ஒரிஸாவில் கிறிஸ்தவ மிஷனரிகளோடு கைகோர்த்த நாக்ஸலைட்டுகள் லக்ஷ்மணானந்த சுவாமிகளைக் கொடூரமாக கொலை செய்ததால் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அது குறித்து எழுதப்படும் பல கட்டுரைகளில் ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது: வனவாசிகள் இந்துக்கள் இல்லை என்பதே அது. வனவாசிகளின் தொழுகைமுறை என்பது வேறு, இந்துக்களின் தொழுகைமுறை என்பது வேறு என்றும், அதனால் தன்னை இந்துவாக ஒரு வனவாசி கருதும்போது அவன் மதம் மாறியதாகக் கருதப்படவேண்டும் என்றும் அறிவுஜீவிகள், ஊடகங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. ஒரு விதத்தில் இந்தப் பார்வை ஆரிய-திராவிட இனவாதத்தின் நீட்சி எனலாம்.
பாரத சமுதாயத்தின் இயல்பான பன்மைத் தன்மையை இப்பார்வைச் சட்டகத்தின் மூலம் பல சமூகத் துறை ஆராய்ச்சியாளர்கள் ‘விளக்க’ முற்படுகின்றனர். குறிப்பாக வனவாசி சமுதாயங்களின் நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், தொன்மங்கள் ஆகியவற்றை பாரதத்தின் பொதுவான பண்பாட்டு நீரோட்டத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பார்வைகள் இந்த பார்வைச் சட்டகத்தின் மூலம் ஏற்கப்பட்ட உண்மைகள் ஆகிவிட்டன. குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய அரசின் போது நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்புகளில் இம்முறை சமுதாய ஒற்றுமையைக் குலைக்கும் புதிய சமுதாய அடையாளங்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆரியர்-ஆரியரல்லாதவர் என்னும் சட்டகத்தின் அடிப்படையில் எண்ணற்ற கள-ஆய்வுகள் பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளாலும் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களாலும் செய்யப்பட்டது. இதுவே தொடர்ந்து வந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தது. விடுதலைக்குப் பின்னரும் இன்றளவும் இதே நிலை–ஆய்வாளர்களின் அறிவுநிலை சோம்பல் முதல் அரசியல் காரணங்கள் வரை–எனப் பலவித காரணங்களால் தொடர்கிறது.
வரலாற்று ரீதியாக பாரதத்தின் கலாசாரத்தை ‘பிராம்மணீய’ மேல் சாதி கலாசாரமாகவும் வனவாசிகளின் கலாசாரங்கள் அனைத்துமே இந்த பிராம்மணீய மேல்சாதி கலாசாரத் திணிப்பால் ஒடுக்கப்பட்டதாகவுமான பார்வைக்கு முக்கியப் பங்களித்தவர் மாக்ஸ்முல்லர். ஆனால் வனவாசிப் பண்பாடு என்பது அவ்வாறு ஒடுக்கப்பட்டவை அல்ல என்பதும் அவை பாரத கலாசாரத்துக்கு இடையறாத பங்களித்தவாறு செயல்பட்டுவருவதும் இந்தச் சட்டகத்துக்கு அப்பால் விரிந்து நோக்கும் திறனுடையவர்களுக்கு எளிதாகப் புரியும்.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மெக்கிம் மாரியோட் ஒரு மானுடவியல் பேராசிரியர். இவரது ஆராய்ச்சி பாரதம் மற்றும் இதர தெற்காசியா, ஜப்பான் ஆகியவற்றின் கிராமங்கள், கிராமத்தார் வாழ்க்கை மற்றும் நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றை களமாகக் கொண்டது. மாரியோட் பாரத ஆன்மீக வாழ்க்கை என்பதன் நிறமாலையானது செவ்விய (classical) மற்றும் வனவாசி ஆன்மீகப் பண்புகளின் பிரித்தறியமுடியாத இணையாடல்களால் காலங்கள் தோறும் இடையறாது உருவாக்கப்படுவது என்பதனைக் காண்கிறார். மேற்கத்திய குறுகிய மாதிரிகளால் அவை அளவிட்டுக் கூறுபடுத்த முடியாதவை அவை என்பதனை வலியுறுத்துகிறார். ஸ்ரீ அரவிந்தர், மகாத்மா காந்தி ஆகிய ஆன்மீக தேசியவாதிகளும் வீரியர் எல்வின், சரத் சந்திர ராய், ஜி.எஸ். குர்யே, மற்றும் கே. சுரேஷ் சிங் போன்ற பாரத மானுடவியலாளர்களும் வலியுறுத்திய ஒரு தேசிய யதார்த்தமே இது.
இதில் வீரியர் எல்வினைக் குறிப்பிட்டு கூற வேண்டும். ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”
மூரியா வனவாசிகள் குறித்து எழுதும்போது எல்வின் கூறுகிறார்: “முரியா மதம் என்பது இந்து மதக் குடும்பத்தில் ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. குறிப்பாக சைவத் தொடர்புடையது.” மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது வனவாசி வழிபாட்டு முறைகளும் ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்து மதம் என்றே கணக்கெடுக்கப் படவேண்டுமென மிகத் தீவிரமாக ஃபாதர் எல்வின் வலியுறுத்தினார். 1940களில் கத்தோலிக்க மிஷினரி முயற்சிகளுக்கு எதிராக மிகக்கடுமையான இயக்கத்தை எல்வின் தொடங்கினார். வனவாசி சமூகங்களிடையில் கிறிஸ்தவ மிஷினரிகளின் செயல்பாடுகள் மூன்றுவிதமான பாதகங்களைக் கொண்டு வருவதாக எல்வின் கருதினார்: 1. பொருளாதாரச் சுரண்டல்; 2. மனோதத்துவ ரீதியிலான சுரண்டல்; 3. சமுதாயச் சுரண்டல், குறிப்பாக அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் கைப்பாவையாக ஒருவித இனவாதத்தை உருவாக்குதல். பொருளாதார கடன்கள் கொடுத்து மதம் மாறினால் வட்டி கொடுக்க வேண்டாமெனக் கூறுவதன் மூலமும் வேலைகளை முதலில் கொடுத்து பின்னர் மதம் மாறாவிட்டால் வேலைக்கு உத்தரவாதம் இல்லை என மன அழுத்தம் கொடுப்பதன் மூலம் மதம் மாற்றுவதையும் எல்வின் ஆவணப்படுத்தினார். இதுபோக அன்னிய மதுபான வகைகளும் மதமாற்றத்துக்கு உதவுவதாக எல்வின் குற்றம் சாட்டினார். மதம் மாறும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறி கத்தோலிக்க பாதிரியார்கள் ஏதுமறியா வனவாசி இளைஞர்களை மதம் மாற்றியதையும் எல்வின் குறிப்பிடுகிறார்.
காந்தியவாதியான தக்கர் பாபாவும் எல்வினும் வனவாசிகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தின் பாரதீயத் தன்மையைக் காப்பாற்ற மதமாற்றத்தை எதிர்க்க வேண்டிய அவசியத்தைக் கூறி, கடுமையாக பிரசாரம் செய்தார்கள். மண்ட்லா பகுதியில் மதமாற்ற அமைப்புகளைத் தடை செய்ய எல்வின் செய்த பிரசாரத்தில் இந்தியாவின் அனைத்து இந்து சமுதாயமும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துப் போராடவேண்டும் என எல்வின் பிரகடனம் செய்தார். மதச்சார்பற்ற இந்திய அரசின் வனவாசிக்கோட்பாடு நேரு-எல்வின் கோட்பாடு என அழைக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு வீரியர் எல்வினையே சுதந்திர இந்தியா வனவாசி சமூகங்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவின் தன்மை குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கச் செய்தார். எனவே வனவாசிகள் இந்துக்கள் என்பதே மதச்சார்பற்ற இந்திய அரசின் நிலைப்பாடும் ஆகும்.
