போகப் போகத் தெரியும்-16

ஏசுநாதர் ஏன் வரவில்லை

Bharathidasanதலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல்,
தாள் என்ற எட்டுறுப்பும்
தங்கநகை, வெள்ளிநகை, ரத்னமிழைத்த நகை
தையலர்கள் அணியாமலும்
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென்றே பாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்!
நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்பேயின்றி
நீள் இமைகள், உதடு, நாக்கு
நிறைய நகை போடலாம், கோயிலில் முகம் பார்க்க
நிலக்கண்ணாடியும் உண்டென
இலை போட்டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லோரும் வந்து சேர்ந்தார்
ஏசுநாதர் மட்டும் அங்குவர வில்லையே!
இனிய பாரத் தேசமே!

பாரதிதாசன் கவிதை

ஆனந்த ரங்கப் பிள்ளைபுதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் (1709-1761) நாட்குறிப்பு தமிழகத்தையும் பொறுத்தவரை ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். பிரெஞ்சு ஆட்சியை இங்கே உருவாக்கிய டியூப்ளேவிடம் ஆனந்தரங்கப் பிள்ளை ‘துபாஷாக’ இருந்தார். துபாஷ் என்றால் மொழிபெயர்ப்பாளர். செல்வந்தராக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை அன்றாட நிகழ்வுகளை எழுதி வைத்துள்ளார்.

இதுபற்றி அறிந்துகொள்ளப் பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் – ஓர் அறிமுகம் (பாரதி புத்தகாலயம் வெளியீடு) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் (பக். 15, 16)

புதிதாகக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிக் கொண்டவர்களுக்கும் பாதிரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. தேவாலயத்திற்குக் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வராத செல்வக் குடிப் பெண்ணொருத்தியுடன் பாதிரியார் ஒருவருக்கு ஏற்பட்ட பிணக்கை, நாட்குறிப்பு குறிப்பிடுவது வருமாறு:

ananda-ranga-pillai-diary“கனகராய முதலியார் உடன்பிறந்தான் குமாரன் ஆசாரப்ப முதலியார் பெண்சாதி செல்லத்துடனே இருக்கிறபடியினாலே அந்தப் பெண் அவர்கள் சாதியிலே இடவேண்டிய உடமையெல்லாம் தரித்துக் கொண்டு பரிமளகெந்த சுகந்தத்துடனே துலாம்பரமாயிருக்கப்பட்ட சல்லாப் புடவையைக் கட்டிக்கொண்டு, சுவாமிக்கு அடுத்தாற் போலயிருக்கப்பட்ட சிரேஷ்டராயிருக்கிற பாதிரியாரண்டையில் போய் முட்டிக்காலின் பேரிலிருந்து கொண்டு, தேகத்தியானமாய் பூசை கேட்கிறவிடத்திலே அந்த சுகந்த பரிமள சுகந்தத்தினுடைய வாசனை பாதிரியார் மேலே பட்டவுடனே அவர் பூசை சொல்லுகிறதைவிட்டு விட்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு கையிலேயிருக்கிறா பிரம்பினாலே கொண்டையிலே குத்தி, நீ கல்யாணக்காரி அல்லவா, நீ தேவடியாளா, உன்னுடைய புருஷனுக்கு வெட்கமில்லையா. சரீரம், மார்பு, ரோமத்துவாரமெல்லாம் தெரியத்தக்கதாகச் சல்லாப் புடவையைக் கட்டிக் கொண்டு கோவிலுக்கு வருவார்களா புண்யவதீ. நீ பூசை செய்தது போதும் எழுந்திருந்து வீட்டுக்குப் போ…. என்கிறதாகக் கோபித்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார். அதின் பேரிலே கிறிஸ்தவர் எல்லாரையும் அழைத்து இனிமேல் பெண்டுகள் ஒருத்தரும் மெல்லீசுப் புடவை கட்டத் தேவையில்லை என்றும், உடமைகள் தமிழரைப் போல இடப் போகாதென்றும், எப்போதும் போலே கொண்டை முடிக்கப் போகாதென்றும், சட்டைக்காரிச்சிகள் போலே கொண்டை முடிக்கச் சொல்லியும், வாசனை பரிமளத் திரவியம் பூசப்போகாதென்றும் இந்தபடிக்குத் திட்டப்படுத்தி நடந்து கொள்ளச் சொல்லி பாதிரியார் சொன்னார். அதின் பேரிலே கிறிஸ்துவர் எல்லாரும் கும்பல் கூடிக் கொண்டு கோவிலுக்குப் போய் பாதிரியாருடனே தற்கித்துப் பேசுகிறவிடத்திலே கெவுனிவாசல் முதலிலிருந்து கொண்டு எப்போதும் நடந்தபடி நடக்கிறதே அல்லாமல் நூதனமாய் நீங்கள் இப்படிச் சொன்னால் அது எங்களவருக்கொருத்தருக்கும் சம்மதப்படவில்லை என்று எதிர்த்துச் சொன்னார். நீங்கள் எங்களுடனே எதிர்த்துப் பேசலாமா என்று பிடித்துத் தள்ளவும் அவர் போய் பாதிரியார் சட்டையைப் பிடித்திழுத்து விஷயங்கள் ஏறக்குறையப் பேசி, இனிமேல் உங்களுடைய கோவிலுக்கு வருகிறதில்லை என்று சொல்லிவிட்டார்கள்.”

(ஆனந்தரங்கப் பிள்ளை தொகுதி – 1 : பக். 214-215)

தமிழர் என்ற சொல் இந்து என்ற பொருளில் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். இது கால்டுவெல் காலத்திற்கு முற்பட்ட நிலை. இப்போதும் தஞ்சை மாவட்டத்தில் ‘அவர் தமிழர்; முஸ்லீமோடு வியாபாரம் செய்கிறார்’ என்று சொல்கிற பழக்கமிருக்கிறது.

கிறித்தவ ஆலயங்களில் சாதிப் பாகுப்பாடு இருந்தது, அது வழக்காய் உருவெடுத்து நீதிமன்றங்களில் வைக்கப்பட்டது என்பதை இந்தமுறை சொல்லப் போகிறேன்.

தென்மாவட்டங்களில் நாடார்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது; புதுவையில் தாழ்த்தப்பட்டோர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் புதுவை.

அரச. மணிமாறன் எழுதிய புதுவைமுரசு தமிழ்க்கனல் க. இராமகிருட்டிணர் என்ற புத்தகத்தைப் பார்ப்போம் (பக். 39, 40):

கடந்த 1908ம் ஆண்டில் இருதய ஆண்டவர் கோவில் கட்டப்பட்டபோது உயர் ஜாதிக் கிறித்தவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் இடையே கலகம் மூண்டது. அரசாங்கம் தலையிட்டு இருதய ஆண்டவர் ஆலயம் மூடப்பட்டது. பழைய கோவிலிலும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மறுக்கப்பட்டது. மோதலில் பல தாழ்த்தப்பட்டவர்கள் சிறை சென்றனர்; சிலர் புராட்டஸ்டன்டுகளாக மாறினர். கிளர்ச்சி வலுத்து அதிமேற்றிராசனம் என்ற பழைய கோவிலும் மூடப்பட்டது. ஆறு மாதங்கள் இரண்டு கோவில்களும் பூட்டப்பட்டிருந்தன. பிறகு பாதிரி ஒருவர் விசாரணை செய்து தாழ்த்தப்பட்டவர் சில இடங்களில் மட்டும் வரலாம் என்று தீர்ப்பளித்தார். பிறகு உயர் சாதியினருக்குத் தேவைப்படாத நேரத்தில் தாழ்த்தப்பட்டவர் கோவிலின் நடுக்கூடத்திற்கு வரலாம் என்று நிச்சயிக்கப்பட்டது.

புதுவைமுரசு, முழக்கம் 1, ஓச்சு 5, 08.12.1930

கேரளத்தில் சமீபகாலம் வரை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கிறித்தவர்களோடு உயர்சாதி சிரியன் கிறித்தவர்கள் ஒன்றாக வழிபாடு நடத்துவதில்லை. இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் புதிதாக மதம் மாறியவர்கள் சர்ச்சுக்குள் அழைத்து வரப்பட்டார்கள். வாசலில் அவர்களைப் பார்த்தவுடனே, உள்ளே இருந்த சிரியன் கிறித்தவர்கள் ஜன்னல்கள் வழியாக குதித்து வெளியேறிவிட்டார்கள்.

இந்தச் சேதி கிருத்துவ நூல்களிலேயே பதிவாகியிருக்கிறது.

நம்பூதிரிகளுக்கு எதிராக (வைக்கத்தில்) போர் தொடுத்த ஈ.வே.ரா. சிரியன் கிறித்தவர்களுக்கு எதிராக ஏதாவது மூச்சு விட்டாரா என்பதை விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன்குளம் கிராமத்து கத்தோலிக்கக் கோவிலில் இருந்த பிரிவினைச் சுவர் பற்றியும் அது தொடர்பான விஷயங்களையும் விரிவாக எடுத்துச் சொல்கிறது பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய கிறித்தவமும் சாதியும் என்ற புத்தகம். இது காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு.

இனி, இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

தொடக்க காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் சமயமாக விளங்கிய கத்தோலிக்கம் காலப் போக்கில் தமிழக மேட்டிமை சாதியினரோடு சமரசம் செய்து கொண்டது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவைச் சார்ந்த கத்தோலிக்கர்கள் இரண்டாம் தர கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டனர். குருக்களாகவும், கன்னியர்களாகவும் அனைத்துச் சாதியினரையும் அனுமதிக்கக் கத்தோலிக்கத் திருச்சபை தொடக்கத்தில் ஆயத்தமாக இல்லை… எனவே இவர்களை உருவாக்கும் கிருத்துவப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாழ்ந்த சாதியினருக்கென்றே துறவற சபைகள் சில உருவாக்கப்பட்டன். சில தேவாலயங்களில் தாழ்ந்த சாதியினருகென்றே தனிக் குருக்கள் நியமிக்கப்பட்டனர்.

– பக். 23, 24.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தில் நாடார் சாதியினர் மிகுதியாக இருந்தனர். வேதமுத்து என்ற மதகுரு 1867ல் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த போதகர் வழிபாடு நிகழ்த்த நாடார்கள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். இத்தேவாலயத்தின் முன்பகுதியில் நாடார்களுக்கு என்று தனி இடமும், பள்ளர்களுக்கெனப் பின் பகுதியில் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன. சென்னை நகரில்உயர்குலத்தவருக்கும் தாழ்த்தப்பட்ட குலத்தவருக்கும் வெவ்வேறு நாட்களில் திவ்விய நற்கருணை வழங்கப்பட்டது.

நல்லதம்பி என்பவர் 1854-ல் குரு பட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதி வேறுபாடு பாராட்டதவர் என்பதனை உறுதிப்படுத்தும் முகமாக ஆதி திராவிடர் சாதியைச் சேர்ந்த சமையற்காரர் தயாரித்த தேநீரை அருந்தும்படி ஓக்ஸ் என்ற ஐரோப்பிய பாதிரியார் அவரை வற்புறுத்தினார். நல்லதம்பி மறுத்தார். மற்ற மிஷனெரிகளும் அது தேவையில்லையென்று சாதித்தனர். உடனே மிஷனெரிகளுக்குள் சர்ச்சை உண்டாகி அது லிப்சிக் வரை சென்று அங்கும் பிரிவினை உண்டாகச் செய்தது. கடைசியில் நல்லதம்பிக்கே வெற்றி.

– பக். 29.

பல்வேறு கத்தோலிக்க ஆலயங்களுடன், கத்தோலிக்க சமய நிறுவனங்கள், பள்ளிகள், அறப்பணி நிலையங்கள் வடக்கன்குளத்தில் இடம் பெற்றுள்ளதன் காரணமாகச் ‘சின்ன உரோமாபுரி’ என்று கத்தோலிக்கத் துறவிகளால் அது குறிப்பிடப்படும்.

– பக். 43, 44.

22.12.1848இல் வெள்ளாளர், நாடார்களின் தூதுக்குழுவொன்று பாளையங்கோட்டை வந்திருந்த மதுரை மறைமாவட்டத்தின் ஆயரான கனோஸ் என்பவரைச் சந்தித்தது. அச்சந்திப்பின்போது இலத்தின் சிலுவை வடிவில் அமைந்த புதிய ஆலயமொன்றைக் கட்ட வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்தனர். மேலும் அதன் உட்பகுதியில் இரட்டைக் கம்பியனி (கிராதி) அமைத்து இரு சாதியினரும் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.

– பக். 52.

இரண்டு கோவில்கள் என்று கூறத்தக்க வகையில் அமைந்திருந்த இக்கோவில் காற்சட்டை ஆலயம் (Trousers Church) என்று வேடிக்கையாக அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சாதிப்பிரிவுக்கும் ஒரு கால் (வெள்ளாளர்– நாடார்) என்ற முறையில் இது அமைந்திருந்தது. இரு பகுதிகளிலும் உள்ளவர்கள் வழிபாட்டின்போது பலிபீடத்தையும் பங்க்குக் குருவையும் தெளிவாகக் காணமுடியும். ஆனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வழிபாட்டின்போது பார்க்க முடியாதவாறு பிரிவினைச் சுவர் தடுத்து நின்றது.

– பக். 56.

trousers-church

(படம் நன்றி: காலச்சுவடு)

புதிய ஆலயத்தின் பலிபீடப் பகுதியில் பிள்ளையார், முதலியார் சாதியினைச் சேர்ந்த சிறுவர்களே குருக்களுக்கு உதவி செய்ய நின்றனர். மாதாவுக்கு மெழுகுதிரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டுமென்று விரும்பும் நாடார்கள் இச்சிறுவர்களிடமே கிராதிக்கு வெளியே நின்று அவற்றைக் கொடுக்க வேண்டும்.

– பக். 57.

1910 ஆம் ஆண்டில் புனித வெள்ளியன்று ஆலயத்தில் பாடியதற்காக ஒரு நாடார் கண்டிக்கப்பட்டார். வெள்ளாள ஆண்கள் அனைவரும் இதற்காகப் பழிவாங்குவதற்காக ஆலய வளாகத்தினுள் கூச்சலிட்டனர்.

– பக். 60.

18.11.1910இல் திருநெல்வேலியிலிருந்த மறைமாவட்டத் தலைவர், பிரிவினைச் சுவரை இடித்துத் தள்ளும்படி உத்தரவிட்டார். பிரிவினைச் சுவரை இடித்ததை எதிர்த்து வெள்ளாளர்கள் ஒரு வழக்கைத் திருநெல்வேலி துணை நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.

– பக். 68, 69.

1912 டிசம்பர் 18இல் நீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது. பிரிவினைச் சுவரை ஆயரும் பங்குக் குருவும் இரண்டு மாதங்களுக்கு கட்டிக் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து மாவட்ட முன்சீப் மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை ஆராய்ந்த மாவட்ட நீதிபதி, துணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்து சேசு சபையினர் மேற்கொண்ட செயல்களை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்தார்.

– பக். 72, 73.

மாவட்ட முன்சீப்பின் இத்தீர்ப்பை எதிர்த்து நால்வர் 1914ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தனர். நேப்பியர் என்ற ஆங்கிலேயரும் சதாசிவ அய்யர் என்ற இந்தியரும் இவ்வழக்கை ஆராய்ந்து 25.01.1916 இல் தீர்ப்பை வழங்கினர்.

– பக். 73.

நீதிபதி நேப்பியர் ‘இந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு செலவுத் தொகையும் கொடுக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. வாதிகளின் கோரிக்கை கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படுகிறது’ என்று தீர்ப்பளித்தார்.

– பக். 74, 75.

நீதிபதி சதாசிவ ஐயர் ‘இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் கருத்துப்படி இந்துக்களின் மத்தியில் கூட சாதிய வேறுபாடுகளும் அவற்றிற்கான மத அனுமதியின் பலமும் குறைந்து கொண்டு வருகிறது. இச் சந்தர்ப்பத்தில் சாதிக் கிறிஸ்தவர்கள் எனக் கூறப்படுவோர் இம் மரபுகளுக்குச் சட்ட அனுமதி வாங்க எடுக்கும் முயற்சிகளுக்கு யாரும் செவி சாய்ப்பது கடினம். இதன் விளைவாக இந்த மேல்முறையீடு செலவுத் தொகையோடு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த எனது கற்றறிந்த சகோதரனோடு முழுதும் உடன்படுகிறேன்’ என்றார்.

– பக். 76.

திராவிட இயக்கத்தின் தொடக்க காலம் 1917. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது 1916இல். இது தொடர்பாக திராவிட இயக்கத்தினர் ஏதாவது பேசியிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்.

இந்துமத நூல்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சில மரபுகள் முன்வைக்கப் பட்டன. அவை காலப்போக்கில் நடைமுறைப்படுத்தப் படாமல் செயலிழந்துவிட்டன. இத்தகைய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிப் போராட்டம் நடத்தும் திராவிட இயக்கத்தினர் வடக்கன்குளம் விவகாரம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்கிறேன்.

பங்குத் தந்தைகளோடு பங்கு பிரித்துக் கொள்வோர் சமூகநீதியை கிறித்தவ மதத்தில் ஏற்படுத்தினார்களா என்று அறிய விரும்புகிறேன்.

பிராமணர்கள்தான் சமூக நீதிக்கு எதிரிகள் என்று ஒரு கட்சியால் நூறாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே, நீதிபதி சதாசிவ அய்யர் 1916இல் வழங்கிய தீர்ப்பு சமூக நீதியா, இல்லையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சுயமரியாதைக்காரர்களின் ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் சின்னக் குத்தூசி கிறித்துவ மதத்தில் உள்ள சாதிக் கொடுமைகளை எழுதியிருக்கிறாரா என்று கேட்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் சாதிப்பாகுபாடு அதிகமாக இருந்தது என்பது உண்மைதான். அப்படி இல்லாவிட்டால் சில் பாரதியார் பாடல்களுக்குப் பொருள் இல்லாமல் போயிருக்கும். இதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.

இந்த வேறுபாடுகள் எல்லா மட்டங்களிலும் இருந்தன; எல்லா மதங்களிலும் இருந்தன. அப்படி இருக்கும்போது இந்து மதத்தை மட்டும் திராவிட இயக்கத்தினர் தாக்குவதில் என்ன நியாயம் என்று கேட்கிறேன்.

மற்றபடி நண்பர்களின் அரசியல் வரலாற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

கிறித்தவரல்லாதவரை எவ்வகையிலாவது கிறித்தவராக்குவது ஒவ்வொரு கிறித்தவரின் கடமையாகும்.

– பெங்களூர் மரியன்னபாளயா புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் பங்குத் தந்தை ஜோசஃப் மெனின்ஜிஸ் மார்ச் 11, 2009 அன்று நீதிபதி பி.கே. சோமசேகர் விசாரணைக் கமிஷன் முன் அளித்த சாட்சியம்.

13 Replies to “போகப் போகத் தெரியும்-16”

 1. இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் பங்குத்தந்தைகள் எப்படி பங்களிப்பார்கள்?? திருவள்ளுவரையெ கிறித்தவராக்கும் அதி முக்கிய வேலையில் இருக்கிறார்கள். சின்னக்குத்தூசி இந்துக்களை மட்டுமே குத்தும் ஊசி என நினைக்கிறேன். மற்றபடி உங்களது அபரிமிதமான உழைப்பை இந்தப் பகுதியிலும் கான்பித்திருக்கிறீர்கள். நன்றி அய்யா.

 2. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். சமூகநீதிக்காவலர்களும், துதிபாடிகளும் என்ன பதில் தரமுடியும்?
  உண்மை சுடும்போது பொய்யைத் தொழுதடிமை செய்யும் இந்தப் பேதைகள் இதைப்படித்தும் என்ன பயன்? பிதற்றிக்கொண்டே இருப்பார்கள்.

 3. அற்புதமான கட்டுரை. மிக அழகாக தொகுத்து அளித்திருக்கிறீர்கள். அருமை.

 4. சுப்பு அவர்களுக்கு

  மிக உன்னதமான பணி ஒன்றை செய்து வருகிறீர்கள். சாதிப் பாகுபாடுகளும் தீண்டாமைக் கொடுமைகளும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் வசிக்கும் செவ்விந்தியர்கள் தொடங்கி, ஆப்பிரிக்கப் பழங்குடியினர், கிழக்காசியப் பழங்குடியினர் தொடங்கி இந்தியர்கள் வரை அனைத்துப் பழங்குடியினரின் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இது பிராமணர்கள் புதிதாகக் கண்டுப் பிடித்தது அல்ல. உண்மையை மறைத்து இந்த ஈ.வெ.ரா.க் கும்பல்கள் பிரிவினையை வளர்த்தார்கள். இன்றைக்கும் விருதுநகர் நகரத்தில் நாடார் கிறிஸ்துவர்கள் தலித் கிறிஸ்துவர்களைப் பார்க்காமல் வணங்குவதற்காக தடுப்புச் சுவர் கட்டப் பட்டுள்ள சர்ச் இருக்கிறது. இதே கிறிஸ்துவர்கள்தான் கருப்பினத்தவர்களைத் தீண்டத்தகாதாகவர்களாக நடத்துகிறார்கள். ஆனால் பகுத்தறிவு வாந்திகள் இதையெல்லாம் என்றைக்கும் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் கிடையாது. சின்னக் கூசி வயிற்றுப் பிழைப்புக்காக எழுத்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார். அவரிடம் போய் நியாய அநியாயத்தைக் கேட்டால் அவருக்கு அதைப் பற்றி என்ன தெரியும் பாவம்?

  நன்றியுடன்
  விஸ்வாமித்ரா

 5. காற்சட்டை ஆலயத்தின் வரைபடம் இட்டிருக்கிறீர்களே. முதலில் நான் பார்த்தபோது இல்லை.

  இதல்லவா தீண்டாமை! இவர்களெல்லாம் இரட்டை டம்ளர் முறையைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள். எந்த தார்மீக அதிகாரத்தில்? நமது செக்யூலர் வியாதியஸ்தர்களும் இவர்களுக்கு பலமாக ஒத்தூதிப் பிழைக்கிறார்கள். “சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று கவிஞன் காறித்துப்பியது இந்தப் ‘பகுத்தறிவு’ச் செம்மல்களைப் பார்த்துத்தானோ.

  முகமூடியைக் கிழித்ததற்கு நன்றி திரு. சுப்பு.

  கந்தசாமி

 6. திரு சுப்பு, என்னுடய ஒரு பணிவான ஒரு வேண்டுகோள், நம்மில் எல்லாருக்குமே நம்முடய வேதங்கள் பற்றியோ நம்ம மதத்தை பற்றியோ ஒன்றுமே தெரியாது. ஏதோ கோவிலுக்கு போகிறோம்.எனக்கு இதைத் தா அதைத் தா என்று இறவனை வேண்டுவதுதான் இந்து மதம் என்று எண்ணத்துடன் மதத்தை பற்றிய வேறு கேள்விகள் எதுவும் கிடையாது.

  கடந்த காலத்தில் எத்தனையோ தவறுகள் நடந்துவிட்டன. We cannot turn back the clock. இப்படி இருக்கையில் நம் மத‌த்தைபற்றி தெரிந்துகொள்வது நல்லதல்லவா? எதற்காக வெறுப்பேற்றும் செய்திகளைப் பற்றி ஒரு sensationalismக்காக எழுதவும் படிக்கவும் செய்யவேண்டும்?

 7. சீதா அவர்களுக்கு, வேத இதிகாச தோத்திரப் பனுவல்களை அறிந்திடுவ‌தும் நமது மதத்தின் சீரிய கொள்கைகளைப் பின்பற்றிடுவதும் எத்தனை முக்கியமோ, அதைவிடவும் முக்கியம் வந்தேறி மதங்கள் மற்றும் இஸங்களின் தந்திரங்களையும், வியூகங்களையும் அறிவதும் முறியடிப்பதும். இதில் சென்சேஷனலிஸம் எதுவும் கிடையாது.

  கறையான்களைப் போல, கேன்சரைப் போல இவர்கள் பாரத தேசத்தையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சனாதன தர்மத்தையும் அரித்து அழித்துக் கொன்டிருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் அவதாரங்களும் போடும் வேச‌ங்களும் கணக்கற்றவை. இவற்றையெல்லாம் மிகுந்த சிரமப்பட்டு திரு. சுப்பு அவர்கள் ஆதாரங்களோடு தொகுத்து வழங்கிக் கொன்டிருக்கிறார்கள்.

  இந்துத் தத்துவங்களைப் பற்றிப் பேச நிறைய உபனியாசகர்கள் இருக்கின்றனர். அதற்கு நேர்ந்துள்ள ஆபத்துக்களைப் பற்றிப் பேசத்தான் ஆளில்லை. சுப்பு இப்போது அதைச் செய்கிறார்.

  க‌ந்த‌சாமி இரா

 8. கந்தசாமி அவர்கள் சொல்வது முற்றிலும் சரி. வந்தேறி மதங்கள் நம்மிடையே விளைவித்த குழப்பங்களும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதகங்களும், அந்த வந்தேறி மத நிறுவனங்களின் கைக் கூலிகளாய் திராவிட இன வெறியர்கள் நம்மைப் பிரித்தாள்வதும், இன்னும் பலவும் மக்களுக்கு எடுத்துச் சொல்லப் பட வேண்டும்.

  சுப்பு அவர்கள் மிக உன்னத பணி செய்கிறார்கள். சீதா அவர்கள் இந்தப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  அன்று ஆரம்பித்த கிறிஸ்துவத் தீண்டாமை கொஞ்சம் கூட குறையாமல் இன்று வரைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு “எரையூர்” மற்றும் புதுவை டயோசீஸ் நல்ல உதாரணங்கள். வன்னியக் கிறிஸ்துவரும், தலித் கிறிஸ்துவரும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் ராமதாசும், திருமாவும் அணைத்துக் கொள்வார்கள். டயோசீஸ் அணைத்துக் கொள்பவர்களைக் கண்டு கொள்கிற அளவிற்கு அடித்துக் கொள்பவர்களைக் கண்டு கொள்ளாது. இரண்டாயிரம் பேர்களைக் கவனிப்பதை விட அவர்களை கட்டியாளும் இருவரைக் கவனிப்பது சுலபம் தானே!

  வாழ்த்துக்கள் சுப்பு. தொடருங்கள் உங்கள் பணியை.

  நன்றி, அன்புடன்

  தமிழ்செல்வன்.

 9. சீதா அவர்களுக்கு,
  சுப்பு நம் கண்களைத் திறக்கக் காரணம், கிருஸ்தவ மதத்தின்பால் வெறுப்புண்டாக்க அன்று. நம் மதத்தின்பால் நமக்கே ஏற்பட்டிருக்கும் குற்றவுணர்வையும், அதனால் உண்டாகக் கூடிய ஹிந்து மத வெறுப்பையும் போக்குவதற்கே. நாம்தான் த‌வ‌று செய்துவிட்டோம், ம‌ற்ற‌ பிற‌ ம‌தங்க‌ள் அப்ப‌டியில்லை என்ற இருளில் இருந்து ஹிந்து ம‌த‌ ஒளியைக் காட்டுவ‌த‌ற்கே.

  கார்கில்

 10. தமிழர் ‍‍ முஸ்லீம் என்னும் சொல்வழக்கு இப்போதும் உண்டு.
  தமிழ் நாட்டில் தமிழரைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்பதனாலேயே தமிழன் என்று ஒரு டிவி சேனலையே முஸ்லீம்கள் நடத்துகின்றனர். அதில் இஸ்லாமே தமிழர்க்கு நன்று, ஹிந்துக்கள் தமிழர்களை அடிமைப் படுத்தி வைத்துள்ளனர் எனப் போதனை செய்கின்றனர். இதற்குக் காரணம் இன்னும் தமிழர்கள் வலிவுடன் இருப்பதுதான். ஆனால் தமிழர்கள் ஒடுக்கப் பட்டு எண்ணிக்கை குறைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் சாட்சி : இலங்கையில் தமிழ் முஸ்லீம்கள் 1981ம் ஆண்டுமுதலே, ‘நாங்கள் தமிழர் அல்லர்’ ‍என்று அறிவித்து எஞ்சியிருந்த தமிழர் (ஹிந்துக்கள்) களுக்கு எதிராக ஜிஹாதியில் ஈடுபட்டனர். இப்போதும் அவர்கள் என்று குறிப்பிடுவதில்லை; ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பத்திரிகைகளில், வலைத்தளத்தில் முஸ்லீம் என்பவன் தமிழனாக இருக்கமுடியாது; தமிழன் முஸ்லீம்களின் எதிரியே என்னும் அளவுக்குத் தமிழர்களைச் சித்தரித்து செய்திகள் இருக்கும் (https://www.slmc.org.uk/). ‘LTTE’ என்று குறிப்பிடாமல் நேரடியாக தைரியமாக ‘Tamils’ என்று சொல்லிதான் வசைபாடி இருப்பார்கள்(‘Tamils’ – அதாவது எல்லாத்தமிழரும் முஸ்லீம்களுக்கு எதிரியே;).

 11. சமூக நீதி காவலர்கள் என்பதன் உண்மைப்பொருள்
  சமூகத்திடமிருந்து நிதியை கொள்ளையடித்து தங்கள் குடும்பத்திற்கு பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு தாங்கள் சமூகத்திர்க்காகத்தான் உழைக்கிறோம் என்று மக்களை தொடர்ந்து நம்பவைத்து ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள்.

  துதி பாடிகள் என்றால் அவர்களை குறை கூறுபவர்களை தூற்றி தூற்றி பாடுபவர்கள் என்று பொருள்.

 12. இதன் மறுபக்கம்…இன்றும் இந்த கோவிலை பார்க்கலாம் , கம்பீரமாக உள்ளது.. இது தண்ணீர் ஊற்றி கேட்டபட்டதல்ல பதநீர் ஊற்றி கட்டப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள மிகபெரிய கிறிஸ்தவ கோவில். பிள்ளைமாறும், நாடரும் கையொப்பமிட்டு இந்த கோவிலை கட்டினார்கள். ஒருவர் மற்றவர் பக்கம் செல்வதில்லை என்று ஒப்பு கொண்டனர். இன்று இது வித்தியாசமாக தெரியலாம். அதன் பின் வந்த பாதிரியார் சரியாக நடந்து கொள்ளாததால், பிரச்சனை பெரிதாகி, கண்ணீர்புகை குண்டு வரை சென்றது.. இதை எதிர்த்து நாடாரில் ஒரு பிரிவினர் ,பாதிரியாரிடம் சென்று “எங்கள் தாய்மதம் வீர சைவம் நாங்கள் எங்கள் தாய் மதத்துக்கு செல்கிறோம்” என்று எழுதி குடுத்து விட்டு சென்றனர். எனக்கு தெரிந்து வரலாற்றில் கிறிஸ்தவர் இந்துவாக மிகபெரிய அளவில் மாறியது இங்கேதான். சென்றவர்கள் முருகன் கோவில் கட்டினர், தங்களுகென்று பள்ளிகூடம் கெட்டினர்..இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு குடும்பத்தில் அண்ணன் ஒரு மதத்திலும் தம்பி இன்னொரு மதத்திலும் இருப்பார்…. இன்று எவ்வளவோ முன்னேறிவிட்டது. இங்கிருந்து அங்கும் , அங்கிருந்து இங்கும் பெண் கொடுப்பது எடுப்பது சகஜம். அதை தவறாக பார்ப்பதில்லை. இவர்கள் விழாவில் அவர்கள் பங்கேற்பதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *