கருப்பு வெள்ளி

தொடரும் பயங்கரங்களில் இருந்து நாம் ஏதேனும் பாடம் கற்றோமா?

black-friday1993 வருடம் நடந்த பயங்கர குண்டு வெடிப்புககளில் இருந்து இந்தியா எதையாவது கற்றுக் கொண்டுள்ளதா? அதே மும்பாய் கடற்கரை; அதே பாகிஸ்தான் தீவீரவாதிகள்; அதே உள்ளூர் முஸ்லீம்கள் உதவி; அதே மாதிரிப் படுகொலைகள். இனி ஆயிரம் முறை இந்த பயங்கரங்கள் திரும்பத் திரும்ப நடந்தாலும் நாம் பொறுமை காத்து ஒற்றுமை காத்து மும்பைக்கர் என்னும் ஸ்பிரிட்டைக் காட்டிக் கொண்டேயிருப்போம். 1993 குண்டு வெடிப்பின் பொழுது நடந்தது என்ன? அதற்கும் 2008க்கும் என்ன ஒற்றுமைகள் என்பதை ப்ளாக் ஃப்ரைடே என்னும் பட விமர்சனத்தின் மூலம் பார்க்கலாம்.

2004ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி இஸ்லாமியத் தீவீரவாதிகள் கேஸ் போட்டதால் வழக்கு நடந்து, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

எனக்கு இந்திப் படம் பார்ப்பதில் பெரிய அவர்ஷன் உண்டு. கைக்குட்டைகளையே ஆடையாய் அணியும் ஜிகினா நாயகிகள் ஆட்டம் போட, வெறுப்பேற்றும் லாஜிக் இல்லாத படங்கள்தான் இந்திப் பட உலகம் என்பது எனது நம்பிக்கையாதலால் எனக்கு மலையாளப் படங்களே போதும் என்றிருப்பேன். ஆனால் இந்தியிலும் பார்க்கக் கூடிய படம் வருடத்துக்கு ஒன்றாவது வந்து கொண்டுதான் இருக்கிறது, பண்டார்க்கரின் படங்கள் அனைத்தையும் பார்த்தேன். பார்க்கக் கூடிய இந்திப் படங்களில் டிராஃபிக் சிக்னலை அடுத்து இந்த ப்ளாக் ஃப்ரைடே முக்கியமானதொரு படம்.

ஹூசைன் சைதி எழுதிய ப்ளாக் ஃப்ரைடே என்ற புத்தகத்தை அப்படியே சினிமாவாக எடுத்துள்ளனர் மிட் டே பத்திரிகைக்காரர்கள். அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கிறார். எவ்விதமான சூடோ-செக்குலர் தோரணைகளும், நியூட்ரல் ஜல்லிகளும் இல்லாத சுத்தமான டாக்குமெண்டரி.

blackfridayப்ளாக் ஃப்ரைடே, மார்ச் 12, 1993 இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்ந்த ஒரு கருப்பு தினம். ஏறக்குறைய 300 இந்தியர்களை இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கு பாரத மாதா பறிகொடுத்த மற்றொரு துக்க தினம். அன்று நடந்த குண்டு வெடிப்புகளை அதே தீவிரத்துடன் காண்பிப்பதில் இந்தப் படம் ஆரம்பிக்கிறது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமனின் கையாள் ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொண்டு இன்னும் 3 நாட்களில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கப் போகின்றன என்ற உண்மையைச் சொல்லுகிறான். நமது போலீசார் வழக்கம் போல உதாசீனம் செய்து விடுகிறார்கள்.

குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து துணைக் கமிஷனர் ராகேஷ் மோரியாவின் குழு தடயங்களைச் சேகரிப்பதில் தொடர்கிறது. டைகர் மேமனின் மேனேஜரை முதலில் கைது செய்கிறார்கள். அவன் மூலமாக மொத்த ஆப்பரேஷனும் திகிலுடன் விவரிக்கப் படுகிறது. எத்தனைக் குழுக்கள் எங்கெங்கே சென்று குண்டு வைத்தனர் என்பதை அந்த மேனேஜர் விவரிக்க, காட்சிகளாக விரிந்து நம் வயிற்றைப் பிசைகின்றன. கோபம், சோகம் , ஆத்திரம் கையாலகாத்தனத்தால் ஏற்படும் சுயவெறுப்பு என்று பல்வேறு உணர்ச்சிகளில் உள்ளம் கொந்தளிக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் மீண்டும் அந்தந்தக் குழுக்களால் எப்படி நிகழ்த்தப் பட்டிருக்கும் என்பதை, தத்ரூபமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஸ்டாக் எக்சேஞ்ச் முன் குண்டு வெடிக்கும் முன்னால் காட்சி கனத்த அமைதியாகி விடுகிறது. அந்த அடர்ந்த மௌனமே நடக்க இருக்கும் விபரீதத்தைக் கூறி மனம் பதற வைக்கிறது.

மேனேஜர் கொடுத்த தகவலின் பெயரில் குண்டு வெடிப்பில் பங்கு கொண்ட அனைத்துத் தீவீரவாதிகளின் பெயர்களும் சேகரிக்கப் படுகின்றன. போலீஸ் இன்ஃபார்மர்கள் மூலமாக ஒவ்வொரு தீவீரவாதியையும் துரத்தித் துரத்திக் கைது செய்கிறார்கள். அதிலும் பம்பாய் சேரிகளில் போலீசார் மூச்சுத் திணற ஓடி வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து, புகுந்து ஒரு தீவிரவாதியை மடக்கிப் பிடிக்கும் காட்சி படு பிரமாதமாகப் படமாக்கப் பட்டுள்ளது.

பாதுஷா என்ற ஒரு தீவிரவாதியின் பின்னால் படம் வெகுநேரம் சுற்றி வருகிறது. போலீசால் துரத்தப்படும் தீவிரவாதி உ.பி.யில் உள்ள ராம்பூர் போகிறான், அங்கிருந்து ஜெய்ப்பூர் போகிறான், அங்கிருந்து மீண்டும் ராம்பூர், அங்கிருந்து கல்கத்தா, மீண்டும் ராம்பூர் என்று துபாய்க்குத் தப்பி சென்றுவிட்ட டைகர் மேமனின் உத்தரவினால் அலைக்கழிக்கப் பட்டு போலீசிடம் கைதாகிறான். அவனிடம் கமிஷனர் மோரியா பேசும் ஓரிடத்தில் மட்டும் இயக்குனரின் கருத்தாக இஸ்லாமியத் தீவீரவாதம் சாடப் படுகிறது.

பாதுஷா கொடுத்த தகவலின் பெயரில் RDX எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பது காண்பிக்கப் படுகிறது. நாட்டைக் கூசாமல் விலை பேசும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கேட்கிறார்கள், சரக்கு ISI அனுப்புகிறதா தாவூத் அனுப்புகிறானா என்று! 68 கிலோ RDX என்பதனால் கூசாமல் அதிக லஞ்சம் வேண்டும் என்று கேட்டுப் பிடுங்கிக் கொள்கிறார்கள் இந்திய அரசு அதிகாரிகள்.

பாதுஷா எப்படி RDX கடத்தப்பட்டது என்பதை விவரிக்கிறான். அது அப்படியே படமாகக் காட்டப்படுகிறது. அவன் மேலும் தாங்கள் எப்படி துபாய் சென்றோம் என்பதையும் அங்கிருந்து டைகர் மேமோன் எப்படி பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றான் என்பதையும் சொல்லச் சொல்ல காட்சிகளாக விரிகின்றன. அனைவருக்கும் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கிறது. பின்னர் அனைவரும் பம்பாய் திரும்பி காரியத்தை முடிக்கின்றனர். இதை எல்லாம் போலீஸ் விசாரிக்கும் பொழுது தீவிரவாதிகளின் வாக்குமூலக் காட்சிகளாக வருகின்றன.

ஒவ்வொரு விசாரணைக் கைதியையும் போலீசார் அடித்து உதைத்து உண்மையைக் கொணரும் விசாரணை அதிகாரி அதீத மன உளைச்சலுக்கு ஆளாகிறார். RDXஐப் பதுக்கி வைத்த பில்டரின் மனைவி உட்பட எல்லோரும் கடுமையான போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எல்லா விசாரணைகளும் தத்ரூபமாகப் படத்தில் விரிகின்றன. பிடிக்க முடிந்த எல்லோரையும் பிடித்து விடுகின்றனர். டைகர் மேமனின் குடும்பமே தப்பித்து முதலில் துபாயிலும் பின்னர் பாகிஸ்தானிலும் அடைக்கலாமாகின்றனர். டைகர் மேமனின் தம்பி இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அவனது பேட்டியும், பாக்கிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே காட்டப் படுகின்றன. டைகர் மேமன் துபாயில் இருந்து கொண்டு தொடர்ந்து உத்தரவுகள் கொடுத்து வருகின்றான்.

படத்தின் இறுதியில் ஒரு கைதியின் வாக்குமூலம் வழியாக தாவூத் இப்ராஹிமின் சதித்திட்டம் அம்பலமாகிறது. மும்பையில் பர்தா அணிந்த பெண்கள் தாவூத் எங்கள் சகோதரன் அல்ல அவன் எங்கள் மகன் என்று ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறார்கள். “என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை, அவளது வளையல்களை உனக்கு அனுப்புகிறேன், நீதான் பழிக்குப் பழி வாங்க வேண்டும்” என்று ஒரு வளையல் பார்சல் தாவூதுக்கு வருகிறது. உடனடியாக எல்லா டான்களையும் வைத்து மீட்டிங் போடுகிறான். மீட்டிங்கில் அத்வானியையும், தாக்கரேயையும் கொல்லத் தீர்மானம் போடப்படுகிறது. ஆனால் டைகர் மேமன் வேறு விதமான தீர்வைக் கொடுக்கிறான். “மும்பையை நிர்மூலமாக்க வேண்டும், அதன்மூலம் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்க வேண்டும், லட்சக்கணக்கான இந்து நாய்கள் கொல்லப் பட வேண்டும், உலகத்துக்கு ‘முஸ்லிம் சக்தி’ என்ன என்றால் அப்பொழுதுதான் தெரியும் எனக்குப் பணம் கொடுங்கள் நான் அந்தப் பயங்கரத்தை அல்லாவின் ஆணையாக நிகழ்த்தித் தருகிறேன்” என்கிறான். அவன் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மற்றவை துயர வரலாறு.

படத்தில் எல்லாப் பாதிரங்களின் பெயர்களும் உருவ ஒற்றுமையுடன் அப்படியே காண்பிக்கப் படுகிறது தாவூத் உட்பட. இது டாக்குமெண்டரி அல்லது உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு. உலகப் புகழ் பெற்ற டிராஃபிக் போன்ற படங்களுக்கு நிகரான எடிட்டிங், கலர், காமரா கோணம் எல்லாம் அமைந்துள்ள ஒரு தரமான தொழில்நுட்பம் அமைந்த நேர்த்தியான தயாரிப்பு. அநாவசியக் காட்சிகள் இல்லை. நடந்தது நடந்தபடி காண்பிக்கப் படுகின்றன. பாப்ரி மசூதி இடித்ததனால்தான் நாங்கள் குண்டு வைத்தோம் என்று சொல்லும் பொழுது அயோத்தியா காட்சிகள் காண்பிக்கப் படுகின்றன. வேறு எந்த இடத்திலும் யாரையும் படம் சுட்டிக் காட்டுவதில்லை, படம் பார்ப்பவர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறார்கள், இப்படி இப்படித் திட்டமிட்டு படுபயங்கர குண்டு வெடிப்புகள் நடத்தினார்கள். அதற்கு இன்ன இன்ன காரணங்களைக் கூறுகிறார்கள் என்று காண்பிக்கிறார்களேயன்றி, யார் சரி, யார் தவறு என்ற நீதிபோதனைகள் இல்லை. படத்தின் இறுதியில் தொடர்ச்சியாகப் பல நிமிடங்களுக்கு குண்டு வெடிப்பில் இறந்த, உடல் உறுப்புக்களைப் பறிகொடுத்த, நெருப்பில் கருகிய கோரக் காட்சிகளின் புகைப் படங்களாகவும், வீடீயோக் காட்சிகளாகவும் காட்டப் படுகின்றன. அந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர் மனதில் படத்தில் வெளிப்படையாகச் சொல்லாமல் விட்ட அனைத்துச் செய்திகளையும் சொல்லுகிறது.

படத்தில் கமிஷனர் மோரியாவாக வரும் கே.கே. மேனனின் நடிப்பும், பாதுஷாவாக வருபவரின் நடிப்பும் டைகர் மேமனாக வரும் பவன் மல்ஹோத்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தக்கவை.

நம் நண்பர்கள் அனைவரும் கட்டாயம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இன்று நிலவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம். இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொடரும் பயங்கரத்தின் ஆவணம். அவசியம் பாருங்கள் DVD கிடைக்கிறது.

தீர்ப்பு வந்து பல தீவிரவாதிகளும் வெளியில் விடப்படலாம். ஆனால் இந்தப் படம் அழுத்தமாக யார் யார் குற்றவாளிகள் என்பதைக் காண்பிக்கின்றது. இதேபோல ஒரு முழுமையான ஆவணப் படம் இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்தும் எடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் தங்களைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பரிமாணத்தை உணர்வார்கள்.

4 Replies to “கருப்பு வெள்ளி”

  1. இந்தப் படத்தின் டிவிடி மூலமாக இதைப் பார்த்தீர்களா இல்லை திரையில் பார்த்தீர்களா? டிவிடி விற்கிறதென்றால் எங்கு கிட்டும்?
    மை‍‍‍ ‍‍‍‍‍__ யா

  2. மைத்ரேயா

    இந்தப் படத்தின் டி வி டி இங்கு இந்தியாவில் கிடைக்கிறது. நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றால் இந்திய டி வி டி கடைகளில் கேட்டுப் பாருங்கள் நிச்சயம் கிடைக்கும். சென்னைக் கடைகளில் கிடைக்கிறது. நான் டி வி டி யில் தான் சில வருடங்களுக்கு முன்பாகப் பார்த்தேன்.

    விஸ்வா

  3. நன்றி. சென்னையில் தேடிப் பார்க்கிறேன். இல்லையேல் நண்பர்களிடம் சொல்லி, பம்பாயில் இருந்து வாங்கி அனுப்பச் சொல்கிறேன்.
    மை

  4. படத்தைப் போலவே நேரான விமர்சனம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *