தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-2

இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து சேர்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. இதில் தான் என்னும் தன் பிம்பத்தைப் பற்றிய பிரமை மேலிட்டு ஊர்வலம் வருபவர்களை யெல்லாம், ‘மகா ராஜாதி ராஜன்… வந்தேனே, வந்தேனே’ என்று மேடையைச் சுற்றி வருபவர்களையெல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது கூத்தடிப்பு. தெருக்கூத்தடிப்பு. ‘என்னைப்பார், நான் என்னென்ன பெயர்கள் எல்லாம் உதிர்க்கிறேன் பார். அத்தனையும் லத்தீன் அமெரிக்க ஒரிஜினலாக்கும். என்னைப் பார், என் அறிவைப் பார் என்னென்ன இஸமெல்லாம் எனக்குத் தெரியுது பார்” என்னும் கூத்தடிப்பு. அவர்கள் ராஜபார்ட்டுகளாக வலம் வந்தாலும் அவர்கள் தரித்திருக்கும் உடைகள் வாடகைக் கடைகளைச் சேர்ந்தவை. ஏனெனில், இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தையில் வைப்பவர்கள் இவர்கள். இன்றைய தார்மீகச் சரிவின் விளைச்சல்கள். இருப்பினும் வெட்க உணர்வற்ற படாடோபங்கள் இவர்கள். இவர்கள் பெயரையும் நான் சொல்லவில்லை. எவரைச் சொல்வது? யாரை விடுவது?

இக்கால கட்டத்திலேதான் மறுவிஜயம் செய்துள்ள அ. முத்துலிங்கம் என்னும் உலகத் தமிழ் பிரஜையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். உலகம் முழுதிலும் தான் சென்றவிடமெல்லாம் நுண்ணிய மனித உறவுகளை, தன் மெல்லிய புன்னகையோடு அலட்டாமல், சத்தம் எழுப்பாமல், சவுக்க காலத்தில் மந்திர ஸ்தாயியில் வீணையின் நாதம் காற்றில் அலையாடி வருவது போல சொல்லிச் செல்லும் அவர் எழுத்தின் மாயம் எந்த வகைப்படுத்தலிலும் அடங்காது தனித்து நிற்பது. அவரது உலகமும் மொழியும்போல.

அன்று யாப்பு கவிதை அல்லாததையும் கவிதை என அடையாளம் காட்டப் பயன்பட்டது. கவிதை இத்தகைய சட்டகங்களால் இனம் காணப்படுவதில்லை. இன்று இனம் காட்டப் பயன்படும் சட்டகம் வேறு. மறுபடியும் சட்டகம்தான். ஆனால் கவிதை அகமும் புறமும் மிக விஸ்தாரமான, ஆழமான தளத்தை ஆக்கிரமித்துள்ளது, கவிதையின் வளத்தைப் பெருக்கியுள்ளது. இன்றும் கவிதையை இனம் காணுவது அதன் இன்றைய சட்டகத்தையும் மீறித்தான். அவ்வாறு கவிதைகளையும் கவிஞர்களையும் இனம் கண்டு அன்று சங்கக் கவிதைகளைத் தொகுத்தது போல் இன்று வந்துள்ள தொகுப்பு ராஜமார்த்தாண்டனின் கொங்கு தேர் வாழ்க்கை என்ற ஒரு சிறப்பான தொகுப்பு. இதில் காணும் கவித்வப் பெருக்கும் தள விஸ்தாரமும் அனுபவப் பரப்பும் அதற்கு முந்தைய ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை காணாதது. அதனால்தான் புதுக்கவிதையின் முந்தைய தமிழ்க் கவிதை வளத்தைக் கொங்கு தேர் வாழ்க்கையின் முதல் தொகுப்பில் தொகுத்த சிவகுமார், சங்க காலத்திலிருந்து இரண்டாயிர வருட காலத்திற்கு தன் வீச்சைப் பரப்பிக்கொள்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணியக் குரல்கள் தமிழ்க் கவிதையில் வந்து சேர்ந்துள்ளது ஒரு புதிய நிகழ்வு. அவர்களிடம் காணும் சீற்றம் வெளிப்பாடு பெறுவது இயல்பானது. இன்றைய கவிதையும் அவர்கள் தம் ஆளுமையை சீற்றத்தின் உச்சக் குரலில் வலியுறுத்துவதும் புரிந்து கொள்ளவேண்டியவையே. இப்பெண்ணிய வெளிப்பாட்டின் சீற்றைத்தைக் கண்டு சீறிய ஆண் கவிஞர்களின் குரல் நேர்மையற்ற ஆணாதிக்கக் குரல்கள்தான். ஆனால் இப்பெண்ணியச் சீற்றம் ஏன் அதன் இயல்பான பழகு தமிழ் சொற்களை ஒதுக்கி, வலிந்து வழக்கில் இல்லாத வடமொழிச் சொற்களைத் திட்டமிட்டுத் தேடிக் கொணர்கிறது? பயமா? அல்லது தமக்கே அவை ஆபாசமாகத் தோன்றுகிறதோ என்னவோ. வடமொழியில் சொன்னால், அவை ஆபாசமாகத் தோன்றவில்லையோ என்னவோ. ஆக, அது உண்மையில் சீற்றம் இல்லை, பாவனையே என்றாகிறது.

வார்த்தைகளைக் கொட்டுவதில் இல்லை இல்லை, வார்த்தைகளை உணர்வுகளை அடக்கி ஆள்வதில், குறிப்புணர்த்துவதில் தான் கவித்வம் இருக்கிறது என்பதைப் பெண்ணிய கவிஞர்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் கவித்வம் மிக்கவர்கள். அவர்கள் உணர்வுகள் உண்மையானவை. சல்மா, உமா மகேஸ்வரி, மாலதி மைத்ரி போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதேசமயம் இப்பெண்ணியக் கவிஞர்களின், பாணியில், மொழியில் அல்லாது, தம் பெண்மையைத் தன் மொழியில், பாணியில் வெளிப்படுத்தும் வேறுபட்ட ஒரு கவித்வம் திலக பாமாவினது. இவரின் பெண்ணியச் சீற்றமும் தன் சுயத்துவத்தின் வலியுறுத்தலும் மற்றவர்களுக்குக் கொஞ்சமும் குறைந்தல்ல. இருப்பினும் மற்றவர்கள் இவரைக் கண்டு கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்களது பாவனைகளை இவர் ஏற்றுக்கொண்டதில்லை. ஆக, பெண்ணிய வெளிப்பாட்டைவிட, பாவனைகளே முக்கியமாகப் படுகிறது பெண்ணியக் கவிஞர்களுக்கு என்று தோன்றுகிறது.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய பாரிய பங்களிப்பு என்று நாவல் வளத்தைச் சொல்லவேண்டும். இதில்தான் எத்தனை வேறுபட்ட தனித்வமான திறன்கள், ஆளுமைகள்! இதில் ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமையை, புதுமைப்பித்தன் ஒருவரிடம்தான் தமிழ் கண்டிருக்கிறது. அதிலும் புதுமைப்பித்தன் அற்ப ஆயுளில் இறந்துவிட்டதால், அந்த ஆளுமை தன் முழு விகாசத்தைக் காணமுடியாதே போய்விட்டது. அது செயல்பட்ட சொற்ப காலத்தில் அதன் வீச்சின் பரிமாணத்தைக் கோடிகாட்டிச் சென்று விட்டது. பலத்த சர்ச்சைகளை எதிர்கொண்ட ஜெயமோகனின் விஷ்ணுபுரம், ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை நிகழ்ந்த வரலாறு, மதப் போராட்டங்கள், தத்துவ விசாரணைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. அதன் வீச்சும் ஆழமும், அது கையாண்ட மொழியும் திகைக்க வைக்கும். இத்தகைய வீச்சில் யாரும் வரலாற்றையும் கற்பனையையும் பரப்பியது கிடையாது. அதே வீச்சும் விமர்சனமும் தமிழகத்தில் மார்க்ஸீயம் என்று சொல்லப்படும் ஒன்றின் பின்னணியில் பின்தொடரும் நிழல் என்ற நாவலும் காயம்பட்டோரின் சீற்றத்திற்கு ஆளானது. பின்னும் அவரது தளமும் கையாளும் வாழ்க்கைக் கூறுகளும் ஏழாம் உலகம் நாவலில் மாறுகிறது. பிச்சைக்காரர்களின் உலகில் நாம் இதுகாறும் அறியாத கொடூரங்களும், சமயத்திற்கும் மனிதருக்கும் ஏற்ப மாறும் தர்மங்களும், பெண்கள் அந்த உலகில் கூடப் படும் வதையும், இந்த உலகை அவர் அறிந்தது எப்படி என்று திகைக்க வைக்கிறது.

40 வருடங்களுக்கு முன் நடந்த அகில இந்திய காவல் அதிகாரிகளின் மகாநாட்டில் பிச்சை எடுத்து தன் வயிறு நிரப்ப குழந்தைகளைத் திருடி, முடமாக்கும், குருடாக்கும் கொடுமைகளைத் தகவல்களாக பீஹார் காவல் அதிகாரி விவரிக்க நான் கேட்டிருக்கிறேன். அந்த உலக மனிதர்களும் அவர்கள் தர்மங்களும் இந்த நாவலில் அனுபவ உக்கிரங்களாக நம் முன் விரிகின்றன. இத்தகைய கொடுமைகளின், குரூரங்களின் வாழ்விடம் பீஹார்தான் என்று அன்று நான் நினைத்திருந்தேன். இல்லை, தமிழ் நாடு அப்படி ஒன்றும் ‘அமைதிப் பூங்கா’ இல்லை. குற்றங்களும், குரூரங்களும், வேறு பெயர்களில் இங்கு வாழ்கின்றன. இதுபோலப் பலர் நாம் அறியாத உலகங்களை, தமிழ் இலக்கியம் பதித்திராத உலகங்களை பிரும்மாண்டமாக நம்முன் வைக்கிறார்கள். முன்னேற்றம் என்றும் செல்வக் கொழிப்பு என்று சொல்லப்படும் வெளிப்பகட்டின் பின் இருக்கும் மனித அவலங்கள்.

எம். கோபால கிருஷ்ணன் என்ற புதியவரிடமிருந்து வந்த மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது. எங்கோ ஓர் இடத்திலிருந்து தொடங்கும் தேடல், ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியில் ஒரே இடத்தில்தான் முடிகிறது. பின்னும் அதேபோலத் தொடரும் தேடல்தான். தேடல்தானா அது? மீனவர் வாழ்க்கை அந்தந்த நிமிடம் செத்துப் பிழைக்கும் கடல் நடுவில். அந்த உலகின் உள்ளேகூட இத்தகைய பிருமாண்டம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது ஆழிசூழ் உலகு. யார் கேட்டிருக்கிறார்கள் ஜோ டி க்ரூஸை? இத்தனை திறன் இத்தனை நாள் எங்கு ஒளிந்திருந்தது? சமநீதி என்றும் ஜாதி ஒழிப்பு என்றும் அரசியல் பேசி வந்தாயிற்று முக்கால் நூற்றாண்டு காலமாக. அந்தந்த ஜாதியின் வெறி இந்த கோஷங்களுக்குள் மறைக்கப்பட்டு வந்துள்ளது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் யாரிடமிருந்தும் சுயவிமரிசனம் வருவதில்லை.

தமிழ் இலக்கியத்தில்தான், அரசியல் வாதிகளையும் சித்தாந்திகளையும் மீறி ஒரு சில இடங்களிலிருந்து சுய விமரிசனமாக அவரவர் உலகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பெருமாள் முருகனின் எழுத்து அத்தனையும் இத்தகைய விமரிசனமாகத்தான் நான் பார்க்கிறேன். கௌண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான சமூக உறவுகளில் காணும் ஆதிக்க மேலாண்மையின் அடக்கு முறைகள். பெருமாள் முருகனுக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை இந்த உலகை எழுத்தில் பதிவதில். முற்றிலும் ஒரு புதிய குரலாக, பி.ஏ.கிருஷ்ணனின் நாவல், புலிநகக் கொன்றை, கவனத்தை வேண்டுவது. ஆசாரமான, வித்வத் நிறைந்த ஒரு வைஷ்ணவக் குடும்பத்தின் இரண்டு தலைமுறைக்கு நீளும் கதை அக் காலகட்டத்தில் அதைச் சுற்றி நிகழும் சமூக மாற்றங்களின், அரசியல் வரலாற்றின் நிழல்படியச் சொல்லப்பட்டுள்ளது. இக்குரலைப் பதிய இன்றைய சூழலில் ஒரு தைரியம் வேண்டும்.

இன்னொரு குரல் மிக முக்கியமாகப் பேசப்படவேண்டும். கண்மணி குணசேகரன். அவரது அஞ்சலை நமக்கு அறிமுகப்படுத்தும் பெண்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆண்களை நம்பியிருப்பவர்கள் இல்லை. இருப்பினும் அவர்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் வதை படுபவர்கள். அவர்களுக்கு, ஏழை விவசாய கூலித்தொழில் செய்பவர்கள், ஏதும் பெரிய ஆசைகள், கனவுகள் கிடையாது. ஆனால் மனிதர்க்ளுக்குள்ள அடிப்படையான பசி, பாலியல் உறவுகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் ஒரு அதீத அளவில் கொண்டவர்கள். அத்தோடு தன் முனைப்பும். ஆனாலும் அவர்கள் ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. திரும்பத் திரும்ப அதே சக்கரம், அதே சுழற்சி. தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம் முன் வைத்துள்ளார் கண்மணி குணசேகரன். ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர். தன்னைச் சுற்று ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணாத ஒரு தமிழ் படைப்பாளி.

அதே போலத்தான் யூமா வாசுகியும். அவரும் நாவல்,சிறுகதை, கவிதை, சித்திரம் எனப் பலதுறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர். அலட்டிக்கொள்ளாத ஒரு தமிழ் எழுத்தாளர். ரத்த உறவு என்னும் நாவலில் அந்த போர்வையில் தன் பால்ய கால வாழ்வைத்தான் எழுதியுள்ளார் என்று சொல்லவேண்டும். தந்தையும், பாட்டியும், இன்னும் மற்ற உறவுகளும் எவ்வளவு கொடூரமாகக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தமுடியும் என்பது மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு இரக்கமோ, அன்போ பாசமோ இல்லாது தன் தேவைகளே பெரிதாக எண்ணி, மற்றவர்களை வதைக்கமுடியும் என்பது யூமா வாசுகியின் நாவலை/சுயசரிதத்தைப் படிக்கும்போது இது சாத்தியமா என நினைக்கத் தோன்றும். சிறுவனும் அவன் அக்காவும்தான், இருவருமே சிறு வயதுக் குழந்தைகள்தான், ஒருவருக்கொருவர் பாதுகாப்பென வாழ்வைத் தொடர்பவர்கள். இரு படைப்பாளிகளுமே தம் இயல்பில் தமக்குத் தெரிந்த உலகை எவ்வித அலட்டலும் இல்லாமல் தந்துள்ளனர். அவர்கள் அறிந்த அந்த வாழ்க்கையின் இயல்பான வெளிப்பாடு தான் தமிழுக்கு நாம் அறியாத புது உலகங்களை தந்துள்ளது.

தமிழுக்கு வளம் சேர்க்க, லத்தீன் அமெரிக்க, போஸ்ட் மாடர்னிஸ்ட், அதி யதார்த்த, மந்திர வாத அல்ட்டல்கள், முகமூடிகள், தோரணைகள், தேவையில்லை. ஒவ்வொரு தமிழ் வாழ்வும் அதன் இயல்பான வெளிப்பாட்டிலேயே இதுகாறும் காணாத தனித் தன்மையைத் தந்துவிடும் என்பதற்கு இம்மாதிரியான அலட்டல் இல்லாத படைப்புகள் நிரூபணங்களாகின்றன.

5 Replies to “தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-2”

  1. //
    தமிழுக்கு வளம் சேர்க்க, லத்தீன் அமெரிக்க, போஸ்ட் மாடர்னிஸ்ட், அதி யதார்த்த, மந்திர வாத அல்ட்டல்கள், முகமூடிகள், தோரணைகள், தேவையில்லை. ஒவ்வொரு தமிழ் வாழ்வும் அதன் இயல்பான வெளிப்பாட்டிலேயே இதுகாறும் காணாத தனித் தன்மையைத் தந்துவிடும் என்பதற்கு இம்மாதிரியான அலட்டல் இல்லாத படைப்புகள் நிரூபணங்களாகின்றன.
    //

    மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.

  2. மதிப்பிற்குரிய வெ.சா,
    உங்கள் கட்டுரைகளில் எப்போதுமே வெளிப்படும் சமுதாய அக்கறையும், இயலாமையின் வருத்தமும், சலிப்பும், யதார்த்தமான பார்வையும், அலசலும் சரியான அளவில் கலந்து இருக்கும்.
    இம்முறையும் புதிதாக அரைத்த நரஸுஸ் காபியில் போட்ட டிகாக்ஷனுடன் கறந்த பாலைக் கையோடு காய்ச்சி அளவோடு சர்க்கரை சேர்த்து கலந்தது போல் எழுதி இருக்கிறீர்கள் நன்றி.
    முன் பின் வீணத்துவ எழுத்தாளர்கள் இவ்வாறு லத்தீன் அமெரிக்க நாடுகளின் பச்சைகளை எழுதக்காரணம் படிக்கக் காத்து இருக்கும் இளைஞர்களே. அவர்கள் விழுந்து விழுந்து படிக்கக் காரணம், தாங்கள் செய்யும் தவறுகள் குற்றவுணர்வு ஏற்படுத்தாமல் இருக்க இந்த எழுத்துக்கள் அவர்களைத் தயார் செய்யும் என்பதே.

  3. //ஏனெனில், இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தையில் வைப்பவர்கள் இவர்கள். இன்றைய தார்மீகச் சரிவின் விளைச்சல்கள். இருப்பினும் வெட்க உணர்வற்ற படாடோபங்கள் இவர்கள். இவர்கள் பெயரையும் நான் சொல்லவில்லை. எவரைச் சொல்வது? யாரை விடுவது?//

    அலட்டல் இல்லாத படைப்புகளை ஆரவார நெரிசலிலிருந்து மீட்டெடுத்து வாசிக்கவே மிகுந்த ஆற்றல் வேண்டும்;இனம் காண்பதற்கே நுண்மாண் நுழைபுலம் வேண்டும்.
    என்போன்ற சாமானியருக்கு ஐயாவைப் போன்ற சான்றாண்மை மிக்க பெரியோரின் வழிகாட்டுதல் என்றுமே தேவை.

    தேவ்

  4. தமிழ் இலக்கியவாதிகள் என தன்னை சொல்லிக்கொள்ளும் போலிகளின் தகுதிகள் பற்றிய பட்டியலை தெளிவாக தந்துள்ளார்கள் வெ.சா அய்யா.. அ.முத்துலிங்கம் என்ற அருமையான ஈழத்து எழுத்தாளரை சரியாக இனம் கண்டு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அவரைப்போன்ற உண்மையான எழுத்தாளர்களுக்கு உங்கள் கையால் கிடைக்கும் பாராட்டு மிக்க ஊக்கமளிக்கும். இன்றும் எளிமையாக எழுதி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை அடைந்திருக்கும் முக்கியமான எழுத்தாளர் அவர்.

    மற்றபடி கட்டுரை அறிமுகம் செய்யும் எழுத்தாளர்களை இனம் கண்டு படிக்க வேண்டும். இல்லையெனில் வெத்து வேட்டுகளின் ஆர்ப்பாட்டத்திற்கு இரையாகி படிக்க வேண்டியவைகளை படிக்காமல் போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல கட்டுரை.

  5. யூமா வாசுகியைத் தொடர்ந்து சில வருடங்களாகவே நீங்கள் முன்வைக்கிறீர்கள், ஒரு குறிப்பிடத் தக்க எழுத்தாளர் என்ற வகையில். இது என் போன்ற வாசகர்களுக்கு நிச்சயம் மகிழ்வூட்டும் ஒன்று. அருமையான ஒரு கவிதைத் தொகுப்பைக் கொணர்ந்த அவர் பிறகு அதிகம் படைக்காது சோர்ந்திருப்பது தமிழிலக்கியத்துக்கு நஷ்டம். கண்மணி குணசேகரன் படைப்புகளையும் முன்மொழிகிறீர்கள். அவர் நூல்களை இனி வாங்கிப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.
    மைத்ரேயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *