போன வருடத் தொடக்கம். நண்பனது நான்கு மாதக் குழந்தையை முதன்முறையாகப் பார்க்கப் போகும்போது அதற்கேற்றவாறு ஏதாவது பரிசு வாங்கிச் செல்ல வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தோம். குழந்தையின் தொட்டிலில், தலைமாட்டில் கட்டுவதற்கேற்றவாறு சிறு மணிகள் அசையும், சின்னச் சின்ன பொம்மைகள் சுற்றிவரும் அந்த விளையாட்டுப் பொருளை வாங்கலாம் என்று மனைவி சொன்னாள். சரியென்று தேடி சில மாடல்களைப் பார்த்தோம். கடைசியில் ஒன்றைத் தேர்வு செய்து வாங்கப் போகும் சமயம் லேபிளைப் பார்த்தேன், சீனத் தயாரிப்பு என்று போட்டிருந்தது. கூடுமானவரை சுதேசிப் பொருட்களை வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பது எங்கள் குடும்பம். அதனால், இது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானப் பொருள் இல்லையே இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை. மூன்று நான்கு கடைகள் ஏறி இறங்கியும் இதே அனுபவம் தான். இந்த விளையாட்டுப் பொருள் என்று இல்லை. எல்லாக் கடைகளிலும் அநேகமாக 80 சதவீதம் விளையாட்டுப் பொருட்கள் சீனச் சரக்குகள் தாம். இந்த விளையாட்டு உற்சாகம் தருவதாயில்லை, வெறுப்பும், சலிப்புமே மிஞ்சியது.
உலக நாகரீகத்தில் முதன்முதலாக குழந்தைகள் விளையாடச் சொப்புகள் செய்து, வரலாற்றின் புதைகுழிகளில் எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து நாம் காண்பதற்காக விட்டுச் சென்ற எனது சிந்துச் சமவெளி மூதாதைகள் நினைவில் வந்தார்கள். “மிருச்ச கடிகம்” என்ற பழைய காவிய நாடகத்திற்குப் பெயர் தந்த அந்த மண் இயல் சிறு தேர் மனதில் ஓடியது.
கிருஷ்ணா கிருஷ்ணா என்று சுஜாதா 80களில் எழுதிய ஒரு நாடகம். அதில் ஒரு பொம்மை கம்பனிக்காக, அது ஆரம்பித்த காலம் தொட்டு, பாட்டுப் பாடிக் கொண்டே ஒவ்வொரு கிருஷ்ணர் பொம்மையையும் ஆத்மார்த்தமாக ஒரு குழந்தையை உருவாக்குவது போல் செய்துவருவார் ஒரு கைவினைஞர். தலைமுறை மாறுகிறது, முதலாளியின் மகன் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின், உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாக உணர்கிறான். கைவினைஞர் விசுவாசி, அவரை வெளியில் தள்ளவும் முடியாது, உற்பத்தியும் உயரவேண்டும். ஜப்பானில் இருந்து ஒரு இயந்திரத்தை வரவழைக்க, அது அவர் செய்த ஒரு கிருஷ்ணர் பொம்மையை அச்சில் வார்த்து விடுகிறது, அதற்குப் பிறகு, அவரது வேலை ரொம்பவும் சுளுவாகி விடுகிறது. ஆத்மார்த்தமாக ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பொத்தானை அமுக்குகிறார். கிருஷ்ணர்கள் நிமிடத்திற்கு டஜன் கணக்கில் தயாராகிறார்கள்! தொழில்மயமாதலின் போது மதிப்பீடுகள் மாறுவதை உணர்ச்சிபூர்வமாகச் சித்தரிக்கும் ஒரு நல்ல நாடகம் இது.
இப்போது இது போன்று ஒரு நாடகம் எழுதினால், கண்டிப்பாக அதன் களமாக எந்த இந்திய நகரமும் இருக்காது, அது நிகழுமிடம் தென்சீன மாகாணத்தில் ஏதாவது ஒரு நகரமாகத் தான் இருக்கும்! ஏனென்றால் 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய விளையாட்டுப் பொருள்கள் சந்தையில், இப்போது 70லிருந்து 80 சதவீதம் சீனச் சரக்குகள் தான் என்று புலம்புகிறார்கள் இந்திய விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர்கள். இந்தியப் பொம்மைகள் விற்கும் விலையில் பாதிக்கும் கம்மியாக்கி சீனத் தயாரிப்புப் பொம்மைகளை குப்பையைக் குவிப்பது போல இந்தியக் கடைகள் எங்கும் கொண்டு வந்து கொட்டுவதால், இந்தப் போட்டியை எப்படிச் சமாளிப்பது என்று திணறுகிறார்கள் அவர்கள்.
எனது கடுப்புக்குக் காரணம், இந்தச் சரக்குகளின் குவிப்பு மட்டுமல்ல, அவற்றின் சாதாரணத்தனம், மிக மலிவான தரம், அன்னியத் தனம் எல்லாம் கூடத் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களுடன், ஏறக்குறைய ஒரே அச்சில் வார்த்த்து போன்ற புசுபுசு டெடி கரடிகள் – எல்லாக் குழந்தைகளும் இந்த ஒன்றைத் தான் கொஞ்சி விளையாட வேண்டும் என்பது அராஜகம் இல்லையா? இந்தியத் தன்மையும், கலை உணர்வும், அழகியலும் கிஞ்சித்தும் இல்லாத மிருக பொம்மைகள்.. யானையைக் கூட ஒல்லியான உடலுடன், சிறு குழாய் அளவில் தும்பிக்கை, சொங்கிக் கை கால்களுடன் டெடி கரடி உட்கார்ந்திருக்கும் அதே போஸில் புசுபுசு பொம்மையாக செய்கிறார்கள். பார்க்க யானை போன்றே இல்லை. பிளாஸ்டரில், மரத்தில் வரும் பல கடவுளர் சிலைகள் கூட இப்போது டிராகன் தேசத்தில் தான் ஜனிக்கின்றன. நம் மண்ணின் திருவிழாவான விநாயக சதுர்த்தியில் கூட, சீனக்களிமண் பிள்ளையார்கள் தொகை வருடாவருடம் சீனமக்கள் தொகை போன்றே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் முயற்சி செய்து அவர்கள் இந்தத் திருவுருவங்களைக் காப்பியடித்தாலும், பலவற்றில் (குறிப்பாக பிளாஸ்டர் பொம்மைகள்) மூக்கும், முழியுமே காட்டிக் கொடுத்து விடுகிறது.
அது தவிர, முக்கியமாக இந்த விளையாட்டுப் பொருள்களால் உருவாகும் உடல்நலம் மற்றும் சுற்றுப் புறச்சூழல் கேடுகள் அபாயகரமானவை. எந்த விதத் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப் படாமல் தயாராகும் குழந்தைகளுக்கான இந்தப் பொருட்களை நம் சந்தைகளில் ஊடுருவ விட்டது அரசு செய்த பெரும் தவறு.
இதனை சரிசெய்யும் வண்ணமாக இந்திய அரசு 2009 ஜனவரி மாதம் சீன விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதியை ஆறு மாதங்களுக்கு முற்றிலுமாகத் தடை செய்த்து மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்தது. ஆனால் இதனை எதிர்த்து உலக வர்த்தக மையத்தில் (WTO) முறையீடு செய்யப் போவதாக சீனா மிரட்டியதை அடுத்து மார்ச் மாதமே இந்தத் தடை உத்தரவை இந்தியா மாற்றவேண்டியதாயிற்று – உலக அளவிலான தரக் கட்டுப்பாடு நிறுவனங்களின் சான்றிதழ்கள் பெற்ற விளையாட்டுப் பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப் படும் என்று இந்தியா கூறியது. முன்பு வந்ததில் 10 சதவீத பொருட்களே இதில் தேறும் என்பதால் தரமான பொருட்கள் மிதமான அளவிலேயே இனிமேல் உள்ளே வரும் என்று சொல்லப் படுகிறது. சட்டம் மற்றும் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் நமது அரசின் மெத்தனம் நாடறிந்தது. பார்க்கலாம்.
விளையாட்டுப் பொருட்கள் தெளிவாகத் தெரியும் ஒரு உதாரணம். பாலியஸ்டர் லினன் இழைகள், பாட்டரி, பல்புகள், டயர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டுத் தளம் போடும் டைல்ஸ் என நம் அன்றாட உபயோகப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் அதில் சீனப் பொருட்களின் பங்கு சமீப காலங்களில் அசுரத் தனமாக வளர்ந்து வருகிறது.
- 2008 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்ட்த்தில் சீனப் பொருட்களின் இறக்குமதி 38 சதவீதம் உயர்ந்துள்ளது, குறிப்பாக கெமிக்கல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், இயந்திரங்கள், பட்டு.
- சீன இரும்பு எஃகு இறக்குமதி இதே காலகட்ட்த்தில் 44 சதவீதம் உயர்ந்துள்ளதாக டாடா, ஜிண்டால் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூறுகின்றன.
தரம் குறைந்த சீனப்பொருட்கள் உள்நாட்டு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையே பாதிக்கின்றன.
- சமீபத்தில் டாங்க் ஃபாங்க் என்ற சீனக் கம்பெனியிடமிருந்து வாங்கிய பழுதுபட்ட இயந்திரங்கள் துர்காபூர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்சார பவர் பிளாண்டையே செயலிழக்கச் செய்தன. (இந்த உயர்தர பவர் பிளாண்ட் எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கியது).
- புகழ்பெற்ற வோக்ஹார்ட் மருத்துவ நிறுவனம் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் ஆசிட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சமீபத்தில் இழுத்து மூடியது. சீன இறக்குமதி வெள்ளம் பாய்ந்து அதை மூழ்கடித்து விட்டது.
உலக ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக நெறிமுறைகளின் படி, இதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதியை முழுமையாகத் தடைசெய்ய முடியாது தான். அது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்துறைகள் பலவற்றை ஒரேயடியாக அழித்தொழிக்கும் வகையில் இந்த இறக்குமதி இருந்தால்? அது தான் இப்போது கவலை தரும் விஷயம் என்று இந்திய வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, உலகப் பொருளாதாரம் மநத நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் சீனப் பொருள்களின் வரத்து எதிர்பார்ப்பை விட மிக்க் குறைவாக இருக்கிறது. சீனா ஏராளமான அளவில் பொருட்களை உற்பத்தி செய்து தனது கிட்டங்கிகளில் வைத்திருக்கிறது. இவை ஏற்றுமதியாகாமல் தேங்கினால், அது சீனப் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இப்போது பெரிய அளவில் இந்திய வர்த்தகத்தை சீனா குறிவைக்கிறது.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது.
2008ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் மாதங்களூக்கு இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 42 பில்லியன் டாலர்கள் (இதற்கு முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் அதிகம்). ஆனால் இதில் இந்தியா கணக்கிலான வர்த்தக மீதத்தில் (balance of trade) 16 பில்லியன் டாலர் பற்றாக்குறை (defecit) உள்ளது! அதாவது இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
சீன அரசு தனது ஏற்றுமதியாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கியும், மற்றும் பல வசதிகள் செய்தும் ஏற்றுமதி வெள்ளம் அடங்காமல் பொங்கிக் கொண்டிருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறது. இதனால் உலக சந்தையில் பல இந்திய ஏற்றுமதியாளர்கள் தரம் உயர்ந்த தங்கள் பொருட்களை 10-15 சதவீதம் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் சந்தையை விட்டே வெளியே போகவேண்டியது தான் என்ற நிலை!
விளையாட்டுப் பொருட்கள் விஷயத்தில் கொஞ்சம் வளைந்து கொடுத்திருக்கும் இந்திய அரசு இனி வரும் காலங்களில், சீனக் கூளங்கள் இந்தியாவில் குவிவதை சட்டரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முனைந்து தடுக்கும் வழிமுறைகளை மேற்கொண்டேயாக வேண்டும். 2008ல் காலாவதியான சீனப் பட்டு மீதான சுங்க வரியை அரசு மீண்டும் விதித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.
இன்றைக்கு இந்திய தொழில்துறை நிறுவனங்கள், உழைப்பாளிகள், பாட்டாளிகள், நுகர்வோர் என்று அனைவரையும் கடுமையாக பாதிக்கும் இந்த பிரசினை பற்றி அரசியல் கட்சிகள் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக தங்களை இந்திய உழைக்கும் வர்க்கத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளூம் இடதுசாரிகள் இந்த விஷயத்தில் முற்றிலுமாக இந்திய சமூக நலன்களுக்கு எதிராகவும், சீன அடிவருடிகளாகவுமே நடந்து கொள்கிறார்கள் என்பது கண்கூடு.
வர்த்தகம் மட்டுமல்ல, அருணாசலப் பிரதேசத்தை தங்கள் பகுதி என்று பூடகமாக சொந்தம் கொண்டாடுதல், திபெத் போன்ற அரசியல் பிரசினைகளிலும் அதிகார விரிவாக்க விழைவை அப்பட்டமாக செயல்படுத்தும் சீனா என்கிற சர்வாதிகார நாடு இந்தியாவை துச்சமாக மதித்தே செயல்பட்டு வருகிறது.
அரசியல், ஊடகங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கடையிலும் சீன ஆக்கிரப்பின் கரங்களைப் பார்க்க நேரும் ஒரு சராசரி இந்தியன் மனதில் சீனாவைப் பற்றிய எத்தகைய அச்சமூட்டும் பிம்பம் உருவாகி வரும் என்பதை எண்ணிப் பாருங்கள். அது இன்றைய சீனாவுக்கு முற்றிலும் பொருந்துவதே.
நண்பர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு கணம் நெருப்புமிழும் டிராகன் கொடுங்கண்களுடன் வாலைச் சுழற்றிப் பாய்வது போல் தோன்றுகிறது. எதிரே கைகளை உயர்த்திக் கொண்டு சீன வாஸ்து பொம்மை ஒரு அர்த்த புஷ்டியுடனான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறது.
இவை மட்டுமல்ல பாகிஸ்தான் மூலம் நமக்கு ஏதாவது பிரச்சனை உண்டாக்கிகொண்டே இருப்பது, அனுசக்தி ஒப்பந்தத்திற்கு நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இல் நமக்கு எதிராக செயல்பட்டது, உறவாடி கொண்டே முதுகில் குத்தியது என சீனாவின் கைங்கரியங்களை அடுக்கி கொண்டே போகலாம். பாகிஸ்தானையாவது நம்பலாம், ஆனால் நன்பன் போல் இருந்து நயவஞ்சகம் புரியும் சீனாவை நம்பவே கூடாது.
உருப்படியான கட்டுரை. சரியாகக் குறிவைத்து எழுதி இருக்கிறீர்கள். சீனா இந்தியாவிற்கு ஒரு பெரும் அபாயம், நம்மைப் பலவிதங்களில் வியூகம் வைத்து அழிக்க முனைகிறது சீனக் கொடுங்கோல் அரசு. நம் நாட்டிலோ ஏகப்பட்ட ஐந்தாம்படைகள் அவர்களுக்காகக் கைக்கூலி வேலை செய்ய வேண்டி விரும்பிப் பணியை மேற்கொள்கின்றன. மத்தியிலோ நாட்டுக்கு என்ன ஆகப் போகிறது, அதை எப்படித் தடுப்பது, நாட்டை எப்படிக் காப்பது என்பது குறித்து எந்தக் கவலையும் இல்லாது, எந்தத் திட்டமும் இல்லாது தம்மைக் கொழுக்க வைப்பதிலே மட்டும் அக்கறை செலுத்தும் ஒரு கூட்டம் அதிகாரத்தில் இருக்கிறது.
இந்தியருக்கோ அன்றாட வாழ்வுப் பிரச்சினையில் இருந்து தலை நிமிர்ந்து வானில் உள்ள செயற்கைக் கோளைக் கூடப் பார்க்க முடியவில்லை.
எதிர்காலம் என்று ஒன்று இந்தியாவுக்கு உண்டா?
மைத்ரேயா
மைத்ரேயனின் கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில் சீனக் குப்பைகளை விற்க இந்தியாவை விட சிறந்த சந்தை வேறு எங்கும் கிடையாது. தரவேண்டியதை தரவேண்டிய ஆட்களுக்குத் தந்துவிட்டால் விஷம் கலந்த பாலைக்கூட விற்று விடலாம் நம் நாட்டில். அதுதான் நிலைமை. இந்த அளவு தமது கோரப்பற்களை நீட்டி இந்தியாவின் பொருளாதாரத்தையும்,. உள்ளூர் தொழில் முனைவோர்களையும் நசுக்கும் இந்த சீனப் பொருட்களை தடை செய்வதே இந்தியக் குழந்தைகளுக்கும், நமது தொழில் துறைக்கும் நன்மைபயக்கும் செயலாக இருக்க முடியும். அரசு சிந்திக்க வேண்டும்.
இந்தி.. சீனி பாய் பாய் என்று சொல்லிச் சொல்லியே நமது மக்களை காங்கிரஸ் கேனையர்கள் ஆக்கியது, இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றியதையும் அந்த நிலங்கள் நம்மிடம் இல்லை என்பதையும் நமது குழந்தைகளுக்கு சொல்வதில்லை. சீனா ஒருபோதும் நமக்கு சாதகமாக செயலபட்டது கிடையாது. ஆனால் இன்றும் சீனா நமது நன்பன் என மக்களை நம்ப வைக்க முயல்கிறது ஒரு கூட்டம். சீனாவுக்காக நமது நாட்டு தொழில்களை நசுக்கவும் தயாரகிவிட்டோம். கொடுமை.. சீனாவிற்கு ஒற்று வேலை பார்க்கும் சில அரசியல்வாதிகளுக்கும், கம்யூனிசத்திற்க்காகவும், போலி மதச்சார்பின்மைக்காகவும் நாட்டையே காட்டிக்க்கொடுக்கத் தயங்காத வெளிநாட்டு ரத்னாக்களும், தோழர்களும் சீனக் குப்பைகளினால் விளையும் சேதாரங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவர்களுக்கு அவர்களது கொளுகைதான் முக்கியம். நாட்டை நேசிக்கும் மக்கள் ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுஇதான் இதுபோன்ற விஷயங்கள் தடுத்து நிறுத்தப்படும். அருமையாக தலைப்பிட்டுள்ளார் ஜடாயு அவர்கள்.
வணக்கம்,
இதை எப்படி தடுப்பது? ஒரு புத்தகக் கடையில் கம் ஸ்டிக் வாங்கச் சென்ற பொழுது அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகள். ஜெர்மனியின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு (கம் ஸ்டிக்_ல் இந்திய தொழில் நுட்பம் என்ன செய்து கொண்டிருக்கிறது என தெரியவில்லை) பாரத நிறுவனம் சந்தைப்படுத்தும் ஒரு கம் ஸ்டிக்_ன் விலை:ரூ.30, ஆனால் அதைவிட அளவில் அதிகமாக உள்ள சீன தயாரிப்பின் விலை வெறும் ரூ.10 மட்டுமே.
நான் தேசபக்தியைக் காட்ட ரூ.30 கொடுத்து நம் நாட்டு நிறுவனம் சந்தைப்படுத்திய கம் ஸ்டிக்_கையே வாங்கினேன்.
இதற்கெல்லாம் என்ன வழி? சீனத் தயாரிப்புகள் விற்பனை செய்யும் இடத்தில் ஏன் இந்தியப் பொருள்கள் கிடைப்பதில்லை?
யாரேனும் கேட்டுச் சொல்லுங்களேன்!!
அருமையான கட்டுரை.
இதுகுறித்த எனது முந்தைய கருத்தை மீண்டும் பதிப்பிக்க முயல்வேன்.
தமிழ் ஹிந்துவில் வெளியாகியுள்ள மற்றொரு அருமையான கட்டுரை. நிகழ்காலத் தொடர்புடையதாக இருப்பதால் உபயோகமான கட்டுரை.
ஜடாயு எழுதியபடி இந்த சீன இறக்குமதி, இந்திய உற்பத்தியை பாதிக்கும் ஒரு மிகப் பெரிய கொடுமை. கொக்கக் கோலாக்கள் நம்மூர் காளிமார்க் சோடாவை அழித்ததுபோல இவை நமது உள்ளூர் உழைப்பை அழிக்கின்றன. பெப்ஸியையும், கொக்கக் கோலாவையும் எதிர்க்கும் நமது காம்ரேடுகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. இந்தியர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாமல் சீனாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.
இந்த அளவுப் பொருட்களை இவ்வளவு குறைந்த விலையில் சீனாவால் எப்படி தயாரிக்கமுடிகிறது?
உலகில் மனித உரிமையற்ற ஒரு நாட்டினைத் தேடினால் அதில் சீனா முதலிடம் வகிக்கும். சீன மக்களின்மீது அதீதமான வேலைப்பளுவை சீன கம்யூனிஸ்ட் கட்சி சுமத்துகிறது. பாட்டாளிகள் சுவர்க்கத்தை அனுபவிப்பார்கள் என்று சொல்லிக்கொண்டு, ஒரு நாளில் ஏறத்தாழ 18 முதல் 20 மணி நேரங்கள் அவர்களிடம் வேலை வாங்குகிறது சீன அரசாங்கம். பெரும்பாலான சீனத்துப் பொம்மைகள் மற்றும் மற்ற பண்டங்கள் இப்படி பாட்டாளிகளின் ரத்தத்தில் விளைந்த பிண்டங்கள் மட்டுமே.
கேள்வி கேட்டால், நாட்டின் முன்னேற்றத்திற்காக இத்தகைய உழைப்பு நாட்டுப் பற்றின் மிகக் குறைந்த வெளிப்பாடு என்று சீன பொலிட்பீரோ சொல்லிவருகிறது. உண்மையில், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தேவையான பொருட்களை மிகக் குறைந்த செலவில் செய்துதந்து தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம். அரசாங்கத்திற்காக மக்கள் சாகவேண்டும் என்பதே கம்யூனிச ஆட்சியாக எல்லா கம்யூனிச நாடுகளிலும் இருக்கிறது. கம்யூனிசம் என்பது வெறும் இரக்கமற்ற ”அரசாங்க கேப்பிட்டலிசம்” மட்டுமே.
இவை தெரியாததால், சீனத்துப் பொருட்களை வாங்கும்போது அவை மனிதர்களை அடிமையாக்கிய ஒரு சுடுகாட்டில் விளைந்த பொருட்கள் என்பது நமக்குத் தெரியாமல் போகிறது.
மேலும், தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான பொம்மைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. சீனத்துப் பொம்மைகளுக்கு toxic toys என்றே பெயர். அமெரிக்க அரசாங்கம் சீனத்துப் பொம்மைகளை தடை செய்துவிட்டது. அவர்களுக்கு அவர்கள் குழந்தைகள் முக்கியம். நமக்கு?
சீன பொருட்கள் விலை குறைவாக இருப்பதற்கு அங்கு உற்பத்தி விகிதம் அதிகம் இருப்பது முக்கிய காரணம். நமது நாட்டு தொழிலாளர்களுக்கு உரிமைகள் கேட்டு போராடும் காம்ரெடுகள், உற்பத்தி திறன் பற்றி வாய் திறக்க மாட்டர்கள். உண்மையில் நமது நாட்டை விட மனித உரிமை குறைந்த நாடுதான் சீனா. இங்கு காம்ரேடுகள் முழங்கும் எழுத்து, பேச்சு, கருத்து, மத உரிமை இந்தியாவை விட சீனாவில் குறைவு தான். உதாரணம் : டினாமன் சதுக்க நிகழ்வுகள். ஒரே வித்யாசம். நமது காம்ரேடுகளை விட சீன காம்ரேடுகள் தேச பக்தர்கள் என்பது தான். சீன படைகள் நமது புனித பாரத மண்ணை ஆக்கிரமித்த போது, சீன படைகளை ‘விடுதலை படை’ என்று கூறி, வரவேற்க முனைந்த நமது காம்ரேடுகளின் தேச பக்தி மறக்கக் கூடியதா? திபெத் சீனாவின் ஒரு பகுதி என அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்திய அதே காம்ரேடுகள், காஷ்மீர் பிரச்சினையை, பாக்கிஸ்தானுடன் பேசி முடிவு செய்யலாம் என கூறியது மறக்கக் கூடியதா? உண்மையை கூற வேண்டுமானால், கம்யூனிஷ்டுகளின் பாசம் சீனா, ரஷியா மீதுதான்.