என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சரி போவோம் என்று போனேன்.
வேலூருக்கு அருகில் இருக்கிறது கோவில். ஸ்ரீபுரம் தொடக்கத்தில் இருந்து எங்கே பார்த்தாலும் நாராயணியும் அம்மாவும் காட்சி தருகிறார்கள். உண்மையில் நான் ஸ்ரீ அம்மா என்று சொல்லியிருக்கவேண்டும். மரியாதையின்மையின் உச்சம் நான் அம்மா என்று மட்டும் சொல்வது. மேல் மருவத்தூரில் அம்மன் முன்பு அம்மா (இது வேறு அம்மா) நின்று அருள் சொல்வதுபோல, நாராயணியின் முன்பு நின்று அம்மா அருள் பாலிக்கிறார். அம்மா என்று அழைக்கப்படுபவர் கிட்டத்தட்ட 32 வயதான ஒரு ஆண். ‘அவர் பிறக்கும்போது அவர் முகத்தில் நாமம் இருந்தது. பின்னர் அவர் கடவுளின் குழந்தையாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்? அவரைப் பார்த்த சிலர் கண்மூடிக் கண் திறந்தபோது சிங்கத்தின் மீதிருக்கும் நாராயணியாக அவரைக் கண்டார்கள். அவர் நாராயணியின் அம்சம்.’
திருப்பதியை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக உருவாக்கிவிட்டார்கள்! திருப்பதியில் வரும் சின்ன சின்ன எரிச்சல்களெல்லாம் பெரிய அளவில் வருகிறது இங்கே. உள்ளே நுழைந்ததும் கேமரா, செல்ஃபோன் என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். வரிசையில் நின்று, வரிசை மெல்ல மெல்ல நகர்ந்து செல்ல, ஒரு அறையை அடைந்தோம். அங்கே அடைத்துவைத்தார்கள்.
கொளுத்தும் வெயிலில் நான்கே நான்கு ஃபேன்கள். அங்குள்ள ஒரு டிவியில் அம்மா
செய்த யாகங்கள், வேத மந்திர முழக்கங்கள் என எல்லாவற்றையும் வரிசையாகக்
காட்டிக்கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு காவி சால்வையைப் போர்த்திக்கொண்டு,
கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்காக நடந்துகொண்டே இருக்கிறார்.
அந்த அறையிலிருந்து திறந்து விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். (உண்மையில் நான் இரண்டு மணிநேரம் கழித்துதான் அடுத்த வரி எழுதவேண்டும். அத்தனை நேரம், அத்தனை தூரம் நடந்தோம்.) நடைபாதை சூரிய சக்கரம், சந்திர சக்கரத்தை உத்தேசித்துக் கட்டப்பட்டதாம். நடந்தோம். நடுவில் தங்கத்தில் கோயில் ஜொலிக்க, நாங்கள் அதை அடைய நடந்தோம். நேரடியாக சடுதியில் அடைந்திருக்கவேண்டிய கோவிலை, சுற்றிச்சுற்றி ஸ்டார் வடிவத்தில் இருக்கும் நடைபாதை வழி நடந்தோம். வழியெங்கும் கற்சிலைகள் அழகழாகப் பூத்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பசும்புல் போட்டு அதை ஆள் பராமரித்துக்கொண்டிருக்க நடந்தோம். ஒவ்வொரு ஒரு கிமீ தொலைவிற்குள்ளும் நன்கு பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள். கழிப்பறைச் சுட்டி அட்டைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லா மொழிகளையும் கொண்டிருந்தன. மலையாளம் காணவில்லை. ஒருவேளை மலையாளிகள் வழிகாட்டத் தேவையில்லாமலேயே அறிவாளிகளோ என நினைத்துக்கொண்டே நடந்தோம்.
இன்னும் நடந்தோம். மேலும் நடந்தோம். திடீர் திடீரென நிறுத்தினார்கள். நின்றோம். போகச் சொன்னார்கள், நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. என் அம்மாவிற்கு மூச்சு முட்டியது. ஆஸ்துமா கேஸ். ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. தங்கக்கோவிலை அவள் தரிசிக்கும் தருணம் அவளுக்கு முக்கியமானது. எங்களுடன் பல நூறு மக்கள், பல்லாயிரக் கணக்கான மக்கள் நடந்தார்கள். எல்லோருக்கும் ஒருவித ஆர்வம், ஆச்சரியம். மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே பக்தி. இது சுற்றுலாத்தலமா இல்லை கோவிலா என்று தோன்றிவிட்டது. ஒருவழியாக நடந்துமுடிந்து தங்கத்தாலான கோவிலைக் காண உள்ளே நுழைந்தோம்.
தங்கத் தூணையும், தங்கச் சிற்பங்களையும் நீங்கள் எட்டி நின்று பார்க்கலாம். மூலஸ்தானத்தில் உள்ள தங்க அம்மனை நெருங்க முடியாதபடி நீர் சேர்ந்து நிற்கும் அகழி இருந்தது. நீர் ஆடி ஆடி, நீரிலிருந்து வெளிப்படும் சூரிய ஒளி தங்கக்கோவிலின் சுவர்களில் ஒளிக்க, கோவிலின் சுவரே ஆடுவதுபோன்ற அழகும். வெகு அழகுதான். அங்கேயும் சுற்றி சுற்றிப் போகச் சொன்னார்கள். போனோம். திடீரென நிறுத்தி, திடீரென அனுப்பி ஒருவழியாக சந்நிதியை அடைந்தோம்… என்றால், கிட்டத்த மூலஸ்தானத்திலிருந்து 75 அடி தள்ளி நின்று பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். என் அம்மாவிற்கு வந்த ஏமாற்றம்தான் என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. மற்றபடிக்கு நான் ஓர் ஆர்வமில்லாமல்தான் நடந்துகொண்டிருந்தேன்.
கடவுளை தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு செயற்கை நீரோட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் பெண்கள் தங்கள் வளையலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியிருக்கிற நிலையில், இன்னும் சில வருடங்களில் கூட்டம் குவியப்போகிற நிலையில், வளையல்களை அள்ள தனி காண்டிராக்ட் விட்டாலும் விடுவார்கள்.
ஏகப்பட்ட வளைவுகள். ஏகப்பட்ட நுழைவாயில்கள். ஜொலிக்கிறது கோவில். ஆனால் பக்தர்கள் வெயிலில் அவஸ்தைப் படாமலிருக்க எவ்வித ஏற்பாடுமில்லை. நவதிருப்பதி செல்வோம். அங்கேயும் இப்படித்தான். எவ்வித ஏற்பாடும் இருக்காது. ஆனால் அது ஒரு குறையாக உறுத்தியதே இல்லை. காரனம் அவையெல்லாம் ஏழைக் கோவில்கள். நம் பாரம்பரியத்தையும் மரபையும் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு, தம் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டு நிற்பவை. அவை கோவில்கள் என்பதைவிட மனசாந்தி தரும் இடங்கள்.
ஆனால் இது கார்ப்பொரேட் நிறுவனம். கோவில் ஸ்டைலில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே 250 கோடி செலவழிக்கத் தகுதி இருக்கிறது. இப்படிச் செலவழித்தபோது, மக்களின் கஷ்டத்தையும் நினைவில் வைத்திருக்கலாம். சுட்டெரிக்கும் வெயிலில் கால்கள் பொசுங்க ஓடினோம். பிரசாதமாக சாம்பார் சாதம் தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு ஓடினோம். வெளியில் வரும்போது கடும் எரிச்சல் மட்டுமே மிச்சமிருந்தது. கோவிலால் மனதில் ஏற்பட்டிருக்க வேண்டிய அமைதி இல்லை. ஒரு கடவுளை தரிசித்த நிலையில் கிடைக்கவேண்டிய ஆனந்தம், புல்லரிப்பு இல்லை. கோவிலில் குங்குமம் கூடவா கொடுக்கமாட்டார்கள்? 250 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால், 50 அடி தொலைவில் அம்மனை தரிசித்துவிட்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம், 500 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால் அம்மனை மிக அருகில் கண்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம்.
எப்படி இக்கோவிலிருந்து திருப்பதி வேறுபடுகிறது? உண்மையில் திருப்பதியோடு இக்கோவிலை ஒப்பிடுவதே நான் பெருமாளுக்கு செய்யும் துரோகம். இருந்தாலும், இக்கோவில் திருப்பதி போன்று வரவேண்டும் என்கிற நினைப்பில் கட்டப்பட்டிருப்பதால் இந்த ஒப்பீடு தேவையாகிறது.
திருப்பதி கோவில் மக்களைக் கவர்ந்திழுத்து கூட்டம் சேர்க்கவேண்டும் என்னும் குறிக்கோளுடன் ஏற்படுத்தப்பட்டதல்ல. மக்கள் அந்தப் பெருமாளின் சக்தியால் அக்கோவிலுக்கு பெருமளவில் வருவதால், அவர்கள் எளிதாக தரிசித்துவர பல்வேறு வழிகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இக்கோவில் கூட்டம் வருவதே நோக்கம் என்ற நினைப்பில் ஏற்படுத்தப்பட்டது என்பது நன்றாகத் தெரிகிறது.
திருப்பதியில் பெருமாள் மட்டுமே முக்கியம். இங்கே நாராயணியோடு “அம்மா”வும் முக்கியம். சில சமயங்களில் நாராயணியைவிட அம்மா முக்கியம். திருப்பதியிலும் ஸ்பெஷல் தரிசனங்கள் உண்டு. ஆனால் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே கடவுளைக் கும்பிடமுடியும். பணம் என்பது அங்கு நேரத்தைக் குறைக்கமட்டுமேயன்றி வழிபாடு செய்யும் இடம் எல்லோருக்கும் பொதுவானதே. இங்கே அப்படி இல்லை. பணம் கூடக் கூட நீங்கள் நின்று வழிபடப்போகும் இடம் மாறும்.
திருப்பதியில் நீங்கள் எங்கேயும் பக்தியை மட்டுமே தரிசிக்கமுடியும். இங்கே பக்தியைக் கொஞ்சமாகவும், பகட்டையும் ஆடம்பரத்தையும் மட்டுமே அதிகமாகவும் தரிசிக்கமுடியும்.
திரும்பிய பக்கமெல்லாம் “அம்மா”வின் அருள்வாக்குகள் பல வண்ண flex board-களில் உங்களைத் துரத்துகின்றன. என்னுடன் வந்த பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.
திருப்பதியில் கோவில் என்பது நம் மனதோடு சம்பந்தப்பட்டது. இங்கே கோவில் என்பது ஆடம்பரத்தோடு சம்பந்தப்பட்டது.
திருப்பதியில் நீங்கள் மூலஸ்தானத்தை அடைய நடக்கும்போது, உங்கள் மேல் வெயிலே படாது. ஒரு அறையில் அடைக்கப்படும் நீங்கள், அங்கிருந்து நடக்கத் தொடங்கினால், பின்பு நிற்கவேண்டியது இருக்கவே இருக்காது. இங்கே அப்படி அல்ல. செல்லும் வழியெல்லாம் வெயிலே உங்களை வழி நடத்துகிறது. திடீர் திடீரென நிறுத்துகிறார்கள். நின்று நின்று கால்வலித்து, பின்பு நடந்து கால் வலித்து, எப்போதடா வெளியில் வருவோம் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், உள்ளே இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியியேறலாம் என்பதற்கான நுழைவாயில்களை வைப்பது குறித்துப் போராடலாம். இப்போதைய அமைப்பில், நீங்கள் உள்ளே வந்துவிட்டால், சாமி பார்க்காமல் எச்சமயத்திலும் வெளியில் வரவே முடியாது.
இன்னும் சில காலங்களில் அம்மாவின் புகழ் எங்கும் பரவக்கூடும். அவர் பல்வேறு மருத்துவமனைக்கூடங்கள் எல்லாம் கட்டி அந்தக் கிராமத்தையே தன் வசப்படுத்தக்கூடும். ஆனாலும் 250 கோடியில் ஒரு கோவில் இப்போது தேவையா என்கிற கேள்வியை புறக்கணிக்க முடியாமல்தான் போகும். அம்மாவின் அருள்வாக்குகளில் ஒன்று, இக்கேள்விக்கும் பதில் சொல்கிறது. ‘250 கோடி செலவில் ஒரு கோவிலுக்கு பதிலாக ஏன் மருத்துவமனை கட்டக்கூடாது என்று கேட்கிறார்கள். இப்படி ஒரு கோவில் மூலம் ஆயிரம் ஆயிரம் மருத்துவமனைகள் சாத்தியமாகும்’ என்கிறது அது. எப்படியோ, 250 கோடியில் கோவில் என்பது அம்மாவையே உறுத்தியிருக்கிறது.
250 கோடி எங்கிருந்து வந்தது? யார் பணம்? எனக்குத் தெரியாது. யாருக்குத் தெரியும் என்பதும் தெரியாது. அரசியல் அம்மா ஆட்சிக்கு வந்தால் என்னாகும் என்பதும் தெரியவில்லை. ஆனால் கூட்டம் என்னவோ வந்துகொண்டேதான் இருக்கிறது. அது பக்திக்கான கூட்டமா, தங்கத்தைப் பார்க்கும் கூட்டமா என்று பார்த்தால், இப்போதைக்கு தங்கத்தைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம் என்று தோன்றுகிறது. நாளை மாறலாம். இதைக் கொஞ்சம் உருப்படியாக்கி, ஒரு நல்ல கோவிலாக மாற்றலாம். அது அம்மாவின் கையில் இருக்கிறது. தன் புகழை அதிகம் அம்மா நாடிவிட்டால், கோவில் பின்தங்கிவிடும். அம்மாவை மட்டும் கண்டால் கோவில் கிடையாது என்பதை அம்மா புரிந்துகொள்ளவேண்டும். 250 கோடி முதலீட்டில் எக்காலகட்டத்திற்குமான நிரந்தர வருமானம் என்பது எண்ணமாக இருந்தால், நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆடம்பரமெல்லாம் இருந்தாலும் கடவுள் என்பது எதாலும் தீண்டப்படமுடியாத ஒரு உருதான். அதனுடன் விளையாடுவது பற்றி அம்மாதான் முடிவெடுக்கவேண்டும்.
கோவிலுக்குள் இருந்து வெளியே வருபவர்கள் மனதில் இருக்கவேண்டியது பக்தியும் ஆன்மிகமும். இது இல்லாவிட்டால் கோவில் என்கிற கான்செப்ட்டே அடிபட்டுப்போகும். இப்போதிருக்கும் நிலையில், மதமாற்றக்காரர்கள் அக்கோவிலின் வாசலில் ஒரு கடைபோட்டால், செம விற்பனை ஆகும் என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இருக்கட்டும். இம்மாதிரி பகட்டு ஆலயங்களும் ஒன்றிரண்டு இருக்கட்டும். சுற்றுலாத்தலமாக இந்து மத சின்னங்களும், கலாசாரங்களும் ஆக்கப்பட்டு பல வருஷங்கள் ஆகிவிட்ட நிலையில், சுற்றுலாவிற்காக ஒரு கோயில் கட்டினால் ஏற்றமுடையதுதான். கட்டுமையில்லாத இந்துமதம் இன்றைய தேதியில் பல்வேறு நிறுவனர்களின் கையில் சந்தைப்பொருளாக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதுதானே கிருத்துவத்திற்கும் இன்று உலகலாவிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. இருக்கட்டும். இம்மாதிரி நிகழ்வுகளும் சின்னங்களும் இந்துமதத்தை ஒருவிதத்தில் அரணாக மாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. ஆம், நீங்கள் குறிப்பிட்ட நடைமுறைக் குறைகள் களையப்படவேண்டியவை. அதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த நாராயணிபீடமும் இன்றைய இந்தியாவின் ஆயிரமாயிரம் இந்து கார்பரேட் அமைப்புகளுடன் சேர்ந்து தொழில் நடத்தட்டும். இவர்களின் வெற்றிகர தொழில் இந்து மதத்தின் வெற்றியாக இருக்கும் அல்லவா! இவர்கள் தங்கள் தொழில் காக்க இந்து மதத்தை இன்னும் தழைக்கச்செய்வார்கள் இல்லையா. இன்று பல புராதன கோயில்கள் இந்திய அரசுகளால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன. அவ்விதத்தில் இந்த மத வழிபாடுகள் இப்போது பிரைவேடைஸ் செய்யப்பட்டுவருகின்றன. இது காலத்தின் கோலம், கட்டாயம். ஆனால் இந்து மதம் தன்னை புதுப்பித்துக்கொள்ள எடுத்துக்கொண்ட ஒரு வழி.
நன்றி
ஜயராமன்
ஓரிரு நாட்க்களுக்கு முன்பு தான் எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்மணி “ஸ்ரீ புரம் போய் வந்தேன்” என்று அலட்டிக் கொண்டிருந்தார். எனக்கு, வேலூர் அருகே தங்க கோவில் கட்டியிருக்கிறார்கள் என்று தெரியுமே தவிர அதன் பெயர் “ஸ்ரீ புரம்” என்று தெரியாது. இப்போது தெரிந்து விட்டது.
தமிழர்கள் என்றுமே ஆடம்பரத்திலும் பண பகட்டிலும் மயங்குபவர்கள் என்பதற்க்கு மற்றும் ஒரு உதாரனம். அடுத்த வேளை பூஜைக்கு போதிய பணம் இல்லாமல் ( நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் ) பாடல்ப் பெற்ற பல கோவில்களும், அடுத்த வேளை சோறுக்கு கஷ்ட்டப் படும் அர்ச்சகர்களும் தமிழகத்தில் ஏராளம். அப்படி இருக்க “தங்கக் கோவிலை இன்னுமா பார்க்கவில்லை ?” என்று அலட்டிக் கொள்ளும் தமிழர்களின் ( குறிப்பாக பெண்களின் ) மன நிலை வேதனை அளிக்கிறது.
“அப்படியானால் திருப்பதி மட்டும் பணத்தில் கொழிக்கவில்லையா ?” என்று கேட்ப்பவர்களுக்கு நன்றாக பதில் அளித்துள்ளீர்கள். நாளையே திருப்பதி கோவிலின் அத்தணை பணமும் காணாமல் போனாலும், அந்த பெருமாளின் பெருமை அப்படியே இருக்கும். ஏன் என்றால், அவர் தான் பணத்தை தன் பக்கம் இழுத்துக் கொண்டாரே தவிர , தங்கமும் பணமும் அவரிடம் மக்களை இழுத்து வர வில்லை.
தரிசு நிலங்கள் பல, கோவில்களிடமும் மடங்களிடமும் சிக்கிக் கொண்டிருப்பதாக வேதனை படும் கருணாநிதி, இந்த “கோவில்” கட்ட பணம் எங்கிருந்து வந்தது என்று ஏன் கவலைப்படவில்லை ?
ஹிந்துக்கள் திருடர்கள் என்று பேசும் இவரை “நாராயணி அம்மா” ஏன் தன் “கோவிலு”க்கு அழைத்தார் ?
ராஜா ஐயா,
/// தமிழர்கள் என்றுமே ஆடம்பரத்திலும் பண பகட்டிலும் மயங்குபவர்கள் என்பதற்க்கு மற்றும் ஒரு உதாரனம். அடுத்த வேளை பூஜைக்கு போதிய பணம் இல்லாமல் ( நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் ) பாடல்ப் பெற்ற பல கோவில்களும், அடுத்த வேளை சோறுக்கு கஷ்ட்டப் படும் அர்ச்சகர்களும் தமிழகத்தில் ஏராளம். அப்படி இருக்க “தங்கக் கோவிலை இன்னுமா பார்க்கவில்லை ?” என்று அலட்டிக் கொள்ளும் தமிழர்களின் ( குறிப்பாக பெண்களின் ) மன நிலை வேதனை அளிக்கிறது. ///
இதற்குக் காரணம் இந்த கோவில்கள் இன்று தமிழக அரசின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டிருப்பதே. இன்று இந்த திருக்கோவிலுக்கு திருப்பணி செய்வதாக இருந்தாலும் அது அறநிலையத்துறையின் ஆணைக்குட்பட்டே நடத்தப்படவேண்டும். நீங்கள் உங்கள் சொந்த செலவில் நெய்யும், மலரும், வஸ்திரமும் வாங்கி இறைவன், இறைவிக்கு சமரப்பிக்கலாம். ஆனால், அதை நிரந்தரமாக வழியாக்க முடியாது – நீங்கள் செலுத்தும் அனைத்து பணமும், பொருளும் அரசாங்கத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அந்த கோவிலுக்கு உண்டான விதி என்னவோ அது மட்டுமே நடக்கும் – 25 ரூபாய் பணம் எண்ணைக்கு மாதம். அது மட்டுமே அந்த இறைவன், இறைவிக்கு வாய்த்தது. கோயில் ஊழியர்கள் முதல், அக்கோயிலை வைத்து பணம் தின்னும் குத்தகைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் வரை அந்த கோயிலை தன்வசத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் நீங்கள் இவற்றை ஏன் மேம்படுத்தவில்லை என்று கேள்வி கேட்பதே ஆக்கபூர்வமானது அல்ல. இன்று கோயில்களில் இறைவன், இறைவி உண்மையாக உடனுறைந்து பக்தர்களும் மனசாந்தியும், இறையின்பமும் பெற வேண்டுமானால் – ஒன்று அந்த கோயில்கள் அரசாங்கத்தின் கோரப்பிடியிலிருந்து வெளிவரவேண்டும். இல்லையேல், தனியாரால் நிர்வகிக்கப்படவேண்டும்.
எனவே, ஸ்ரீபுரம் போன்ற கோயில்களே இந்து மதத்தின் தற்போதய நிதர்சனமாக வெளிப்பாடுகள். – நான் அங்கிருக்கும் ஆடம்பரத்தைச்சொல்லவில்லை.
அது ஸ்ரீபுரம், அக்ஷர்தாம், முதலான பிரும்மாண்ட கோயில்கள் இன்றைய இந்து மத நியோ- சொசைடியின் ஆன்மீக வெளிப்பாடுகள்.
நன்றி
ஜயராமன்
” அது ஸ்ரீபுரம், அக்ஷர்தாம், முதலான பிரும்மாண்ட கோயில்கள் இன்றைய இந்து மத நியோ- சொசைடியின் ஆன்மீக வெளிப்பாடுகள்.”
மன்னிக்கவும், நான் முரண்படுகிறேன்.
இவை ஆன்மீகத்தின் வெளிப்பாடுகள் அல்ல !
ஆர்ப்பாட்டத்தின், ஆணவத்தின், வியாபாரத்தின் வெளிப்பாடுகள்.
ராஜா ஐயா,
/// இன்றைய இந்து மத நியோ- சொசைடியின் ஆன்மீக வெளிப்பாடுகள்.” ////
நான் சொல்ல வந்ததை சரியாக நான் விளக்கவில்லை போலும்!!
இன்றைய நியோ-சொசைடியின் “ஆன்மீகம்” இதுதான். ஒரு க்ளினிகல் சுத்தமும், ஆடம்பரமான ஒரு பகட்டும், அதில் ஒரு நவீனமும், அதற்குள் ஒரு வசதி குறையாத ஒரு சொகுசும் தங்களின் ஆன்மீக பரிமாணங்களாக இவர்கள் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கே இது “ஆன்மீக” வெளிப்பாடுகள். இதையே நான் சொல்லியிருக்கிறேன். நீங்களும் அதைத்தான் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி
ஜயராமன்
உலகத்து நாயகியே, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
துணிவெளுக்க மண்ணுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை, – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுக்கொ ரெல்லையில்லாய், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம், – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கவிஞனின் வாக்குப் பொய்ப்பதில்லை என்பார்கள். பாரதி மிகப்பெரும் கவிஞன் ஆயிற்றே, அவன் வாக்குப் பொய்த்துப் போகலாமோ? `அவன் வாக்கைப் பொய்யாக்கக்கூடாது’ என்னும் நல்லெண்ணத்தால் அவன் `என்ன சொன்னானோ’ அப்படியே நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
பிணிகளுக்கு மாற்றுண்டு; நம் பேதைமைக்கு மாற்றுண்டோ?
நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய மெய்யாசிரியர்கள் அருளிச்செய்தனவற்றை இன்று எத்தனை பேர் எண்ணிப்பார்க்கிறார்கள்?
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.
– திருமூலர்
ஒரே வரியில் சொல்கிறேன்
“இங்கே ‘தேவி’ இல்லை; ‘தங்கம்’ தான் இருக்கிறது”.
மனிதனின் மனம் எதையாவது புதிதாக பார்க்க ஆசைபட்டுகொண்டிருப்பது இயல்பு. அந்த ஆசை எழுந்தவுடன் இந்தக் கட்டுரையாளர் அந்தக் கோயிலை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அங்கு சென்று அதை பார்த்துவிட்டு தன் அனுபவங்களை எழுதியுள்ளார். அவர் மனதில் ஏற்கனவே கோயில் என்றால் இப்படி இருக்கவேண்டும் இப்படி இருந்தால்தான் அது கோயில் என்று ஒரு தீர்மானிக்கப்பட்ட முடிவுடன் அங்கு சென்றுள்ளார், ஆனால் அந்த இடத்தில அவர் எதிர்பார்த்தபடி நிலைமை இல்லை என்றவுடன் அவர் மனம் அந்த இடத்தைப் பற்றி வேறுவிதமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.
’விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஆனந்தம் பரப்ரம்மேதி யோநி’ என்று அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த இறைவனோ நம் மனத்திற்குள் அல்லவோ அமர்ந்திருக்கின்றான். அவனை அங்கே தேடுவதை விட்டுவிட்டு நாம் அவனை வெளியிலேயே வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறோம்
அதனால்தான் நாம் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு சென்றும் அங்கிருக்கும் மூர்ர்த்திகளை தரிசனம் செய்தும் விழிப்புணர்வு பெறாமல் தவிக்கின்றோம்.
அதனால்தான் பகவத் கீதையில் கண்ணன் மனிதனின் எல்லாத் துன்பத்திற்கும் ஆசைதான் அடிப்படை. என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில் அதே ஆசையை அவன்மீது திருப்பி விட்டு விட்டால் அவன் நம்மை ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்க காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உண்மை பக்தர்கள் நன்கு அறிவார்கள்.
இந்து மதத்தில் புறக்கோயில்களும் உண்டு, அகக்கோயில்களும் உண்டு. இரண்டிலும் இறைவன் வந்து அருள்பாலிப்பது உண்மை. உதாரணம், பூசலார் தன் உள்ளத்தில் கட்டிய கோயிலுக்கு முதலில் அருள் செய்தது. அர்ஜுனன் செய்த புற பூஜையை விட பீமசேனன் செய்த அகப்பூசையை சிவபெருமான் உலகிற்கு எடுத்து காட்டியது.
இந்து மதத்திற்கு இரண்டும் தேவை. அவரவர் மன முதிர்ச்சிக்கு ஏற்ப இறை வழிபாடுகளைச் செய்ய இந்து மதத்தில்தான் சுதந்திரம் உள்ளது.
திரு.ராஜா அவர்களுக்கு-
இந்துக்களை திருடர்கள் என்று அழைத்தவர் எப்படி ஸ்ரிபுரத்திற்கு வந்தார்?
அம்மா அழைத்தால் அவர் எங்கும் வருவார். அது எதுவாக இருந்தாலும்.
எப்படி.?
அவருக்கு தாய்தான் தெய்வம் அவர் வீட்டில் பார்த்தால் அவர் தாயின் சிலை
வைக்கபட்டிருக்கும்.
அதனால்தான் நாராயணி அம்மா, பங்காருஅடிகளார் அம்மா, மாதாஅமிர்தனந்தமயீ ,சாயீ அம்மா போன்றவர்கள் அழைத்தால் மட்டும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தாய் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்துவார்.
தமிழ் நாட்டில் உள்ள இந்துக்கள் தங்களை திருடர்கள் என்று அழைக்கபட்டாலும் அவர்கள் வணங்கும் கிருஷ்ணனும் வெண்ணை திருடியவன், சிவபெருமான் உள்ளம் கவர் கள்வன் என்றும் அதனால் தங்களை திருடன் என்று அழைப்பதில் தவறேதும் இல்லை என்று கருதி அவர் கூறுவதை பொருட்படுத்தாமல் வோட்டுகளை சிந்தாமல் சிதறாமல் திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி அளித்து அவர்களை குஷிபடுத்துவார்கள்.
அவரும் தேர்தல் நேரத்தில் இந்துக்கள் போடும் வோட்டுக்களை மட்டும் சிந்தாமல் சிதறாமல் பெற்றுக்கொள்வார்.
ஆட்சிக்கு வந்த பிறகு ராமன் யார் என்றும், அவன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் படித்தான் என்றும் கேள்வி கேட்பார்?
அதற்கும் இந்துக்கள் காதில் விழாதமாதிரி இருப்பார்கள்
இதுதான் இந்துக்களின் லட்ஷனம்
எனவே அவர்களை நம்பி நீங்கள் இதுபோன்ற விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.