பழங்குடி/வனவாசி vs சாதி இந்துக்கள் என வேறுபாடாகக் காட்டப்படும் பாரம்பரியங்கள் பல இடங்களில் பிரித்தறிய இயலாத அளவில் ஒன்றி உருவாகியுள்ளன. உதாரணமாக, பூரி ஜகன்னாதர் கோவில் உருவாக்கம் குறித்த ஐதீகக் கதை இதை தெளிவாகக் காட்டுகிறது. பன்மைப் பாரம்பரியங்களை எமது-மற்றவரது என ஒன்றை ஒன்று ஒழித்தோ அல்லது ஒன்றினை ஒன்று அடக்கியோ உருவாக்கப்பட்டது அல்ல பூரி ஜகன்னாதர் கோவில். வனவாசி குடும்ப தெய்வமான நீலமாதவரை மதித்து ஏற்று அதற்கான மிகப்பெரும் கோவிலை அரசன் அமைத்துக் கொடுக்கும் அந்த ஐதீக கதையில் மேற்கத்திய பொதுப்பிரக்ஞையில் காட்டப்படுவது போல வனவாசி நாகரிகமற்ற காட்டுமிராண்டியாகக் காட்டப்படாமல் மிகுந்த பண்பாடும் ஆன்மீக மேன்மையும் உடையவராக, அரசனுக்குச் சமமான அந்தஸ்தினை கொண்டவராகக் காட்டப்படுவது நமக்கு இந்த உண்மையை இன்னமும் தெளிவாக்குகிறது. குருக்பா, லம்பாடி, ஏனாதி, ஏருகுலா மற்றும் செஞ்சு போன்ற வனவாசி சமுதாயங்களுக்கும் திருப்பதி வெங்கடேஸ்வரருக்குமான உறவு, சபரிமலை அய்யப்பசாமி, ஜம்முவின் வைணவி தேவி ஆகிய கோவில்களின் வனஜாதி உறவுகள் இந்தத் தொடர்ச்சியை வலியுறுத்தி நிற்கின்றன. கந்தோபா மற்றொரு முக்கியமான வனவாசி சமுதாய தெய்வமாகும். அதைப் போலவே சர்ப்ப வழிபாடு, தேவியர் வழிபாடு ஆகியவையும் நமது வனவாசி பாரம்பரியத்தின் பரிமாணங்களே ஆகும்.
தமிழ்நாட்டில் குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கியங்களிலும் குறவன், குறத்தி சமுதாயத்தினர் பொது-சமுதாயத்தின் ஒரு அங்கமாக -அவர்களுக்கே உரிய பண்பாட்டுச் செழுமையுடன் விளங்குகின்றனரே அன்றி ஒடுக்கப்பட்டவராகவோ ஒதுக்கப் பட்டவராகவோ விளங்கிடவில்லை. பல வனவாசி சமுதாயங்களுக்கு பாரத சமுதாய அமைப்பில் வனங்களில் தனித்தன்மைகொண்ட உரிமைகள் இருந்ததையும் வனவாசி சமுதாயங்கள் வனங்களின் ஆர்வலராகவும் அதே நேரத்தில் வனங்களின் வளத்தினை வளங்குன்றாத் தன்மையுடன் பயன்படுத்தி வந்தமையும் சமுதாயத்தின் பிற சமூகத்தினர் வனவாசி சமுதாயங்களின் இந்த உரிமையை மதித்து நடந்தமையும் பாரத இலக்கியங்களிலும் பண்பாட்டிலும் நிலையாக இடம் பெற்றுள்ளதோர் அம்சமாகும்.
ஆனால் பிரிட்டிஷார் வந்த பிறகே வனவாசிச் சமுதாயங்களுக்கு வனத்தின் மீதான உறவுகள் சிதைக்கப்பட்டன. முக்கியமாக 1871ல் பல நூற்றுக்கணக்கான வனவாசி சமுதாயங்களை பிரிட்டிஷ் அரசு தனது ‘குற்றவாளி இனங்கள்’ எனும் சட்டத்தின் மூலம் அந்தச் சமுதாயங்களின் வாழ்வாதாரமான வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டித்தது. இதற்காக அது பெரும் வன்முறையைப் பயன்படுத்தியது. பல வனவாசிச் சமுதாய எழுச்சிகள் கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டன. இந்நிலையில் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் ஒதுக்கப்படுதலுக்கும் மேலும் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கும் ஆளானார்கள்.
இன்றைய சாதிய அமைப்புக்குள் இருக்கும் சமுதாயத்திற்கும் வனவாசிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் முந்தையவர்கள் ஆரிய இனத்தவர் என்றும் பிந்தையவர் மண்ணின் மைந்தர்கள் (aborigines) என்றும் கூறும் கருத்தாக்கங்கள் உள்நோக்கத்துடன் ஊடகங்களிலும் அரசியல்வாதிகளாலும் பரப்பப்படும் நிலையில் மரபணு ஆராய்ச்சிகள் உண்மைநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. மரபணு ஆராய்ச்சிகள் வனவாசி சமுதாயம் பாரதத்தின் சமுதாயத்தில் ஒரு அங்கமேயன்றி வேறல்ல என்பதனை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி உலகப்புகழ்பெற்ற மானுட மரபணுவியல் ஆராய்ச்சியாளரான லூகா கவல்லி ஸ்கப்ரோஸா என்பவரால் இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களான சங்கமித்திர சென்குப்தா, பார்த்தா மஜும்தார் ஆகியோருடன் இணைந்து நடத்தியதாகும். அந்த ஆராய்ச்சி முடிவு மத்திய ஆசியாவிலிருந்து ‘ஆரிய’ படையெடுப்பு நடந்திருக்கலாம் என்பதை மறுக்கிறது. கிவிசல்ட், சௌபே ஆகியோர் நடத்திய மரபணு ஆராய்ச்சிகளும் சாதிய சமுதாயங்கள் என கருதப்படும் மக்களுக்கும் வனவாசி சமுதாயங்களுக்குமான மரபணு வேறுபாடுகள் இனரீதியிலானவை அல்ல என்பதனைக் காட்டுகின்றன. ஆர்1ஏ1 (R1A1) என்னும் மரபணுத்தொடரின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் அந்தணர்களாக இன்று கருதப்படும் சாதியினருக்கும் வனவாசிகளுக்குமிடையே ஆழ்ந்த மரபணுத் தொடர்ச்சி இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நூல்கள் மற்றும் கட்டுரைகள்
1.Sandhya Jain, Adi Deo Arya Devata: A Panoramic View of Tribal-Hindu Cultural Interface/Sandhya Jain. New Delhi, Rupa and Co., 2004, x, 335 p., plates,. ISBN 81-291-0522-5.
2. Peopling of South Asia: investigating the caste-tribe continuum in India, Chaubey G, Metspalu M, Kivisild T, Villems R., Department of Evolutionary Biology, Institute of Molecular and Cell Biology, University of Tartu and Estonian Biocentre, Tartu, Estonia, Bioessays. 2006 Dec 22;29 (1):91-100
3. Nandini Sundar, Verrier Elwin and the 1940s missionary debate in central India,Between Ethnography and Fiction: Verrier Elwin and the Tribal Question in India, Tanka Bahadur Subba, Sujit Som, K. C. Baral, North Eastern Hill University Dept. of Anthropology
4. The Autochthonous Origin and a Tribal Link of Indian Brahmins: Evaluation Through Molecular Genetic Markers, The American Society of Human Genetics, 57th Annual Meeting Abstract Book , 2007.
கட்டுரைக்கு நன்றிகள் !
பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியப்படி “ஹிந்து” என்ற வார்த்தை “சிந்து நதிக்கு இந்த பக்கம் வாழ்பவர்கள்” என்றே பொருள் படும். ஆகவே அவர்கள் வன வாசியாக இருந்தாலும் சரி..நகர வாசி ஆனாலும் சரி, இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்களே !
சிந்து நதியின் இந்த பக்கத்தில் உருவாகி பெருவாரியாக பின்பற்றப்படும் அத்தனையும் ஹிந்து கலாச்சாரத்தின் அங்கமே ! அதனால் “வன வாசிகள் ஹிந்துக்கள் அல்ல” என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
ஒரு வேண்டுகோள். இன்னும் கொஞ்சம் எளியத் தமிழில் எழுதலாமே ? “நிறமாலை”, “இணையாடல்”, “வீரியர்” போன்ற வார்த்தைகள் என்னை போன்ற எளியவர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கிறது..
தமிழிலும் ஒரு அருண் ஷௌரி என்று பெருமை கொள்ளத்தக்க வகையில் திரு.அரவிந்தன் நீலகண்டன் விளங்குகிறார். ஆழ்ந்த உண்மைகள், ஆராய்ந்த தெளிவு.ஹிந்துத்வத்தின் பக்கம் இன்னுமொரு சிந்தனையாளர். இவர் வெகுஜன ஊடகங்களில் வெளிப்பட வேண்டும். அதற்கு, இயன்றவர்கள் உதவ வேண்டும்.
கண்ணன்,
கும்பகோணம்.
THiru Aravindan’s well researched article is an eye opener for many who believe anything “intellectuals” say.
Thank you for the well researched , well presented article.