நகரம் நானூறு – 8

இந்த முறை நகரத்தில் திரியும் யானைகளின் உலா. சென்னைக்கு யானை; பெங்களூருக்கு ஒட்டகம். பெங்களூர் ஒட்டையை பின்னொரு நாள்பார்ப்போம். இப்போதைக்கு சென்னை நகரத்து யானைகள் இடம்பெறுகின்றன. (படங்களில் காணப்படுபவை தஞ்சை பெரியகோவில் முன்னால் நிற்கும் யானை. நாமம் போட்டது, ஸ்ரீரங்கம் ஆலயத்தைச் சேர்ந்தது.)

elephant-3
முன்னே மணியொலித்து மோதி அறிவிக்கச்
சின்னதாய் ஆனை தெருவந்தால் – சன்னலெல்லாம்
பிஞ்சு முகம்முளைக்கும் பேட்டை கலகலக்கும்
குஞ்சிரிப்புக் கென்ன குறை.

கடைத்தெருவில் வாழை கரந்தொடக் காசு
உடைக்கின்ற தேங்காய்தென் னோலை – சடக்கென்று
தானே குவிகின்ற சாத்தியங்கள் உண்(டு)அதனால்
ஆனையொன்று வாங்கிடலா மா.

elephant-with-namam

யானைகள் அவ்வப்போது கோவில்களுக்கும், கட்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுவதுண்டு. அப்படி வாடகைக்குப் போகும் யானைகளின் கோலம் அன்றாடம் மாறிகொண்டே இருக்கும். நேற்று நாமம்; இன்று திருநீறு; நாளை ‘கடவுள் இல்லை’ கோஷம் என்று ஒவ்வொரு நாளும் யானை சுமக்கும் வேடம் அனேகம்.

நேற்றிட்ட நாமம் நெடுமால் கோயிலுக்கு
தீற்றிட்ட சாம்பல் சிவத்துக்கு – மாற்றியெதும்
போடா திருந்தால் புரட்சிகரக் கட்சிக்கு
வாடகைக்கு ஆனையுறும் வாழ்வு.

elephant-2

சேன்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வந்தால் பாதிப்புக்கு ஆளாவது தெருக்களில் இட்டுச் செல்லப்படும் யானையும்தான். இப்படி ஒரு காட்சியைக் கண்டபோது புகைப்படம் எடுக்கத் தவறிவிட்டேன். இனி என்றாவது ஒருநாள் கிடைக்கலாம்.

சொட்டும் குழாயைத் துதிக்கைக்குள் மூழ்கடித்து
ஒட்டஒட்ட என்ன உறிஞ்சிடினும் – கிட்டியதும்
என்னை? வெறுங்காற்றே! ஏமாந்த யானையுடன்
சென்னை நகரத் தெரு.

துதிக்கையை ஆசி வழங்க உயர்த்திய அடுத்தகணமே அதே துதிக்கையைக் காசுவேண்டி தாழ்த்தவும் பழகியிருக்கிறதல்லவா? ஓட்டுக்குக் கையேந்தி அடுத்த கணமே மக்களுடைய முகத்தை மறந்துவிடும் போக்குக்கு இது எவ்வளவோ மேல், இல்லையா! அங்கே உயரும் கை, தாழ்கிறது. இங்கோ, தாழும் கை உதைக்கிறது.

ஆசிக்(கு) உயர்ந்தகை அப்படியே முன்தாழ்ந்து
காசுக்காய் ஏந்தும் காட்சியிதை – யோசித்தால்
வாக்குக்குக் கையேந்தி மக்கள் முகம்மறக்கும்
போக்குக்(கு) இதுமேல்தான் போம்.

5 Replies to “நகரம் நானூறு – 8”

  1. யானைக் கவிதைகள் அருமை. இந்தக் கவிதைகளின் இலக்கணம் பற்றி தெரியாவிட்டாலும் தெருவில் யானை வந்தததும் தெருவில் நடக்கும் ரசமாற்றங்களைச் சொல்லும் முதல் கவிதையும், யானைக்கு வேடமிட்டு அதை காசு வசூலிக்கவும், காசு கிடைக்குமென்பதால் அதற்கு எந்த வேடமும் போடும் யானைப் பாகனும் வரும் மூன்றாம் கவிதையும், தண்ணீர்ப் பஞ்சத்தை நம்முடன் சேர்ந்து அனுபவிக்கும் நான்காம் கவிதையும் அருமை.

  2. நல்ல கவிதைகள் ஹரிகி. யானையின் நகர வாழ்வை எழுத்தாக்கியிருக்கிறீர்கள். கவிதைகளில் இருக்கும் பார்வையும், ஹாஸ்யமும் ஞானக்கூத்தனை நினைவுபடுத்துகிறது. தொட‌ர்ன்து இதுபோல‌ ந‌க‌ர‌வாழ்க்கையை உங்க‌ள் க‌விதைக‌ளில் ப‌திவு செய்ய‌ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    //
    முன்னே மணியொலித்து மோதி அறிவிக்கச்
    சின்னதாய் ஆனை தெருவந்தால் – சன்னலெல்லாம்
    பிஞ்சு முகம்முளைக்கும் பேட்டை கலகலக்கும்
    குஞ்சிரிப்புக் கென்ன குறை.
    //

    எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.

  3. நன்றி ஜெயக்குமார்.

    சேது, என் கவிதையில் உங்களுக்கு ஞானக்கூத்தன் தென்பட்டால், எனக்கும் அவருக்கும் உள்ள பொதுக்காரணி கம்பன் என்பதைச் சொல்லியாகவேண்டும். கம்பனைப் பயின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேலெல்லாம் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆளுமை கம்பனுடையது.

    நீங்கள் குறிப்பிட்டள்ள பாடலை எழுதும்போது உணரவில்லை என்றாலும், இப்போது (சில வருடங்கள் கழித்து) திரும்பிப் பார்க்கும்போது தோன்றுகிறது, இந்தப் பாடலின் வேர் கம்பனில் இருக்கிறது.

    வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
    கேளொடு கிடந்த நீலச் சுருளும், செங் கிடையும், கொண்டு,
    நீள் இருங் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்
    சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்.

    ராம லக்ஷ்மணர்கள், விஸ்வாமிததிரனோடு மிதிலைக்குள் நுழையும்போது சொல்வது. ‘சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம்‘‘. இதைப் போலவே அடிஓட்டமாக ஓடும் நகைச்சுவைக்காகவும் கம்பனுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.

  4. //சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்//

    வாவ்! என்ன அழகான வரி! நன்றி ஹரிகி.

  5. //ஒவ்வொரு நாளும் யானை சுமக்கும் வேடம் அனேகம்.//

    யானை வேடத்தை மட்டுமா சுமக்கிறது? பல சமயம் வேடதாரிகளையும் அல்லவா சுமக்க வேண்டியுள்ளது? [(:-)))

    அனைத்து ஆனைக் கவிதைகளும் அருமை ஹரிகி அண்ணா!

    அன்புடன்

    ப. இரா. ஹரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *