நம் பாரத பூமியில் உதித்த மகான்களில் ஒருவர் ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்.
இளைஞராக இருக்கும்போதே, உலக வாழ்க்கையில் விருப்பமின்றி வீட்டைவிட்டு வெளியேறிய இவர், வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் சுற்றித் திரிந்தார். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். யாராவது உணவு கொடுத்தால் வாங்கி உண்பார். இல்லாவிட்டால் பட்டினிதான். கோவிலோ, வீட்டுத் திண்ணையோ, சாக்கடையோ அதுபற்றிய விருப்பு வெறுப்பு உணர்வின்றி அங்கேயே தங்குவார். தூங்குவார். யாராவது ஏதும் விசாரித்தாலும் பதில் கூறாமல் மௌனமாகவே இருப்பார். சதா பிரம்மத்தில் லயித்திருந்ததால், தான், தனது என்ற எண்ணமும் உடல் உணர்வுமுமற்ற நிலையில் அவர் இருந்தார்.
ஒருமுறை போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அவர் எப்போதும் மௌனமாக இருப்பதும், எது கேட்டாலும் பதில் பேசாமல் நகர்ந்துவிடுவதும் சில போக்கிரிகளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அவரைச் சூழ்ந்துகொண்டு கிண்டல் செய்வதும் சீண்டி விளையாடுவதும் அவர்கள் பொழுதுபோக்காக இருந்தது.
ஒரு நாள்…
சுவாமிகள் மௌனமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அன்றும் போக்கிரி இளைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவரைப் பேச வற்புறுத்தினர். சுவாமிகளோ பதில் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவர்கள் பலமுறை வற்புறுத்தினர். சுவாமிகள் பேசவில்லை. அவர்களின் ஒருவன், மிகவும் ஆத்திரத்துடன், “இப்பொழுது நான் இவரைப் பேச வைக்கிறேன் பார்!” என்று கூறிச் சவால் விட்டான். தன் கையில் இருந்த குறடால் சுவாமிகளின் நாக்கைப் பிடித்து இழுத்தான். இரு தாடைகளையும் குறடால் நசுக்கினான். சுவாமிகள் வேதனையால் துடித்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. வலி பொறுக்கமாட்டாமல் “விட்டோபா, விட்டோபா” எனக் கதறினார். கண்கலங்கினார். சுவாமிகளைப் பேசவைத்த மகிழ்ச்சியுடன் அந்தப் போக்கிரிகள் அங்கிருந்து ஓடினர்.
ஆனால்…
அவர்கள் செய்த தவறுக்கு ஓரிரு நாட்களிலேயே பலன் கிடைத்தது. போக்கிரி இளைஞர்கள் அனைவரும் காலரா நோய்க்கு ஒருவர்பின் ஒருவராகப் பலியாகினர். அவர்களது குடும்பமே வாரிசுகளற்று அனாதையானது.
சுவாமிகள் ஒரு மகான் என்றும், மகத்தான ஆற்றல் பெற்ற அவருக்குத் துன்பம் விளைவித்ததால்தான் போக்கிரிகளுக்கு இந்நிலை ஏற்பட்டது என்பதையும் மக்கள் உணர்ந்தனர். அவரைத் தொழுது தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். சுவாமிகளோ பதில் ஏதும் பேசாமல் அந்த ஊரை விட்டுச் சென்று விட்டார். “விட்டோபா, விட்டோபா” என அரற்றியதால், அன்று முதல் அவர் ’ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.
மகான்களுக்கு அபவாதம் செய்தால் அது செய்தவர்களை மட்டுமல்ல, அவர்களது தலைமுறையையே பாதிக்கும். எனவே ’தான்’ என்ற அகந்தையை விடுத்து, இவர்போன்ற ஞானியரது ஆசிகளைப் பெறவே முயல வேண்டும்.