மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)

horizonஅச்சமும் சோர்வும் அடிமனத்தில் தங்கிநின்றே
உச்சத்தில் பேய்பிடித்து ஓட்டுகையில் – துச்சமென
நல்ல நினைவூட்டும் நட்புக் கரங்களுக்குள்
வெல்லுவதோ மண்ணிலொரு விண். (1)

காய்ந்த சருகெனினும் கண்ணில் ஒளியேற்றித்
தோய்ந்திருக்கும் அன்பில் தொலைப்பித்துத் – தாய்மையெனும்
ஊற்றையென் உள்ளத்துள் ஊட்டிக் குளிர்செய்ய
வீற்றிருக்கும் மண்ணிலொரு விண். (2)

சாய்ந்திருக்கத் தோள்கேட்டால் சட்டென்று தன்மடியில்
ஓய்ந்திருக்கச் செய்தென் உணர்வுக்குள் – வேய்ந்திருக்கும்
அன்பொளியில் ஆழ்த்துகிற என்துணையின் கண்வெளியில்
மின்னுவது மண்ணிலொரு விண். (3)

‘பார்த்தப்பா’ என்று பதற நடைபழகி,
‘பார்த்தப்பா’ என்றின்று பாய்ந்துவந்து – சேர்த்தணைத்து
ஆளுகிற மைந்தனிவன் அன்புக் கரமிரண்டில்
மீளுவது மண்ணிலொரு விண். (4)

ஒட்டி உலர்ந்துவிழி ஓய்ந்து தடுமாறி
பட்டினிநான் என்று பரிதவிக்க – முட்டமுட்ட
இட்டதொரு வேளைதான் என்றாலும் உள்நிறைந்து
முட்டுவது மண்ணிலொரு விண். (5)

அன்றென்னைக் கொல்வதுபோல் ஆயிரந்தான் செய்தாலும்
இன்றுவந்(து)ஓர் வார்த்தையினால் ஏலென்றால் – கன்றுமுட்டும்
ஆவினைப்போல் மெய்யுருகி ஆனந்தப் பால்வார்த்து
மேவுவதோ, மண்ணிலொரு விண். (6)

எப்படிப் பாடினரோ என்றுமனம் விம்மலுற
செப்பிடு வித்தை செறிகின்ற – அற்புதத்து
வண்ணத்தில் ஓசை வனைந்தசைய தீயூட்டும்
எண்ணத்தில் மண்ணிலொரு விண். (7)

ஒற்றை வரிக்குள் ஒளிவெள்ளம் பாய்ச்சுகிற
கற்றநயம் கொண்ட கவிதைக்குள் – பற்றிமனம்
ஆழ்ந்திருக்கும் போதெல்லாம் ஆழ உளநனைய
வாழ்ந்திருக்கும் மண்ணிலொரு விண். (8)

தொண்டென்னும் இன்பத் துளியமுதை மன்னுயிர்க்கு
விண்டளித்து, கட்டை வேமளவும் – மொண்டெடுத்துச்
சிந்தையெலாம் நேசம் செழித்திருந்தால் என்றுமொரு
விந்தையிலை மண்ணெல்லாம் விண். (9)

கொள்வதிலும் உள்ளம் கொடுப்பதிலும் வாழ்நாளில்
அள்ளுவரை எல்லாமும் அள்ளவைத்துத் – தள்ளாமல்
ஆண்டவனே நீயே அருகிருக்க என்னஅட
வேண்டாம்போ நீகாட்டும் விண். (10)

4 Replies to “மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)”

  1. //பார்த்தப்பா’ என்று பதற நடைபழகி,
    ‘பார்த்தப்பா’ என்றின்று பாய்ந்துவந்து – சேர்த்தணைத்து
    ஆளுகிற மைந்தனிவன் அன்புக் கரமிரண்டில்
    மீளுவது மண்ணிலொரு விண்//

    அருமை ஹரிகி அய்யா.

  2. சொன்னசொல் நெஞ்சைத் தொடும்போதும் தொட்டபொருள்
    நின்று நடையில் நிமிர்கையிலும் ‍ கன்றைப்போல்
    அண்ணாந்து கண்ணேங்கும் அன்பு மிளிர்கையிலும்
    மண்ணெங்கும் விண்ணின் மடி!

    ரமணன்

  3. மண்ணிலே விண்ணா? மனதில் அமைதியா?
    கண்ணில் மருவும் கனவுகளா? வண்ணங்கள்
    இல்லாத வானத்தை இந்தக்கண் காணுங்கால்
    பொல்லாத விண்மண்ணில் பூ!

    ரமணன்

  4. என்ஹரியின் வார்த்தை இதயக் கமலத்தேன்!
    பொன்னவியும் அந்திப் புதுலஹரி! பின்னிரவின்
    கண்ணீர்ச் சிறுதுளி! காணிக்கை! கைச்சோறு!
    விண்வந்து கூத்தாடும் மண்!

    ரமணன் ‍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *