பெரியாழ்வாரின் பட்டினம்

periyazhvarபெரியாழ்வார் என்று போற்றப்படும் ஆழ்வாரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர். பெயருக்கேற்றபடி இவர் எப்பொழுதும் விஷ்ணுவைத் தம் சித்தத்தில் கொண்டிருந்தார். நின்றும், இருந்தும் கிடந்தும் அவனையே நினைத்திருந்தார். பூமாலையோடு பாமாலைகளையும் விஷ்ணுவுக்குச் சூட்டினார். இப்படி இவர் பெருமானையே நினைத்திருந்ததால், பெருமான்

அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்றான்

[அரவத்து அமளி – பாம்புப் படுக்கை; அரவிந்தப்பாவை – பெரிய பிராட்டியார்; அகம்படி – உடம்பாகிய இடம்; பரவை – கடல்]

எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலும் திருவனந்தாழ்வானும் மிகுந்த பிரியமானவை. அவற்றைப் பிரிய மனமில்லமல் பிராட்டியோடும் வந்து ஆழ்வாரின் இதயத்தில் வந்து புகுந்து பள்ளி கொண்டு விடுகிறான். ஆழ்வாரின் உள்ளத்தை மிகவும் விரும்பி வந்தானாம்.

வடதடமும் வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே

என்று பெருமிதத்தோடு பேசுகிறார் பெரியாழ்வார். வைகுந்தத்தையும், திருமலையையும், துவாரகையையும் இகழ்ந்துவிட்டு, சித்தத்தைத் தன்பால் வைத்த விஷ்ணுசித்தரின் உள்ளத்தை உயர்வாக மதித்து அங்கு வந்து இடம் கொண்டானாம். எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்து விட்டதால் விஷ்ணுசித்தருக்கு இப்பொழுது தைரியமும் தன்னம்பிக்கையும் வந்து விட்டது. இதற்குமுன் தன் ஐம்புலன்களையும், நோய்களையும். மரணத்தையும், யமதூதர்களையும் கண்டு அஞ்சிய விஷ்ணுசித்தர் இப்பொழுது அதே ஐம்புலன்களையும், நோய்களையும், யமதூதர்களையும் தாமே வலிய அழைத்து, தன் அச்சமின்மையையும் தான் பாதுகாப்பாக இருப்பதையும் கர்வத்தோடு எடுத்துச் சொல்கிறார். அதற்கு மேலும் ஒருபடி சென்று அவர்களைச் சவால்விட்டு அழைக்கிறார். தன்னுடைய சரீரத்தை ஒரு பட்டினமாக உருவகிக்கிறார்.

நெய்க்குடத்து எறும்புகள்

palli konda perumalநமது உடம்பில் பல நோய்கள் ஒவ்வொன்றாக வரிசையாக வந்து சேருகின்றன. நெய்க்குடத்தில் எறும்புகள் வரிசையாக வந்து அப்பிக்கொள்வதுபோல நமது உடம்பிலும் நோய்கள் வரிசையாக அப்பிக் கொள்கின்றன. ஆனால் ஆழ்வாருக்கு அதுபற்றிக் கவலையில்லை. அவர் அந்த நோய்களைப் பார்த்து என்ன சொல்கிறார் பாருங்கள். ”நோய்களே! நீங்கள் ஓடிப்போய் தப்பிச் செல்லுங்கள். உங்கள் நன்மைக்காகச் சொல்கிறேன். வேதமுதல்வனான எம்பெருமான் தன் படுக்கையாகிய ஆதிசேஷனோடு வந்து என்னுள் புகுந்து விட்டான். அவன் நித்தியவாசம் பண்ணுவதற்காக இங்கே வந்திருக்கிறான். அதனால் என் சரீரம் முன்னைப்போல் பலஹீனமாக இல்லை. பலமாக இருக்கிறது. இப்பொழுது ந்ல்ல கட்டுக் காவலுடன் விளங்குகிறது. ஆகவே, நோய்களே இங்கு வராமல் ஓடிப்போய் விடுங்கள்,” என்று எச்சரிக்கிறார்.

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும், பண்டன்று பட்டினம் காப்பே

சித்திரகுப்தன் ஓலை

சித்திரகுப்தன் யமலோகத்தின் கணக்கப்பிள்ளை. அவன் தான் பூவுலகிலுள்ள ஆன்மாக்களின் பாபங்களைக் கணக்கிட்டு எழுதுகிறான். சித்திரகுப்தன் எழுதிவைத்த பாப புன்ணியக் கணக்கைப் பார்த்துத்தான் யமன் கையெழுத்திடுகிறான். யமனுடைய தூதர்கள் இப்பொழுது என்னைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். ஏனென்றால் திருப்பாற்கடலில் துயில் கொள்ளும் முதல்வனின் பக்தன் நான். அடியவன். அதனால் அவர்களால் என்னை நெருங்க முடியாது. விஷ்ணு பக்தனான என்னைக் கண்டு அவர்கள் ஓடி ஒளிவார்கள்.

சித்திரகுப்தன் எழுத்தால், தென்புலக்கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவரோடி ஒளித்தார்
முத்துத் திரைக்கடல் சேர்ப்பன், மூதறிவாளர் முதல்வன்
பக்தர்க்கமுதன் அடியேன், பண்டன்று பட்டினம் காப்பே

பயிற்சியும் பணியும்

வராக அவதாரம் செய்த பெருமான் என் பிறவித்தளையை நீக்கி விட்டான். கட்டுக் கடங்காமல் திரிந்த ஐம்புலன்களாகிய எருதுகளையும் அடக்கி விட்டான். யமதூதர்கள் இந்த உடலைக் கீழேதள்ளிக் காலில் கட்டும் பாசக்கயிறு என் அருகில் வராமல் தடுத்து விட்டான். மேலும் எம்பெருமான் எனக்கு நல்லறிவை ஊட்டினான். என்னை நல்லொழுக்கத்தில் ஒழுகும்படிச் செய்தான்.

இவ்வாறு என்னை நன்றாகப் பயிற்சி பெறச் செய்தபின் தனக்குப் பணி செய்யப் பணித்தான். அதனால் நான் இப்பொழுது முன்போல் இல்லை. அவன் அருளாகிய காவலைப் பெற்றிருக்கிறேன்.

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச்சேவை அதக்கி
கயிற்றும் அக்காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே

நரசிங்கம் காவல்

மறுபடியும் நோய்களை நோக்கிச் சவால் விடுகிறார். ”தீவினை காரணமாக வரும் நோய்களே! நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள். உங்களுக்கும் ஒரு வினை வந்து விட்டது.

எனவே இங்கு என்னிடம் வர முயற்சி செய்யாதிர்கள். அது உங்களுக்கு இயலாது. நிச்சயம் சொல்கிறேன். இந்த உடல் இப்பொழுது நரசிங்கப் பெருமான் குடியிருக்கும் கோவிலாக விளங்குகிறது. நரசிங்கப் பெருமானிடம் பொருத இரணியனின் கதிதான் உங்களுக்கும் நேரும். எனவே இந்தத் திசைக்கே வராதீர்கள்.” என்று எச்சரிக்கிறார்.ஒரு தடவை அல்ல மூன்றுமுறை இங்கு புகாதீர்கள் என்று எச்சரிகிறார்.

மங்கிய வல்வினை நோய்காள்!உமக்குமோர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின், புகேன்மின், எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப்போமின் பண்டன்று பட்டினம் காப்பே

மாணிக்கப் பண்டாரம்

அடுத்து தனது இந்திரியங்களை விளித்துப் பேசுகிறார். ”பலம் பொருந்திய திருடர்களான ஐந்து இந்திரியங்களே! கேளுங்கள். வாமனனாக வந்து திரிவிக்கிரமனாக வளர்ந்தானே, அவன் என் மனத்துள் இருக்கிறான். அந்த மாயனைப் பேணிக்காத்து என் உள்ளத்துள் வைத்திருக்கிறேன். அந்தக் கருமாணிக்கம் என்னுள் இருப்பதால் என் உடல் மாணிக்கப் பண்டாரமாகி விட்டது. எனவே கட்டுக் காவலும் அதிகரித்து விட்டது. எனவே ஐம்புலனாகிய திருடர்களே வேகமாக ஓடுங்கள்” என்று விரட்டுகிறார்.

மாணிக்குறளுருவாய மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்! வலிவன் குறும்பர்கள் உள்ளீர்!
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே

நீண்ட காலமாகத் துன்பங்களையே தரும் நோய்களே! உமக்காக ஒன்று சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள். பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் பெருமான் (கோபாலன்) விரும்பி வந்து வீற்றிருக்கும் கோயில், என் உள்ளம் (என் சரீரம்). எனவே உங்களுக்கு இங்கே இடமில்லை. ஏன் தொடர்பேயில்லை. அதனால் இங்கிருந்து சீக்கிரம் நடையைக் கட்டுங்கள். வேகமாகப் போய் விடுங்கள்.

உற்ற உறுபிணி நோய்காள்! உமக்கொன்று சொல்லுவன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினைகள்! உமக்கு இங்கோர்
பற்றில்லை கண்டீர் நடமின், பண்டன்று பட்டினம் காப்பே

குருவின் உபதேசம்

பீதாம்பரதாரியான பெருமான் என்மனதில் வந்து புகுந்தான். எனக்கு குருவாக நின்று உபதேசம் செய்தான். திருமந்திர உபதேசத்தால் என் உடல் மீதிருந்த பற்று அகன்றது.

நமக்கு நாமே தலைவன் என்ற எண்ணம் போய்விட்டது. வேறு தெய்வங்களை நாட வேண்டும், வணங்க வேண்டும் என்ற ஆசை நீங்கிவிட்டது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற அகந்தை தொலைந்தது. என்னைப் பீடித்திருந்த சுயநலமும் போய்விட்டது. இப்படி என்னிடமிருந்த குற்றங்கள் அனைத்தையும் போக்கி, சங்கு சக்கர ரேகைகளையுடைய தன் திருவடிகளை என் தலையில் பதித்தான். அதனால் என் உயிரும் உடம்பும் முன்பு இந்திரியங்களுக்கு அடிமைப் பட்டிருந்ததது போன்ற நிலை இல்லை. என் குற்றங்களெல்லாம் நீங்கி விட்டன.

ஏதங்களாயின எல்லாம் இறங்க விடுவித்து
பீதக ஆடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதிற்கமல, வன்னெஞ்சம் புகுந்தும் என்சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தான் பண்டன்று பட்டினம் காப்பே

பரமனுக்குப் பாதுகாவல்!

பரமன் இவர் உள்ளத்தில் குடியிருக்க வந்து விட்டதால் அவனை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலை பெரியாழ்வாருக்கு! எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடிய தாயுள்ளம் அல்லவா? எனவே முன்னெச்சரிக்கையாகப் பெருமானின் பஞ்சாயுதங்களையும் காவல் காக்கும்படி வேண்டிக் கொள்கிறார். நீங்கள் உறங்கி விடாதீர்கள். எச்சரிக்கையாய் இருங்கள் என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கேட்டுக் கொள்கிறார். ”சுதர்ஸனச் சக்கரமே! பாஞ்சஜன்யம் என்ற சங்கே! நாந்தகம் என்ற வாளே! சார்ங்கமென்னும் வில்லே! கௌமோதகி என்னும் கதையே! உறங்கி விடாதீர்கள். காவலில் வல்ல அஷ்டதிக்குப் பாலர்களே! எட்டுத் திசையும் கண்காணித்து வாருங்கள். பெரிய திருவடியாகிய கருடனே! நீர் பறந்து சென்று எதிரிகள் இருக்குமிடத்திற்கே போய்த் தாக்கும் வலிமையுடையவர். என்றாலும் உறங்காமல் கவனமாக இருங்கள். பெருமான் பிராட்டியோடு பள்ளி கொண்டிருக்கும் இவ்வுடலைக் கவனமாகப் பர்த்துக் கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கிறார்.

உறகல், உறகல், உறகல், ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
இறவு படாமலிருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவையரையா! உறகல் பள்ளியறைக் குறிக்கொண்மின்

திருமூலரும் முன்னம் உடம்பை இழுக்கென்றிருந்தார். பின்னர் அந்த உடம்பு உத்தமன் உறையும் கோயில் என்று தெரிந்ததும் அதைப் பேண ஆரம்பித்தார்.

பெரியாழ்வார் முதலில் எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்ததால் தன் உடலாகிய பட்டினம் எப்படிக் காவலோடு திகழ்கிறது என்று பெருமிதத்தோடு கூறினார். பின் அந்தத் தாயுள்ளம் அவனை பத்திரமாகப் பாதுகாக்க வேணுமே என்று சிந்த்தித்து பஞ்சாயுதங்களையும் அஷ்டதிக் பாலர்களையும் வேண்டுகிறது.

6 Replies to “பெரியாழ்வாரின் பட்டினம்”

  1. ரொம்ப நன்றாக இருந்தது. நோய்களை எதிர்த்துப் போராட பலம் கிடைக்கிறது. பாராட்டுக்கள்.

  2. பாசுரங்களின் உட்பொருளை உணர்த்தும் அருமையான எளிய உரை. ஜயலக்ஷ்மி அம்மா தொடர்ந்து எழுத வேண்டும்.

    தேவ்

  3. ஜெயலக்ஷ்மி அம்மாவின் கட்டுரைகள் எளிமையாக எல்லொருக்கும் புரியும்வண்ணம் அழகாக எழுதப்பட்டுள்ளது. இறைநம்பிக்கை எல்லா விஷயங்களிலும் பலம் அளிக்கும் ஒரு விஷயம்.. எதையும் எதிர்த்துநிற்கும் ஒரு தைரியம் அளிக்கும்.

  4. படித்தேன்,படித்தேன் ,பலமுறை படித்தேன்
    படி தேன் உண்ட சுவையினை அடைந்தேன்
    வன் பிறவியினை ஒழிக்கும் உபாயம் அறிந்தேன்
    ஓங்கி உலகளந்த உத்தமனை உள்ளத்தில் வைத்தேன்
    இனி எனக்கு கவலைகள் வருவதேன்
    இனிய தமிழ்,இன்ப தமிழ்,தெய்வ தமிழ்
    அமுத தமிழ் அதை எங்களுக்கு அளித்த
    நீங்கள் வாழி வாழி பலகாலம்.
    மாலவனின் பக்தர்கள் பொருட்டே

  5. அற்புதமான பாடல்களும், அதற்கு உரை எழுதிய லாகவும் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் கருத்துச்செறிந்து மனதில் உத்சாகம் பிறக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *