டாவின்ஸியின் அறிவியல்: நூல் அறிமுகம்

capraப்ரிட்ஜாப் காப்ரா இந்தியர்களுக்கு நன்றாகவே அறிமுகமானவர். அவரது “இயற்பியலின் தாவோ” (Tao of Physics) ஒரு தலைமுறையினருக்கே பார்வை மாற்றத்தை கொண்டு வந்த நூல் எனலாம். அவர் அதில் அணுத்துகள் இயற்பியல் மற்றும் அதன் ஆதாரமான க்வாண்டம் இயற்பியல் கோட்பாடுகள் காட்டும் பிரபஞ்ச தரிசனத்துடன் இணைந்து நடராஜ தாண்டவத்தினை காட்டியது , நடராஜ தாண்டவத்தை ஒரு சக்திவாய்ந்த குறியீடாக மாற்றியது. தொடர்ந்து காப்ரா பல நூல்களை எழுதியுள்ளார். கார்ட்டீசிய தத்துவம் மற்றும் நியூட்டானிய இயற்பியல் மீது கட்டமைக்கப்பட்ட நமது பிரபஞ்ச தரிசனம், சமுதாய அமைப்புகள் மற்றும் பார்வைகள், உயிர் குறித்த நமது அறிதல் ஆகியவற்றின் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருபவர் காப்ரா. அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பால் க்வாண்டம் இயற்பியல் அடிப்படையிலான இயற்பியல் காட்டும் பிரபஞ்ச உண்மையை அடிப்படையாக கொண்டு ஒரு மாறுபட்ட மனமண்டலத்தை எழுப்பவும் முயற்சிப்பவர்.

The science of leonardoகாப்ராவின் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வந்தால் ஒரு விஷயம் புலப்படுகிறது. அது அவருடைய மனமண்டல விரிவாக்கமும் மாற்றங்களும். அவரது ‘இயற்பியலின் தாவோ’ ஒருவிதத்தில் மிகவும் நுண்ணிய ஒரு புள்ளியாக இருந்தது. மிகச்சிறந்த சறுகல்களுக்கு வழிவகுக்கும் ஒரு புள்ளி அது. காப்ராவின் நூலை அடியொற்றி அமைக்கப்பட்ட மைக்கேல் தால்போட்டின் நூலை படிப்பவர்களுக்கு அது புரியும். ஆனால் காப்ரா அத்தகைய எளிய கவர்ச்சியான சமன்பாடுகளுக்கு தன்னை கொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் எழுதிய நூல்களான Uncommon Wisdom, The Turning Point ஆகியவை தொடங்கி அண்மையில் அவர் எழுதிய The web of life The hidden connections ஆகியவை ஒரு தொடர்ந்த வளர்ச்சியை காட்டுகின்றன. இதுவே ஒரு சிந்தனையாளர் என்ற முறையில் காப்ராவின் வெற்றி. என்றுதான் சொல்ல வேண்டும். காப்ராவின் அண்மை நூல் “The science of Leonardo“.

லியனார்டோ டாவின்ஸி ஐரோப்பாவின் புத்தெழுச்சியின் காலகட்டத்தில் வாழ்ந்தவர். இக்காலகட்டம் ஒருவிதத்தில் ஐரோப்பா தனது கிறிஸ்தவத்துக்கு முந்தைய வேர்களை மீள்-கண்டதால் ஏற்பட்டது. ஆனால் ஐரோப்பாவின் சமுதாய கட்டமைப்பாக கிறிஸ்தவ ஸ்தாபன மதமே இருந்தது. அரிஸ்டாடிலையும் விவிலிய பிரபஞ்ச பார்வையையும் இணைத்தெழுந்ததோர் அனைத்ததிகார உலகம் அது. இவ்வுலகில் வாழ்ந்தார் லியனார்டோ டாவின்ஸி. லியனார்டோ தமது வாழ்க்கையில் எழுதியெடுத்த குறிப்புகள் வரைபடங்கள் ஆகியவற்றில் நமக்கு கிடைத்திருப்பது ஏறக்குறைய 6000 பக்கங்கள். இந்த பக்கங்களில் கிடைக்கும் விவரணங்கள், படங்கள், மேலும் டாவின்ஸியே உருவாக்கிய மிகபிரபல சித்திரங்கள் ஆகியவற்றிலிருந்து லியனர்டோவின் மனமண்டலத்தை – அவர் எந்த அறிவியக்கம் மற்றும் அழகியல் ஊடாக தம்மை சுற்றியிருந்த மானுட உலகை, இயற்கையை தரிசித்தார் என்பதனை விவரிக்கிறார் காப்ரா.

லியனார்டோவின் வாழ்க்கையை ஒரு மனிதராகவும் ஒரு அறிவியலாளராகவும் இந்நூல் காண்கிறது. அமைதிவாதியாக, போரின் வீண்தன்மையை உணர்ந்தவரான ஒரு கலைஞர் டாவின்ஸி. சமயம் தாண்டிய ஆன்மிக அறிஞர். ஓவியர். சிக்கலான அதிசயமான பொறியியல் கருவிகளை வடிவமைத்தவர். ஓரின சேர்க்கையாளர். சைவ உணவாளர். உயிர்வதையை வெறுத்தவர். சந்தைகளில் பறவைகளை காசு கொடுத்து வாங்கி அவற்றை விடுதலை செய்து மகிழ்பவர். தமது ஓவியங்களை குறியீட்டு செய்திகளாக மாற்றியவர். மோனாலிஸாவின் மர்மப்
புன்னகையின் பின்னால் அவர் புதைத்துவைத்துள்ள இரகசியங்கள் இன்றைக்கும் விவாதங்களை ஏற்படுத்துகிறது. இவை எல்லாவற்றுடனும் அவர் அறிவியலின் பிதாமகர் எனும் கோணத்தில் காண்கிறார் காப்ரா.

லியனார்டோ வின் காலத்தில் ஒரு அறிவுப்புலத்தை அறிவதென்பது அது குறித்து அதற்கு முன்பாக எழுதப்பட்ட அனைத்தையும் படிப்பது என்பதே. லியனார்டோ அதிலிருந்து மாறுபட்டார். அவர் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தார். தமது அனுபவ அறிவிலிருந்தே அவர் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்பவராக இருந்தார். டாவின்ஸி கலைக்காக இயற்கையை ஆழ்ந்து பார்த்து அனுபவித்தார். எந்த ஒரு பொருளை அவர் அவதானிப்பதாக இருந்தாலும் ஒரு கலைஞனின் கண்ணுடன் ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் உள்வாங்குபவராக இருந்தார். அவரது அறிவியல் அந்த கலைக்கான இயற்கை தரிசனத்தின் மூலமாக பெறப்பட்டது. இதன் விளைவாகவே நியூட்டன், பிரான்ஸிஸ் பேக்கன் ஆகியவர்களின் அறிவியல் கட்டமைப்புகளில் இருக்கும் இயற்கையிலிருந்து விலகிய, இயற்கையை அடிமைப்படுத்துகிற பார்வை டாவின்ஸியில் இல்லை என்பதனை காப்ரா சுட்டிக்காட்டுகிறார்.

இயற்கையின் பன்மைத்தன்மை, இயற்கையில் நாம் காணும் அசைவுகள்-ஓட்டங்கள் ஆகியவை லியனார்டோவை பெரிய அளவில் கவர்ந்தன. ஒவ்வொரு மரமும் ஒரே இனத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியாக இல்லை என்பதையும், ஒரே மரத்தில் ஒவ்வொரு கிளையும் கொப்பும் தன்னளவில் வேறுபாடுகளை கொண்டதாக இருப்பதையும் அவர் உன்னிப்பாக கவனித்தார். குறிப்பாக நீரின் பலவித சுழலோட்டங்களையும் இயற்கையில் காணப்படும் இதர ஓட்டங்களையும் அவர் இணைத்துப்பார்த்துள்ளதை நாம் அவரது குறிப்புகளில் உள்ள ஓவியங்களில் உணர முடிகிறது. உதாரணமாக ஒரு குறிப்போவியம் மானுட முடிக்குழலின் இயற்கை வளைவு சுழிவுகளையும் நீரோட்ட வளைவு சுழிவுகளையும் அருகருகே காட்டுகிறது.

ஓடும் நீரின் சுழல்களில் டாவின்ஸிக்கு இருந்த ஆர்வம் நீராதாரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு நகரங்களை அமைக்கும் திட்டமிடுதலை குறித்து அவரை சிந்திக்க வைத்தது. ஒரு நகரத்தினை வடிவமைக்கும் போது அந்த நகரம் எனும் கூட்டுயிரின் ஒரு பகுதியாகவே நதி நீரோட்டம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென அவர் கருதினார். ஆனால் டாவின்ஸியின் சிந்தனையோட்டம் அவர் வாழ்ந்த காலத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்கு பிறகே நகர வடிவமைப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது. டாவின்ஸியின் அறிவியல்
மென்மையான அறிவியல் என்கிறார் காப்ரா. birdieப்ரான்ஸிஸ் பேக்கனை போல இயற்கையை பிணைத்து அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் அறிவியல் அல்ல. உதாரணமாக அவரது பறக்கும்
இயந்திரம் பறவையின் உடல்பாகங்களை அப்படியே உள்வாங்கி வடிவமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் மனிதன் தானே பறவையாக மாறி பறக்கவேண்டும் எனும் கனவு வெளிப்படுகிறது என்கிறார் காப்ரா. லியனார்டோவின் குறிப்பேடுகளில் வரையப்பட்டுள்ள பல பறவை படங்களும் அவற்றின் இயக்க அழகை காட்டுவதாக அமைந்துள்ளன.

ஒரு கேள்வி எழும்புகிறது. லியனார்டோ தனது குறிப்பேடுகளை வெளியிடவேயில்லை. அப்படி அவர் வெளியிட்டிருந்தால் பின்னால் வந்த அறிவியலெழுச்சியின் பாதையை – நியூட்டானிய கார்ட்டீசிய பேக்கானிய பாதையை- அது எந்த அளவு மாற்றியமைத்திருக்கும்? நமக்கு இதற்கான விடை கிடைக்கப்போவதில்லை. ஆனால் இன்றைக்கு நவீன சூழலியல், உயிரியல், க்வாண்டம் இயற்பியல் இவையெல்லாம் காட்டும் பிரபஞ்ச தரிசனம் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்த உயிரோட்டம் கொண்ட உறவுகளால் உருவாகிய நெகிழ்ச்சியான ஆனால் உயிரோட்டமிக்க வரையறைகளால் ஆன புத்தாக்க இயல்பு கொண்டதோர் பிரபஞ்ச தரிசனம். இந்த தரிசனத்தை இத்தனை அறிவுப்புலங்களின் முன்னேற்றமும் ஏற்பட்டிராத அன்றே தரிசித்தவர் என்ற முறையில் லியனார்டோ டாவின்ஸி நிச்சயமாக இன்றைக்கும் முக்கியமானவராவார்.

6 Replies to “டாவின்ஸியின் அறிவியல்: நூல் அறிமுகம்”

 1. தமிழ் இந்து தளத்தில் இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளும், மானுட சமுதாயத்திற்காக வாழ்ந்த நல்ல நல்ல அறிஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன்.அரவிந்தன் நீலகண்டனின் இந்த அருமையான கட்டுரை டாவின்சி என்ற ஓவியனாகவே எல்லோருக்கும் தெரிந்த ஒரு பன்முக ஆராய்ச்சியாளனை, மானுடத்தை, இயற்கையை நேசித்தவனை அறிமுகம் செய்கிறது. அருமை. வாழ்த்துக்கள் அரவிந்தன்.

 2. ஆபிரகாமிய மதங்களின் பொதுக் குணம் ஆக்கிரமிப்பது. கிருத்துவ மதம் ஆபிரகாமிய மதங்களில் ஒன்று. எனவே, பூமியில் உள்ள அனைத்தையும் ஆக்கிரமிக்க, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கிருத்துவ மதத்தின் இறையியல் தூண்டுகிறது. மதம் மாற்றச் சொல்லுகிறது. காலனியாதிக்கத்தை ஏற்படுத்துகிறது.

  கிருத்துவ நம்பிக்கையற்றவர்களின்மேல், கிருத்துவ மதம் நடத்திவருகிற போர்தான் காலனியாதிக்கம். இந்தப் போருக்குத் தேவையான செல்வ வளத்தைப் பெற புனித விசாரணை (inquisition) போன்ற முறைகள் உதவின. புனித விசாரணை என்ற பெயரில் பொதுமக்களின் செல்வ வளத்தைக் கிருத்துவ மத ஸ்தாபனங்கள் சுரண்டி வந்தன. அந்தச் செல்வமானது நம்பிக்கையற்றவர்களின் மீது கிருத்துவ மதஸ்தாபனங்கள் போர்தொடுக்கப் பயன்பட்டது. இதுதான் யூரோப்பிய நாடுகளின் மத்திமக் காலக்கட்ட (medieval period) வரலாறு.

  மத்திமக் காலக்கட்டத்தில் கிருத்துவ மதமானது யூரோப்பிய நாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியது. மக்களின் தினசரி வாழ்க்கையையும், அவர்களின் மனவோட்டத்தையும் அது நிர்ணயித்தது. இயற்கையைக் கட்டுப்படுத்துகிற கொள்கைகளை உடைய கிருத்துவ இறையியலால் மக்கள் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்தனர்.

  காமம் முதலான இயல்பான உணர்வுகள் பாவங்களாகக் கருதப்பட்டன. இயல்பான காமம் பாவமாகக் கருதப்பட்டதால், தவறான வக்கிரமான காமவெறி தலைவிரித்தாடியது. சைத்தானுக்கு எதிராகப் புனித விசாரணை நடத்திய கிருத்துவப் பாதிரிகளின் வக்கரித்த மனத்தில் தோன்றிய கற்பனைகள்தான் தற்காலத்தில் நிலவும் பல வக்கிரமான காமவெறிப் பழக்கங்கள். இவை அனைத்தும் கிருத்துவ நாடுகள் மற்ற நாடுகளின்மேல் காலனியாதிக்கம் செலுத்தத் தேவையான செல்வ வளத்தைத் தந்தன.

  இந்தச் செல்வ வளத்தைக் கொண்டு, கிருத்துவ நாடுகள் காலனியாதிக்கத்தை மற்ற நாடுகளில் ஆரம்பித்தனர். காலனியாதிக்கம் மத்திய காலக்கட்டத்தின் இறுதிப் பகுதிகளில் ஆரம்பித்தது (15ம் நூற்றாண்டு). இந்தக் காலத்தைச் சேர்ந்தவர் லியோனார்டோ டாவின்ஸி. இவர் கிருத்துவம் ஒத்துக்கொள்கிற அறிவியக்கப் பாதையைப் பின்பற்றவில்லை. அவரது பாதை முற்றிலும் இயற்கையோடு ஒன்றிணைந்த வழியாக இருந்தது. அதாவது, கிருத்துவ மதத்திற்கு முந்தைய பாகன் மரபு பின்பற்றிய வழியாகவே இருந்தது. இவரது வாழ்க்கையும், அறிவியக்கமும் கிருத்துவ மதத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிடவே இல்லை. அவரால் வெளியிடப்பட்ட அவருடைய படைப்புகள் மறைமுகமாகவே தகவல்களைச் சொல்லிவந்தன. இவை இயற்கையை எதிர்க்காத விஞ்ஞான அறிவியக்கங்களை ஒத்திருந்தது. அதாவது, கிருத்துவத்திற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த அறிவியக்கங்கள், மற்றும் கிருத்துவம் அல்லாத பாகன் நாடுகளின் (உதாரணம்: இந்தியா, சீனா, அரேபியா) கொண்டிருந்த அறிவியக்கங்களோடு டாவின்ஸியினுடைய அறிவியக்கம் ஒத்துப் போகிறது.

  இந்த மாறுபட்ட அறிவியல் திறக்கை டாவின்ஸி மேற்கொள்ளக் காரணம் என்ன? கீழைத் தத்துவங்களோடு டாவின்ஸிக்கு ஏதேனும் உறவு இருந்ததா?

  இந்தக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடைதருகிறதா?

  கீழைத் தத்துவங்களோடு உறவு இருந்தால்தான் இந்தத் திறக்கில் அறிவியக்கம் நடக்கும் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில், ஸ்ட்ரிங் தியரி போன்ற இயற்பியல் தத்துவங்களை உருவாக்கியவர்கள் கீழைத் தத்துவங்களை அறிந்திருக்கவில்லை. ஆனால், அவர்களின் ஆய்வு முடிவுகள் கீழைத் தத்துவங்களின் முடிவுகளோடு ஒத்துப் போகின்றன. ஒருவேளை டாவின்ஸி இயற்கையை முற்றிலும் திறந்த மனத்தோடு ஆராய்ந்ததால் கீழைத் தத்துவங்களையொட்டிய இயற்கை சார்ந்த முடிவுகளுக்கு வந்திருக்கலாம். ஆனால், இது குறித்தத் தகவல்களை காப்ரா இந்தப் புத்தகத்தில் தருகிறாரா என்றறிய ஆவலாக உள்ளேன்.

  டாவின்ஸிக்குப் பின்வந்த ந்யூட்டன், பாகன் போன்றவர்கள் கிருத்துவ மதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் இயற்கையை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கத்திற்கு உதவும் கருத்துக்களைக் கொண்டு வந்தார்கள். கிருத்துவ அறிவியக்க வரலாற்றில் இவர்களுடைய கண்டுபிடிப்புகளே கிருத்துவ மதத்தால் பெரிதும் ஒத்துக்கொள்ளப்பட்டன. கிருத்துவம் வேறு எந்த அறிவியல் ஆய்வுமுறையையும் இந்த அளவு ஒத்துக்கொள்ளவில்லை–அரிஸ்டாட்டிலின் அனைத்து அறிவுப் படைப்புகளையும்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதப் பண்பை (ethics), கிருத்துவ இறையியலுக்குச் சாதகமாக வரையறுக்க மட்டுமே அரிஸ்டாட்டில் உடைய மனிதப் பண்பு குறித்த அடிப்படை விதிகள் திரிக்கப்பட்டுப் பயன்படுத்தினர். அரிஸ்டாட்டிலுடைய வேறு எந்தவித அறிவியக்கத்தையும் கிருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இயற்கையைக் கட்டுப்படுத்தும் பலனுக்காக ந்யூட்டனையும், பாகனையும், கார்ட்டீசிய முறைகளையும் அவர்கள் பெரிதும் ஏற்றுக்கொண்டார்கள். இதுவே கிருத்துவ மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, காலனியாதிக்கத்தை ஆரம்பித்த மத்திமக் காலத்தின் நிலை.

  சாக்கடைப் பன்றி ஒரு நன்னீர் குளத்தில் விழுந்தால் பன்றி சுத்தமாவதும், குளம் அசுத்தமாவதும் போல கிருத்துவச் சாக்கடை அப்பிக்கொண்டு, கீழை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குதித்த யூரோப்பிய நாடுகள் பலன் பெற்றன. ஆக்கிரமித்தவர்களின் தரம் உயர்ந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் தரம் தாழ்ந்தது.

  இந்தியா போன்ற கீழை நாட்டுச் செல்வங்கள் மட்டுமல்லாது, தத்துவங்களும், இயற்கையை ஏற்றுக்கொள்ளும் அறிவியல் முறைகளும் யூரோப்பிய நாடுகளுக்குச் சென்றன. இதனால் தோன்றியதுதான் யூரோப்பிய மறுமலர்ச்சிக் காலம். கட்டுரை ஆசிரியர் மிக அழகாகச் சொல்லுவது போல கிருத்துவத்திற்கு முந்தைய வேர்கள் மறுபடியும் மலர்ந்த மறு மலர்ச்சிக் காலம் இது. இந்த மறுமலர்ச்சி அறிவியல் துறையில் இருந்த கிருத்துவ ஆதிக்கத்தை முற்றிலும் அழித்தது. கிருத்துவ மதக் கட்டுப்பாட்டினை உடைத்ததாலேயே பல அறிவியல் முன்னேற்றங்கள் இந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்டன.

  கட்டுரையாசிரியர் மிக நாசுக்காக இதைக் கோடி காட்டிவிட்டுச் செல்லுகிறார். கனமான விஷயத்தை எளிதாகப் புரியும்படி சொல்லும் அவருடைய எழுத்து நடை ரசிக்கும்படியாக இருக்கிறது.

  சுருக்கமான வாக்கியங்களை அவர் பயன்படுத்துவதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன். சுருக்கமாக இருப்பதால் அவை கருத்தைச் சட்டெனச் சொல்லிவிடுகின்றன. குறள் போல. மிக நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தியிருந்தால் படிப்பது வேதனையாக இருந்திருக்கும். பைபிள் போல.

  அருமையான இந்தக் கட்டுரை, கிருத்துவ மதத்தின் பிடியில் இருந்து அறிவியக்கம் விடுபட்டதைச் சொல்லுகிறது. இந்த விடுதலையின் தொடர்ச்சியாகவே, கிருத்துவ மதத்திடம் இருந்து அரசாட்சி விடுபடவேண்டும் என்ற நல்லறிவும் யூரோப்பிய-அமெரிக்க நாடுகளிடம் ஏற்பட்டது. அதனால் மதவெறியில் இருந்து அவை ஓரளவு மீண்டன. வளம் பெற்ற நாடுகளாக மாறின.

  ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு முந்தைய அறிவியக்கத்தை இஸ்லாமிய நாடுகள் முற்றிலுமாக அழித்தன. ஹிந்துஸ்தானம், சீனா போன்ற மற்ற கீழை நாடுகளிடம் இருந்து அறிவுச் செல்வத்தையும் பெறாததால் மறுமலர்ச்சி என்ற ஒன்று இஸ்லாமிய நாடுகளில் ஏற்படவே இல்லை. உலகில் உள்ள வறுமையான நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பதன் காரணம் இதுவே. அந்த நாடுகளில் இஸ்லாம் உறுதியாகத் தனது இருப்பை நிலை நாட்டி வைத்திருப்பதற்கும் காரணம் இதுவே.

  இந்த இஸ்லாமிய நாடுகளைப் போலன்றி, ஆபிரகாமிய மதத்தை (அறிவியக்கத்தில் இருந்தும், அரசாட்சியில் இருந்தும், தனிமனித வாழ்வில் இருந்தும்) விரட்டிவிட்டதால்தான் யூரோப்பிய நாடுகளும், மனிதர்களும் வாழ்வில் அதிக விடுதலைப் பெற்ற மனிதர்களானார்கள். கிருத்துவ மதம் தங்களது சொந்த வாழ்வில் தலையிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

  ஆனால், மற்ற நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, கிருத்துவ மதத்தைப் பயன்படுத்துகின்றனர். பன்றியின் நன்றி.

 3. கிருஷ்ணபுத்திரனின் மறுமொழி வியக்க வைக்கிறது. முதல்முறையாக ஒரு கட்டுரைக்கு, இன்னொரு கட்டுரையே எதிர்வினையாக வந்தது தஹி தளத்தில் இது முதல்முறை. அத்தைகய கட்டுரையை எழுதிய அ.நீ ஐயாவுக்கு என் வணக்கங்கள்.

  //
  சுருக்கமான வாக்கியங்களை அவர் பயன்படுத்துவதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என நினைக்கிறேன். சுருக்கமாக இருப்பதால் அவை கருத்தைச் சட்டெனச் சொல்லிவிடுகின்றன. குறள் போல. மிக நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தியிருந்தால் படிப்பது வேதனையாக இருந்திருக்கும். பைபிள் போல.
  //

  ??!!!

 4. அறிவியல் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை பத்ரி முதலானோர் தொடங்கியுள்ள ariviyal.info என்ற தளத்திற்கு அனுப்பிவைக்கவும். இத்தகைய கட்டுரைகளை வெளியிடுவார்களேயானால், உண்மையிலேயே அறிவியல் தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் நோக்கமே அவர்களுக்குப் பிரதானம் என்பது புலப்படும். இல்லாத பட்சத்தில், அது அறிவியல் என்ற பெயரில் போலிமதசார்பின்மை பஜனை செய்யும் மற்றொரு குறுங்குழு என்பது வெளிப்படும்.

 5. அரவிந்தன் ஐயா கட்டுரை வழக்கம்போல் விறுவிறுப்பு. நன்றி.

 6. அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. செறிவாகவும், படிக்க எளிய நடையிலும் ஒரே நேரம் இருப்பது குறிப்பிடத் தக்கது. இதே போலப் பல கட்டுரைகளை அவர் எழுதி இங்கு வெளியிடக் கோருகிறேன். பிறரும், கிருஷ்ணபுத்திரன் போல மறுவினையாக எழுதி நிற்காமல், அவற்றைக் கட்டுரைக்குப் பதில் கட்டுரை என்றே அனுப்பி மகிழலாம். நிறைய அறிவியல் கட்டுரைகள் தத்துவ விசாரணைகள், வரலாற்று ஓட்டம், மேலும் உலக அதிகாரப் பகிர்வுகள் ஆகியவற்றை எல்லாம் தொடர்புபடுத்தி முழுமையான பார்வையை இந்த தளத்து வாசகரிடையே பரப்புதல் நல்ல விளைவுகளைக் கொணரும். இயற்பியலோடு நிற்காமல் உடற்கூறியல், விலங்கியல், மானுடவியல் என்று பலதுறைகளில் இருந்து சிறந்த நூல்களை அறிமுகம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *