ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றோம்.

மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.

நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் தேசியத் திருநாள்.

விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வசக்திகளின் அருளால் வெற்றிநடை போடும் என்பது நம் பாரம்பரியம். வெளிவேஷத்திற்கு இந்து மதத்தைக் கேலி செய்யும், இந்த உன்னதத் திருவிழாவிற்கு மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதைக் கூட தங்கள் மதச்சார்பின்மைக்கு இழுக்காக நினைக்கும் போலி அரசியல்வாதிகள் கூட இத்தகைய நம்பிக்கைகளைத் தங்கள் தனி வாழ்வில் கடைப்பிடிப்பதைப் பார்த்து வருகின்றோம். இத்தகைய போலித் தனங்கள் அகன்று பெருமிதத்துடன் தங்கள் மதத்தையும், பாரம்பரியத்தையும் போற்றும் நல்ல புத்தியை அன்னை பராசக்தி இவர்களுக்கு அளிக்கட்டும்.

ஓம் சக்தி!

தாயே, துர்க்கையே! கடத்தற்கரிய துயரத்தில் உன்னை நினைத்தால், நீ எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்குகிறாய். இன்பத்தில் நினனத்தால், உலகனைத்திற்கும் நன்மை தரும் மதியை நல்குகிறாய். ஏழ்மையையும், துன்பத்தையும், பயத்தையும் போக்குபவளே, எல்லோர்க்கும் கருணை புரிய எப்போதும் உருகும் நெஞ்சுடையவர் உன்னைத் தவிர யார் உளர்?

– தேவி மகாத்மியம் 4.17

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சக்தியாகவும், வேட்கையாகவும், சாந்தி வடிவிலும், சிரத்தையாகவும், தாய்மையாகவும், கருணையாகவும் உறைகிறாளோ அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

– தேவி மகாத்மியம் 5.38-45

தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.

– தேவி மகாத்மியம் 4.26

எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே (ஸர்வ மங்கல மாங்கல்யே), எல்லா நன்மைகளையும் அளிக்கும் சிவே! அனைத்து நல்லாசைகளையும் நிறைவேற்றுபவளே, சரணடைதற்குரியவளே, முக்கண்ணியே, நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

– தேவி மகாத்மியம் 11.10

அனைத்தின் வடிவாகவும், அனைத்தையும் ஆள்பவளாகவும், அனைத்து சக்திகளாகவும் விளங்கும் தேவி, அனைத்து விதமான பயங்கரங்களிலிருந்தும் எங்களைக் காப்பாய். துர்க்கா தேவி, உனக்கு நமஸ்காரம்.

– தேவி மகாத்மியம் 11.24

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே.

– அபிராமி அந்தாதி

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,
தரணி மீதறி வாகிய தெய்வம்.

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.

– மகாகவி பாரதி (“வெள்ளைத் தாமரை” பாடலில்)

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டி னேனுக் கருளினன் காளி,
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாரு மானுட வாயினும் அ•தைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறு மாறே

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.

– மகாகவி பாரதி

அனைவருக்கும் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

4 Replies to “ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!”

  1. இலண்டன் இந்தியா விடுதியில் அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது.

    1909ல் தசரா பண்டிகையைத் “தேசிய விழாவாக” இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர்.

  2. Thank you for the excellent article and the pictures! May our Mother Durga shower her blessings on you for all your efforts!
    Jai Hind
    Ramji

  3. இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலகத்திற்கே வெற்றியை அன்பின் வழியான வெற்றியை அன்னை தந்தருள பிரார்த்திப்போம்!
    விஜய தசமி திருநாள் வாழ்த்துக்களுடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *