போகப் போகத் தெரியும்-10

வீரமணிக்கு உதவும் விஞ்ஞானக் கதை

tiscoஇந்தியாவின் தொழில் வளர்ச்சி, முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்டது. போர்முனையில் பதுங்கு குழிகள் அமைப்பதற்கு மணல் மூட்டைகள் தேவைப்பட்டன. அதன் விளவாக இந்தியச் சணலின் விலை அதிகரித்தது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. ஆயுதங்களுக்காகவும் ரயில்வேயின் பயன்பாட்டுக்காகவும் இந்திய எஃகின் தயாரிப்பு கூடியது.

போருக்கு முந்தைய காலங்களில் ஆங்கிலேயர்கள் இந்திய எஃகின் தரத்தைப் பற்றிக் கேலி பேசினார்கள். அப்போது இந்திய ரயில்வேயின் தலைமைக் கமிஷனராக இருந்த சர் பிரடெரிக் அப்காட், “டாடா தொழிற்சாலையில் தயாராகும் தண்டவாளங்கள் மொத்தத்தையும் தன்னால் கடித்து விழுங்க முடியும்” என்று வீராப்பாகப் பேசினார். ஆனால் இது அதிகநாள் நீடிக்கவில்லை.

1914ல் மெசபடோமியா ரெயில்வேயிற்காக 2500 கி.மீ. அளவுக்கு டாடா நிறுவனம் தயாரித்த தண்டவாளங்கள் பிரிட்டிஷ்காரர்களால் வாங்கப்பட்டன. “அப்காட் தான் சொன்னபடி செய்திருந்தால் அவருக்கு அஜீரணம் ஏற்பட்டிருக்கும்” என்று டாடா தொழிற்சாலையில் பேசிக் கொண்டார்கள்.

– பக்.64 / இமாஜினிங் இந்தியா / நந்தன் நிலேகனி / பெங்குவின் பதிப்பகம்.

தொழிற்போட்டி சூடு பிடித்திருக்கும் இன்றைய சூழலில் ஜப்பானிய கார் கம்பெனிகள் டாடா எஃகைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். 2005 ஆம் ஆண்டில் 50 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்து, 400 கோடி டாலர் வரும்படி டாடா ஸ்டீலுக்கு. இதை எழுதிக் கொண்டிருக்கும்போது டாடாவின் தயாரிப்பான ‘நேனோ கார்’ பற்றிய செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

bharatiநான் பாரதியாரை நினைத்துப் பார்க்கிறேன். “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே….” என்று பாரதி எழுதியது 1919ல். நவ இந்தியாவின் எழுச்சியை அகக்கண்ணால் கண்டவர் அவர். ‘சுதேசித் தொழிலுக்கு பிரிட்டிஷ் அரசு போட்ட முட்டுக்கட்டைகள்’ பற்றியும் பாரதி கட்டுரை எழுதியிருப்பதாக நண்பர் ஹரிகிருஷ்ணன் சொல்கிறார். பாரதியை நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்; அவர் தோய்ந்து பார்த்திருக்கிறார்.

பாரதியார் பாடல்கள் குறித்த பதிவு பகுத்தறிவாளர்களால் எப்படி இருட்டிப்பு செய்யப்படுகிறது என்பதை சென்ற பகுதியில் பார்த்தோம். பாரதிக்கு இருட்டடிப்பால் பாதகமில்லை என்பதையும் பார்த்தோம்.

“இந்தியாவிலேயே முதல் முறையாக மனித உரிமைகளுக்காக சமுதாய உரிமைகளுக்காக – போராட்டம் ஒன்று வெடித்தது என்று சொன்னால் – அது கேரளத்து ‘வைக்கத்’தில்தான் என்பது சமுதாயப் பார்வையோடு சரித்திரம் எழுதுபவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடியதாகும்.”

“வைக்கத்தில் தந்தை பெரியாரவர்கள் நடத்தியது மாபெரும் மனித உரிமைப் போராட்டம். பெரியார் அவர்கள் போராட்டம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னரே அதில் கலந்து கொண்டார் எனினும் அந்தப் போராட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டி – போராட்டம் வெற்றிபெறக் காரணமாக இருந்தவர்”

பக். 13

என்கிறார் கி.வீரமணி / காங்கிரஸ் வரலாறு – மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.

‘ஆலய நுழைவை அண்ணல் காந்தி செய்தார், காங்கிரஸ் முதலமைச்சர் இராஜாஜி சட்டமாக்கினார்; சி.பி. இராமசாமி திறந்து வைத்தார்’ என்றெல்லாம் பேசப்படுகிறதேயன்றி ஆலய நுழைவை நடைமுறைப்படுத்திப் போராட்டம் நடத்தியவர்கள் சுயமரியாதை இலக்கத்தவர்தாம் என்பதை மறந்து விடக்கூடாது.

பக்.228

என்கிறார் மங்கள முருகேசன் / சுயமரியாதை இயக்கம்.

மனித உரிமைகளுக்காக முதலில் போராடியது ஈ.வே.ரா.தான் என்று அடித்துப் பேசிகிறார் வீரமணி. அந்தப் பெருமையில் அடுத்தவருக்கு பாத்யதை கிடையாது என்று துடிக்கிறார் மங்கள முருகேசன்.

இந்த ஆவேசங்கள் ஒருபுறம் இருக்கட்டும். தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் போராடியதில் ஈ.வேராவுக்கு தலைமைப் பீடம் உண்டா?

அவர் எச்சமயத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகவே இருந்தாரா? அனைத்துப் போராட்டங்களிலும் அவர் ப்ரசன்னமாக இருந்தாரா என்பதை நாம் ஆராயவேண்டும்.

இந்த உரிமைக்கு உரியவர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அவர்கள் சார்பாக அன்பு. பொன்னோவியம்.

அன்பு. பொன்னோவியம் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் பணி செய்தவர்; ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டவர்; பெளத்த நெறியில் அறிஞர்; பழங்குடி மக்களுக்காகப் பாடுபட்டவர். இவருடைய கட்டுரைகள் நிறைந்த நூல்: ‘உணவில் கலந்திருக்கும் சாதி’.

அன்பு.பொன்னோவியத்தின் காலத்திற்குப் பிறகு டிசம்பர் 2007ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அணிந்துரை கொடுத்திருக்கிறார்.

வீரமணிக்கு மறுமொழியாக அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுத்திருக்கிறேன்:

வைக்கம் போராட்டம், தாழ்த்தப்பட்டோருக்கும் ஈ.வேராவுக்கும் ஏற்பட்ட உரசல்கள் பற்றி இங்கே சொல்லப்படுகிறது.

1962 தேர்தலில் ஈ.வேரா காங்கிரசுக்கு ஆதரவாகவும் தி.மு.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர் பண்புக் குறைவாகப் பேசியதாக செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து ‘முரசொலி’ பொங்கல் மலரில் கார்ட்டுன் வந்தது. அதற்கு எதிராக ‘நாத்திகம்’ வார இதழில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டது. அந்தத் தலையங்கத்திற்கு அன்பு.பொன்னோவியம் எழுதிய மறுமொழியும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

• பெரியார் ஈ.வேரா அவர்களக் காங்கிரஸ்காரராகவும் நீதிக்கட்சியினராகவும் சிறப்பிப்பார்கள்… காங்கிரசில் இருந்த ஐந்தாண்டுகளில் அவர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்று கூற ஒன்றுமில்லை. 1929 வரை தனித்தலைவர் இல்லாதிருந்த நீதிக்கட்சியை ஆதரித்த காலம் ஐந்தாண்டுகளிலும் அவரது தாழ்த்தப்பட்டோருக்கான பணிகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 1938ல் நீதிக்கட்சியில் பொறுப்பேற்று 1944ல் திராவிடர் கழகமாக மாறிய ஆறாண்டு கால வரலாற்றிலும் தாழ்த்தப்பட்டோருக்காகப் பேசினாரா போராடினாரா என்று சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
• நாடார் குல மக்களின் அத்தகைய நிலைக்கும் அவர்களது கோயில் நுழைவு போராட்டத்திற்கும் பெரியார் அவர்கள் போராடினார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியாது. நாடார் மக்களின் போராட்டம் 1871ல் தொடங்கி 1920ல் முடிவு பெற்றது. 1920ல்தான் பெரியார் அரசியலில் நுழைய நேரிட்டது.
• 1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதைத் தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடினார் என்று மிகைப்படுத்துவது அதிகப்படியான கருத்தாகும். தமிழ்நாட்டில் அத்தகைய போராட்டத்தை பெரியார் ஏன் நடத்தவில்லை என்ற கேள்வியைத்தான் அது தோற்றுவித்தது.
• 1938 ஆகஸ்டில் சுயமரியாதைக் கூட்டம் ஒன்றில் தாழ்த்தப்பட்டோர் தலைவி. திருமதி. மீனாம்பாள் சிவராஜ் உரையாற்ற சிறிது காலம் தாமதமாக வர நேர்ந்தது. இடையில் மேடையில் இருந்தவர்கள் பேசவர இருப்பவர் சாதியைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். கொதிப்படைந்த மீனாம்பாள் சிவராஜ் சு.ம.காரர் என்றால் சுத்த மடையர் என்று சொல்லிவிட்டாராம்.
• பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களை சாடி பழித்துப் பேசியிருக்கிறார். 19.06.1947 பெரியார் பேச்சும் 24.04.1958 விடுதலை தலையங்கம் போன்றவைகளைய்ம் சான்றாகக் கூறலாம். அவை சில சமயங்களில் நேரிடையாகவும், சூசகமாகவும் இருக்கும்.

அன்பு. பொன்னோவியத்தின் வாதங்களைக் கேட்டோம். வைக்கம் விஷயம் இதோடு நிறைவு பெறாது. இன்னும் சிலரைச் சந்திக்க வேண்டும். அதை அடுத்த பகுதியில் வைத்துக் கொள்ளலாம்.

உள்ளே இறங்க இறங்க வரலாற்றின் பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதுவரை கொடுத்த விவரங்களே வீரமணிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும்.

பாரபட்சமின்றி செய்யப்படும் ஆய்வு அவருக்கு எதிராகவே இருக்கிறது. என்னதான் எதிராளி என்றாலும் யுத்த தர்மப்படி அவர் கையறு நிலையில் இருக்கும் போது நாம் கணை தொடுக்கக் கூடாது.

h.g.wellsசூழ்நிலையையும் ஆவணங்களையும் தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு வழி இருக்கிறது. அது அவருக்கு உதவக்கூடும். வீரமணிக்கு உதவக்கூடியது விஞ்ஞானக் கதை.

எச்.ஜி.வெல்ஸ் என்ற ஆங்கிலப் படைப்பாளி ‘டைம் மிஷின்’ என்ற புனைகதையை எழுதினார். கதைப்படி, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் அலெக்சாண்டர் ஹார்ட்டெகன். கடந்த காலத்திற்குப் பயணம் போகும் வாகனத்தைக் கண்டு பிடிக்கிறார் அவர். அவருக்கு ஒரு காதலியும் உண்டு.

அந்த வாகனம் கிடைத்தால் வீரமணிக்குப் பயன்படும். காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து தனது கட்சிக்கு இடையூறான விஷயங்களை அகற்றி விடலாமே.

மேற்கோள் மேடை:

sringeri acharyaபொது மக்களுக்காக இருக்கும் கிணறு, குளம், பிரார்த்தனைக் கூடங்கள் முதலியவற்றை இன்னார்தான் உபயோகிக்கலாம், இன்னார் உபயோகிக்கக் கூடாது என்று தடுக்கக் கூடாது. அது போன்று தடுப்பவர்களுக்குத் தண்டனை அளித்தாலும் தவறில்லை.

– சிருங்கேரி பீடம் சங்கராசாரியார்‚ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்
பக்.49 / ஜகத்குரு பதிலளிக்கிறார் / வித்யா தீர்த்த ஃபவுண்டேஷன்.

6 Replies to “போகப் போகத் தெரியும்-10”

 1. சுப்பு, ஒரு முடிவாத்தான் இருக்கீங்க போலருக்கு. நடத்துங்க. :‍)

 2. வீரமணிக்கு டைம் மெஷினா! நச் சிபாரிசு :))) அருமையாகப் போகிறது போகப் போகத் தெரியும். தியாகி நெல்லை ஜெபமணி துக்ளக்கில் எழுதிய கண்டு கொள்வோம் கழகங்களில் வைக்கத்து ஃபிராடு பற்றி கிழித்திருக்கிறார். வீரமணி இன்று வரை பதில் சொல்ல்ல வாயைத் திறக்கவேயில்லை. வீரமணி டைம் மெஷின் ஏறி பின்னால் போனாலும் பதில் கிடைக்காது. மேலும் தொடருங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

  விஸ்வா

 3. எப்படி இப்படி ஆதாரங்களைத் திரட்டுகிறாரோ சுப்பு அவர்கள் ?? கலக்கலாக போகிறது அவரது தொடர்.. எனக்கென்னமோ இந்த மாதிரி தொடர் குண்டுகளிப் போடப்போவதால்தான் இந்த தலைப்பு வைத்தாரோ??

 4. ஒரிஜினல் சுயமரியாதைக் காரர்களும், பின்னர் அங்கிருந்து வெளியேறிய “கண்ணீர்த்துளி”களும் எப்பேர்ப்பட்ட ” நடுநிலை” வாதிகள் என்பது புலப்படுத்தும் வண்ணம் உள்ளது திரு சுப்புவின் கட்டுரை.

 5. வீரமணி-ஈரமணி
  அது நமத்து போய் இருப்பதால் அதிலிருந்து எந்தவிதமான ஒலியும் வராது.-
  அது கீறல் விழுந்த இசைத்தட்டு
  அதிலிருந்து எப்போதும் ஒரே மாதிரியான வசைகளே திரும்ப திரும்ப ஒலிக்கும்
  இருளை குறிக்கும் கருப்பு சட்டையை அணிந்திருக்கும் அவரிடம் எந்த கேள்விக்கும் மறுமொழி கிடைக்காது.
  அவரின் பார்வைக்கு எத்தனை ஆதாரங்களை வைத்தாலும் அதை அவர் பார்க்கமாட்டார் பார்த்தால் அவர் இந்துக்கள் மீது கொண்டுள்ள தவறான பார்வையை மாற்றிக்கொள்ள நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *