ஓடிப் போனானா பாரதி? – 03

ஓடிப் போனானா?

பகுதி 3

இந்தியா பத்திரிகைக்கும் பாரதிக்கும் எந்த வகையில் தொடர்பு?

‘இந்தியா’ பத்திரிகையை நடத்தியவன் பாரதி என்றொரு கருத்து பரவலாக இருக்கிறது. ‘நடத்தியவன்,’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? நடத்தியவன் என்றால் அந்தப் பத்திரிகையைத் தொடங்கி, முதல் போட்டு நடத்தியவனா? இல்லாவிட்டால் அந்தப் பத்திரிகையில் பணியாற்றியவனா? பணியாற்றியவன் என்றால் என்ன வகையில்? எப்படிப்பட்ட முறையில்? இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது, பாரதியின் மீது வைக்கப்பட்டிருக்கும், ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்,’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் என்பதைக் காண உதவும். (இந்தக் குற்றச்சாட்டு மிகப் பல வருடங்களுக்கு முன்னால், பாரதியின் நண்பரான எஸ். ஜி. இராமானுஜலு நாயுடு அவர்களால் வைக்கப்பட்டது. இது அவருடைய பார்வை. நமக்கான விடைகளை நாம் தேடிக்கொள்வோம்.)

சிதைந்த நிலையில் கிடைத்திருக்கும் இந்தியா முதல் இதழ். 9.5.1906 அன்று வெளிவந்திருக்கிறது. (நன்றி: ‘பாரதி தரிசனம்’ இளசை எழில் மணியன்)
சிதைந்த நிலையில் கிடைத்திருக்கும் இந்தியா முதல் இதழ். 9.5.1906 அன்று வெளிவந்திருக்கிறது. (நன்றி: ‘பாரதி தரிசனம்’ இளசை எழில் மணியன்)

‘இந்தியா’ வாரப் பத்திரிகையாக 1906ஆம் வருடம் மே மாதம் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். தொடங்கியவர் எஸ் என் திருமலாசாரியார் என்ற இளைஞர். பாரதிக்கு மூன்று வயது இளையவர் என்று விசுவநாதனுடைய பதிவு தெரிவிக்கிறது. (மகா கவி பாரதி வரலாறு – சீனி. விசுவநாதன்). ஸ்ரீரங்கம் நரசிம்மாசாரியாரின் புதல்வரான திருமலாசாரியார் தொடங்கியது இந்தியா பத்திரிகை. சுதேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவர் முதலில் நிறுவியது ‘பிரம்மவாதின்’ என்ற பெயரிலான அச்சுக்கூடம். இந்த அச்சுக் கூடத்தை நிறுவியது யார் என்பதைப் பற்றி இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. எஸ் என் திருமலாசாரியார் நிறுவினார் என்று சீனி. விசுவநாதனும், எஸ் ஸ்ரீனிவாசாசாரியார் 1903ஆம் வருடம் நிறுவினார் என்று பெ சு மணியும் இரண்டு விதமான செய்திகளைத் தெரிவிக்கிறார்கள்.

எப்படி இருப்பினும், ‘இந்தியா’ பத்திரிகை தொடங்கப்பட்ட சமயத்தில் பாரதி பணி புரிந்துகொண்டிருந்தது சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய இரு பத்திரிகைகளிலும். பத்திரிகை தொடங்கப்பட்டு சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னால்தான் பாரதியின் எழுத்து ‘இந்தியா’வில் வெளிவரத் தொடங்கியது. என்று முதல்? பாரதியின் எந்தக் கட்டுரை ‘இந்தியா’ பத்திரிகையில் முதன்முதலில் வெளிவந்தது? சீனி. விசுவநாதனின் ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ அடையாளம் காட்டுவது, ‘திருநெல்வேலி ஆசாரத் திருத்தச் சங்கம்,’ என்ற பாரதியின் கட்டுரையை. வெளி வந்த நாள் 30.6.1906. அதாவது, பத்திரிகை தொடங்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆன பிறகே. ஆனால், இளசை மணியன் தொகுத்த ‘பாரதி தரிசனம்,’ சொல்லும் கணக்கை எடுத்துக்கொண்டால், 23.6.1906 முதல் பாரதியின் எழுத்துகள் ‘இந்தியா’ பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. 23 ஜூன் 1906 தேதியிட்ட இந்தியா இதழில் பாரதி ஐந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறான். (இந்த ஐந்து கட்டுரைகளையும் சீனி. விசுவநாதன் தொகுப்பில் காண முடியவில்லை என்பது வியப்புக்குரியது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களை, இவ்வளவு பெரிய ஆய்வாளர்கள் கவனிக்காமல் விட்டுவிடுவது எப்படி நேர்கிறது என்று புரியவில்லை. இந்த விஷயம் சீனி. விசுவநாதனுடைய கவனத்துக்கு வருமானால் சந்தோஷப்படுவேன்.)

என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘இந்தியா’ பத்திரிகை தொடங்கப்பட்டதில் பாரதிக்கு நேரடியாக எந்தப் பங்கும் இருந்திருக்கவில்லை. ‘பாரதி பின்னால்தான் வந்து இணைந்தார்,’ என்று பத்திரிகை நடத்தியவர்களில் ஒருவரான எஸ் ஸ்ரீனிவாசாசாரியார் சொல்கிறார். இந்தியா பத்திரிகையை நடத்தியவர்கள் எல்லோரும் ‘மண்டயம்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் குடும்பத்தைப் பற்றிய விரிவான தகவல்களைப் ‘பத்திரிகையாளர் பாரதியார்,’ என்ற நூலில் பெ சு மணி அவர்கள் தந்திருக்கிறார்கள். எஸ் என் திருமலாசாரியார், எஸ் ஸ்ரீனிவாசாசாரியார் (எஸ் எஸ் ஆசார்யா என்றும் மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார் என்றும் அறியப்படுபவர்), எம் பி திருமலாசாரியார் (எம் பி டி ஆசார்யா என்றும் அறியப்படுபவர்), எம் சி அழகிய சிங்கப்பெருமாள் ஐயங்கார் ஆகியோர். இவர்கள் அனைவரும் உறவினர்கள். திலகரின் வழியைப் பின்பற்றியவர்கள். இந்தக் காரணத்தாலும், தேசிய இயக்கத்தில் அவர்களுக்கிருந்த தொடர்பினாலும் பாரதிக்கு நெருக்கமாக வந்தவர்கள்.

‘இந்தியா பத்திரிகை சென்னையில் வெளி வர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்,’ என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார், ‘சித்திர பாரதி’க்கு எழுதிய முன்னுரையில் சொல்கிறார். எப்படி அறிமுகமானார்கள்? அவரே சொல்கிறார். ‘இதற்கு முன்பே ‘பால பாரதா,’ என்னும் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்து அவர் திறமையை நான் அறிந்திருந்தேன். பின்பு அவரைச் சந்தித்ததிலிருந்து எங்கள் நட்பு வெகு சீக்கிரத்தில் வளர ஆரம்பித்தது.’

பாரதியின் வரலாற்றுப் பதிவு எவ்வளவு சிக்கல்கள் நிறைந்தது என்பதற்கு மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியாருடைய மேற்படி வாக்கியம் ஓர் எடுத்துக்காட்டு. அவர் சொல்கின்றபடி பார்த்தால், ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே ‘பால பாரதா’ பத்திரிகையில் அவனுடைய ஆங்கில எழுத்துகள் வெளிவந்துகொண்டிருந்தன என்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் சீனி. விசுவநாதன் வேறு மாதிரி சொல்லுகிறார். ‘தமிழறிந்த மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊட்டிய இந்தியா பத்திரிகை நிர்வாகத்தினர் ஆங்கிலப் பயிற்சி கொண்ணட சுதேச பக்தர்களிடம் நாட்டு நடப்பைப் புலப்படுத்திக் காட்ட ஆசைப்பட்டனர். அதனால் 1906 நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து Bala Bharat (பால பாரத்) என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.’

சீனி. விசுவநாதனின் ஆய்வின்படி, இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்குப் பின்னால் ‘பால பாரத’ பத்திரிகை ‘இந்தியா’ பத்திரிகையின் நிறுவனர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா பத்திரிகையின் நிர்வாகிகளில் ஒருவர் சொல்கிறார், ‘பாரதியின் ஆங்கில எழுத்தை அவர் இந்தியாவில் எழுதத் தொடங்கும் முன்பிருந்தே அறிவேன்,’ என்று! எது பொருத்தமானது, எது சரியானது என்பதை எப்படி நிர்ணயிப்பது!

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பத்திரிகை பாரதி சென்னையில் இருந்த கால கட்டத்திலேயே தொடங்கப்பட்டிருக்கிறது. இது தொடங்கப்பட்ட காலத்தில் பாரதி புதுவைக்குச் சென்றிருக்கவில்லை. ஏனெனில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்னும் முறையில் ஓர் ஆவணத்தில் பாரதி சாட்சிக் கையொப்பமிட்டிருக்கிறான்; தேதியும் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தைப் பற்றிய விவரங்கள் நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்குத் தொடர்புள்ளவை. ஆகவே இதைப் பற்றிய மற்ற விவரங்களுக்கு அப்புறம் வருகிறேன்.

பாரதி பத்திரிகை ஆசிரியர் பொறுப்பு வகித்தான் என்றால், பதிவுபெற்ற, அதிகாரபூர்வமான ஆசிரியராக இருந்த பத்திரிகை ‘பால பாரத’தான். (விஜயா போ்ன்ற மற்ற சில பத்திரிகைகளும் உண்டு.) இந்தியா பத்திரிகையில் அப்படி அவன் இருந்திருக்கவில்லை. குறிப்பாக, இந்தியா பத்திரிகையின் மீது அரசாங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட கால கட்டத்தில். இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் பாரதியே என்று பலரும் சொல்லியும், எழுதியும் வருகிறார்கள். ‘பாரதி தரிசனம்’ என்ற தலைப்பில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்ட போது (1975) அதன் பதிப்புரையில் பதிப்பகத்தார் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) பின்வருமாறு சொல்கிறார்கள்:

‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் எம். சீனிவாசன் என்றாலும், மகாகவி பாரதியார்தான் அதன் உண்மை ஆசிரியர் என்பது இப்போது அனைவரும் ஏற்கும் விஷயம்.’

பாரதி அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கும் எழுத்துகளின் அளவு அத்தகையது. தன்மை அத்தகையது. தலையங்கம் உட்பட எழுதியிருக்கிறான். ஆகவே அவனை ஆசிரியர் என்ற நிலையில் வைத்துப் பார்க்கலாம்தான். ஆனால், பாரதி அந்தப் பத்திரிகையின் பதிவுபெற்ற ஆசிரியராக இருந்தது ஏறத்தாழ இரண்டே மாத காலத்துக்குத்தான். ‘சென்னை அரசாங்கத்திடம் பத்திரிகை வெளியிடுவோர் ஆங்கிலத்தில் தந்த அறிக்கையின் தமிழாக்கம்’ என்று பெ. சு. மணி அவர்கள் பின்வரும் அட்டவணையைத் தருகிறார். இந்தியா பத்திரிகையின் உரிமையாளர் யார், ஆசிரியர் யார் என்றெல்லாம் விவரங்களை அரசாங்கத்துக்குத் தரும் குறிப்பு அது. பெ. சு. மணி அவர்களின் ‘பத்திரிகையாளர் பாரதியார்’ நூலிலிருந்து இந்த அட்டவணையைத் தருகிறேன்.

பத்திரிகையின் பெயர்: இந்தியா.

உரிமையாளர்: எஸ் என் திருமலாசாரியார்
உரிமையாளரே ஆசிரியர்.
(மே மாதம் நான்காம் தேதி, 1906ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் ஸ்ரீநிவாசன்
ஆசிரியர்: சி. சுப்பிரமணிய பாரதி
(மே மாதம் முப்பத்தோராம் தேதி, 1907ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் பி திருமலாசாரியார்
உரிமையாளரே ஆசிரியர்
(ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி, 1907ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் ஸ்ரீநிவாசன்
உரிமையாளரே ஆசிரியர்
(நவம்பர் மாதம் பதினெட்டாம் தேதி, 1907ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் பி திருமலாசாரியார்
உரிமையாளரே ஆசிரியர்
(ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி 1908ஆம் வருடத்தில் செய்த பதிவு)

இத்தோடு, ‘இந்தியா’ பத்திரிகை, இந்தியாவிலிருந்து வெளிவருவது நின்று போகிறது. மேற்படிப் பதிவில் ஒன்றைக் கவனியுங்கள். பாரதி ‘இந்தியா’ பத்திரிகையின் பதிவுபெற்ற ஆசிரியராகப் பணியாற்றிய காலம் 31.5.1907 முதல் 6.8.1907 வரை. இரண்டு மாதங்களும் ஆறு நாளும். அவ்வளவுதான். 1907ஆம் வருடம் மூன்று முறை ஆசிரியர், உரிமையாளர் ஆகியோருடைய பெயர் மாற்றிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையும் கவனித்துக்கொள்ளுங்கள். விரிவாகப் பேசுவோம். இவற்றில் ஒரேஒரு முறை (இரண்டு மாத காலங்களுக்கு மட்டும்) பாரதியின் பெயர் ஆசிரியராகப் பதிவுசெய்யபட்டிருக்கிறது. 1907ஆம் ஆண்டில் நடந்த இரண்டு மாற்றங்களும் சரி, 1908ல் நடந்த கடைசி மாற்றமும் சரி, திருமலாசாரியாருக்கும், சீனிவசனுக்கும் இடையே மட்டுமே மாறிமாறி நடந்திருக்ன்ற மாற்றங்கள். பாரதியின் பெயர் பதிப்பாளராகவோ, உரிமையாளராகவோ அல்லது ஆசிரியராகவோ பதியப்படவே இல்லை.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான ஆவணம் பாரதியுடைய கடிதம். ‘அந்தப் பத்திரிகையை நிர்வகித்ததில் எனக்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை’ (“I was not the person responsible for the conduct of the Journal, and so, of course, they sent another man to gaol”) என்றுதான் ராம்ஸே மக்டானல்டுக்கு 1914ல் எழுதிய கடிதத்தில் பாரதி தெரிவிக்கிறான். இதைப் பற்றியும் பின்னால் பேசுவோம்.

பாரதி 26.8.1908 அன்று பாண்டிச்சேரிக்குப் போகிறான். பாரதியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டிருந்த (28.8.1908 தேதியிட்ட) சி. ஐ. டி. டயரிக் குறிப்பு பின்வருமாறு சொல்கிறது: ‘This individual left Madras with his family for his native place in Tinnelvely.’ (Police Archives Vol. XXI, 1908) அதாவது, அப்போது பாரதியின் இரண்டாவது மகளான சகுந்தலாவைக் கருவுற்றிருந்த செல்லம்மாவைக் கொண்டுபோய் திருநெல்வேலியில் விட்டுவிட்டு, அதன் பிறகே பாண்டிச்சேரிக்குச் சென்றிருக்கிறான் பாரதி. இதையும் போலீஸ் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

‘இந்தியா’ பத்திரிகையின் அச்சு இயந்திரங்களும் மற்ற உபகரணங்களும் பாண்டிச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதை ஒரு சாகசக் கதையைப் போல் விவரிக்கிறார்கள். ‘பாரதி புதுவை சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே ‘இந்தியா’ பத்திரிகையின் அச்சகம் கூட மிக ரகசியமாய்ப் புதுவைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது! இது அக்காலத்தில் மகத்தான சாதனையாகும்,’ என்கிறார் ரா. அ. பத்மநாபன் அவர்கள். (சித்திர பாரதி: புதுவை ‘இந்தியா’)

பாரதியின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் முக்கியமானவரான வை. சச்சிதானந்தனும் ஏறத்தாழ இதையே சொல்கிறார். ‘பாரதியார், பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்த சிறிது நாட்களில் (சரியான தேதியை நிர்ணயிக்க முடியவில்லை) ‘இந்தியா பத்திரிகையும், அச்சுக் கூடமும் மண்டயம் சீனிவாசாசாரியின் முயற்சியினால் பாண்டிச்சேரிக்கு அப்புறப்படுத்தப்பட்டன. பத்திரிகையையும் அச்சுக் கூடத்தையும் புதுவையிலுள்ள யாரோ ஒருவருக்கு விற்றுவிட்டதுபோல, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூறி அவர்களை ஏமாற்றி அவற்றைச் சென்னையிலிருந்து கொண்டு சென்றனர்.’ (பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும் – அதிகாரம் நான்கு, ‘புதுவையில் புரட்சி வீரன்’ வை. சச்சிதானந்தன்).

இப்படிப்பட்ட முடிவுகளுக்கு எப்படி வருகிறார்கள், எதன் அடிப்படையில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்பதற்கு யாரும் எந்தக் குறிப்பும் தருவதில்லை. ஆய்வு என்றாலும் சரி; பதிவு என்றாலும் சரி. அது திறந்ததாகவும், வெளிப்படையாகவும், தகுந்த ஆதாரங்களை உரிய இடங்களில் தருவதாகவும், அதன் பின்னர் அந்தத் தலைப்பில் தொடர்ந்து ஆய விரும்புவோர்கள் இன்னும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் குறிப்புகளைத் தருவதாகவும், முடிவுகளுக்கான காரணங்களைக் குறிப்பிடுவதாகவும் இருந்தால் மட்டும்தான் பயன்தருவதாக இருக்கும். மற்ற விதங்களில் செய்யப்படும் எந்த ஆய்வானாலும், they just try to impress. அவற்றை எழுதிய ஆசிரியர் மெத்தப் படித்திருக்கிறார்; ஆழ ஆய்ந்திருக்கிறார் என்ற எண்ணத்தை உண்டு பண்ண உதவும். அவ்வளவுதான்.

இந்த இரண்டு பெயர்பெற்ற ஆய்வாளர்களும் சொல்வதைப் பார்த்தால், அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஏமாற்றிவிட்டு பாரதி பாண்டிச்சேரிக்குப் போயிருக்கிறான் என்றும், ‘இந்தியா’ பத்திரிகையின் அச்சுக் கூடம் இடம் பெயர்ந்தது எனவும் தோன்றுகிறது. பாரதி திருநெல்வேலி சென்றதும், பாண்டிச்சேரிக்குச் சென்றதும் சி. ஐ. டி.களால் கண்காணிக்கப்பட்டு, காவல் துறை ஆவணங்களில் பதியப்பட்டிருக்கின்றன. அச்சுக் கூடம் பாண்டிச்சேரிக்குப் போனது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தெரியாதா? சி. ஐ. டி. குறிப்பு பின்வருமாறு சொல்கிறது:

“These individuals have removed all the plant from the INDIA office in Madras and have opened an office at Pondicherry in 72, Ambulataru Aiyar Street. The press has been set up and a staff engaged.” (Police Archive Vol. XXI, 1908. Page 754)

போலீசார் these individuals என்று குறிப்பிடுவது எஸ் என் திருமலாசாரியாரையும் (வை. சச்சிதானந்தன் குறிப்பிடுவதைப் போல் மண்டயம் ஸ்ரீநிவாசாசாரியார் இல்லை. அவர் இன்னொருவர்.) பாரதியையும். போலீஸ் இந்த நடமாட்டங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ரா. அ. பத்மநாபன் சொல்வதைப் போல் ‘மிக ரகசியமாய்ப் புதுவைக்குக் கொண்டு சேர்க்கப்’படவில்லை. இந்தியா அலுவலகமும் அச்சுக்கூடமும் இடம் பெயர்ந்ததை மட்டுமல்ல; பாண்டிச்சேரியில் எந்த விலாசத்தில் இந்தியா பத்திரிக்கையின் புதிய அலுவலகம் தொடங்கப் பட்டிருக்கிறது என்பது வரையில் சிஐடி குறிப்பில் பதியப் பட்டிருக்கிறது. ‘மகா ரகசியமாக அவை எடுத்துச் செல்லப்பட்டதாக நம் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்!

இது ஒரு பக்கம் இருக்க, ‘இந்தியா’ பத்திரிகை வழக்கில் முரப்பாக்கம் சீனிவாசன் கைதானது எவ்வாறு? பாரதியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த அரசாங்கம் அவனை ஏன் கைது செய்யவில்லை?

தொடர்வேன்…

(மேலே தரப்பட்டிருக்கும் சி ஐ டி குறிப்புகள் டாக்டர் ஜி கேசவன் அவர்கள், காவல் துறை ஆவணக் களறியிலிருந்து தொகுத்த Bharati and Imperialism – A Documentation என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. சிவகங்கை பாரதி மண்டலம் வெளியீடு.)

5 Replies to “ஓடிப் போனானா பாரதி? – 03”

  1. சுவாரசியமாய்ப் போகிறது….தொடருங்கள்.

    நன்றி

    ப.இரா.ஹரன்.

  2. இன்னும் எத்தனை கருவூல அத்தாட்சிகள் வருமோ! ஹரிகி ஐயாவின் ஆராய்ச்சியின் வீச்சு வியப்பாய் இருக்கிறது. மிக செறிவான கட்டுரை. நிதர்சனமான வரலாற்றை அறிய முடிகிறது. வழங்கிய தளத்திற்கு நன்றி

  3. நன்றி. என்னிடம் தமிழ் கருவி பலகை இல்லை.அதனால்தான் பிழை.

  4. ஹரி,

    இந்தப் பெட்டியில் இயல்பாகவே தமிழில் தட்டச்சிட வசதி உள்ளது. அதை பயன்படுத்தலாமே.

    எஸ்.கே

  5. நன்றி ஹரன். ஜயராமன், ஆமாம். இன்னும் நிறைய ஆவணங்கள் வரத்தான் போகின்றன. எழுதுவது ஒவ்வொன்றும் அனுமானத்தின் பேரிலல்லாமல் ஆதாரத்தின் பேரில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் எனக்கும் நம்பிக்கை நிறையவே உண்டு. உங்களைப் போலவே. நன்றி ஜயராமன்.

    ஹரி என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. (கருத்தாளரைச் சொல்கிறேன். நான் வேறு ஹரி!) எதில் பிழை, என்ன பிழை, இந்த ஹரி எழுதியிருப்பதில் பிழையா, அந்த ஹரி எழுதாமலிருப்பதில் பிழையா…..ஙையோ… புரிய வைங்கணா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *