ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான். அவருடைய கிருதிகளை பாடம் செய்வதும் பாடுவதும் மிகக் கடினம். சமஸ்கிருதத்தில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் நெருடலான சொல்லமைப்பு கொண்டவையாக இருப்பதும் இதன் காரணம்.
நவாவர்ண கிருதிகளில் ஸ்ரீ ராகத்தில் அமைந்த ஒன்பதாவது கிருதி (மங்கள கிருதி) மிகவும் விசேஷம் வாய்ந்தது. நம்மூர் வித்வான்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் வீடியோவில் Wesleyan University என்னும் அயல்நாட்டுக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இப்பாடலை எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர் பாருங்கள்! எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷணத்தைப் பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண். என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, அட்சரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டுவிட்டு நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள், இது சிறந்தது என்பதில்.
ராகம்: ஸ்ரீ. தாளம்: கண்ட ஏகம்
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹிமாம் லலிதே
ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே
சரணம்:
ராகா சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணி ஸகி ராஜயோக ஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்தவஸங்கரி
ஏகாக்ஷரி புவனேஸ்வரி ஈஸப்ரியகரி s ஸ்ரீ -சுககரி
ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி!!
தமிழாக்கம்
(திருவாரூர் கமலாலயக்கரையில் கோயில் கொண்டிருக்கும்) கமலாம்பிகையே, சிவ பத்தினியே, லக்ஷ்மியின் கணவனான விஷ்ணுவினால் வணங்கப்படுபவளே. வெண்மை, கருமை ஆகிய இரண்டு நிறங்களுக்கு உரிய கௌரி துர்கையாய் காட்சி தருபவளே. சிவபிரானோடு இரண்டறக் கலந்தவளே. லலிதா தேவியே. ஸ்ரீ கமலாம்பிகையே. மங்களங்களை அருள்பவளே. என்னைக் காப்பற்றுவாயாக.
பௌர்ணமி நிலவைப் போன்ற முகத்தை உடையவளே. வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே. லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் உனக்குத் தோழியராக விளங்கும் பெருமை பெற்றவளே. ராஜ யோகம் எனும் உன்னத சுகத்தில் ஆழ்ந்து திளைப்பவளே. சாகம்பரீ என அழைக்கப்படும் வன துர்கை அன்னையே. மெல்லிய இடையைக் கொண்டவளே. சந்திரனின் இளம்பிறையை ஆபரணமாகத் தரித்தவளே. சங்கரன், குழந்தை முருகன், மற்றும் உனது அடியார்களுக்கு வசப்படுபவளே. ஹ்ரீம் என்னும் ஓரெழுத்தில் உறைபவளே. உலகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவியே. கயிலைநாதனுக்குப் பிரியமானவளே. சகல ஐஸ்வர்யங்களையும் மட்டில்லா சுகத்தையும் அருளும்படிச் செய்பவளே. ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே ஸ்ரீ கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று தாயே.
இதே பாடலைத் திரு டி.கே. ஜெயராமனின் சிஷ்யர் பாலாஜி சங்கர் தன் கணீரென்ற குரலில் நன்றாகப் பாடியுள்ளார். ஏனோ இந்த இளம் கலைஞர் இளம் வயதில் நல்ல புகழின் உச்சியில் இருக்கும்போதே பாடுவதை நிறுத்திவிட்டார். என்ன காரணமோ?
திரு பாலாஜி சங்கர் அவர்களின் குரலில் இங்கே கேளுங்கள்.
அற்புதமான இந்த பாடலை இந்த மார்கழி காலை அலுவலக ஆரம்பத்தில் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி. இந்த அமெரிக்க (தானே!) மாணவர்களின் திறமை வியக்க வைக்கிறது.. நம் கர்நாடக சங்கீதம் என்னும் பொக்கிழம் காலத்தால் அழிக்க முடியாதது, இனம், மொழி இவற்றைக் கடந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
நன்றி
ஜயராமன்
‘ஸ்ரீ கமலாம்பிகே’ கீர்த்தனையின் பொருளைச் சொல்லி, அதைப் பாடும் மாணவர்களையும் போற்றும் மிக நல்ல கட்டுரை. ராமஸ்வாமி சந்திரசேகரனுக்கு நன்றி. இதைப் போன்று கீர்த்தனைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுத வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
சேதுபதி
நமது இந்திய பாரம்பரிய சொத்து பிற தேசத்தில் மரியாதையாய் நடத்தப்படும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. நாம்தான் நமது பாரம்பரியத்தை மேல்நாட்டு மோகத்திலும் நம்மைப்பற்றிய குறைவான மதிப்பீடுகளிலும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். கட்டுரை எழுதிய ராமஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கு நன்றி .
ஸ்ரீதர்
அனைவருக்கும் நன்றி. புதிதாக காலெடுத்து வைக்கும் என்னை ஆதரிப்பதற்கு மிகவும் நன்றி.கட்டுரை தவறாக இருந்தால் முழுப்பொறுப்பும் என்னைச் சார்ந்தது. நன்றாக இருந்தால் அது என் குரு மறைந்த திரு. சுப்புடு சாருக்கு காணிக்கை.