பகைவனும் பாராட்டும் பகழி

பொதுவாக உலகில் ஒருவரை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருவருடைய பகைவனே அவரைப் பாராட்டுவது என்பது மிகவும் அருமை. அதிலும் யாரைப்பற்றி, யாருடைய வீரத்தைப் பற்றி முன்னொரு முறை மிக இழிவாக, மிக ஏளனமாகப் பேசினானோ அவரைப் பற்றியும் அவருடைய வீரத்தைப் பற்றியும் மனம் திறந்து பாராட்டுகிறான். ஒரு தடவை அல்ல பல தடவை. பலவகையாகப் பாராட்டுகிறான். பாராட்டுபவர் யார்? பாராட்டுப் பெறுபவர் யார்?

பாராட்டுபவன் சாமானியப்பட்டவன் அல்லன்.இராவணேச்வரன்!

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
சங்கரன் கொடுத்த வாளும்

உடையவன்.

“முப்பத்து முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படாய்’’ என்ற வரமும் கொண்டவன். இப்பேர்ப்பட்ட ராவணேச்வரனே பாராட்டுகிறான். பாராட்டுப் பெறுபவன் காகுத்தன். “பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழிமாதோ!” என்று வியந்து மனமாரப் பாராட்டுகிறான். பகழி என்றால் அம்பு. அந்தக் காகுத்தனின் பகழி என்னவெல்லாம் செய்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அனேகமாக ஒவ்வொரு காண்டத்திலும் ராமனுடைய வில்லாற்றலைப் பார்க்கிறோம். ராமபாணத்தின் மகிமை, அதன் வேகம், கம்பன் அந்த பாணத்திற்குச் சொல்லும் உவமை இவற்றையெல்லாம் பார்க்கலாம்.

கன்னிப்போர்

ராமனுடைய வில்லாற்றல் முதன்முறையாக விசுவாமித்திரர் மூலமாக வெளிப்படுகிறது. தன் யாகம் காக்கத் தசரதனிடம் கரிய செம்மலான ராமனைத் தரும்படி கேட்கிறார். யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பை ராமன் ஏற்க வேண்டும் என்கிறார். சிறுவனான ராமனை அவருடன் அனுப்ப முதலில் மன்னன் தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையின்படி அனுப்பி வைக்கிறான் தசரதன். யாகரட்சணத்திற்கு முன்பாகவே ராமன் தாடகையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “இந்தத் தாடகை முறைநின்ற உயிரெல்லாம் தன் உணவெனக் கருதும் தன்மையுடையவள்” என்று விசுவாமித்திரர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடகை வருகிறாள். எப்படி வருகிறாள்?

இறைக்கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறக்கடை அரக்கி வடவைக் கனல் இரண்டாய்
நிறைக்கடல் முளைத்ததென நெருப்பென விழித்தாள்

பாட்டைப் பாடிப் பார்க்கும் போதே அவளுடைய பயங்கர உருவம் நம்கண் முன் தெரிகிறது. இப்படி வரும் தாடகையை அம்பு எய்து வதைக்க வேண்டும் என்று விசுவாமித்திர்ர் எண்ணுகிறார். ராமனுக்கும் முனிவரின் எண்ணம் புரிகிறது. ஆனாலும் ராமன் உடனே அம்பு தொடுக்கவில்லை. ஏன்? “பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்.” ஆனால் முனிவரோ, “ராமா, உயிர்க்குலத்தையே கருவறுத்து வரும் இவளையா நீ பெண்ணென்று நினைக்கிறாய்? இவளுடைய பாவச்சுமையை ஒழிக்க வேறு வழியே இல்லை. “ஆறி நிற்பது அருளன்று.” எனவே அரக்கியைக் கொன்றுவிடு என்று ஆணையிடுகிறார். இதற்குள் தாடகை சூலத்தை வீசிவிடுகிறாள். எனவே தற்காப்புக்காக ராமனும் அம்பு தொடுக்கிறான்.

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயிற்று அன்றே!

‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன். யாருடைய சொல்? விசுவாமித்திர மகரிஷி போன்றவர்களின் சாபச்சொல் எப்படி உடனே தவறாமல் பலிக்குமோ அதுபோல் அவ்வளவு கடும் வேகமாக இருந்ததாம். சுடுசரமாக இருந்தது! அது எப்படிச் சென்றது? ‘கல்லாப் புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என’ – கல்லாத மூடர்களுக்கு நாம் எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும் அது அவர்கள் மனதில் கொஞ்சம் கூடத் தங்காமல் எப்படி உடனே போய்விடுமோ அதுபோல ராமபாணம் தாடகையின் மார்பை ஊடுருவிச் சென்று விட்டதாம்.

அந்த மார்பு எப்படிப்பட்டது? ‘வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சு.’ அந்த நெஞ்சையும் ஊடுருவிச் சென்றுவிடுகிறது ராம பாணம்.

பரசுராமனோடு போர்

ராமனின் கைவண்ணம், கால் வண்ணம், தோள்வண்ணம் எல்லாம் கண்ட விசுவாமித்திர்ர் அவனை மிதிலைக்கு அழைத்துச் சென்று சீதாராமனாக்குகிறார். திருமணம் முடிந்து எல்லோரும் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை நோக்கி வேகமாக ஆக்ரோஷத்தோடு வருவது யார்? மின்னும் சடை, கையிலே வில், பொன்மலையே இடம் பெயர்ந்து வருவதுபோல் வருவது யார்? என்று ராமன் திகைக்கிறான்.

இற்றோடிய சிலையின் திறம் அறிவென், இனி யானுன்
பொற்றோள் வலிநிலை சோதனை புரிவான் நசையுடையேன்
செற்றோடிய திரள் தோளுறு தினவும் சிறிதுடையேன்.

“ராமா! சிவதனுசை முறித்து விட்டோம் என்று கர்வம் கொள்ள வேண்டாம். அது என்ன பெரிய வில்லா? எல்லோரும் தூக்கித் தூக்கி ஏற்கெனவே இற்றுப் போனவில். உன் கை பட்ட்தும் தானாகவே ஒடிந்து விட்டது. அதனால் உன் வலிமையைப் பற்றி எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. தைரியமிருந்தால் என்னுடைய இந்த வில்லை வாங்கி நாணேற்று பார்க்கலாம்” என்று சவால் விடுகிறான் பரசுராமன். தசரதன் நடுங்கிப் போகிறான். பரசுராமனைச் சமாதானப் படுத்துகிறான். ஆனால் ராமன் என்ன செய்கிறான்?

“நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக’’ என்று மிகவும் அநாயாசமாக அந்த வில்லை வாங்கிக் கொள்கிறான்.

ஆனால் உடனே அம்பு போடவில்லை. தாடகையைப் பெண் என்பதால் கொல்லத் தயங்கிய ராமன் இப்பொழுது பரசுராமனையும் கொல்லத் தயங்குகிறான். ஏன்?

பூதலத்தரசை யெல்லாம் பொன்றுவித்தனை யென்றாலும்
வேதவித்தாய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய்
ஆதலிற் கொல்லலாகாது, அம்பிது பிழைப்பதென்றால்
யாது இதற்கு இலக்கமாவது இயம்புதி விரைவின் என்றான்

உலகத்திலுள்ள க்ஷத்திரிய குலத்தையெல்லாம் 21 முறை வேரோடு தொலைத்தவன் இந்தப் பரசுராமன். எனவே தண்டனைக்குரியவன். என்றாலும் வேத வித்தான ஜமதக்னி முனிவரின் மைந்தன். மேலும் தவக்கோலத்தில் இருக்கின்றான். எனவே அவனைக் கொல்லலாகாது. “ஆனாலும் என் வில்லில் பூட்டிய அம்பு வீணாகப் போவதில்லை. ஆதலால் என் அம்புக்கு ஒரு வழி சொல்” என்கிறான். இதைக் கேட்ட பரசுராமன், தன் செய்தவம் அனைத்தையும் இலக்காக வைக்கிறான்.

“ராமன் கை நெகிழ்தலும் கணையும் சென்று அவன் மையறு தவம் எல்லாம் வாரி மீண்டதே!” ராமன் கொஞ்சம் கையை நெகிழ விடுகிறான். உடனே ராமபாணம் பரசுராமனுடைய தவவலிமை அனைத்தையும் கவர்ந்து கொண்டு வந்துவிடுகிறது. கண்ணால் காணும் பொருட்கள் மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாத தவம் போன்ற சூட்சுமமமானவற்றையும் கவர்ந்து வரும் ஆற்றல் உடையது ராமபாணம்.

கரனோடு போர்

சீதாராமனாக இருக்கும் ராமனைப் பட்டாபிஷேக ராமனாக்க வேண்டுமென்று தசரதர் தீர்மானிக்கிறார். ஆனால் கைகேயியின் வரங்களால் ராமன், சீதை, இலக்குவன் மூவரும் வனம் செல்கிறார்கள்.வனத்திலே வந்த சூர்ப்பனகை ராமன் அழகில் ஈடுபட்டு அவனை அடைய ஆசைப்படுகிறாள்.ஆனால் சீதை தடையாக இருப்பதாக எண்ணி அவளைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்ய இளையவனால். மூக்கறுபடுகிறாள்.நேராகக் கரனிடம் சென்று முறையிடுகிறாள். கரன் போர் செய்ய வருகிறான். இராமனைப் பார்க்கிறான். சீ! என்ன கேவலம்! போயும் போயும் ஒரு மனிதனுடனா போர் செய்ய வேண்டும் என்று ஏளனம் செய்கிறான். சேனைகளை யெல்லாம் விலக்கித் தான் ஒருவனே போர் செய்கிறான். ராமன் வில்லை வளைக்கிறான். அவ்வளவுதான்!

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்று எண்ணவே முடியாதபடி இராம பாணங்கள் புறப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அந்த வனம் முழுவதுமே பிணக் குன்றுகளாகவும் ரத்த நதிகளாகவும் மாறுகிறது.

மாயமான் வேட்டை

சூர்ப்பனகை நேராகத் தன் அண்ணன் இராவணேச்வரனிடம் ஓடுகிறாள்.“அண்ணா! உனக்காக ஒரு பெண்னைக் கொண்டு வரச் சென்றேன். அப்பொழுதுதான் இந்த அவமானம் ஏற்பட்டது என்று சீதையின் அழகைப் பற்றிச் சொல்லி அவன் மனதில் காமத்தீயை வளர்க்கிறாள்.

“கரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான்” ஆனால் கேட்ட நங்கையை மட்டும் மறக்கவில்லை. எப்படியாவது அவளை அடைந்தே தீர வேண்டும் என்று மாரீசன் உதவியை நாடுகிறான். மாரீசன் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை. ராமபாண மகிமையைப் பற்றி தான் ஏற்கெனவே அறிந்திருப்பதால் அஞ்சுவதாகவும் சொல்கிறான். ராவணன், மாரீசனையே கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தியதால், ராவணன் கையால் மாள்வதைவிட ராமன் கையால் மாள்வதே மேல் என்று மாரீசன் மாயமானாகிச் செல்கிறான். சீதை அந்த மானை விரும்ப ராமன் அதைப் பிடிக்கச் செல்கிறான். வந்திருப்பது மாயமான் என்று உணர்ந்த ராமன்

சக்கரத்தின் தகைவு அரிதாய ஓர்
செக்கர் மேனிப் பகழி செலுத்தி

இன் உயிர் போக்கு என்று அம்பு விடுகிறான். அந்தச் சரம் வஞ்சகன் நெஞ்சில் பட மாரீசன் சுய உருவோடு வீழ்கிறான். ராமனின் குரலில் அலறுகிறான். இலக்குவனும் அகல, ராவணன் கபட சன்யாசியாக வந்து சீதையைக் கவர்ந்து செல்கிறான்.

மராமரங்கள் துளைத்தது

சீதையைத் தேடிவரும் பொழுது சுக்ரீவனின் நட்பு கிடைக்கிறது. அவனும் தன்னைப் போலவே மனைவியை இழந்ததைப் புரிந்து கொண்ட ராமன், “தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்’’ என்று வாக்களிக்கிறான். இதனால் மகிழ்ந்த சுக்ரீவனுக்குக் கூடவே ஒரு சந்தேகமும் தோன்றுகிறது. இந்த ராமன் என் அண்ணன் வாலியை வெல்வானா? வாலியின் எதிரே சென்று யார் போர் செய்தாலும் அவர்களுடைய பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடுமே! அப்படிப்பட்ட வாலியோடு ராமன் போர் செய்ய முடியுமா? என்று சந்தேகப் படுகிறான். இவனுடைய சந்தேகத்தைப் போக்க அனுமன் வழி செய்கிறான்.

ஏழு மராமரங்களையும் ஒரே பாணம் துளைக்க வேண்டும். அந்த மரங்கள் எப்படிப்பட்டவை?

ஊழி பேரினும் பேர்வில, அருங்குலக் கிரிகள்
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்றென

நிற்கின்றன.அவை மேரு மால் வரையினும் பெரியன! ராமன் கோதண்டத்தில் நாணேற்றுகிறான். அந்த நாணொலி கேட்டு, திக்கயங்களும் மயங்கின. திசைகளும் சலிப்புற்றன.

ஏழு மாமரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி

இனிமேல் ஏழு என்று சொல்லக்கூடிய எப்பொருளும் இல்லை என்பதால் மீண்டும் ராமன் அம்பறாத் தூணியில் வந்து சேர்ந்தது அப்பாணம்.

பழத்தில் நுழைந்த ஊசி

இப்பொழுது சுக்ரீவன் தைரியமாக வாலியைப் போருக்கு அழைக்கிறான். வாலி சுக்ரீவன் இருவரும் மாறிமாறி குத்துச் சண்டை போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாலி, சுக்ரீவனைக் கொன்று தீர்த்தே விடுவது என்ற எண்ணத்தோடு அவனைத் தலைக்குமேலே இரு கைகளாலும் தூக்கி விடுகிறான். இப்பொழுது வாலி மார்பிலே ராமன் கோல் ஒன்று வாங்கித் தொடுத்து நாணோடு தோள் இழுத்துத் துரந்து விடுகிறான்.

பரசுராமன் கொடுத்த வில்லை அநாயாசமாக வாங்கிய ராமன் கை நெகிழவிட்டான் என்று பார்த்தோம். ஆனல் இங்கோ? நாணொடு தோள் உறுத்து வாளியை விடுகிறான். தோள்வரை இழுத்து அம்பு போடுகிறான்.ஏன்? வாலி அவ்வளவு பராக்கிரமம் உள்ளவன்.

கால் செல்லாது அவன் முன். கந்தவேள் வேலும் செல்லாது அவன் மார்பில்! என்றாலும் ராமபாணம் அவன் மார்பைத் துளைக்கிறது. எப்படி என்பதைக் கம்பன் மிக அழகாகச் சொல்கிறான். “கார் உண் வார்சுவைக் கதலியின் கனியினைக் கழியச் சேரும் ஊசியின் சென்றது” என்பார். நன்றாகப் பழுத்த வாழைப் பழத்திலே ஊசியைச் சொருகினால் அது எப்படி மிக எளிதாக, விரைவாக உள்ளே செல்லுமோ அப்படிச் சென்றதாம். மேருமலை வீழ்வது போல வீழ்கிறான் வாலி. அவனுக்கு ஒரு சந்தேகம். கந்தவேள் வேல் செலாத தன் மார்பிலே இப்படித் துளைப்பது அம்புதானா? இல்லை மாயவனின் சக்கரமா? இல்லை நீலகண்டனின் சூலமா? இந்திரனின் வஜ்ராயுதத்திற்கும் தன் மார்பைத் துளைக்கும் வலிமை கிடையாதே! ஒருவேளை, “வில்லினால் துரப்ப அரிது, இவ்வெஞ்சரம் சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார்?” என்று வியந்து பராட்டுகிறான்.

கை அவன் நெகிழ்தலோடும், கடுங்கணை காலவாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீட்போய்
துய்யநீர்க் கடலுள் தோய்ந்து தூய்மலர் அமரர் சூட்ட
ஐயன் கொற்றத்து ஆவம் வந்து அடைகிறது. வாலி வீரசுவர்க்கம் அடைகிறான்.

பகைவன் பாராட்டும் பகழி

ராம ராவண யுத்தம் ஆரம்பமாகிறது. முதல்நாள் போருக்கு ராவணனே வருகிறான். ராமனும் ராவணனும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ராமன் ராவணன் வில்லை அறுத்தபின், இன்னொரு கணையால் மகுடங்களை யெல்லாம் கீழே தள்ளி விடுகிறான். கடைசியாக எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு நிற்கும் இராவணனை “இன்று போய் போர்க்கு நாளை வா” என்று அருள் செய்கிறான்.

வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு

வெறுங்கையோடு இலங்கை செல்கிறான் இராவணன். ஜானகி இதைக் கேட்டால் சிரிப்பாளே என்று நாணத்தால் நிலைகுலைந்து போகிறான். நிகழ்ந்ததைக் கேள்விப்பட்ட பாட்டன் மால்யவான் ராவணனிடம் வந்து மெதுவாக, “ஐயா! என்ன நடந்தது? உன் முகம் வாடியிருக்கிறதே?” என்று கேட்கிறான். தன் மனதில் உள்ளதைக் கொட்டுகிறான் என்றே சொல்லலாம். இளையவன் தனக்கும் ஆற்றாது நம் பெருஞ்சேனை என்று இலக்குவனுக்கும் புகழ்மாலை சூட்டுகிறான். முன்பு ‘மனிசர்’ என்று யாரை இகழ்ந்தானோ அவர்கள் இருவரையும் புகழ்கிறான் இப்போது. ராமனுடைய கோதண்டத்தை நினைத்துப் பார்க்கிறான். வில்தானா அது! கொஞ்சம் கூட சிரமமேயில்லாமல் சினமும் இல்லாமல் எவ்வலவு அநாயாசமாகத் தன்னைச் சூழ்ந்திருந்த அரக்க வெள்ளத்தை அப்படியே அழித்து விட்டான்! ராவணேச்வரனாகிய என்னையே அது என்ன பாடு படுத்திவிட்டது?

அன்றொரு நாள் கூனியின் முதுகிலே வில் உண்டையால் வேடிக்கையாக அடித்தானாமே, அதேபோல் வேடிக்கையாக என் மார்பிலே பாணங்களைப் போட்டு விட்டானே! என் வீரர்களின் ஆவியையும் அதேபோல் வேடிக்கையாகப் பறித்து விட்டானே! ராமபாணம் உலகம் எல்லாம் புகுந்து சென்று போகுமே தவிர அது ஓய்ந்து போகும் என்று தோன்றவில்லை அப்பாணம் “ஊழித் தீயையும் தீய்க்கும், செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் வாயையும் தீய்க்கும், உன்னின் மனத்தையும் தீய்க்கும்” வலிமையுடையது.

இன்று இப்படியெல்லாம் ராமன் புகழ்பாடும் ராவணன் அன்று சீதையிடம் எப்படிப் பெருமையடித்துக் கொண்டான். மேருமலையைப் அப்படியே பறித்து எடுக்க வேண்டுமா? ஆகாயத்தை இடிக்க வேண்டுமா? கடல்கள் ஏழையும் கலக்க வேண்டுமா? பூமியை எடுக்க வேண்டுமா? இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதனையும் செய்யக் கூடிய வலிமை இந்த ராவணனுக்கு உண்டு. என்றான். இன்று ராம பாணம் தந்த அனுபவம் இப்படிப் பேச வைக்கிறது!

மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால்
பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால்
ஆறுமே அவற்றின் ஆற்றல், ஆற்றுமேல் அனந்த கோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே

அன்றே சீதை இதே கருத்தைச் சொன்னபோது ராவணன் எவ்வளவு சீற்றம் அடைந்தான்? ராவணனுடைய வார்த்தைகளாலேயே அவனை மடக்கிப் பேசியதும் ராவணன் சீற்றம் கொண்டு அவளைக் கவர்ந்து வந்தான். ஆனல் இப்பொழுது ராமபாணத்தின் வலிமையை ஒப்புக் கொண்டு பாட்டனிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான். “தாத்தா! அந்த பாணங்கள் தான் எவ்வளவு வேகமாக வருகின்றன. அவன் நினைப்பதுதான் தாமதம், எங்கும் பார்க்கும் இடமெல்லம் பாணங்களால் நிரம்பி விடுகின்றன. என்ன வேகம்! இந்திரனுடைய குலிசமும் பரமேச்வரனின் திரிசூலமும், மாயவன் சக்கரமும் சேர்ந்து ஒன்றாக வருவது போலல்லவா ராமபாணம் புறப்பட்டு வருகிறது! வேதங்கள் கூடப் பொய்யாகிப் போனாலும் போகலாம். ஆனால் இந்தக் கோதண்ட்த்திலிருந்து புறப்பட்டு வரும் பாணங்கள் ஒன்றுகூடத் தப்புவதில்லை. அந்தப் பாணங்கள் என் செருக்கையே அடக்கி விட்டதென்றால் வேறு என சொல்ல இருக்கிறது! தாத்தா! அந்தப் பாணங்கள் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியவில்லை. கிழக்கிலிருந்தா, மேற்கிலிருந்தா, பூமியிலிருந்தா, ஆகாயத்திலிருந்தா, எல்லா இடங்களிலிருந்தும் வருகிறதா என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன்? அவனுடைய வில் அவனுக்கு இடப் பக்கத்திலிருக்கிறதா அல்லது வலப்பக்கதில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை என்று அதிசயித்துப் பேசுகிறான். கடைசியாக ஒன்று சொல்கிறான்.

வாசவன், மாயன், மற்றும் மலருள்ளோன், மழுவாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இனி வரும் இவரால் அன்றி
நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்

என்று மனச் சமாதானம் அடைகிறான். நான் தோல்வி அடைந்தாலும் நல்லதோர் பகைவனை, சரிக்குச் சரியானவனிடம் தான் தோல்வி அடைந்திருக்கிறேன். குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வது போல “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்று தோல்வியிலும் பெருமிதம் கொள்கிறான். இப்படி ஒரு புகழ் மாலையை ராவணனைப் போன்ற ஒரு வீரனிடமிருந்து, எதிரியிடமிருந்து பெறக்கூடிய ராமனின் வில்லாற்றலை என்னென்பது! மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று மனமாரப் பாரட்டும் ராவணனின் வீரத்தையும் இங்கே பார்க்கிறோம்.

16 Replies to “பகைவனும் பாராட்டும் பகழி”

 1. இராமநவமி நன்னாளில் இப்படி ஒரு இராம ஓவியம். அற்புதமாய் இருக்கிறது. வழங்கியதற்கு நன்றி.

 2. ராம நாமம் தாரக மந்திரம். முழு ராமாயண‌த்தயே படித்த உண‌ர்வு எற்பட்டது. ராமபாணம் மீண்டும் புறப்பட்டு ஹிந்து சனாதன தர்மத்தை காக்கட்டும். ராம நாமம் சொல்லுவோம் பாபங்களை வெல்லுவோம்.

  வித்யா நிதி‌

 3. ராவணன் போன்றவர்களிடம்கூட நல்ல குணங்கள் பல உண்டு. இருப்பினும் அவனை அரக்கன் என்றே நமது ஹிந்து தர்மம் அழைகிறது.

  ராவணனையே இப்படிக் கருதும் நாம், முதியவர்‍ ‍பெண்கள் குழந்தைகள் ஆகியோரை இந்துக்கள் என்ற ஒரு காரணத்தால் குண்டுவைத்தும், வெட்டியும், கற்பழித்தும் கொடூரமாகக் கொன்று வருகிற, மனிதரை மனிதர் அடிமை செய்ய வேண்டும் எனச் சொல்லிவருகிற‌ ஆபிரகாமிய மதவெறியினரை எப்படி அழைப்பது?

 4. ஸ்ரீராம நவமி நாளில் இந்த அற்புதக் கட்டுரையை வழங்கிய தமிழ் இந்துவுக்கும், எழுதிய ஜெயலக்ஷ்மி அவர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். ஸ்ரீராமன் நமது பாவங்களையும், எதிரிகளையும் அவனது பகழியால் அழிப்பானாக.. அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.

 5. மிகச்சிறந்த கட்டுரை. அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்துகள்!

 6. /// ராவணன் போன்றவர்களிடம்கூட நல்ல குணங்கள் பல உண்டு. இருப்பினும் அவனை அரக்கன் என்றே நமது ஹிந்து தர்மம் அழைகிறது. ///

  அதனால் என்ன. பிரஹலாதன் கூட அரக்கன்தான்.

 7. எத்தனை முறை படித்தாலும் பரவசம் கொள்ளச் செய்வதன்றோ ராம பாணத்தின் மகிமை!

  அருமையாக எழுதியுள்ள ஜயலக்ஷ்மி அவர்களுக்கு ஜெயம் உண்டாகட்டும். ஸ்ரீ ராம நவமி நன்னாளில் இக்கட்டுரையைப் பிரசுரித்ததற்காக தமிழ் இந்துவிற்குப் பாராட்டுக்கள்.

  அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துக்கள். ராம பாணம் நம் பாரதத்தில் ஹிந்து தர்மத்தை நிலைநாட்டட்டும். ஸ்ரீ ராமன் அருள் பொழியட்டும்.

  நன்றி, அன்புடன்

  ப.இரா.ஹரன்.

 8. போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்,
  ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித்
  தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
  வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ.

  நெருப்பென்று சொன்னால் வாய் வெந்துவிடுமா என்று கேட்பார்கள். ராமசரம் என்று சொன்னால் சொல்லுகின்ற வாய் மட்டுமில்லை, நினைத்த மனத்தையும் சுடும் என்று சொல்பவனும் ராவணன்தான்.

  நல்ல தலைப்பு. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் உரித்தாகுக.

 9. நான் மிக ரசித்து படித்தேன. ராமயணம் எவ்வளவு தடவ படித்தாலும் ஒவ்வொரு முறயும் புதிது போல் தோணறது . உங‌க‌ளுக்கு என் பாராட்டுக்க‌ள். எவ்வ‌‌ள‌வு படித்தால் இவ்வ‌ள்வு விரிவாஹ‌ quote ப‌ண்ணீ எழ்த‌ முடியும். பாராட்டுக்க‌ள். தொட‌ர்க‌ உங்க‌ள் ப‌ணி. வாழ்துக்கள்.

 10. மிக அழகான கட்டுரை.அதுவும் இந்தஸ்ரீ ராம நவமி நன்னாளில் படித்து ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஜயலக்ஷ்மிக்கு என் வாழ்த்தும் ஆசியும்,
  யோகியார்

 11. எங்கிருந்தோ இங்கு வந்தேன். இன்று ஏகாதசி. இந்தியாவிலிருந்து தொலைதூரம் கடல் கடந்து இருக்கும்பொழுது இன்று ஒரு பெருமாள் கோவில் அருகிலுள்ளதே, ந்யூ யார்க் அருகில், அங்கு
  செல்லலாம் என யோசித்தபோது, ஸ்ரீரங்கத்தார் ஒருவர் வலை வழியே இங்கு வந்தடைந்தேன்.

  வெகு அற்புதமாக, அழகிய தமிழ் நடையிலே எழுதியிருக்கிறீர்கள். அந்த ராமபிரான் அருளால்
  எல்லா நலமும் பெற்று வாழ்க என முதியவன் நான் வாழ்த்துகிறேன்.

  ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
  சகஸ்ர நாம தஸ்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே.

  அந்த ராம நாமத்துக்கு இணையேது ?

  சுப்பு ரத்தினம்.

 12. ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழத்துக்கள்.

 13. கட்டுரை, அதற்கான தங்கம் போல் ஜொலிக்கும் பட்டாபிஷேகப் படம் இரண்டும் அருமை.

 14. பகைவனும் பாராட்டும் பகழி படித்த பின் மெய் சிலிர்கிறது கம்பன் கைக்கு வைர
  காப்பு தான் இட வேண்டும் அருமை அருமை அருமை வாழ்க
  ராமர் புகழ்

 15. சூப்பர் நல்லதொரு கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *