பாரதியும் தேசியமும்

Bharati, the nationalist poetமகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல முடியாது. பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அவருடைய பாடல்கள் மிகப் பெரும்பான்மையானவற்றுள் தேசபக்தி கலந்து நிறைந்தே இருக்கிறது. ‘நாட்டு மாந்தர் எல்லாம், தம்போல் நரர்கள் என்று கருதார்; ஆட்டு மந்தையாம் என்றே உலகில் அரசர் எண்ணிவிட்டார்’ என்பன போன்ற பகுதிகளில் பாஞ்சாலி சபதத்திலும் அவருடைய நாட்டுணர்வு வெளிப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ (அல்லது ‘தேசிய கீதங்கள்‘) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவருடைய பத்தொன்பது பாடல்கள், நாம் அனைவரும் நினைவில் கொள்ளத் தக்கவை. அன்னிய ஆதிக்கத்தால் அல்லற்படுதல், விடுதலை வேட்கை தலைதூக்கி நிற்றல், இந்த நாட்டு விடுதலைக்காக, அருபாடு பட்ட தலைவர்கள் நடத்திய போராட்டங்கள், போரால் மக்கள் அச்சமுடன் நலிதல், பஞ்சத்தால் வாடுதல் இன்னபிற உணர்வுகளால் நிறைந்து, நம்மைத் தட்டி எழுப்ப பாரதி இப்பாடல்களைப் பாடினார்.

பதினொன்றாம் வயதில் ”பாரதி” (கலைமகள்) என்ற பட்டம்பெற்ற மகாகவி, முதலில் மூன்று பாடல்களில் ”நாட்டு வணக்கம்” செய்தார். இவற்றில் ஒன்று ”வந்தே மாதரம்” என்ற தலைப்பில் 1907ம் வருடம் இந்தியா பத்திரிகையில் வெளியிடப்பட்ட பாடல். வந்தே மாதரம் என்ற சொற்றொடருக்குத் ”தாயை வணங்குகிறேன்” என்பது பொருள். அதையே ”வந்தே மாதரம் என்போம்”என்று தொடங்கி, அதை அடுத்து “எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்ற மொழிபெயர்ப்பாகவும் அளித்தார். இந்தப் பாடல், தாயுமானவர் அருளிய ‘ஆனந்தக் களிப்பு’ வர்ணமெட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு.

தேசிய கீதங்களில் ஒன்பதாவதான ‘எங்கள் தாய்‘ என்ற பாட்டு அண்ணாமலை ரெட்டியாரின் ‘காவடிச்சிந்து’ மெட்டில் அமைந்துள்ளது. அவருடைய இத்தகைய பாடல்களெல்லாம் நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், பாரதியார் இசைஞானம் மிக்கவர். தக்கவிதமாக இசையமைத்துப் பாடப்படும் பாரதி பாடல்களின் சொற்களில் வீரியம் ஓங்கிநிற்பதை உணரமுடியும்.

பாரதத் தாயின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி ‘சக்தி’ வழிபாட்டு அடிப்படையில், இச்சமுதாயத்தின் இன்றைய நிலை, எதிர்காலம், தேசிய ஒருமைப்பாடு முதலிய அடிப்படைக் கோணங்களில், பாரதி பாடியுள்ளதை, இக்கால இளைஞர்கள் படித்தால் தேசிய உணர்வு கட்டாயம் ஏற்படும். இன்றைய கால கட்டத்தில் நன்கு வழி நடத்திச்செல்ல ஒரு உந்துசக்தி அவசியமாகத் தேவைப்படுகிறது. பாரதியின் பாடல்கள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

பெயர்ப் பெருமை.

பாரத நாட்டுக்கே இந்த நாட்டின் பெயருக்கே ஒரு தனி ஆற்றல் உள்ளதை அவர் உணர்த்துகிறார்.

”பாரத தேசமென்று பெயர் சொல்லுவர் – மிடிப்
பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்”
என்றும்

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

எண்ணரும் பெரும் நாடு;

கனியும் கிழங்கும் தானியங்களும்

கணக்கின்றித்தரு நாடு

என்றும்

இயற்கைதரும் செல்வ வளத்தைச் சிறப்பிப்பார் பாரதி.

”தெண்ணில வதனிற் சிலிர்த்திரும் இரவும்
தண்ணியல் விரிமலை தாங்கிய தருக்களும்”
என்பார்.

இந்த இயற்கை எழிலை இக்கால இளைஞர்கள் காண வேண்டாமா? எங்கும் ”கான்கிரிட் பூங்காக்களை” அமைத்து அதில் மணமில்லாப் பூக்களை காட்சிப் பொருளாக்கலாமா?

இப்படி இயற்கை வளம் பற்றி உரைக்கும் பாரதி, அறிவு வளத்தையும் அந்த தேசிய கீதத்தில் கூறுவார். ”அறிவு நீ” (தேசியகீதம் – 19)

இந்நாடு ”ஞானத்திலே உயர்ந்த நாடு” (தேசிய கீதம் – 4), “பூரண ஞானம் பொலிந்த நன்னாடு” (தேசிய கீதம் – 6), வேத நூல்கள், இதிகாசம் முதலியவற்றில் சிறப்புற்றது நம்நாடு என்பார்.

”இதிஹாஸம்” என்பது ‘இது ஹாஸ்யம்’‘ என்று கேலிப்பொருளாக்கி, இசைக்கலக்கலில் (fusion music) கலங்கும் இளைஞர்களை உசுப்பிவிடும் காலம் வந்துவிட்டது. பழங்கலைகளும், அரிய பழைய நூல்களும் காலச் செலவில் ‘சென்று தேய்ந்து இற்றுவிடாமல்’ பாதுகாப்பவள் ஒருத்தி உண்டு. ‘அவள் யார்’ என்று கேட்டால், ‘பாரதத் தாய்தான்’ என்று பதில் சொல்கிறார் பாரதி.

”வெல்லு ஞானம் விஞ்சியோர் செய்
மெய்ம்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மையுந்தர
வல்லநூல் கெடாது காப்பாள்”

என்கிறார். (“சிறந்துநின்ற சிந்தையோடு தேயநூறு வென்றிவள்…“ என்று தொடங்கும் பாடல்.)

அதுமட்டுமா? அந்த தெய்வீக மணம் வீசுகின்ற கவிதைகளை மலர்களாக அன்னை சூடி மகிழ்வாள்: என்பார் மகாகவி.

”தீஞ் சொற் கவிதையஞ் சோலை – தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேன்சொரி மாமலர் சூடி – மதுத்
தேக்கி நடிப்பாள் எம் அன்னை”
(‘வெறி கொண்ட தாய்’)

என்கிற அந்தக் கவியுள்ளத்தை நாம் காணவேண்டாமா?

நம் பாரத நாடு ஒரு புண்ணிய நாடு. இதைச் சொல்லவந்த கவி, ”நண்ணிய பெருங்கலைகள் – பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே ” என்பார்.

நமது முன்னோரின் தொன்மையினையும், சிந்தனையோட்டத்தையும், நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பாடல் இதோ

”முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே”
என்ற பாரதி, இதைத் தொடர்ந்து,

”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே”

என்று இல்லற வாழ்க்கையின் ஏற்றத்தையும், தாய்மையின் மாண்பையும் சிறப்பித்துப் பாடுகிறார்.

நம் நாடும் அதன் கலாசாரமும் எவ்வளவு தொன்மையானது என்றால், ‘பழங்காலத்தில் நிகழ்ந்ததை, இன்றைய காலகட்டத்தில் துல்லியமாக உணரும் ஆற்றல் வாய்ந்த கலை நிபுணர்களாலும் வகுத்துக்காட்ட முடியாத அளவுகு நம் நாட்டின் தொன்மைச் சிறப்பு பெரியது‘ உள்ளது என்பார் பாரதி.

”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல் பினளாம் எங்கள் தாய்”

இதைப் பாடும் குழந்தைகளுக்கு தாய்நாட்டைப் போற்றும் பண்பு தானாக வந்திடுமே!.

நம் மக்கள் வீறுபெற, அன்னிய சக்திகள் நம்மீது மீண்டும் ஆளுமை செலுத்தாமல் இருக்க, பாரதியின் இப்பாடல் வழிவகுக்கும்.

”ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்
கடலினிலே உயர்நாடு”

100 பதக்கங்கள் பெற்ற அண்டைய நாடு சீனா. ‘ஒலிம்பிக்ஸ்’ போட்டியில் வென்றது போல், நம் இந்தியர்கள், இந்திய இளைஞர்கள் பெறுவது எப்போது?. ‘ஒரு தங்கம் பெற்றதற்கே உவகை கொண்டால் போதுமா? பாரதியின் பாடலை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து 2012 ‘ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள பயிற்சிபெறும் கூடங்களில் பயில்வைக்க வேண்டாமா?

இந்த உலகம் அறிவு மயமானது. நம் உள்ளத்தில் உறுதி ஓங்கிவிட்டால் நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் வென்றிடலாம்.

”சித்தமயமிவ் வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் துன்பம்
அத்தனையும் வெல்லாமென்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்”
– என்பது பாரதி வாக்கு.

வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறன்மகளாம் எங்கள் தாய் – அவன்
திண்மை மறையினும் தான் மறையாள் நித்தம்
சீருறுவாள் எங்கள் தாய்.

இமயாசலன் பெற்ற தேவியான உமையைப் போன்று தோன்றியவள்தான் எங்கள் பாரதத்தாய்; ஆனாலும், இமயமே தன்னுடைய வலிமையை இழந்துபோனாலும், எங்கள் தாய் ஒரு குறைவுமின்றி ஓங்கிச் சிறப்புற்றுக்கொண்டே இருப்யாள், என்று நம் நாட்டுத் தாயின் வெற்றியினையும், வலிமையினையும் போற்றுகின்றார்.

நாம் பரமனுக்கு பள்ளியெழுச்சி பாடுகிறோம். வேங்கடேச சுப்ரபாதம், காமாட்சி சுப்ரபாதம் என்று… மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடினார். நம் பாரதியார் ‘பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி” பாடினார். இது ‘சூரியோதயம்’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது ஒரு சிறப்பு.

இந்த பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி பாடலை இப்பொழுதுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே!. இவற்றைப் பெற்றோர்கள் நம்பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றோமா?

பாட்டைப் பார்க்கலாம்!

”பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்”

என்றும்

”புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்
பொங்கியது எங்கும் சுதந்திர நாதம்”

என்றும் பாடுகின்றார்.

”நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ”

என்று விடுதலை வேட்கையை இப்பள்ளியெழுச்சி பாடலில் பகர்வார் பாரதி..

நம் பாரத மாதாவிற்கு நவரத்தினமாலை, திருத்தசாங்கம்’ என தேசிய கீதங்கள் 12, 13 -ல் முறையே பாடுவார் பாரதி.

”கண்ணிலாக் குழந்தைகள் போல் – பிறர்
காட்டிய வழி சென்று மாட்டிக்கொள்வார்”
என தேசியகீதத் தொகுப்பில் 15வது பாடலில் கூறுவது போல் இல்லாது, இனியாவது விழித்துக் கொள்வோம்.. நல்லதொரு விதி சமைப்போம்.. ஒற்றுமை கொள்வோம். இதுவே நாம் பாரதிக்கு செய்யும் கைம்மாறு.

4 Replies to “பாரதியும் தேசியமும்”

 1. Dear sir,

  I convey my thanks for publishing my article about GREAT BHARATHI

  Bharathi Ramachandran

 2. excellent and very rightly said at this juncture-Oh Maha kavi Bharathi, thy should live at this hour to once again motivate us to follow thy steps.

 3. Well said . Unfortunately we miss those passionate leaders. I am happy and pround to be neighbour of Mr. Bharathi Ramachandran , as he imbibes these thoughts on me and my kids and guides us in the right direction.

  Regards

  Ragu

 4. இந்தியா என்று ஒரு நாடே இல்லை, அது 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கையான பொருள் என்று கூறுபவர்கள் இதையெல்லாம் படிக்க வேண்டும் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *