ததே என்று உத்தரம் அளிக்கிறார். அவரின் அலங்காரத்தைத்தான் பாருங்களேன்.
பாதத்தில் வைரத்தாலான பாதணியும், திருவதனத்தில் முத்தால் ஆன அங்கியும், நான்கடுக்கு பட்டாடைகளும் அணிந்து நேர்மறை வளமை நேசிக்கத்தக்கது என்றல்லவா சொல்லுகிறார். வளமை வந்தால்தான் பீடு நடை என்னும் ரசனை அனுபவமும் வரும்.
திருவின் காதலன் பீடு நடையை ஆரம்பிக்கிறார். இடக்கரத்தால் பரியின் கழுத்தை பரிவுடன் பற்றிக்கொண்டு, மெதுவான அசைவுடன் வையாளி நடையை ஆரம்பிக்கிறார்.
வையாளி என்பது குதிரையின் பல நடையழகுகளில் ஒன்று. அணி நடை அது. அலைபோல மேலும் கீழுமாய் அரங்கனை குதிரை தாலாட்டும் அழகு நடை அது. பாற்கடலும் அரங்கனை இப்படித்தான் கொஞ்சும் போலும்.
வையாளியில் மூன்று நிலைகள் உள்ளன: தயாராகுதல், வேடுபரி (நேர் வையாளி), உச்சக் கட்டம் (கோண வையாளி)
தயாராகுதல்:
பெருமாளும் பரிவாரமும் வந்து சேர்ந்தபின், ஸ்தானிகரும் (மேற்பார்வையாளர்), மணியக்காரரும் (நேரம் காப்பாளர்), ஸ்ரீபாதம் தாங்கிகள் எனப்படும் பெருமாள் வாகனத்தை சுமந்து வரும் இளைஞர்களின் தயார்நிலையை பரிசோதனை செய்ய நம்பெருமாளை வலம் வருகிறார்கள்.
வேடுபரி (நேர் வையாளி):
எல்லாரும் தயாரானவுடன், பெருமாள் மணல்வெளியின் ஓர் பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு ஓட்டமெடுத்து விரைவார். நம்பெருமாள் குதிரையில் பவனி வருவதைக் கண்குளிரத் தரிசிக்கும் அடியார்கள் ஆரவாரமெழுப்புவார்கள். பின் அங்கிருந்து பெருமாள் மீண்டும் திரும்பி தொடங்கிய இடத்திற்கு விரைகிறார். பின் அங்கிருந்து மெதுவாக நடந்து மணல்வெளியின் நடுவிற்கு வந்து நிலை கொள்கிறார்.
வையாளி நடை போட்டபின் கதம்ப மாலையணிந்து, கதம்பங்களால் அலங்கரிக்கப்பட்ட திண்டில் கம்பீரமாக காட்சியளிக்கிறார் பெருமாள். முத்துப்பாண்டியன் கொண்டையும் நெஞ்சில் நீலநாயகமும் தரித்திருக்கிறார். அதிக அணிமணிகள் வேட்டைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் எளிமையாக ஒரு காசுமாலை மட்டும் அவரது கழுத்தில் அழகுபெறுகிறது.
தன் இரத்தின அபய ஹஸ்தத்தால் (அச்சம் அகற்றும் திருக்கரத்தால்) அருள்பாலித்துக்கொண்டு, ஒரு சாதாரண பூமாலையும், தலையில் இரு வெல்வெட் மாலைகளும் அணிந்த குதிரையின் மீதமர்ந்து மணல்வெளியில் வேடுபரிக்காகவும் எழுந்தருளுகிறார். மைதானத்தின் நடுவிலிருந்து மணல்வெளியின் மறுபுறத்திற்கு ஓட்டமெடுத்து விரைகிறார். மணல்வெளியின் மறுமுனையிலிருந்து தன் கோணவையாளி நடையைத் தொடங்குகிறார்.
உச்சகட்டம் (கோணவையாளி) :
இதுதான் வேடுபரியின் உச்சக்கட்டம். கோணவையாளி என்பது பெருமாள் சற்றேறக்குறைய இருபது கஜம் பக்கவாட்டில் நகர்ந்து அங்கிருந்து அரைவட்டமடிப்பது. இந்த பக்கவாட்டு நகர்வும் அரைவட்டமடித்தலும் மீண்டும்
மீண்டும் நிகழ்த்தப்பட்டு மணல்வெளியின் மொத்த தூரத்தையும் பெருமாள் கடந்து மணல்வெளியின் இம்முனையிலிருந்து மறுமுனையை சென்றடைவார். இறை வேட்டையாடும் ஒரு நிகழ்ச்சியே இந்த வேடுபரி.
இறை எதை வேட்டையாடி அழிக்கும்?
இக்கேள்விக்கு பதிலளிப்பதே இந்த வேடுபரி உற்சவம். என்றோ வெளிப்பட்ட மாறாத உண்மை இங்கே மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது. வரலாறு மீள்கிறது. அரங்கன் தன் குதிரையை தட்டிவிட்டுக்கொண்டு கிளம்புகிறார். குதிரை மெதுவாக கிளம்புகிறது. வேகம் பிடிக்கிறது. ஓடுகிறது. பறக்கிறது. தூசி கிளப்புகிறது.
விட்டால் குதிரையை விரட்டிக்கொண்டு அரங்கன் திருவரங்கம் தாண்டி போய்விடுவார் என்று தோன்றுகிறது. விடுவார்களா அடியார்கள்? துடித்துக்கொண்டு கிளம்பும் பெருமாளை கட்டுப்படுத்த கஷ்டப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து திமிறிக்கொண்டு அரங்கன் அங்கும் இங்கும் ஓடுகிறார். நேராக ஓடுகிறவர், திடீரென்று பக்கவாட்டில் ஓடுகிறார். அரைவட்டம் அடிக்கிறார். மணல்வெளியின் ஒரு பக்கத்திலிருந்து,மறுமுனைக்கு செல்கிறார். மீண்டும் ஓடுகிறார்.
நன்றி : www.srirangapankajam.com
எதற்காக பெருமாள் இப்படி ஓடுகிறார்? என்ன வேட்டையாடுகிறார்? எந்த வரலாறு மீண்டும் நிகழ்கிறது? இந்த வரலாறு மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து மக்களிடம் சொல்லும் உண்மைதான் என்ன?
பரி என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வேடுபரி என்றால் பொன்னை வேட்டையாடுதல் என்றும் பொருளாம். திருமங்கை ஆழ்வார் என்பவர் இறைவனுக்காக பொன்னை வேட்டையாடிவந்தவர். இறை வேட்கையால் பொன் வேட்டையாடிய அவரை வேலவனின் மாமன் ஆட்கொண்ட அந்த அன்பின் அனுபவமே இந்த வேடுபரி உற்சவம்.
இன்பமான அன்பின் அனுபவத்தை மீண்டும் மீண்டும் எண்ணி உவகையடைவது இயல்புதானே. நம் பெருமாளின் மனத்திலும் திருமங்கையாழ்வாரின் பக்தி வாழ்க்கை மீண்டும் மீண்டும் எழுகிறது. எழுவது இறையிடம் என்பதால் அது உண்மையிலேயே நிகழ்கிறது.
திருவரங்கத்தில் மீண்டும் மீண்டும் மன்னன் மங்கையாழ்வார் மணாளனாய் வந்த மாலிடம் கரைகிறார். எல்லா வடிவிலும் இருப்பது எம்பெருமாளே என்று ஒவ்வொரு வேடுபரி உற்சவத்திலும் உணர்கிறார். உணர்த்துகிறார்.
ஆனால், அறியாமை இருளில் மூழ்கிய மனிதரோ, தானும் தன்போன்ற மற்ற மனிதரும், மற்றுமுள்ள உயிரினங்களும், உயிரற்றவைகளும் பெருமாளின் வடிவங்களே என்பதறியார். மனிதரிலும், மதத்திலும் உயர்வு தாழ்வு காணுகிறார். புண்ணியம் என நினைத்து புனிதப் போர் தொடுக்கிறார். அப்போதெல்லாம், இவரின் அறியாமை வேட்டையாட அரங்கன் எழுகிறார். அறியாமை அழிவதே ஆன்ம வாழ்வின் வழி என்று காட்டுகிறார்.
ஆயினும், அறியாமையின் வலிமைதான் என்னே. புனித வேட்டையாடத் துடிக்கும் புண்டரீகனை இந்த அடியார்கள்கூட புரிந்துகொள்ளவில்லையே. நாம் பாவிகள் என்றும், பதர்கள் என்றும் சொல்லும் அஞ்ஞானிகளை வேட்டையாட, பல நிலைகளிலும் பல திசைகளிலும் பறந்தோடும் பரந்தாமனை இந்த பக்தர்கள் கட்டுப்படுத்த அல்லவா முயலுகிறார்கள்? கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுளை இவர்களின் கட்டுமானத்திற்குள்தான் கொண்டுவர
இயலுமா?
ஆனால், இந்த அடியார்கள் தொடர்ந்து முயல்கிறார்கள். ஓடுகிற பெருமாளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். இவர்கள் திணறுவதைக் கண்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்கிறார்கள். அடக்க முடியாத சனாதன தர்மத்தின் வடிவத்தை அடக்க நினைக்கிறீர்களே என்று சீறுகிறார்கள். ஓடுகிற பெருமாளை உற்சாகப்படுத்த விசிலடிக்கிறார்கள். கைதட்டுகிறார்கள். கோவிந்தா, கோவிந்தா என்று கூக்குரலிடுகிறார்கள்.
கட்டுப்படுத்த நினைப்பவர்களோ தோல்வியுறுகிறார்கள். கட்டுப்படுத்துவதில் இல்லை. நிறுவனப்படுத்துவதில் இல்லை. புரிந்துகொள்ளும் ஞானத்தில்தான் பூதேவி மணாளனை கட்டமுடியும்; அறியாமை அழியும் அனுபவத்தில்தான் மனித வாழ்வு மலரும் என்று புரிந்துகொள்கிறார்கள்.
அரங்கனோடு இணைந்து, பரவும் அறியாமையை வேட்டையாட வாழ்வை அர்ப்பணித்தால்தான் அவன் அருள் கிட்டும் என அறிந்து கொள்கிறார்கள். வேட்டையாட கிளம்புபவனை தடுக்காமல், அவனோடு அனைவரும் இணைந்து குதிரைபோல ஒத்திசைக்க உறுதி பூணுகிறார்கள்.
பரிவாரக்குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பெருமாளின் வேடுபரியை அனுபவித்த அடியார்கள் ஆரவாரம் செய்து மகிழ்கிறார்கள். பூஜிக்கிறார்கள்.”அரங்கனே வேடுபரியின் நாயகன்” “அரங்கனே வேடுபரியின் சாரம்” “அரங்கனே வேடுபரி”பக்தி யோகத்தால் உந்தப்பட்ட கர்ம யோகம் நம் கண்முன்னே ஞான யோகத்தால்
உயிரூட்டப்படுகிறது. அரங்கனோடு சேர்ந்து அறியாமை வேட்டையாட தமிழர்களிடம் ஆவல் உண்டாகிறது.
ஒரு மகத்தான வேடுபரியில் பங்கெடுத்த பின் நம்பெருமாளின் குதிரையும் சிறிது மூச்சிரைக்கிறது. நம்பெருமாளோ புரிந்துகொண்ட கூட்டத்தைக் கண்டு புன்னைகைக்கிறார்.
மக்களுக்கு புல்லரிக்கிறது. வாளும், நூலும் தரும் துயரை அரங்கன் காட்டும் அனுபவம் அழிக்கும் என்னும் உண்மை தெரிகிறது.
Pramadham.
Namaskaram.
Nandri.
Anbudan,
Srinivasan.
Excellent article with a clipping – well done!!!
Wow Nice write-up. we arangan adeyars even after moving out of Srirangam still have that Bhakti, Love for our Perumal because ….he is our RANGAN ..the real King.
…தனி கிடந்தரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான் … – திருமாலை